
இப்போது கோண்ட் கதை சொல்லத் துவங்கினார். “அந்த நாய் தன்னுடைய பிரெஞ்சு எஜமானனை போரின் துவக்கித்திலேயே இழந்திருக்கக்கூடும். ஜெர்மானியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். தன் எஜமானருடைய வீடு சூரையாடப்பட்டு அவருடைய கொட்டகை தீயிடப்பட்டதைக் கண்ட அந்த நாய், பயத்தில் காட்டுக்குள் ஓடி வந்திருக்க வேண்டும். அங்கே ஒரு குடிசையைப் போன்ற இடம் கொண்ட, கல்லறையைப் போல இருட்டான அடர்த்தியான முட்புதருக்கு அடியில் மனிதர்களின் பார்வைக்குச் சிக்காமல் ஒளிந்து கொண்டது. அந்த நாய் இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியில் வந்திருக்க வேண்டும். இயல்பிலேயே அதுவொரு வேட்டை நாய் என்பதால், நாட்கள் செல்லச் செல்ல இரவுகள் கடக்க அது தன்னுடைய மிருகப் பண்புகளைத் திரும்பப் பெற்றது.
“என்னை எதிர் கொண்ட போது, நான் அதைக் கண்டு பயப்படாததை அறிந்து அது ஆச்சரியப்பட்டது. பயத்தின் வாடையை நான் வெளிப்படுத்தவில்லை. அதை பயமுறுத்தி தாக்கச் செய்யும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்தாத ஒரு மனிதனை அது பல மாதங்கள் கழித்துச் சந்திக்கிறது.
“அதனைப் போலவே நானும் பசியில் இருப்பதாக அது நினைத்துக் கொண்ட்து. அதனால் ஒரு ஜெர்மானிய உணவுக் கிடங்குக்கு என்னைக் இட்டுச் சென்றது. மேலும் ஒரு ரகசிய பாதை வெளியே சென்று ஒரு பெரிய உணவுக் கிடங்கை அடைந்து எனக்காக கொஞ்சம் இறைச்சியைக் கொண்டு வந்தது. அங்கே உணவு மட்டுமல்ல, வரிசையாக பல ரகசியக் கிடங்குகளில் எண்ணெயும் வெடிபொருட்களையும் ஜெர்மானியர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கேற்றபடி வேலை செய்தேன். கடவுளின் கிருபையால் என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அதை விட்டுவிட்டு இப்போது வேறு விஷயம் பேசுவோம்.
“உண்மையைச் சொல்வதென்றால் எனக்குப் போரைப் பற்றிப் பேசவே விருப்பமில்லை. சூரிய அஸ்தமனம் ஹிமாலய சிகரங்களை ஒளியூட்டுவதைப் பாருங்கள். எவரஸ்ட் ஒரு தங்க உலையைப் போலக் கொதிக்கிறது. வாருங்கள் பிரார்த்தனை செய்வோம்,
“போலியிலிருந்து மெய்மை நோக்கி என்னை வழிநடத்துங்கள்
இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி வழிநடத்துங்கள்
இரைச்சலில் இருந்து நிசப்தம் நோக்கி வழிநடத்துங்கள்”
தியானம் முடிந்த பிறகு, கோண்ட் எங்கள் வீட்டிலிருந்து அமைதியாக நடந்து, கல்கத்தாவிலிருந்து சிங்காலியாவின் மடாலயத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டார். அங்கே அவர் செய்த சாகசத்தைச் சொல்வதற்கு முன், பிரான்சின் போர்க்களங்களிலிருந்து அவர் எப்படி எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.
1915ம் வருடம் பிப்ரவரி மாதக் கடைசியில், வண்ணக்கழுத்தால் இனிமேல் பறக்க முடியாது என்பது பெங்கால் ரெஜிமெண்டுக்கு தெளிவாகியது. வண்ணக்கழுத்தை அழைத்து வந்த கோண்ட் ஒரு போர்வீரன் இல்லை. ஒரு புலியையோ ஒரு சிறுத்தையையோ தவிர அவர் தன் வாழ்வில் வேறெதையும் கொன்றதில்லை. இப்போது அவரும் நோய்வாய்ப் பட்டிருப்பதால், அவர்கள் இருவரும் பிரயோஜனமில்லை என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மார்ச் மாதம் கல்கத்தாவை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வண்ணக்கழுத்தைப் போலவே கோண்டும் பயந்து போயிருந்தார். இரண்டு பேரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.
என்னிடம் என் புறாவை ஒப்படைத்த பின், சில விஷயங்களை விளக்கிவிட்டு கோண்ட் இமாலயத்திற்குச் சென்றார். “பயத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் என்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதை அளவிற்கு அதிகமாக நான் பார்த்துவிட்டேன். நான் பயமென்னும் நோயில் விழுந்து, வீட்டில் இருப்பதற்கு லாயக்கற்றவனாகிவிட்டேன். நான் தனியே சென்று இயற்கையோடு இயைந்து என்னுடைய நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும்.”
இப்படிச் சொல்லிவிட்டு, அவர் சிங்காலியாவில் உள்ள மடாலயத்திற்கு தியானத்தாலும் பிரார்த்தனையாலும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளச் சென்றுவிட்டார். அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு வண்ணக்கழுத்தைக் குணப்படுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனைவியாலும் நன்கு வளர்ந்த பிள்ளைகளாலும் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அவன் தன் பிள்ளைகளிடம் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் அவனை வேற்று ஆள் போலவே பார்த்தார்கள். அவனுடைய பெடை அவனிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதனாலும் அவனைப் பறக்க வைக்க முடியவில்லை. பையக் குதிப்பதைத் தவிர அவன் வேறு எதையும் செய்ய மறுத்தான். என்ன செய்தும் அவனை காற்றில் இறங்க வைக்க முடியவில்லை. நல்ல புறா வைத்தியர்களைக் கொண்டு அவனுடைய கால்களையும் இறக்கைகளையும் சோதித்தேன். அவர்கள் அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவனுடைய எலும்புகளும் இறக்கைகளும் நன்றாக இருந்த போதும் அவன் பறக்க அடம்பிடிக்கிறான். தன் வலது இறக்கையை திறக்க மறுக்கிறான். ஓடாத போதும் குதிக்காத போதும் ஒற்றைக் காலில் நிற்கும் புதிய பழக்கம் வேறு.
அவனும் அவனுடைய பெடையும் கூடு கட்டத் துவங்காமலிருந்தால் நான் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஏப்ரல் மாத மத்தியில், கோடைக்கால ஓய்வு நாட்கள் தொடங்கிய போது கோண்டிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உன்னுடைய வண்ணக்கழுத்து, இப்போது தன் பெடையோடு கூடக் கூடாது. முட்டைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அழித்து விடு. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடாதே. வண்ணக்கழுத்தைப் போல பறக்கவே பயப்படும் ஒரு தந்தையால் மோசமான பயம் கொண்ட குஞ்சுகளையே உருவாக்க முடியும். அவனை இங்கே கொண்டு வா. நான் இப்போது கொஞ்சம் நன்றாக உணர்கிறேன். சீக்கிரம் வண்ணக்கழுத்தைக் கொண்டு வா. இங்குள்ள லாமா உன்னையும் அவனையும் காண விரும்புகிறார். மேலும், அந்த ஐந்து உழவாரக் குருவிகளும் தெற்கிலிருந்து இந்த வாரம் இங்கே வந்துவிட்டன. உன்னுடைய பறவையை பயத்திலிருந்து திசை திருப்ப அவை கண்டிப்பாக உதவும்” என்று எழுதியிருந்தார்.
(தொடரும்)