வண்ணக்கழுத்து 15: சேதி கொண்டு போன கதை

“நிகழ்வுகள் நிரம்பிய அந்நாளுக்கு முந்தைய நாள் நான் மிகக் குறைவாகவே தூங்கியிருந்தேன். அவருடைய மேற்ச்சட்டைக்கு உள்ளே இருந்தாலும், நான் விழிததுக் கொண்டிருந்தேன் என்பதை கோண்ட் அறியவில்லை. ஒவ்வொரு அரைமணிக்கும், ஆண் கலைமானைப் போல ஓடும், அணிலைப் போல மரங்களில் ஏறும், முன்பின் தெரியாத நாயோடு நட்பு வைததுக் கொள்ளும் ஒரு மனிதருடைய இதயத்திற்கு பக்கத்தில் தூங்க முடியாது. ஒருசமயம் கோண்டுடைய இதயம் வேகவேகமாகத் துடிக்கும். மற்றொரு சமயம் இதயத் துடிப்பு ஒரு கஜத் தொலைவிற்கு அப்பாலிருந்து கேட்பது போல இருக்கும். தூங்குவதற்கு இடைஞ்சலாக அவர் செய்த மற்றொரு காரியம், அந்த இரவு முழுக்க ஒரு ஒழுங்கில்லாமல் மூச்சு விட்டது தான். சிலசமயம் நீளமாக இழுத்து மூச்சுவிட்டார். சில சமயம் பூனையிடமிருந்து தப்பி ஓடும் எலியைப் போல வேகவேகமாக மூச்சுவிட்டார். இப்படிப்பட்ட மனிதருடைய மேற்ச்சட்டைக்கு அடியில் தூங்குவதைவிட வானத்தில் ஒரு புயலுக்கு நடுவிலே தூங்க முயற்சித்திருப்பேன்.

“பிறகு அந்த நாய். நான் அதை மறக்கவும் முடியுமா? கோண்ட், அதைச் சேர்ததுக் கொண்ட போது நான் பயந்து போனேன். ஆனால், என் உடம்பு வாடை அதற்குத் தெரியவில்லை. கீழிருந்து எழும்பி வந்த காற்று, ஒரு நல் வாடை கொண்ட பேயைப் போல, இது எங்களை நட்பாக்கிக் கொள்ள வந்திருக்கிறது என்று எனக்குச் சொல்லியது. அதனுடைய காலடி ஓசையை நான் காலம் முழுதும் நினைவில் வைத்திருப்பேன். ஒரு பூனையைப் போல மென்மையாக நடந்தது. அது ஒரு காட்டு நாயாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனித கலாச்சாரத்தில் வாழும் நாய்கள் சத்தம் மிகுந்தவை. அவற்றால் சத்தம் போடாமல் நடக்கக் கூட முடியாது. மனித சகவாசம் கெடுதல் செய்யும். மனித சமூகத்தில், பூனைகளைத் தவிர, எல்லா மிருகங்களும் கவனக்குறைவானதாகவும் இரைச்சல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் அந்த நாய் முழுவதும் காட்டு சுபாவம் கொண்டது. அது சத்தமில்லாமல் நடந்தது. சத்தமில்லாமல் மூச்சுவிட்டது. பிறகு அது அங்கே இருந்தது என்பது எனக்கு எப்படித் தெரியும்? கீழே இருந்து வந்து என் நாசியைத் துளைத்த அந்த வாடை தான் காரணம்.

“தூக்கமற்ற, மிகவும் அசவுகரியமான இரவுக்குப் பின் கோண்ட் என்னை விடுவித்தார். அவர் என்னை விடுவித்த இடத்தை என்னால் கண்டே பிடிக்க முடியவில்லை. ஆக, என்னுடைய இருப்பு நிலையை அறிய மரம் விட்டு மரம் தாவினேன். அது எனக்குள் திகிலை மட்டுமே செலுத்தியது. இப்போது விடிந்துவிட்டதால், மரங்கள் முழுக்க கண்களால் நிரம்பியிருந்தது. எனக்குப் புதிதான நீலக் கண்கள் குழல்களின் வழியே வெவ்வேறு திசைகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன. அதற்குப் பின்னால் மனிதர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு அடி தூரத்திலிருந்த மர உச்சியிலிருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். உலோக நாய்கள், பஃப் பாப்ப்பா பக் என்று குரைத்துக் கொண்டிருந்ததால் நான் வந்தது அவனுக்குக் கேட்கவில்லை.

”ஆனால் நான் மேலே பறக்க, அவன் என்னைப் பார்ததுவிட்டான். அவசரப்படாமல் மற்ற மரங்களுக்குப் பின் ஒளிந்து கொண்டால் அவன் என்னைச் சுடுவான் என்று உணர்ந்தேன். அவன் பல முறை என்னைச் சுட்டான். ஆனால், நான் ஒரு துறவியின் சடா முடியைப் போன்ற அடர்த்தியான ஒரு புதருக்குப் பின்னே இருந்தேன். அபாயம் அகலும் வரை ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவிப் போக முடிவு செய்தேன். கொஞ்சமும் தாமதிக்காமல் அப்படியே அரை மைல் தூரம் போய்விட்டேன். கடைசியில் என் கால் மிகவும் களைப்படைந்துவிட, அபாயம் இருக்கிறதோ இல்லையோ பறக்க முடிவு செய்தேன்.

“அதிர்ஷ்டவசமாக யாரும் நான் மேலே பறப்பதைப் பார்க்கவில்லை. காற்றில் பெரிய வட்டங்கள் போட்ட பிறகு நான் மேலே உயர்ந்தேன். கீழே இருந்த மரங்கள் சின்னஞ் சிறிய கன்றுகள் போலக் காட்சியளிக்கும் உயரத்திலிருந்து நான் வெவ்வேறு திசைகளில் நோட்டமிட்டேன். கிழக்கே தொலை தூரத்தில் விடிவானம் பின்னால் இருக்க, தங்கத் தேர்கள் போல, விமானக் கூட்டங்கள் பறந்தன. அதற்கு அர்த்தம், நான் இன்னும் கொஞ்சம் காத்திருந்தால், எதிரிகளிடம் மாட்டிக் கொள்வேன். அதனால் நான் மேற்கு நோக்கிப் பறந்தேன். அப்படிச் செய்தது, மர உச்சியிலிருந்த ஆயிரக்கணக்கான துப்பாக்கி வீரர்களுக்கு, என்னை நோக்கிச் சுடுவதற்குக் கொடுத்த சமிக்ஞை ஆகிவிட்டது.

”அவர்களுடைய மரங்களுக்கு மேலே நான் வட்டமிட்டு உயர்ந்த போது, ஜெர்மானியர்களுக்கு நான் அவர்களுடைய தூதுப் புறாவா இல்லையா என்பதில் தெளிவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், நான் மேற்கு நோக்கி நகர்வதைப் துப்பாக்கி வீரர்கள் பார்த்த நொடியில் நான் அவர்களுடைய தூதுவன் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. உடனே நான் காலில் என்ன கொண்டு போகிறேன் என்பதை அறிய என்னை கீழே வீழ்த்த என்னைச் சுட்டார்கள்.

“தெளிவான குளிர்கால காற்றில் உறைந்துவிடாமல் என்னால் மேலே போக முடியாது. மேலும், அந்த எதிரி விமானங்கள் என்னை நெருங்குவதையும் நான் விரும்பவில்லை. மீண்டும் நான் மேற்குநோக்கி விரைந்தேன். மீண்டும் சாவின் அம்புகள் போல குண்டுகளால் ஆன சுவர் என் முன்னே விரிந்தது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. ஒன்று என் பாதையில் முன்னேற வேண்டும், இல்லையென்றால் வந்து கொண்டிருக்கும் விமானங்களால் கொல்லப்பட வேண்டும். அந்த விமானங்கள், அதன் பயணிகள் எனக்குத் தெரியும் அளவிற்கு நெருக்கத்தில் வந்துவிட்டன. நான் மேற்கு நோக்கி விரைந்தேன். அதிர்ஷ்டவமாக, ஒரு மாதத்திற்கு முன்பு காயம்பட்ட என்னுடைய வால், இப்போது கிட்டத்தட்ட சாதரண அளவிற்கு மீண்டும் வளர்ந்துவிட்டது. அந்தத் துடுப்பு மட்டும் இல்லையென்றால் என்னுடைய வேலை இன்னும் இரு மடங்கு கடினமாகியிருக்கும். எங்கள் எல்கையை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்க, துப்பாக்கிச் சூடு அதிகரித்தது. அனைத்து துப்பாக்கி வீர்ர்களும், தொலைவில் இருக்கும் பதுங்கு குழியிலிருந்த மனிதர்களும் என்னை நோக்கிச் சுடுகிறார்கள் என்பதில் இப்போது சந்தேகமே இல்லை. ஆனால் நான் வளைந்து நெளிந்து, வட்டமிட்டு, குட்டிக் கரணம் போட்டு எனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தி அதிகரித்துக் கொண்டே வரும் குண்டு மழையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால், இந்த வளைதலும் நெளிதலும் என்னுடைய நேரத்தை விரயம் செய்தன. அந்த விமானங்களில் ஒன்று என்னை தாக்கக் கூடிய தூரத்திற்கு வந்துவிட்டது. நான் முன்னால் நகர, மேலிருந்தும் பின்னாலிருந்தும் குண்டுகளைப் பொழிந்தது. முன்னால் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக, நான் முன்னால் விரைந்தேன். வேகமான புயலைப் போன்ற வேகத்தில் நான் பறந்தேன். பிறகு, டப்டப்டப் சத்தம், நான் தாக்கப்பட்டேன். அடிவயிற்றுக்குக் கீழே என் கால் உடைந்துவிட்டது. அதில் கட்டப்பட்ட செய்தியோடு எனக்கு கீழே, என்னுடைய கால், பருந்தின் ஒற்றை நகத்தில் தொங்கும் ஒரு குருவிபோலத் தொங்கியது. ஓ! என்னவொரு வலி. ஆனால், அதைப் பற்றி நினைக்கக் கூட எனக்கு நேரமில்லை. அந்த விமானம் இன்னும் என்னைத் துரத்தி வர, நான் முன்னைவிட வேகமாகப் பறந்தேன்.

“கடைசியில் எங்கள் எல்கை கண்ணுக்குத் தெரிந்தது. நான் தாழ்வாகப் பறந்தேன். அந்த இயந்திரமும் தாழ இறங்கியது. நான் குட்டிக்கரணம் போட முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. என்னுடைய கால், எனக்குத் தெரிந்த வித்தகைகளைக் காட்ட ஒத்துழைக்கவில்லை. பிறகு, பா பா பட் பாட்டட், என் வால் சுடப்பட்டது. இறகுகள் கீழே பொழிந்து, கீழிருந்த பதுங்கு குழிகளில் இருந்த ஜெர்மானியர்களின் பார்வையை ஒருநிமிடம் மறைத்தன. ஆக, நான் விரைவாக சாய்வாக எங்கள் எல்கை நோக்கிப் பறந்து, ஒரு வட்டம் போட்டு அதைக் கடந்துவிட்டேன். பிறகு ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டேன். அந்த விமானம் எங்கள் ஆட்களால் சுடப்பட்டுவிட்டது. அது ஆடி ஆடி, கட்டுப்பாடில்லாமல் அல்லாடி கீழே விழுந்தது. ஆனால் அது எரிந்து விழுவதற்கு முன் மோசமான அடியைக் கொடுத்தது. என்னுடைய வலது இறக்கையை சுட்டு அதை ஒடித்துவிட்டது. காற்றில் அது தீ பிடித்து எரிந்து விழுவதைக் கண்டு நான் நிம்மதியடைந்தேன். இருந்தும் என்னுடைய வலி, ஒரு இருபது பருந்துகள் என்னைத் துண்டம் துண்டமாகப் பிய்த்து எறிவதைப் போல உயர்ந்தது. என் இனக் கடவுளர்களின் கிருபையால், வலியோ சந்தோஷமோ, நான் என் சுய நினைவை இழந்தேன். ஒரு மலையே என்னைக் கீழிருந்து இழுப்பதைப் போல உணர்ந்தேன்…

”ஒரு மாதம் என்னை புறாக்களுக்கான மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். என்னுடைய இறக்கை சரி செய்யப்பட்டுவிட்டது. என்னுடைய கால் அதனுடைய இடத்தில் வைத்து தைக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் அவர்களால் என்னை மீண்டும் பறக்க வைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை நான் காற்றில் குதிக்கும் போதும், எப்படி என்று தெரியவில்லை, என் காது முழுக்க துப்பாக்கிகளின் சத்தம் நிறைந்தது. என் கண்கள் எரியும் குண்டுகளைத் தவிர வேரொன்றையும் காணவில்லை. உடனே தரையில் விழுந்துவிடுவேன் என்று நான் பயந்தேன். நான் கேட்கும் சத்தங்களும் நான் காணும் குண்டுகளும் கற்பனையானவை என்று நீங்கள் சொல்லக்கூடும். இருக்கலாம். ஆனால், அவை என்னிடம் நிஜ குண்டுகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்தின. என் இறக்கைகள் முடங்கிப் போயின. என் உடம்பு திகிலில் உறைந்து போனது.

“இதெல்லாம் ஒரு புறம் இருக்க, கோண்ட் இல்லாமல் என்னால் பறக்க முடியாது. பழுப்பு நிறத் தோல் இல்லாத நீல நிறக் கண்கள் கொண்ட ஒரு மனிதனின் கைகளிலிருந்து நான் ஏன் பறக்க வேண்டும்? இதைப் போல மனிதர்களை எனக்கு இதற்கு முன்பு தெரியாதே. புறாக்களான நாங்கள், எந்தவொரு வெளி ஆளையும் எல்லா வெளி ஆட்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடைசியில், அவர்கள் என்னை ஒரு கூண்டில் வைத்து கோண்ட் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, அவருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டார்கள். நான் அவரைப் பார்த்த போது, என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவர் கண்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருந்தன. இந்த முறை, அவரும் பயந்துவிட்டார். எல்லாப் பறவைகளைப் போலவும் விலங்குகளைப் போலவும் பயம் எப்படியிருக்கும் என்பதை நான் அறிவேன். ஆக, கோண்டிற்காக நான் வருந்தினேன்.

”ஆனால் என்னைப் பார்த்தவுடன், அந்தக் கண்களில் இருந்த திகில் திரை விலகி, அவை மகிழ்ச்சியில் ஒளிர்ந்தன. அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, என்னைக் கையில் எடுத்துக் கொண்டார். அவர் அனுப்பிய செய்தி கட்டப்பட்டிருந்த காலை முத்தமிட்டார். பிறகு என் வலது இறக்கையை தட்டிக் கொடுத்து, “தெய்வீக இறகுகளைக் கொண்ட பறவையான நீ, மிகவும் கஷ்டமான சமயத்தில் கூட, எஜமானருக்கு தேவையான செய்தியைக் கொண்டு சென்று, அனைததுப் புறாக்களுக்கும் ஒட்டு மொத்த இந்திய ராணுவததுக்கும் புகழை பெற்றுத் தந்திருக்கிறாய்” என்றார். மீண்டும் என் காலை முத்தமிட்டார். அவருடைய அடக்கம் என்னைத் தொட்டது. என்னையும் பணிவுபடுத்தியது. அந்த விமானம் என்னைச் சுட்டு என் இறக்கையின் ஒரு பகுதியைக் காயப்படுத்திய பின்னர், நான் இந்தியப் படையின் பதுங்கு குழியில் விழுந்ததை நினைத்துப் பார்த்தேன். நான் கொண்ட பெருமையெல்லாம் ஓடிப் போய்விட்டது. ஒருவேளை நான் ஜெர்மானியர்களின் பதுங்கு குழியில் விழுந்திருந்தால், அவர்கள் என் காலில் இருந்த செய்தியைக் கைப்பற்றி, அந்த நாயுடன் கோண்ட் பதுங்கியிருந்த காட்டைச் சுற்றிவளைத்திருக்கக் கூடும். அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நினைததுப் பார்க்கவே உதறியது. அய்யோ! எங்களுடைய உண்மையான நண்பனும் மீட்பருமான அந்த நாய், இப்போது அது எங்கே?”

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s