
எனக்கு வரும் கனவு போலவே
இந்தக் கனவும் இருக்கிறது
என்கிறாள்
தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டே
கனவுகள் தொலைப்பதை
வழமையாக கொண்டிருக்கும்
அப்பா வியப்போடு பார்க்க
அவள் கண்டு வந்த
எந்தக் கனவையும்
விட்டுவிடாமல்
பட்டியலிட்டு சொல்கிறாள்.
அவற்றில் பல
சும்மா அபிலாஷைகளை
சொல்லிப் பார்க்கும்
பொய்க்கனவுகள்தான்.
நீண்டுகொண்டே போகும் விவரிப்புகளை
அவள் சொல்வதும்
கனவு போலவே
கண்டு முடித்ததும்
அவனுக்கு மறந்து போய்விடுகிறது.
கனவுகள் அல்லாத பொழுதை
இனம் கண்டு பிரித்தறியும்
திறன் கைவரப் பெறாததால்
மெய்ப்படுவன எல்லாம்
அவள் சொல்லும் கனவாகவே
அவனுக்கு தோன்றுகிறது.
‘ட்ரீம்னாலே அப்படித்தான்பா’
என்று அவள் சொல்வதையும் சேர்த்து.
கவிஞர் குறிப்பு-
ஒளிப்பட உதவி- Bennis Public Relations Inc
