உள்ளங்கையில் துள்ளும் கடல் மீது
ததும்பும் நார்சிசப் பிம்பம்
அந்த காலத்தில் பேய்கள் இருந்தன
என்றது
பேயோட்டிய பின்
போய் அமர்ந்த private beach கடற்கரை மணலில்
நட்ட பீர் பாட்டிலை
சைத்தானென்று
நாலு mug குடித்த பின்னும்
நான் இப்பொழுது குடிக்கும் பியர்
பிதுங்கும் கோப்பையில் விழுகிறது
கை நீட்டி உணர்ந்த மழை
ஊதித் தள்ளிய பியர் நுரை
கலக்கிறது கடல் நுரையுடன்
மழை மீது பெய்யும் மழை
கடல் மீதும் பெய்கிறது
என் மீதும் பெய்கிறது
கோபம் வீணடிக்கும்
அன்பின் வழி வந்த வெப்பம்
மேலே எழுந்தது
மஹாஜனங்களின் மீது
மழையாகிப் பொழிந்தது
கவிதை மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு, அனுபவங்களைப் புதுப்பிக்கிறது என்றும் சொல்லப்படுவது உண்டு. நீங்கள் கவிதை எழுதும் கணங்களில் எது புதுப்பிக்கப்படுகிறது என்று உணர்கிறீர்கள்?
இரண்டுமேதான். உதாரணம், “நான் இப்பொழுது குடிக்கும் பியர்” கவிதை. சமாதானமும் அன்பும் தான் இந்தக் கவிதையின் உட்பொருள் … போதை அல்ல. “மழை மீது பெய்யும் மழை” என்ற வரி ஒரு புதிய கவனிப்பை முன் வைக்கிறது … அதன் மூலம் மழை எனும் அனுபவத்தை விஸ்தரிக்கிறது. அனுபவம் எல்லோருக்கும் எப்போதுமே ஒரே மாதிரி இல்லாமல் போவதற்குக் காரணம் – அது விழிப்புணர்வு சார்ந்தது என்பதால் தான். அதாவது ஒருவரின் விழிப்புணர்வு சார்ந்து ஒரு அனுபவம் தனித்துவம் நிறைந்ததாக மாறுகிறது. அதனால் தான் ஒரு சூரியோதயமும் சூரியாஸ்தமனமும் கூட வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறு உணர்வுகளை கிளர்த்திச் செல்கின்றன. கவிதைகளும் கூட இதனாலேயே உங்களுக்கு ஒரு அர்த்தமும் எனக்கு ஒரு அர்த்தமும் தருகின்றன. இதற்கு மொழியும் ஒரு முக்கிய காரணி என்பதை விளக்க வேண்டியதில்லை. ஒரு ஓவியத்திற்கும் இசைக்கும் இதே சக்தி இருப்பதை உணரலாம். ஆனால் நான் சொல்லும் இந்த சக்தி அதைப் பார்க்கும் கேட்கும் மனிதரின் மனதில் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு (கவனியுங்கள் நான் அறிவு என்று சொல்லவில்லை) இல்லாவிடில் அப்புறம் அனுபவத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
“மழை மீது பெய்யும் மழை” என்ற வரி அதுவரை எழுதப்படாதது என நினைக்கிறேன். ஒரு பிரபல கவிஞரின் சமீபத்திய முகநூல் கவிதை ஒன்றில் இதே வரியைப் பார்த்தேன். யாரும் சுலபமாக சிந்திக்கக் கூடிய வரி தான் இது என்றாலும், இது காட்டும் அனுபவம் புதிது. கவிதை என்பது ஒரு அனுபவத் தீவு என்று பார்த்தோம். ஆனால் இதற்கு மொழியின் பங்கு மிக முக்கியமானது. திரி தூண்டப்பட்டாலொழிய ஜோதி எரிந்து சுடராது.
One comment