வீடு திரும்பும் வழிகள் – அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, ஒரு மதிப்பீடு

(அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ராவின் Ways of Going Home என்ற நாவல் குறித்து கார்டியன் நாளிதழில் மினா ஹாலந்த் எழுதிய மதிப்பீடு)

பினோஷே ஆட்சி குறித்து இசபெல் ஆலண்டே எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர்த்து உலக அளவில் புகழ்பெற்ற சிலேவிய எழுத்து ஒப்பீட்டளவில் அரிதாகவே காணக் கிடைக்கிறது. ஒரு தேசமாகப் பார்க்கும்போது சிலேவியர்கள் தங்களை அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதை இது பிரதிபலிக்கிறதா? லத்தின் அமெரிக்கர்கள் இப்படிதான் எழுதுவார்கள் என்ற நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்தகால வன்முறையின் பின்விளைவாய் சிலேவியர்கள் அமைதியான வார்ப்பாகவே இருக்கின்றனர். 1990ல் அவர் பதவி விலகிய பின்னரும், அந்த முன்னாள் சர்வாதிகாரி பற்றி பல்லாண்டுகளாய் தனி உரையாடல்களில் மட்டுமே பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதே போல், சிலே வரலாற்றின் இந்த காலகட்டம் குறித்த நாவல்களும் அதிக அளவில் வெளிவரவில்லை. சிலேவின் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் வரும்வரை இந்த நிலைதான் இருந்திருக்கிறது. அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர்.

ஜாம்ப்ராவின் மூன்றாவது நாவலான, “வீடு திரும்பும் வழிகள்,” பினோஷே காலத்தில் வாழ்ந்த, ஆனால் அதன் முதன்மை பலிகளில் ஒருவராய் தன்னை நினைத்துக் கொள்ளாத எழுத்தாளர் ஒருவர், துன்பம் நிறைந்த சிலேவின் கடந்த காலத்துள் நிகழ்த்தும் இலக்கிய, மெடா-இலக்கிய பயணம் என்று சொல்லலாம். “இந்த நாவல் நம் பெற்றோர்க்கு உரியது,” என்கிறார் அவர். தீவிரவாதம் குறித்த தனது இளம் பிராய அனுபவம் குழந்தைப் பருவத்தால் நீர்த்து, பிறர் வாழ்வைக் கொண்டு உணரப்பட்டது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது தலைமுறையினர், “போர் நிருபர்கள், சுற்றுலாப் பயணிகள்,” அல்லது – இங்குதான் மீபுனைவு (metafiction) தன் மூக்கை நுழைக்கிறது- இந்த நாவலின் “இரண்டாம்நிலைப் பாத்திரங்கள்”. 1980களின் Greater Santiagoவின் Maipu மாகாண வாழ்வை திரும்பவும் பேசும் நாவல் இது.

இந்த நூலின் துவக்கத்தில் சொல்லப்படும் ஒரு சம்பவத்தை “வீடு திரும்பும் வழிகள்” என்ற தலைப்பு அப்பட்டமாகவே சுட்டுகிறது. கதையின் துவக்கத்தில் ஒரு சிறுவன் தொலைந்து போகிறான். அவனது பெற்றோர் சென்ற வழிக்கு மாற்று வழி கண்டறிந்து அவன் வீடு திரும்புகிறான். இன்னும் ஆழமாய், குறியீடாய்ப் பார்த்தால், பல்வகை நினைவு கொள்தல்களையும், புரிதல்களையும், நிலைதடுமாறச் செய்யும் வரலாற்றை விளங்கிக் கொள்தலையும் தொடுவதாய் இந்தத் தலைப்பு இருக்கிறது. கதைசொல்லியின் பெற்றோர் தலைமுறைக்கு இது மௌனமாய் இருந்தால்- அவர்களின் அக்காலத்து இல்லங்களைப் போல், அவர்களும் “தகர்க்க முடியாத கோட்டைகளாய்” இருக்கின்றனர்- கதைசொல்லியும் அவரது சகாக்களும் கடந்த காலத்தின் திறப்பாய் கதைசொல்லலைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

ஜாம்ப்ராவின் நாவலில் இரு கதைசொல்லிகள் இருக்கின்றனர். ஒருவர் நாவலின் கதைசொல்லி. இவர் தன் நாவலில் புனைந்த பாத்திரம் மற்றொரு கதைசொல்லியாய் இருக்கிறது. ஜாம்ப்ராவின் நாவல் இவ்விரு கதைசொல்லிகளாலும் சொல்லப்படுகிறது. நாவலின் கதைசொல்லி, தன் புனைவைக் கொண்டு கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார் (“என் குரலாய் இல்லாத வேறொரு குரலுக்குக் காத்திருக்கிறேன் – நாவலின் குரலாகவும், காத்திரமான குரலாகவும் உள்ள வேறொரு குரலுக்குக் காத்திருக்கிறேன்”). மெய்யுலக நிகழ்ச்சிகளைப் புனைவின் சட்டகங்களில் விவரிக்கும் முயற்சியை இறுதியில் அவர் கைவிடுகிறார். ஏனெனில், அந்தக் கதையை ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்: “பிறரின் கதைகளைச் சொல்ல நாம் ஆசைப்பட்டாலும் எப்போதும் நாம் நம் கதையைச் சொல்வதில்தான் வந்து நிற்கிறோம்”. தான் எழுதியாக வேண்டும் என்ற கடப்பாடு குறித்த படைப்பூக்க வேதனையை முன்னிட்டே அவன் பினோஷேவுக்குப் பின் நிகழ்ந்தவற்றை எதிர்கொள்கிறான்.

இரு கதைசொல்லிகளையும் எழுத்தே வரையறுக்கிறது. எழுத்து நாயகத்தன்மை கொண்ட செயலாக நாவலில் அணுகப்படுகிறது. தன் நாவலின் கைப்பிரதியைத் தன் காதலி வாசித்து அதன் மெய்ம்மைக்கு உறுதியளிக்க வேண்டும் என்று இந்த நாவலின் கதைசொல்லி விரும்புகிறான். அவனது புனைவுப் பாத்திரமோ, 1980களின் கதையை மீண்டும் சொல்வதில் ஒரு சுத்திகரிப்பை (catharsis) நிகழ்த்திக் கொள்கிறது. ஆனால், அந்தப் புனைவுப் பாத்திரம் இதைச் செய்வது கிளாடியா என்ற புனையப்பட்ட காதலியைக் கொண்டு. கிளாடியாவின் தந்தை பினோஷே காலத்தில் உளவு பார்த்தவர். கிளாடியா சிறுமியாக இருந்தபோது, புனைவில் உள்ள கதைசொல்லியிடம் அவள் தன் தந்தையை உளவு பார்க்கச் சொல்கிறாள். வளர்ந்தபின் அவள் தன் குடும்பத்தின் கடந்த காலத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறாள். கதைசொல்லியும் அவளும் அதற்கான பயணம் கிளம்புகின்றனர். கதையைத் திருடுபவன் என்று சொல்வதைவிட, கற்பனைவளமற்ற படைப்பாளி என்று இந்தக் கதைசொல்லியைச் சொல்லலாம் – அவளது கதையைத் தன் நாவலின் சட்டகமாக அவன் எடுத்துக் கொள்கிறான், இதனால் இருவரும் பிரிய வேண்டியதாகிறது. “என் கதை உனக்கு முக்கியம் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் உன் கதை அதைவிட முக்கியமானது,” என்று சொல்கிறாள் அவள்.

நிஜ வாழ்வு கதைகளைப் பதிவு செய்வதன் நன்மைகளாகக் கருதப்படுவனவற்றை ஜாம்ப்ரா கேள்விக்குட்படுத்துகிறார். எழுத்து வளர்தலைப் போன்றது: “முன்னெல்லாம் நமக்கு அதிகம் தெரிந்திருந்தது. ஏனெனில், நாம் உறுதியான நம்பிக்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் நிறைந்தவர்களாக இருந்தோம்… இப்போது நாம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம். அதிலும் குறிப்பாக, தோல்வியைப் புரிந்து கொள்கிறோம்.” வீடு திரும்பும் வழிகள், கதைசொல்லியின் இளம்பருவத்தின்கீழ், கொந்தளிப்பான சரித்திரத் தளைகளின்கீழ் ஏறத்தாழ ஒரு கோடு வரைந்து விடுகிறது. நிகழ்காலத்தில் தன் வேர்களைக் கொண்ட சிந்தனைகளை எதிர்கொள்ளும் சுதந்திரம் இதனால் அவனுக்குக் கிட்டுகிறது. சிக்கலானதாக இருந்தாலும் நுண்மைகள் நிறைந்த இந்த நாவல், சிலேவின் புதுப்படைப்பாளிகளில் முதல்நிலை எழுத்தாளராக ஜாம்ப்ராவை நிறுவுகிறது. தென் அமெரிக்க கண்டத்தின் மிகக் கடினமான வரலாற்றுக் கதைக்கருக்களை சமகாலத்தில் நிலவும் நவீன கலை வடிவத்தினுள் ஊடுபாவு செய்யும்ம் கொலம்பியாவின் Juan Gabriel Vásquez முதலிய பிற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு இணையான இடத்தை இந்நாவல் ஜாம்ப்ராவுக்கு வழங்குகிறது.

நன்றி – The Guardian

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.