இந்த மஞ்சள் நிற துப்பட்டா
சூரியனிடமிருந்து
நான் எடுத்து போது
இரண்டாக கிழிந்தது
இதுபாதிதான் என்பது தெரியும்
நல்ல ஒன்று கிடைத்ததும்
எறிந்து விடுவேன்
இதை
என் தாயை கொன்றேன்
அவளின் தோலுக்காக
எனக்கு
மஞ்சள் வைக்கவென
இப்பையை செய்ய
தேவைப்பட்டதோ
அதில் கொஞ்சம்தான்
இந்த எண்ணெய்க் குப்பியை
பார்த்துக்கொள்வது
என் வேலை
எப்போதும் நிறைந்திருக்கும்படி
பார்த்துக்கொள்வது
உங்களுடையது
பிச்சை எடுக்கவில்லை
ஆனால்
தேவைப்பட்டால் திருடுவேன்
சரியா?
கந்தோபாவின் ஆலயம்
விடியலில் எழுகிறது
அது இருளக்கூடாது இரவில்
என்றைக்கும்.
ஒரு சுடர் கொண்டு
கோயிலைக் காக்கின்றேன்
அப்படிசொல்லாதீர்
எனக்கு வேண்டுவதெல்லாம்
ஒரு பிடி
எண்ணை மட்டுமே
முடியவில்லை என்றால்
கொடுங்கள்
ஒரு துளியாவது
இந்த வீணையில் இருப்பது
ஒற்றைத்தந்தி மட்டுமே
தெய்வீக நமைச்சலுடன்
நான் அதை வருடும்போது
ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்தாயி மட்டுமே
என் குரலில் ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்வரம் மட்டுமே
குரலில் இருப்பதும்
ஒற்றைச்சொல் மட்டும்
குறைகூற
நான் யார்?
கடவுளே உலகம்
அட்சரம் பிசகாமல்
தெரியும் எனக்கு
என் விலாவில்
விஷப்பல் போல
இருப்பதும் அதுவே
என் பற்களிடையே
அகப்பட்ட நாவில்
இரத்தச்சுவை கொண்ட
ஆட்டுக்குட்டியும் அதுவே
என்பதும்
அறிவேன் நான்
நான் பாடும் பாடல்
எப்போதும்
இது மட்டுமே
௦௦
அருண் கொலாட்கரின் A Song for Vaghya என்ற கவிதை மொழிபெயர்ப்பு
ஒளிப்பட உதவி – விக்கிமீடியா