(Matchbook என்ற தளத்தில் Seth Simons எழுதிய குறுங்கதை)
நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. அதற்குதான் வருகிறேன் என்று பல பேர் நினைக்கிறார்கள், ஆனால் அப்படியல்ல. இங்கு தரைப்பலகைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீ கவனித்தாயா தெரியவில்லை. நிலவறையில் பல ஆண்டுகளாக பூஞ்சை படிந்து கொண்டிருக்கிறது.. அது நச்சாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. என்னால் இப்போதெல்லாம் வண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை. நிழல்கள் மட்டும்தான். வெளிச்சம், அல்லது இருள். எனவே, நிலவறைக்குப் போகாதே. சத்தியமாகச் சொல்கிறேன், நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. நீ மேலே கூரையை இன்சுலேட் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அங்கு கடைசியாக கை வைத்தபோது ஆஸ்பெஸ்டாஸ் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் எனக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் அதிகம் தெரிந்து கொண்டிருந்ததும் கிடையாது. உனக்கு நினைவிருக்கிறதா- இல்லை, உனக்கு நினைவிருக்காது, இல்லையா? எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் என்னை விட்டுப் போய்விட்டாள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஒரு நாய் இருந்தது, ஜாக்சன். தெருவுக்கு ஓடிப் போனது, பிறகு திரும்பவும் ஒடி வந்துவிட்டது. அவன்தான் அதிர்ஷ்டக்காரன். இங்கே எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்கள். வேறு பல பேரின் புகைப்படங்களை மாட்டி வைத்தார்கள், சட்டம் போட்ட படங்கள். நீயும் அப்படிச் செய்யலாம், உனக்கு விருப்பமிருந்தால். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். என்னால் தடுக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தச் சுவர்களை நான்தான் எழுப்பினேன், தெரியுமா? அவள் ஒரு சின்னப்பெண் போலிருந்தாள், அப்போது, வெயிற்கால உடையில் இருந்தாள், தலைமுடியில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டிருந்தாள். அதன் வண்ணங்களை நினைவு வைத்திருக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. சிவப்பாக இருக்கலாம், அல்லது நீலமாக இருக்கலாம். அவளது பற்கள் வெண்மையாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஓடை வரை அவள் பின்னால் போனேன். அவள் தன் காலணிகளைக் கழட்டினாள். தண்ணீருக்குள் இறங்கினாள். கற்களின்மேல் குதிகால் உயர்த்தி கால் பதித்து நடந்தாள். கூர்மையான கல் ஒன்று அவள் காலின் கட்டை விரலைத் தைத்தது. சிறு கப்பல்கள் கடலில் செல்வது போல் எங்களைச் சுற்றி பருத்தி பறந்தது. புகைபோல் தண்ணீரில் ரத்தம். இப்போது என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். சுவர்களுக்கு இடையே எலிகள் இருக்கின்றன. உடைந்த செஙகற்கள். காட்டில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பைன் மரச் சருகுகளுக்குக் கீழ் கொடரியின் உடைந்த கைப்பிடியொன்று கிடக்கிறது. வானொளிச் சாளரத்தில் சிலந்தி வலைகள். பார், ஓடிக் கொண்டிருக்கும் காட்டெருமைக் கூட்டத்தினிடையே என் பேரப்பிள்ளைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அழைக்கிறார்கள். நான் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறேன். குழந்தைகள், இப்போது. நாம் எல்லாரும். சுவர்க்காகிதங்களில் நிழல்கள். பழைய தாமிரக் குழாய்கள். வண்டுக்கூடுகள். எலும்புகள். நான். அவள். எல்லாரும். மந்தையாய் மிதித்துச் செல்லும் காட்டெருமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமவெளிகளில் இடிமுழக்கம். இது எப்போதும் நடக்காத ஒன்று. எப்போதும் நடக்கும் ஒன்று”.
நான் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்கிறேன். வெளியே, இரு பொன்பாடிப் பறவைகள் ஃபீடரின் உள்ளிருக்கும் இறைச்சியைக் கொத்துகின்றன. வேனிற்காலத்து மஞ்சள் ஆடையை ஒன்று ஏற்கனவே இழந்து விட்டது. மற்றொன்று இன்னும் இழந்து கொண்டிருக்கிறது, அதன் சிறகுகளில் திட்டுத்திட்டாகப் பளீரிடும் வண்ணங்கள், அதன் வயிற்றில். கிளென் தன் தோட்டத்தில் இலைகள் கூட்டிக் கொண்டிருக்கிறான். கருவாலி மரங்கள் வளைந்திருப்பதைப் பார்க்கும்போது காற்றடிப்பது தெரிகிறது, தாழ, ஆனால் நிதானமாக வீசும் காற்று. கிட்டத்தட்ட உன் காதில் விழாமலே உன்னைக் கடந்துச் செல்லும் காற்று.
நன்றி – Matchbox