விஜய் நம்பீசன்

அஞ்சலி- ஆங்கிலம் (நம்பி கிருஷ்ணன்):

The tiled walls did not in fact
Confine; they wrung from me definition
And made me what I am. Tell me what use

The pills, the fruit, nurse’s disgusted eye
Or Glucose, or molasses. No life is short
That at its centre has this clarity.

– From “Hospital” by Vijay Nambisan

Death has at least this advantage, it intrudes brutally into our indifferent lives and forces us to assume if only for a moment a mantle of humaneness wherein we try to remember someone we once knew. Vijay’s Muse drifted out of IIT Madras, my alma mater to become the unassuming Poet well-beloved in select circles of adoring readers. I too had once drifted in that haloed Institution with the grandiose ambition of being a littérateur. Fortunately, cowardice prevailed and I have managed to trundle along the boring grooves that were predestined for me. But there was a brief period in the early Nineties when I fiercely romanticized Vijay. His first collection of poems along with Jeeth Thayil (Gemini) had just come out and if I remember right, Dom Moraes had written a glowing introduction. I was bowled over by the sheer beauty and understated emotiveness of Vijay’s Madras Central and Grandfather’s Beard. I still remember wandering to and fro with the aforementioned book in my hand, trying to memorize those two poems by rote. I was mildly depressed and wanting to “carry my unwantedness somewhere else” I foolishly tried my hand at writing “a poem like grandfather’s beard”. Vijay had won the first prize at the poetry competition held by British Council and naturally I sent my poems there. How silly of me, to have ignored the warning that stared at me from the poem with its brutal politeness. Obviously, I was one of “those whom poetry disregards” – The poems were ghastly and I was no Vijay Nambisan. But sentimental romanticism dies hard in youth which holds on to its puerile dreams even in its twenties. “If I was not going to be a poet, then at least I should be a journalist like Vijay”, was the next pipe dream I would chase down the rabbit hole for a few months. Vijay used to be a roommate of my friend in Bombay and through him I finally got to talk to Vijay. We had arranged to meet the following month but events intervened and we never got to meet after all. Oddly enough that seems a fitting end to my fiercely romanticized idealization. (“Who needs to burst into fulfillment’s desolate attic?” Right?)

Years later I attempted to capture the magic of those two poems with my clumsy Tamil when I translated them for Solvanam. Today, Vijay “desperate with knowledge, opened wide by drink” seems to have taken his much beloved wantedness somewhere else. I am still the hopeless romantic I was so many years ago, and wish that I had sent my translations to Vijay just so I can imagine his smile as he reads them. RIP Vijay Nambisan.

அஞ்சலி – தமிழில் (நம்பி கிருஷ்ணன், பீட்டர் பொங்கல்):

குறைவளவெனினும் இந்த ஒரு சிறப்பு மரணத்துக்கு உண்டு: நம் சட வாழ்வினுள் மூர்க்கமாய்க் குறுக்கிட்டு, முன்னொரு காலத்தில் நாமறிந்திருந்த ஒருவரை இப்போது மீண்டும் நினைவுகூரச் செய்து ஒரு கணமேனும் நேயவுணர்வுகளை நம் மீது போர்த்துகிறது. விஜய்யின் படைப்பூக்க தேவதை, நான் படித்த அதே கல்லூரி, ஐஐடி மெட்ராஸிலிருந்து விலகி, ஆராதிக்கும் வாசகர் வட்டங்கள் சிலவற்றால் மிகவும் நேசிக்கப்படும் பாவனைகளற்ற கவிஞரானார். இலக்கியவாதியாய் வாழ வேண்டும் என்ற மகத்தான லட்சியத்தில் பிரபாவம் மிக்க அந்த அமைப்பில் நானும் ஒரு காலத்தில் திரிந்திருக்கிறேன். ஆனால் என் நல்லூழ்ப் பயன், கோழைத்தனமே வென்றது- எனக்கென விதிக்கப்பட்ட சலிப்பூட்டும் தடங்களில் வாழ்க்கைச் சக்கரம் இதுகாறும் புரண்டிருக்கிறது.

ஆனால் தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளில் ஒரு சிறு காலம் விஜய்யின் கவிதைகள் உயர்வு நவிற்சி உணர்வுகளால் என் உள்ளத்தைக் கனலெனத் தீண்டின. என் நினைவாற்றல் சரியாக இருக்கிறதென்றால், ஜீத் தாயில் கவிதைகளுடன் அவரது முதல் கவிதை தொகுப்பு (ஜெமினி) அப்போதுதான் பதிக்கப்பட்டிருந்தது, டாம் மொரேஸ் உச்சி முகர்ந்து ஒரு முன்னுரை அளித்திருந்தார். விஜய்யின் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ மற்றும் ‘தாத்தாவின் தாடி’ போன்ற கவிதைகளின் சன்னமாய்ச் சொல்லப்பட்ட உணர்வெழுச்சிகள் மற்றும் அப்பட்டமான அழகு என்னை நிலைதடுமாறச் செய்திருந்தது. மேற்கூறப்பட்ட புத்தகமும் கையுமாய் நான் அலைந்து திரிந்த நாட்கள் இன்னும் நினைவிருக்கின்றன, அந்த இரு கவிதைகளையும் மனனம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். மித மன அழுத்தத்தில் இருந்த நான், “என் வேண்டாமையை வேறெங்கோ கொண்டு செல்ல” விரும்பி நான் முட்டாள்தனமாக, “தாத்தாவின் தாடி” போன்ற ஒரு கவிதை எழுத முயற்சித்தேன்.

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய கவிதை போட்டியில் விஜய் முதல் பரிசு வென்றிருந்தார். எனவே நானும் இயல்பாகவே என் கவிதைகளை அதற்கு அனுப்பினேன். என்ன ஒரு முட்டாள்தனம் என்று இப்போது தோன்றுகிறது, என் முன்னிருந்த கவிதையின் மூர்க்க நற்பாங்கு தெளிவாகவே எனக்கு விடுத்த எச்சரிக்கையை நான் அலட்சியப்படுத்தியிருந்தேன். “கவிதைக்கோர் பொருட்டாய் இல்லாதவர்களில்” நானும் ஒருவன்- என் கவிதைகள் முகத்தை வெளிறச் செய்வன, நானொன்றும் விஜய் நம்பீசன் அல்ல. ஆனால் இளமைப்பருவத்தின் மிகையுணர்ச்சி கலந்த உயர்வு நவிற்சிமைகள் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை, அது தன் இருபதுகளிலும் சிறுபிள்ளைத்தன கனவுகளைக் கைவிடுவதில்லை. நான் கவிஞனாக முடியாதென்றால், குறைந்தபட்சம் விஜய் போல் ஒரு பத்திரிக்கையாளனாவது ஆக வேண்டும் என்ற பகல்கனவு அடுத்த சில மாதங்கள் நான் என்னைத் தொலைத்துக் கொள்ளும் ஆகாயக் கோட்டையாக இருந்தது.

மும்பையில் என் நண்பன் ஒருவனுடன் சக அறைவாசியாய் விஜய் இருந்ததுண்டு என்பதால் அவன் மூலம் நான் இறுதியில் அவருடன் பேச முடிந்தது. அடுத்த மாதம் இருவரும் சந்தித்துக் கொள்ளவும் ஆயத்தங்கள் செய்திருந்தோம், ஆனால் வேறு நிகழ்வுகள் குறுக்கிட்டன, என்னால் கடைசி வரை அவரைச் சந்திக்கவே முடியவில்லை. ஆனால் ஒரு வினோதமான வகையில், தீவிர நவிற்சியுணர்வுகளின் ஆதர்சங்கள் இப்படியொரு முடிவுக்கு வருவதும் பொருத்தமாகவே இருக்கிறது (“நிறைவின் வெற்று பரணில் நாம் ஏன் குதிக்க வேண்டும் “, இல்லையா?).

பல ஆண்டுகளுக்குப்பின் போதாமைகள் நிறைந்த என் தமிழில் அந்த இரு கவிதைகளின் மாயத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தேன்- சொல்வனம். “அறிவின் தீவிரத்தில், குடியால் அகலப் பிளக்கப்பட்ட” விஜய் அவரது மிகவும் விரும்பப்பட்ட அவசிய இருப்பை வேறெங்கோ கொண்டு சென்றுவிட்டது போலிருக்கிறது. அத்தனை ஆண்டுகளுக்கு முன்னிருந்த உயர்வு நவிற்சி உணர்வுகள் திருத்தமுடியாத வகையில் இன்றும் என்னோடு இருக்கின்றன- அவற்றை வாசிக்கையில் அவர் முறுவலிப்பதை என் கற்பனையில் அனுபவிப்பதற்காக என் தமிழாக்கங்களை நான் விஜய்க்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். விஜய் நம்பீசன், RIP.

oOo

விஜய் நம்பீசன் கவிதைகள் இரண்டு – தமிழாக்கம், நம்பி கிருஷ்ணன்

மெட்ராஸ் சென்ட்ரல்

கருப்பு ரயில் பிளாட்பாரத்திற்குள் வந்து
உஸ்ஸென்று சத்தமிட்டுக் கொண்டே மௌனமாகிறது ,
சூடு செய்யப்பட்ட எஃகிரும்பை நீரிலிட்டதைப் போல.
போர்ட்டர்களிடம் சொல்லுங்கள் அவசரப்படுத்த வேண்டாமென்று:
நல்லது தானே, வெறித்த பயணத்திற்குப் பிறகு
இடர்கள் இன்னமும் சூழ்ந்திருக்க, சற்று நேரம் இளைப்பாறுவது.

நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று மறைகின்றன.
அங்கே நான் அறிவதற்கு முன்னதாகவே நாளை வந்து சேரும்.
நான் ஒரே சமயம் இரண்டு இடங்களில் இருக்க இயலாதென்பது
அடிவழக்கு. வாருங்கள், நாமிருவரும் சென்று பருகுவோம்
ஒரு கப் கேவலமான டீயை கேவலமான ஓர் உணவகத்தில்.

இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட் பிடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.

பர்ஸ் பாக்கெட்டில், வெள்ளை நைலான் பையின்
நேர்த்தியான அடியுறையில் பத்திரங்கள் பத்திரமாக;
புத்தகமும், எனது குறிப்புகளும் வெளியுறையில்;
பழுப்பு நிற பெட்டியும் இருக்கிறது வார்கள் எல்லாம் பாதுகாப்பாக கட்டப்பட்டு.
பயணத்தை தொடங்கிய போது இருந்ததெல்லாம் என்னிடம் இருக்கிறது

வெளியே செல்வதற்காக எடுத்த முதலடிகளின் நினைவும் கூட,
குழப்பத்துடன், ரொம்பவும் குழப்பத்துடன்.
நினைக்கையில் பயமாக இருக்கிறது, நமக்கிவ்வளவு அதிகாரமிருப்பதை:
நம் நிலைகளை மாற்ற, நம் வருதல் பெயர்தல்களை ஆணையிட:
எங்கு வேண்டப்படவில்லை என்பதை அறிந்து
நம் வேண்டப்படாமையை வேறெங்கோ எடுத்துச் செல்ல..

(Madras Central, Vijay Nambisan)

oOo

தாத்தாவின் தாடி

தாத்தாப் பூச்சியை தாத்தாவின் தாடி என்றும் அழைக்கிறார்கள்.
வெள்ளிழைகளுடன் ,வளி வீசும் விதை.
இது போன்ற தாடியை என் தாத்தாவிடம் நான் பார்த்ததே இல்லை.
ஆனாலும் சிறகுகள் முளைத்த காற்றின் இந்த அவதாரம்,
உலகையே தன்னுள் வைத்திருக்கும் இக்கருவாலியின் இதயம்
எங்கும் பரவியிருக்க காற்றை அனுப்பி வைக்கும்..
தாத்தாவின் பார்வையில் ஏதோ ஒன்று அதனிடமும் உள்ளது –
அவர் கூறுவார், அவரால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கிறார்கள்,
அவரை பாதிக்காதவர்களும் இருக்கிறார்கள்-
அதே போல் இந்த ரகசியமும் (பூமியை வேர்களால் பற்றும்
எந்த பச்சை செடியுடனும் என்னால் இணைத்துப் பார்க்க இயலாத,
அனேகமாக தொட்டுணரக்கூடிய ஒரு விதமான முத்தம் ,
உதட்டால் நான் தொட விரும்பும் அப்படி ஒரு முத்தம்)
மெல்லிய காற்றில் மிதந்து செல்லும், நீங்கள் பார்க்கையில்
அங்கிருக்கும், பார்க்க முடியாவிட்டாலும் உங்களுக்கு
பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை.

என் கவிதை என் தாத்தாவின் தாடியைப் போல
இருக்க வேண்டும், இளங்காற்றில்
விசாலமாக,மேலே மேகத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டு. கவிதையால் பாதிக்கப்படாதவர்கள்
இருக்கிறார்கள்.கவிதை புறக்கணிக்கும் மக்களும்
இருக்கிறார்கள். எனக்கொரு ஆசை, ஒரு கவிதை எழுத வேண்டும்
தாத்தாவின் தாடியைப் போல.

(Grandfather’s Beard, Vijay Nambisan)

நன்றி:  சொல்வனம்

oOo

இளம் இந்திய எழுத்தாளனின் வாழ்வும் காலமும் – விஜய் நம்பீசன் (தமிழாக்கம் – பீட்டர் பொங்கல்)

“மரபும் தனித்திறனும்” என்ற கட்டுரையில் எலியட் எழுதினார்:

“கலைஞனின் தேர்ச்சிக்குத் தக்க வகையில், அனுபவமுறும் மனமும் படைக்கும் மனமும் அவனுள் முழுமையாய் பிரிந்திருக்கும்”.

அதிலும் குறிப்பாய், ஒரு தொழில்முறை பத்திரிக்கையாளனுக்கு, அதிலும் இக்காலத்தில், இந்த இரு மனங்களையும் பிரித்து வைத்திருப்பது அவசியம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் எழுதப்பட்ட ‘எனிமீஸ் ஆஃப் ப்ராமிஸ்’ என்ற புத்தகத்தில் சிறில் கானலி, இளம் எழுத்தாளன் ஒருவன் ஏன் மிக விரைவில் படைப்பூக்கத்தை இழக்கிறான் என்பதற்கான கூறுகளை அடையாளப்படுத்தினார். அந்தப் பட்டியலை இக்காலத்துக்குத் தக்க வகையில் மேம்படுத்தியாக வேண்டிய நேரம் இது. சம்சாரத்தின் துர்ச்சங்கம் குறைந்து வருகிறது; முன்னைவிட மதுவும் போதை மருந்துகளும் ஆற்றல் வாய்ந்தவையாய் இருக்கின்றன; பத்திரிக்கைத்துறையைத் தொழிலாய்க் கொண்டது என் எழுத்துக்கு உதவியிருக்கிறது. ஆனால் தன்னைக் குறித்து உறுதியாய் இல்லாத ஒரு எழுத்தாளனை அது எப்படி அழிக்கக்கூடும் என்பதை எளிதில் காண முடிகிறது.

மேலும் இளம் இந்திய எழுத்தாளனுக்கு மட்டுமே உரிய சில வினோத பிரச்சினைகள் இருக்கின்றன: அவையனைத்தும் வறுமை சார்ந்தவை- வசதியின்மை, அவனது அறிவாற்றலை உறிஞ்சிக் கொள்ளாமல் அவனை ஆதரிக்கும் பணிகள் ஊதியம் அளிப்பதில்லை;- இந்தியா குறித்த அறிவின் வறுமை, ஏனெனில், பிற மொழிகளில் உள்ள எழுத்தாளர்களுடன் உரையாடுவது கடினமாக இருக்கிறது; – ஒத்த மனம் கொண்டவர்கள் உறவு இல்லாததன் வறுமை, நம் சமூகம் பிளவுபட்டுக் கிடக்கிறது; 1980களின் சிந்தனை வறுமை, கோட்பாடுகளின் வறுமை.

எழுத்தாளன் காரணமாய் இல்லாத வேறொரு குறிப்பிடத்தக்க பாதக நிலை, இந்தியாவுக்கு வெளியே அவனுக்கு வரவேற்பில்லாததும், மேற்கில் பாராட்டப்பட்ட இந்திய எழுத்தாளர்களின் புகழில் ஒரு சிறிதும் நம்மில் பிரதிபலிக்கப்படுவது இல்லை என்பதும்தாம். சோவியத் யூனியன் பிரிந்தவுடன் ருஷ்ய எழுத்துக்கென்று ஒரு புக்கர் பரிசு நிறுவப்பட்டதை இங்கு கவனிக்கலாம்.

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரின் வினோதச் சுமை, வேற்று மொழியில் எழுதுவதால், அதுவும் தன்னை ஆட்சி செய்தவர்களின் மொழியில் எழுதுவதால், தன் பின்புலத்துக்கும் சூழலுக்கும் உண்மையானவனாக இருப்பதில்லை என்று அவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொண்டுதான் அவன் எழுதியாக வேண்டியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு எத்தனை அபத்தமானது என்பது முழுமையாய் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அதே சமயம் ஆங்கிலத்தில் எழுதும் இளம் இந்திய எழுத்தாளனுக்கு ஒரு மாபெரும் சாதக நிலை உள்ளது- அவன் துவக்கத்தில் இருக்கிறான். அவனுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய இலக்கியம் எப்போதும் விரிந்துகொண்டே இருக்கிறது, மேலும் ஆழப்படுகிறது, மேலும் பரவலாய் வாசிக்கப்படுகிறது. நாம் மிகக் குறைவாகவே இது குறித்து உணர்ந்திருக்கிறோம், ஏனெனில் ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாள் போல்தான் உள்ளது; ஆனால், நாம் இன்று இன்று இவ்வாறிருக்கிறோம் என்ற எளிய காரணத்தால் நம் கரங்களில் மாற்றத்துக்கான மகத்தான ஆற்றல் உள்ளது.

நம் வேர்களைத் தேடியும் படைப்பூக்க உந்துதல் தேடியும் எத்திசை திரும்புவது என்பது நாளுக்கு நாள் இந்த உலகளாவிய கிராமத்தில் கடினமாகிக் கொண்டு வருகிறது. இது நல்லதுதான், ஏனெனில் இது நம் வளங்களை நோக்கி நம்மைத் திருப்புகிறது, நம்மைப் பற்றி நாம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாய் இருப்பதை அவசியப்படுத்துகிறது.

நன்றி: The Life and Times of a Young Indian Writer, Vijay Nambisan, Indian Literature, May-June, 1993 

oOo

ஒளிப்பட உதவி – The Hindu

One comment

  1. திரு. விஜய் நம்பீசன் பற்றிய பதிவு நிறைவாக இருந்தது.தமிழாக்கம் எவ்வளவு உண்மையாக இருக்கிறது!ஆவர் கவிதைகளுக்கும், கட்டுரைக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.