
பாக்கெட்டிலிருந்து டொடய்ங்கென்று சத்தம் வந்தது.
மூச்சிறைக்க நடந்து கொண்டிருந்த அனந்துவின் நடை வேகம் கொஞ்சம் குறைய – கேசவன் திரும்பிப் பார்த்தார்.
இரவு பர்தாவை விலக்கிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை நேரத்தில் நடேசன் பார்க் உயிர் பெற்றிருந்தது. எல்லா வயதிலுமாக ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக பார்க்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். 40+கள் நடை பயில, பதின்மங்களும், இருபதுகளும் வியர்வையில் உடை நனைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.
புல் வெளியில் வட்டம் கட்டி யோகா. ஹா ஹா ஹா வென்று ஒருவர் சிரிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நடந்து முடித்த ஒரு கும்பல் குட்டிச் சுவருக்கு அந்தப்பக்கம் கை நீட்டி அருகம்புல் ஜூஸ் வாங்கிக் குடித்துக் கொண்டே தினத்தந்தியை ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனந்து பாக்கெட்டுக்குள் கையை விட்டு நீள்செவ்வக செல்பேசியை வெளியே எடுத்தார். அப்படியே அந்த நடைபாதையில் சிலை மாதிரி நின்று – ஆள்காட்டி விரலால் ஃபோன் பட்டனை அழுத்தி உயிர்ப்பித்து திரையில் உள்ள செய்தியைப் படிக்க ஆரம்பித்தார்.
கேசவன் எரிச்சல் பொங்கிக் கொண்டு வர அனந்துவைப் பார்த்துக் கேட்டார். “உனக்கும் அந்த வியாதி வந்துருச்சா? என் பசங்க புள்ளைங்களை தினமும் நான் திட்டித் தீர்க்கிறேன். எந்நேரம் பார்த்தாலும் இந்த எழவை எடுத்துக் கையில் வெச்சிக்கிட்டு தொட்டுத் தடவி அதைப் பார்த்தே சிரிச்சிகிட்டு…”
அனந்து அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தார். “கேசவா, உனக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோனை வாங்கிக் கொடுத்து, நெட்பேக் போட்டுக் கொடுத்தா நீயும் இதையேதான் செய்வே.”
“உன் பையன் அமெரிக்காவில் இருக்கான். அவனுக்கு இமெயில் அனுப்பணும். அவன் கூட வீடியோல பேசணும். உனக்கு இதெல்லாம் தேவை. இந்தக் கருமாந்திரம் எல்லாம் எனக்கு வேண்டாம்.”
“உன் பொண்ணை அலகாபாத்ல கட்டிக் கொடுத்திருக்கே. உனக்கும்தான் இது தேவை. உனக்கு இந்த டெக்னாலஜி எல்லாம் பார்த்தா பயம். ஒண்ணும் விளங்கலை. உன்னோட இயலாமையை இப்படிக் கோபமா வெளிப்படுத்தறே. இதை எழவுங்கறே. கருமாந்திரம்ங்கறே. இதை யூஸ் பண்ற எல்லாரையும் திட்டித் தீர்க்கறே.”
கேசவனால் பதில் பேச முடியவில்லை. அது வாஸ்தவம்தான். அவருடைய பரம்பரை அச்சுத் தொழில் ஒரு கட்டத்தில் நொடிந்ததும் கூட இப்படித்தான். கையில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த அவருடைய அப்பா எலக்ட்ரிக் ப்ரஸ் வந்தபோது எப்படியோ தட்டுத் தடுமாறி அதற்கு மாறிக் கொண்டார். இவர் காலத்தில் கம்ப்யூட்டரின் ஆதிக்கம் தலையெடுத்து டி.டி.பி விஸ்வரூபமாய் விரிய, கேசவனால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதற்குள் அவர் மகன் பிஎஸ்சி முடித்து ஏதோ ஓர் உத்தியோகத்தைப் பிடித்துக் கொண்டதால் இவர் குடும்பம் பிழைத்தது.
அனந்துவுக்குத் தெரிந்து கேசவன் மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். பொண்ணோ, பையனோ அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இருந்தாலும் கூட முனைப்பு எடுத்து புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில்லை.
அவருக்கே முதலில் இதெல்லாம் பிடிபடவே இல்லை. முதல்முறை லீவில் வந்தபோது லேப்டாப் ஒன்று வாங்கி வைத்து விட்டுப் போனான் பையன். எப்படி ஆன் செய்ய வேண்டும், நீல நிற ‘e’ – ஐ மவுசால் க்ளிக்கி ஹிண்டு, தினமலர் படிக்க எல்லாம் கூட சொல்லிக் கொடுத்தான். மவுசை அவர் நினைத்த இடத்துக்குத் திரையில் கொண்டு போய் நிறுத்தவே படாதபாடு பட வேண்டியிருந்தது. எதையோ அழுத்தப்போய் அவர் படித்துக் கொண்டிருக்கும் விண்டோ திடீரென்று எங்கோ போய் மறைந்து கொள்ளும். மறுபடி அதைக் கண்டுபிடித்து மேலே கொண்டு வருவதற்குள் இயலாமை, கோபம், வெறுப்பு எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்த மடிக்கணினியை ஒரு மிதி மிதித்து உடைத்துப் போடலாமா என்றே தோன்றும்.
இப்போது அனந்துவுக்கு அதெல்லாம் தண்ணி பட்ட பாடு.
லேப்டாப்பெல்லாம் பழசாகி விட்டது. போன லீவில் ஐ பேட் டேப்ளட் வாங்கிக் கொடுத்திருந்தான். அப்புறம் பெரிய செவ்வகமாய் ஸ்மார்ட் ஃபோன். ஃபோனிலேயே இப்போது எல்லாமே செய்து விட முடிகிறது.
அவனோடு ஸ்கைப்பிலோ, கூகிள் ஹேங் அவுட்டிலோ பேசலாம். வாட்ஸாப் மெசேஜ். ஃபேஸ்புக். ஷாருக்கான் ஃபோட்டோவோடு ஜாலியாக ஒரு ஃபேக் ஐடி கூட வைத்துக்கொள்ளுமளவு தேறி விட்டார். நேற்று ச்சேட்டில் ஒரு பெண் வந்து ஐ லவ் யூ என்றது. மனசு கேட்காமல், “நான் ஒரு கிழவன்மா” என்று உண்மையைச் சொல்லி விட்டார்.
எல்லாவற்றையும் விட இந்த காலண்டரும், நினைவூட்டிகளும்தான் அவருக்கு ரொம்பப் பிடிக்கின்றன.
அவருக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. கல்யாணமான புதிதில் பிறந்த நாள் நினைவில் இல்லாமல் போக, ரேணுகா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் பத்து நாள் தங்கி விட்டாள். அதற்கெல்லாம் இப்போது சாத்தியமே இல்லை. நாளை யாருக்காவது பிறந்த நாள் என்றால் நேற்றே ரிமைண்டர் வருகிறது.
அந்தக் காலத்தில் கிராமத்தில் மரகதம் பாட்டிதான் எல்லோருக்குமே ரிமைண்டர். யார் எப்போது பிறந்தார்கள், யாருக்கு எப்போது கல்யாணமானது, எந்தப் பெண் எப்போது ருதுவானாள். தேதி நேரம் பிசகாமல் சட்டென்று சொல்வாள். அந்த மாதிரி அபூர்வ திறன்களுக்கு இனி மதிப்பில்லை. எல்லோர் கையிலும் கைக்கு அடக்கமாய் ஒரு மரகதம் பாட்டி இருக்கிறாள். ஐம்பத்தாறை ஐம்பத்தாறால் மனசுக்குள் பெருக்க இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. அதனால் என்ன, எதற்குத் தெரிய வேண்டும்? குரங்காயிருந்த மனிதன் மனிதனான பிறகு எத்தனை மறந்திருக்கிறான். மனசுக்குள் பெருக்கும் திறன் மறந்தால், வேறு எத்தனையோ திறன்களைப் பெருக்கிக் கொள்ளவே போகிறான்.
“கேசவா, இந்நேரம் சரவணபவன் திறந்திருப்பான். வா அங்க போகலாம்.”
“எதுக்கு?”
விடுவிடுவென அங்கே போய் ஒரு மைசூர்பாக் வாங்கிக் கொடுத்து, “ஹேப்பி பர்த் டே டா கேசவா!”
“யாருக்கு எனக்கா? இன்னிக்கா?”
கேசவன் ஒரு விநாடி திகைத்து கல்லா கவுண்ட்டருக்கு மேலே இருந்த தினசரி காலண்டரை உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் லேசாகத் தளும்பின. அம்மா இருந்த வரை கோயிலில் அர்ச்சனை செய்து விபூதி கொண்டு வந்து தருவாள். அதற்கப்புறம் மனைவியோ, மகனோ, மகளோ அதை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. எத்தனையோ வருடங்களுக்கப்புறம் இதோ ஒருவன் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறான்.
“ஃபோன்ல சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்ததுக்குத் திட்டினியே… இதான் மெசேஜ். உனக்கு இன்னிக்கு பர்த் டே-னு ரிமைண்டர் வந்துச்சு.”
அனந்து நீட்டிய போனை இப்போது ஆர்வமாய் வாங்கிப் பார்த்தார் கேசவன்.
அனந்துவும் இதெல்லாம் படிப்படியாய் மகனிடம் கேட்டுக் கற்றுக் கொண்டதுதான்.
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களின் பர்த் டே எல்லாம் தானாகவே வந்து விடுகின்றன. கேசவன் மாதிரி ஒன்றுமே தெரியாத ஜந்துக்களின் பிறந்த நாள் எல்லாம் எப்படி நினைவுபடுத்திக் கொள்வது? கூகிள் காலண்டரில் பதிந்து கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுத்தான் மகன். ரிபீட் இயர்லி என்று சொன்னால் வருஷா வருஷம் இந்த எலக்ட்ரானிக் மரகதம் பாட்டி கரெக்டாய் அந்தந்தத் தேதியில் குரல் கொடுத்து விடுகிறது.
கேசவன் நெகிழ்ச்சியில் இருக்கும்போதே, “மாறுகிற காலத்துக்கேற்ப நாமும் மாறிக்கணும் கேசவா. பழசைப் பிடிச்சுத் தொங்கிட்டே புதுசா வர எல்லாத்தையும் திட்டிட்டிருக்கக் கூடாது.” என்று அரை மணி நேரம் லெக்சர் கொடுத்து விட்டு – வீட்டுக்குக் கிளம்பினார்.
ஷேவ் பண்ணி முடித்து, வெந்நீரில் குளித்து விட்டு, ரேணுகா வைத்த இட்லியை சாப்பிட்ட பின் – முன்பெல்லாம் பேப்பரைப் பிரித்து உட்காருவார். இப்போது அதுவும் ஃபோனிலேயே வந்து விடுகிறது.
மறுபடியும் ஃபோனை எடுத்த போது நிறைய நோட்டிஃபிகேஷன்கள் அடுக்கடுக்காய் இருந்தன.
அவற்றுக்குக் கீழே போயிருந்த மகனின் கல்யாண நாள் நினைவூட்டலையே அப்போதுதான் பார்த்தார்.
“அடடா.”
அவசரமாய் ஸ்கைப்பைத் திறந்து, “டிங் டிங் டிங் டிங் டிங்….”
திரையில் குறுந்தாடியோடு தோன்றினான் தருண்.
“அப்பா!”
“திருமண நாள் வாழ்த்துகள்டா! பதினாறும் பெற்றுப் பெறு வாழ்வு வாழணும்.”
“இன்னிக்கு… ஓஹ்… “ சிரித்தான் தருண். “அப்பா, அது பழசு. கேலண்டர்ல நீங்க அப்டேட் பண்ணலையா?”
ஒளிப்பட உதவி – Lifehack