கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் நினைவுகள் தெலுங்கில், “நிர்ஜன வாரிதி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கெளரி கிருபானந்தன் தமிழாக்கத்தில் “ஆளற்ற பாலம்” என்று காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், மனதை மிக ஆழமாய்த் தொட்டு நெகிழ்த்துகிறது. இது ஒரு சுதந்திர போராட்ட வீரரின், கம்யூனிஸ்டின், எல்லாவற்றுக்கும் மேல், ஒரு பெண்ணின் நினைவுக் குறிப்புகள்.
கோடேஸ்வரம்மா நான்கு வயதில் விவாகம் முடிக்கப்பட்டு விரைவிலேயே குழந்தை விதவையானவர். பின்னர், அவர் சமூக எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், கொண்டபல்லி சீதாராமையாவை மணம் முடிக்கிறார், சீதாராமையா பின்னாளில் மக்கள் போர்க்குழுவைத் துவக்கியவர். இந்த நூலில் கோடேஸ்வரம்மாவின் நினைவுகள் அவரது குழந்தைப் பருவத்தில் துவங்கி, அதன் பின் அவர் சீதாராமையாவை மணம் முடித்தது, இருவருமாக இணைந்து கம்யூனிஸ்டு கட்சிப்பணியில் ஈடுபட்டது, சீதாராமையா கைவிட்டபின் அவர் எதிர்கொள்ளும் கொந்தளிப்பான நாட்கள், மத்திம வயதில் மெட்ரிகுலேஷன் படித்து தேர்ச்சி பெறுவது, அவர் வாழ்வின் பெருஞ்சோகங்கள், இரு குழந்தைகளும் இறப்பது, சீதாராமையா முதுமையில் அவரிடம் மீண்டும் திரும்ப விரும்புவது, பேத்திகளுடன் வாழ்வைக் கழிப்பதில் கிட்டும் நிறைவு என்று தொடர்கின்றன.
அவரது வாழ்வு ஒரு சோகக்கதை. இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட கதை. மகத்தான போர்க்குணம், வீரம், வாழ்க்கை வீசுவது அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு எடுத்துக் கொண்ட பணியைத் தொடர்வதையும் பேசும் கதை. கர்ம யோகியின் வாழ்வுக்கு உண்மையான இலக்கணம்.
விதவை மறுமணம், பெண் கல்வி, சாதி ஒழிப்பு என்று பல்வேறு சமூக இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக மேற்கொண்ட வரலாற்றை இந்த நினைவுக் குறிப்பு பதிவு செய்கின்றது. அதே நேரம், வர்க்கம், சாதி, ஆண்- பெண் வேறுபாடுகள் குறித்து அக்காலத்தில் நிலவிய எண்ணங்களும் இதில் இடம் பெறுகின்றன. முன்னிருந்ததற்கு இப்போது நாம் முன்னேறியிருக்கிறோம் என்றாலும் மேலுள்ள விஷயங்களில் இன்றும் நம் தேசம் பெரிய அளவில் மாறவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
இவரது சுயசரிதையில் இரண்டு விஷயங்கள் எனக்கு தனித்து தெரிகின்றன. ஒன்று, ஆண்களில் மிகவும் புரட்சிகரமானவர்களாக இருந்தவர்களும்கூட பெண்களைத் தமக்கு சமமானவர்களாக நினைக்கவில்லை. அவர்கள் பெண் விடுதலைக்குப் போராடினார்கள், ஆனால் ஒரு பெண்ணின் தலைமையை ஏற்கத் தயாராக இல்லை. கோடேஸ்வரம்மா இதைச் சொல்லவும் செய்கிறார். வேறொரு பெண்ணுக்காக சீதாராமையா அவரைக் கைவிடுகிறார், அவரும் பெண் விடுதலை விஷயத்தில் சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருப்பதில் இருந்து தப்பவில்லை. இது போக, தனித்து தெரியும் இரண்டாவது விஷயம், கோடேஸ்வரம்மாவின் சுயமரியாதைதான். தெலுகு தேச அரசு சீதாராமையாவை விடுதலை செய்ததும் அவர் கோடேஸ்வரம்மாவும் சேர்ந்து வாழ விரும்புகிறார். ஆனால், அவருக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கலாம், ஆனால் தனக்கு இணைந்து வாழும் விருப்பம் இல்லை என்று கூறி கோடேஸ்வரம்மா அதற்கு மறுத்து விடுகிறார். அவர் வாழும் அதே விஜயவாடாவில்தான் சீதாராமையா இருந்தார் என்றாலும்கூட, நீண்ட காலம் அவரைச் சந்திக்கவும் அவர் மறுத்து விடுகிறார். அதே போல், ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர மகில சபாவில் தங்கியிருந்து கல்வி கற்ற நாட்களிலும் அவர் எவரிடம் பண உதவி பெற்றுக் கொள்வதில்லை. அவர் கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறார். ரேடியோ நாடகங்களில் நடிக்கிறார். இவற்றால் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்வது போதாதென்று கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் சந்தாவையும் செலுத்துகிறார்.
கோடேஸ்வரம்மாவின் கதை, வாழ்வின் அபத்தத்தைக் குறித்து நம்மை யோசிக்கச் செய்கிறது. தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்ததும் அவர் அன்றாடச் செலவுக்கும்கூட பணமின்றி தவிக்கிறார். காக்கிநாடாவில் ஒரு பெண்கள் ஹாஸ்டலில் அவருக்கு ஒரு மேட்ரன் வேலை கிடைக்கிறது. வாழ்க்கை ஓரளவு சுமுகமாகப் போகத் துவங்கும்போது, அவர் தன் மகனை இழக்கிறார். அவன் ஒரு புரட்சியாளனாக மாறிவிடுகிறான், அவனது மரணம் எப்படி நேர்ந்தது என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் சொல்கிறார்கள். அவரால் அவன் உடலைக்கூட பார்க்க முடிவதில்லை. அவரது மகளும் மருமகனும் மருத்துவர்கள், தில்லியில் மகிழ்ச்சியான இல்லறம் அவர்களுக்கு அமைகிறது. ஆனால் அவரது மருமகனுக்கு மத்திய கிழக்கில் வேலை கிடைத்ததும் அவர்கள் விஜயவாடா வந்து செல்கிறார்கள். விஜயவாடாவில் வெப்பம் தாக்கி அவரது மருமகன் மரணமடைகிறார். இந்த துக்கத்திலிருந்து மீள முடியாத அவரது மகள் அடுத்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு தன் இரு பெண்களையும் அனாதையாக விட்டுச் செல்கிறார். தான் உருவாக்கிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சீதாராமையா விஜயவாடா திரும்புகிறார், அவரது இயக்கச் செயல்பாடுகளுக்காக அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது. மெல்ல மெல்ல நினைவாற்றலை இழக்கும் சீதாராமையாவும் மறைகிறார். அவரது இறுதிச் சடங்குகளில் மிகச் சிலரே பங்கேற்கின்றனர். தன் வாழ்நாளெல்லாம் சமூக மேம்பாட்டுக்கு உழைத்த ஒருவர், கம்யூனிச இயக்கத்தின் அங்கமாக இருந்தவர், நக்சல் இயக்கத்தில் பங்கேற்றவர், இறுதியில் யாருமில்லாமல் இறந்து போகிறார். மானுட நேயத்தைவிட கோட்பாடுகளா முக்கியம், என்று கேள்வி எழுப்புகிறார் கோடேஸ்வரம்மா.
இந்தப் புத்தகம் கம்யூனிச இயக்கம் பற்றிய ஒரு விரிவான பார்வை அளிக்கிறது. அதே சமயம், ஒரு கோட்பாட்டாளராக அல்ல, ஒரு மனைவியாகவும் தாயாகவும் கோடேஸ்வரம்மா இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். எனவேதான் நாம் கம்யூனிஸ்ட் கட்சி உடைவது குறித்து இதில் வாசிக்கிறோம், ஆனால் இது குறித்து கட்சிக்குள் நடந்த விவாதங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த விவாதங்கள் நிச்சயம் கோடேஸ்வரம்மாவுக்கு தெரிந்திருக்கும். அதே போல், சீதாராமையா ஏன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மக்கள் போர்க்குழுவைத் துவக்கினார் என்பதையும் அவர் எழுதுவதில்லை. போராட்டத்தில் உயிரிழந்த காம்ரேடுகள் பற்றி நமக்குத் தெரிய வருகிறது, ஆனால் அவர்கள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்து குறிப்பேதும் இல்லை. இந்த சுயசரிதையில் இன்னும் பல தகவல்கள் இருந்திருந்தால் இந்தியாவில் சில முக்கியமான இயக்கங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கும், ஆனால் இந்தப் புத்தகம் இந்திய கம்யூனிச இயக்கத்திம் வரலாறு அல்ல – தான் வகுத்துக் கொண்ட விதிகளின்படி வாழ்ந்த ஒரு சுயமரியாதை மிக்க ஒரு பெண்ணின் சுயசரிதை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயசரிதை- நம் மனச்சாய்வுகளைப் புரிந்து கொள்ளவும், நியாயமான சமூகத்தை அமைக்க பலர் செய்த தியாகங்களின் மதிப்பை உணரவும், இன்னும் எத்தனை செய்யப்படக் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது நிச்சயம் உதவும்.
“ஆளற்றபாலம்” புதனத்தை பற்றிய விமரிசனத்திற்கு நன்றி. வாசகர்களை சென்றடைய வேண்டிய புதினங்களில் முக்கியமான படைப்பு. முக்கியமாக கோட்ஸ்வாரம்மாவின் ஆளுமை, தனித்தன்மை, வாழ்க்கையைப் பற்றிய புரிதல் எல்லாமே நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். அதனை தெலுங்கில் படித்த போதும், தமிழில் மொழி பெயர்க்கும் போதும் கண் கலங்காமல் இருந்தது இல்லை. வாழ்க்கையை அதனுடைய போக்கிலேயே ஏற்றுக்கொண்டு சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காமல்,வாழ்ந்து வரும் கோடேஸ்வரம்மா தொண்ணூறு வயது கடந்த நிலையில் “Nirjanavarathi” என்ற தலைப்பில் தன் வரலாறு எழுதி இருக்கிறார்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் இது ஒரு முக்கியமான புத்தகம். அவர் ஆளுமை அசாதாரணமானது.
தமிழில் மொழிபெயர்த்த உங்களுக்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறோம்