வீதியினில் நிறைந்து நிற்கும்
மழைநீரை தெத்தி செல்லும்
குழந்தையாக மண்ணை
காலால்இரைத்துச்செல்கிறேன்.
காலங்களில் தொலைந்த கல்சாவிகளில் ஒன்று
கண் எதிரே.
‘என்னை நீ அறிவாயா,
நானே பாறைச் சாவி’ என்கிறது
வியப்பில் புருவங்கள் உறைகின்றன.
‘பதினென்வயதிற்குமுன்
உள் தொலைந்த சாவி நான்’ என்கிறது
‘பிறகு எங்கனம் வெளியே வந்தாய்’
என்கிறேன்.
தேடல் உடையவர்களுக்கே
தேடிவருவேன் நித்தமும் நான்’ என்கிறது.
‘எனில் எப்படி இத்தனை
சாவிகள் என்கிறேன்’.
‘ஒவ்வொரு தொலைதலும்
ஒரு புது பிரதியினை எடுத்துச் செல்லும்’ என்கிறது.
கைகளால் எடுத்து தொலைதூரம் வீச எத்தனிக்கிறேன்.
தொலைகிறது மற்றும் ஒரு சாவி.