வண்ணக்கழுத்து 7: வண்ணக்கழுத்தின் கதை

பகுதி 7: வண்ணக்கழுத்தின் கதை

முந்தைய பகுதியில், எந்த வழியாக சென்று வண்ணக்கழுத்து மீட்கப்பட்டதோ, அந்த இடங்களையும் சம்பவங்களையும் பற்றி மிகக் குறைவாகவே சொல்லியிருந்தேன். நாங்கள் தேடிய பத்து நாட்களில், முதல் நாளிலேயே கோண்ட் வண்ணக்கழுத்தின் பாதையை கச்சிதமாக கண்டுபிடித்துவிட்டார். ஆனால், அதைப் பற்றி தெளிவாகவும் கோர்வையாகவும் தெரிந்து கொள்ள வண்ணக்கழுத்தே தன் சாகசப் பயணத்தை விவரித்தால் நன்றாக இருக்கும். கனவின் இலக்கணத்தையும் கற்பனையின் அகராதியையும் வைத்துக் கொண்டால், அவனைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமில்லை.

நகரத்திற்குத் திரும்புவதற்காக, அக்டோபர் மாத மதியத்தில் டார்ஜிலிங்கிலிருந்து ரயில் ஏறிய போது வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் உட்கார்ந்து கொண்டு, தான் காணாமல் போன கதையை, டெண்டாமிலிருந்து சிங்காலியாவிற்கு போய் திரும்ப வந்த கதையைச் சொல்லத் துவங்கினான்:.

”பல மொழிகளை அறிந்தவரே, மனிதர்களின் மொழியையும் விலங்குகளின் மொழியையும் அறிந்த மாயவரே, என் கதையைக் கேளுங்கள். ஒரு பறவையின், தடுமாறும் சுற்றித் திரியும் விவரிப்பைக் கேளுங்கள். நதியின் வேர்கள் மலையில் இருப்பது போல, என்னுடைய கதையும் மலைகளில் தொடங்குகிறது.

“கழுகுகளின் கூட்டுக்கு அருகே, பொல்லாத பருந்தின் நகங்கள் என் அம்மாவைக் துண்டு துண்டாகக் கிழித்ததை நான் கண்டபோது, விரக்தியில் செத்துப்போகவே முடிவு செய்துவிட்டேன். ஆனால், இந்த மோசக்காரப் பறவைகளின் நகங்களில் சிக்கி அல்ல. இரையாவதென்றால், காற்றின் அரசனுக்கு இரையாவேன் என்று கழுகளின் கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கும் விளிம்பில் சென்று உட்கார்ந்து கொண்டேன். ஆனால், அவை என்னை ஒன்றும் செய்யவில்லை. அவற்றின் வீடே துக்கத்தில் இருந்தது. அவற்றின் அப்பா, பொறி வைத்து பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். அம்மாவோ, பெஸண்ட்களையும் முயல்களையும் பிடிக்க வெளியே போயிருந்தார். கழுகுக் குஞ்சுகள், இதுவரை தங்களுக்காக கொல்லப்பட்டதை மட்டுமே சாப்பிட்டிருந்ததால், உயிரோடு இருக்கும் என்னைக் கொன்று சாப்பிடும் துணிச்சல் அவற்றுக்கு வரவில்லை. கடந்த சில நாட்களில் நான் நிறைய கழுகுகளைப் பார்த்துவிட்டேன். ஆனால் ஏன் எதுவும் என்னைத் தாக்கவில்லை என்பது தெரியவில்லை.

“பிறகு என்னைப் பிடித்துக் கூண்டில் போட நீ வந்தாய். மனிதர்களோடு இருக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால் பறந்துவிட்டேன். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று பறந்தேன். ஆனால் உன்னுடைய நண்பர்களையும் அவர்களின் இடங்களையும் நினைவில் வைத்திருந்தேன். டெண்டாமுக்குத் தெற்கே போகும் வழியில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் தங்கினேன். நான் பறந்த இரண்டே நாட்களில், ஒரு நாள் புதியதாக இறக்கை முளைத்திருந்த பருந்து ஒன்று என்னைத் தாக்கியது. அதன் வாழ்நாளிலேயே மிக மோசமான தோல்வியைக் கொடுத்தேன். இப்படித்தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு நாள் காலை சிக்கிமுக்கு கீழே மரங்களுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, தலைக்கு மேல் காற்று கிரீச்சுடுவதைக் கேட்டேன். இப்போது அது என்னவென்று புரிந்து விட்டது, உடனே ஒரு தந்திரம் செய்தேன். சடாரென்று நின்றுவிட்டேன். என் மீது பாய்ந்து வந்த பருந்து, குறி தவறி மரங்களின் உச்சியைத் தன் சிறகுகளால் உரசிக்கொண்டு கீழே போய்விட்டது. நான் மேலே உயர்ந்து வேகமாகப் பறந்தேன். அதுவும் விடாமல் தொடர்ந்தது. பிறகு நான் காற்றில் வட்டமடிக்கத் துவங்கினேன். நான் இன்னும் மேலே பறந்தேன். என் நுரையீரல் சுவாசிக்க முடியாத அளவிற்கு உயரமாகப் பறந்தேன். அதனால், நான் மீண்டும் கீழிறங்க வேண்டியதாயிற்று.

“நான் கீழே இறங்கி ரொம்ப நேரம் இருக்காது, அந்தப் பருந்து பயங்கரமாகக் கத்திக் கொண்டும், கிரீச்சிட்டுக் கொண்டும் என் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த இடத்தில் என் வாழ்வில் முதல் முறை, என் அப்பா செய்ததைப் போல, குட்டிக்கரணம் அடிக்க முயற்சி செய்தேன். வெற்றிகரமாக இரட்டைக் குட்டிக்கரணம் அடித்துவிட்டு, நீரூற்று போல மேலே ஏறினேன். மீண்டும் குறியைத் தவறவிட்ட பருந்து, தாக்குவதற்காக மேலே ஏறியது. ஆனால், அதற்கு எந்த வாய்ப்பையும் நான் கொடுக்கவில்லை. நான் அதை நோக்கிப் பறந்தேன். அதைக் கடக்கும்போது, அது கீழே இறங்கி, பின் மேலேறி என்னைப் பிடிக்க வந்தது. மீண்டும் நான் குட்டிக்கரணம் போட்டு, அதன் மீது மோதினேன். அது தன் சமநிலையை இழந்துவிட்டது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த நொடியில் என்னவோ ஒன்று பூமியை நோக்கி என்னை இழுத்தது. என் இறக்கைகள் சக்தியை இழந்தன. ஒரு கழுகைப் போல, பலமாகவும் தவிர்க்கமுடியாமலும், வீழ்ந்தேன். என் முழு எடையோடு அந்தப் பருந்தை மண்டையில் மோதினேன். அந்த அடி அதை நிலைகுலையச் செய்துவிட்டது என்று நினைக்கிறேன். அதுவும் கீழே விழுந்து, மரங்களுக்கு இடையே காணாமல் போய்விட்டது. நான் ஒரு ஐலக்ஸ் மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டதே நிம்மதியாக இருந்தது..

“ஒரு காற்றுச் சுழல் என்னை கீழே இழுத்திருக்கிறது. அந்த முதல் அனுபவத்திற்குப் பிறகு, அதைப் போல பல முறை சுழல்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஏன் சில வகையான மரங்களுக்கு மேலேயும், நீரோடைகளுக்கு மேலேயும் காற்று அதிகமாகக் குளிர்ந்து, ஒரு சுழலை உண்டாக்கி, அதை எதிர்கொள்ளும் பறவைகளை உள்ளே இழுக்கிறது என்பது புரியவில்லை. மேலேயும் கீழேயும் அலைக்கழிக்கும் அந்தச் சுழலில் பறக்க நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவற்றை நான் வெறுக்கவில்லை. ஏனென்றால், நான் சந்தித்த முதல் காற்றுச் சுழல்தான் என் உயிரைக் காப்பாற்றியது.

“ஐலக்ஸ் மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, எனக்குப் பயங்கரமாக பசித்தது. அந்தப் பசி என்னை வீட்டை நோக்கிப் பறக்க வைத்தது. அதிர்ஷ்டவசமாக, எந்தவொரு இரக்கமற்ற பருந்தும், அம்பைப் போல் பறந்த எனக்குத் தடையாய் வரவில்லை.

“புதிதாய் இறக்கை முளைத்த அந்தக் கொலைகாரனிடமிருந்து வெற்றிகரமாக தப்பித்த பிறகு என்னுடைய தைரியம் திரும்ப வந்துவிட்டது. நீ வீட்டிற்குத் திரும்பிய உடனே, ‘என் நண்பன் வந்துவிட்டான். என்னை உயிரோடு பார்த்துவிட்டான், இனி என்னைப் பற்றி வருத்தப்படமாட்டான். ராஜாளிப்பறவைகள் நிறைந்த காற்றில் மீண்டும் பறந்து என் தைரியத்தை சோதிக்க வேண்டும்’, என்று நினைத்துக் கொண்டேன்.

”என்னுடைய உண்மையான பயணம் இப்போது தான் துவங்குகிறது. கழுகின் கூட்டை நோக்கி வடக்கே பறந்தேன். பிறகு, முன்னர் என்னை ஆசீர்வதித்த பெளத்த துறவி இருக்கும் மடாலயத்திற்குச் சென்றேன். அங்கே, என் பழைய நண்பர்களான உழவாரக்குருவி தம்பதியரை மீண்டும் சந்தித்தேன். அங்கிருந்து வடக்கே நகர்ந்து, சிங்காலியாவைத் தாண்டி, கடைசியாக கழுகுகளின் பொந்தை அடைந்தேன். அவை அங்கிருந்து பறந்துவிட்டிருந்தன. அதனால், நான் அங்கேயே செளகரியமாகத் தங்கினேன். ஆனால், கழுகுகள் எல்லாவிதமான கழிவுகளையும் தங்கள் கூடுகளிலேயே விட்டுவைத்திருப்பதால் அதிகம் சந்தோஷப்பட முடியவில்லை. அவற்றில் நோய்ப் பூச்சிகள் நிறைந்திருக்கும் என்று பயந்தேன். பகலை கழுகுகளின் கூட்டிலேயே கழித்த போதிலும், இரவை இந்த பயங்கரமான பூச்சிகளின் தொந்தரவில்லாமல் ஒரு மரத்தில் கழிக்க முடிவு செய்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு, நான் கழுகுப் பொந்துக்குள் போய் வருவது, மற்ற பறவைகள் மத்தியில் எனக்கொரு கெளரவத்தைப் பெற்றுத் தந்தது. என்னைப் பார்த்து அஞ்சின. ஒருவேளை, என்னை கழுகின் ஒருவகை என்று அவை நினைத்துக் கொண்டிருந்ததால் அப்படி இருக்கலாம். பருந்துகள் கூட என்னிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தன. இது எனக்குத் தேவையான தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆக, ஒரு காலையில், வெகு உயரத்தில், தெற்கு திசை நோக்கி வெள்ளைக் கூட்டமாகவரும் பறவைகளைப் பார்த்தபோது, நான் அவற்றோடு சேர்ந்து கொண்டேன். அவை ஆட்சேபிக்கவில்லை. வெப்பம் நிறைந்த கடலைத் தேடி, சிலோனையும் அதைத் தாண்டியும் பறக்கும் காட்டு கீஸ் வாத்துகள் அவை.

“அந்த வாத்துகள், இரண்டு மணிநேரப் பறத்தலுக்குப் பின், அந்த நாள் வெப்பமாகிவிட, விரைந்து ஓடும் ஒரு மலை ஓடையில் இறங்கின. கழுகுகளைப் போல் குனிந்து பார்க்காமல்\ அவை அடிவானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. எப்போதாவது தான் கீழே பார்த்தன. ஆனால்தொலைவானில் வெண்நீலத்தில் தெரிந்த சிறிய நாடாவை அவை கவனித்துவிட்டன. மெதுவாக இறங்கும் நேர்க்கோட்டில் அதை நோக்கிப் பறந்து சென்றன. பூமியே எழுந்துவந்து எங்களைச் சந்திக்க வருவது போல் இருந்தது.. அனைத்தும் வெள்ளி ஓடையில் பாய்ந்தன. இப்போது, தண்ணீர் நீலமாக இல்லாமல் வெள்ளி போல மின்னியது. அவை தண்ணீரில் மிதந்தன. என்னுடைய கால்கள் அல்ல என்று எனக்குத் தெரியும். அதனால், ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டு அவற்றின் விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வாத்துகளின் அலகுகள் எத்தனை தட்டையானவை எத்தனை அசிங்கமானவை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கான காரணத்தை இப்போது நான் தெரிந்து கொண்டேன். கரைகளில் வளரும் சிப்பிக்கள் போன்றவற்றைப் பிடிக்க, அலகுகளை இடுக்கிகள் போல அவை பயன்படுத்தின. ஒவ்வொரு முறையும் ஒரு வாத்து தன்னுடைய அலகுகளைக் கொண்டு செடிகளையோ சிப்பிகளையோ பிடித்து, ஒரு கசாப்புக்கடைக்காரன் வாத்தின் தலையைத் திருகுவது போலத் திருகி பிய்த்துவிடும். பிறகு தன்னுடைய இரையை மொத்தமாக தொண்டையில் போட்டு வலுவாக மென்று அரைத்து துவம்சம் செய்துவிடும். உணவுக் குழாய்க்குள் கொஞ்ச தூரம் போவதற்கு முன்னாலேயே, அதன் உருவம் ஒன்றுமில்லாததாகிவிடும். ஒரு வாத்து செய்தது இதை விட மோசம். கரையோரத்தில் இருந்த ஒரு பொந்தில் ஒரு மீனைக் கண்டுவிட்டது. தண்ணீர்ப் பாம்பைப் போன்ற ஒல்லியான மீன் அது. அதை இழுக்கத் தொடங்கியது. இழுக்க இழுக்க, அது ஒல்லியாகவும் நீளமாகவும் ஆனது. மெதுவான, ஆனால் பயங்கரமான இழுபறி போராட்டத்திற்குப் பின் அதைப் பொந்திலிருந்து வெளியே இழுத்தாயிற்று. பிறகு வாத்து நொண்டி நொண்டி கரையில் ஏறி, மீனைத் தரையில் விசிறியடித்தது. அது பற்றிக் கொண்டிருந்த மீனின் உடற்பகுதி கிட்டத்தட்ட கூழ் மாதிரி ஆகி விட்டிருந்தது. துடிக்கும் இரை ஏற்கனவே செத்துப் போயிருந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பிறகு, எங்கிருந்தோ இன்னுமொரு வாத்து நடந்து வந்தது. இந்தப் பறவைகள், பறக்காமலோ நீந்தாமலோ இருக்கையில் அவற்றைக் காணச் சகிக்காது. தண்ணீரில், தூக்கக் குளத்தில் மிதக்கும் கனவுகள் போல இருக்கும். ஆனால் தரையிலோ ஊன்றுகோல் கொண்டு நடக்கும் முடவன் போல நொண்டும். இப்போது இரண்டு கீஸ் வாத்துகளும் கூச்சல் போடத் துவங்கியிருந்தன. அடுத்தவரின் இறகுகளைப் பிய்த்துக் கொண்டன.. இறக்கைகளால் அடித்துக் கொண்டன. ஒவ்வொரு முறை தரையிலிருந்து மேலே குதிக்கும் போது, ஒன்றை மற்றொன்று உதைத்தது. எதற்காக சண்டையிடுகின்றனவோ அதை மறந்து அவை சண்டை போட்டுக் கொண்டிருக்க, பூனை மாதிரியான ஒரு ஜந்து, இருக்கலாம் நாணல்களிலிருந்து பாய்ந்து வந்து, விலாங்கு மீனை எடுத்துக் கொண்டு மறைந்துவிட்டது. இப்போது கீஸ் வாத்துகள் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால், காலம் கடந்துவிட்டது. வாத்து முட்டாள்கள்.. இவற்றோடு ஒப்பிடும் போது எங்களை புத்திசாலித்தனத்தின் ஆதர்சங்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.

”அவை சண்டையிட்டு முடித்த பிறகு, தலைமை கீஸ் வாத்து ‘க்ளக், காவ், காவ், காவ்!’ என்று கரைந்தது. அந்த நொடியில் எல்லா வாத்துகளும் வேகத்தைக் கூட்டுவதற்காக கடினமாக துடுப்புபோட்டன. சிறிது வேகமாக துடுப்பு போட்டதும், அவை காற்றில் ஏழுந்தன. இப்போது அவை எத்தனை அழகு! அகன்ற இறக்கைகள் எழுப்பும் மெல்லிய ஓசை, வானத்தில் ஓவியம் போலத் தெரியும் அவற்றின் கழுத்துகளும் உடல்களும் இணைந்து கண்களைச் குளிரச் செய்யும் ஒரு காட்சியை உருவாக்கின. நான் அதை ஒரு நாளும் மறக்கமாட்டேன்.

“ஆனால் ஒவ்வொரு மந்தையிலும் ஒன்றாவது பின்தங்கி விடுகிறது. தான் பிடித்த மீனுடன் போராடிக் கொண்டிருந்ததால் ஒரு பறவை பின்தங்கிவிட்டது. கடைசியில் மீனைப் பற்றிக் கொண்டு, ஒரு மரத்தின் மறைவில் அதை உண்ணலாம் என்று மரத்தைத் தேடி மேலே பறந்தது. திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரிய பருந்து தோன்றி அதைத் தாக்கியது. அந்த கீஸ் வாத்து மேலே பறந்தது. ஆனால், அயராத பருந்து விடவில்லை. இருவரும் உயரே உயரே பறந்து வட்டமிடனர், கூச்சலிட்டுக் கொண்டும் வாத்துக் குரல் எழுப்பிக் கொண்டும். திடீரென்று ஒரு அகவலின் எதிரொலி, மெலிதாக ஆனால் தெளிவாகக் கேட்டது. மந்தையின் தலைவர் பின்தங்கிய பறவையை அழைக்கிறார். அதனால், அதன் கவனம் சிதறிவிட்டது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே, பதிலுக்கு இந்த கீஸ் வாத்தும் சத்தமிட்டது. அந்த நொடியில் அதன் வாயிலிருந்த மீன் நழுவிவிட்டது. அது ஒரு இலையைப் போல விழத் துவங்கியது. பருந்து தாழ்ந்து அந்த மீனை தன் நகங்களால் கிழிக்கப் போகையில், காற்றில் ஒரு பெரும் எழுச்சியும் உருமலும் எழுந்தது. ஒரு நொடியில், செங்குத்தான சரிவிலிருந்து விழும் பாறையாய் ஒரு கழுகு விழுந்தது. அந்தப் பருந்து உயிருக்குப் பயந்து போய் ஓடிவிட்டது. அதைக் காண எனக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“அகன்ற பாய்மரங்களைப் போன்ற அந்த கழுகின் இறக்கைகளுக்கு கீழே அதன் நகங்கள் மின்னல் வேகத்தில் விரிந்து, அந்த மீனைப் பற்றிக்கொண்டன. பின்னர் காற்றில் அதன் முட்டிக்கு மேலே இருந்த இறகுகளை படபடக்க, காற்றின் அரசன், பழுப்புத் தங்கம்போல் மின்ன பறந்து சென்றது. தொலை தூரத்தில், அந்தப் பருந்து இன்னும் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

“அது தொலை தூரம் போனதில் எனக்கு சந்தோஷம். ஏனென்றல் நான் கேராவான் போகும் சாலையைத் தேடிப் பறக்க வேண்டும். அங்கு மனிதர்கள் சிதறிய தானியங்கள் எனக்குக் கிடைக்கும். விரைவில் கொஞ்சம் தானியங்களைக் கண்டு கொண்டேன். தேவையான அளவு உண்ட பிறகு, ஒரு மரத்தில் உட்கார்ந்து கொண்டு உறங்கிப்போனேன். நான் எழும் போது, மதியம் பாதி கடந்திருந்தது. உயரப் பறந்து, ஆசிர்வதிக்கப்பட்ட மடாலயத்திற்குச் சென்று என் உழவாரக் குருவி நண்பர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இப்போது கவனமாகப் பறக்க நான் கற்றுக் கொண்டு விட்டதால், என் பயணத்தில் எந்த இடரும் வரவில்லை. பொதுவாக மேலே மிக உயரப் பறந்து, அங்கிருந்து கீழேயும் அடிவானத்தையும் நோக்குவேன். காட்டு கீஸ்களைப் போல நீண்ட கழுத்து எனக்கு இல்லை. இருந்த போதிலும், பின்னாலிருந்து யாரும் தாக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள சில நிமிடங்களுக்கு ஒரு முறை பக்க வாட்டில் பார்த்துக் கொண்டேன்.

“மடாலயத்தில் துறவிகள் சூரிய அஸ்தமனத்தின் போது உலகின் மீது ஆசீர்வாதங்களைப் பொழிவதற்காக தங்கள் கோவிலின் விளிம்பில் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சரியாக அந்த நேரத்தில் நான் மடாலயத்தை அடைந்தேன். உழவாரக் குருவித் தம்பதிகள் தங்கள் கூட்டுக்கு அருகே பறந்து கொண்டிருந்தார்கள். அங்குதான் அவர்களின் மூன்று குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். என்னை வரவேற்பதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்களின் மாலைப் பிரார்த்தனைக்குப் பிறகு, துறவிகள் எனக்கு உணவளித்தார்கள். மேலும், அந்த இனிமையான வயதான துறவி எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணை என்று யாரோ என் மீது பொழிந்த ஆசீர்வாதம் பற்றி ஏதோ சொன்னார். பிறகு அவருடைய கையிலிருந்து, கொஞ்சம் கூடப் பயம் இல்லாமல் பறந்தேன். மனதும் உடலில் அதே நிலையில் இருக்க, மடாலயத்தின் கூரைக்குக் கீழ் உழவாரக் குருவிகளின் கூட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் எனது கூட்டிற்குள் நுழைந்தேன்.

”அக்டோபர் மாத இரவுகள் குளிரானவை. காலையில் பூசாரிகள் மணியடித்த போது, சின்ன உழவாரக் குருவிகள் பயிற்சிக்காகப் பறந்தன. அவர்களுடைய அப்பா அம்மாவும் நானும் காலைநேரக் குளிர்ச்சியை உதறிக் கொள்வதற்காகப் பறந்தோம். அன்றைய தினத்தை, அவர்களுடைய தென் திசை பயணத்திற்கான ஆயத்தங்களுக்கு உதவி செய்ய அங்கேயே செலவழித்தேன். அவர்கள் போகும் இடத்தில் சிலோனிலோ ஆப்பிரிக்காவிலோ கூடு கட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். உழவாரக் குருவிகளின் கூடுகளைக் கட்டுவது அத்தனை எளிதான செயல் அல்ல என்று எனக்கு விளக்கினார்கள். பின்னர் என் அறிவுத் தாகத்தைத் தீர்க்க, அவர்கள் வீடுகளை எப்படிக் கட்டுவது என்று எனக்குச் சொன்னார்கள்.”

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.