முறுக்கு

மு வெங்கடேஷ்

அன்று நான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை அன்போடு அழைத்த அம்மா, “ஏல ராசா நாம இன்னைக்குப் படத்துக்குப் போகலாம்டா” என்றாள்.

எனக்கு அம்மாவோடு படத்துக்குப் போகப் பிடிக்காது.

”இல்லமா நா வரல, விளையாடிட்டு இருக்கேன் நீ போய்ட்டு வா,” என்று சொல்லிப் பார்த்தேன்.

அம்மா விடவில்லை. “போலாம்பா. ரஜினிப் படம் நல்லா இருக்கும். நா உனக்கு இடைவேளையில முறுக்கு வாங்கித் தாரேன்” என்றாள்.

அப்போதெல்லாம் வெளியே ஒரு தின்பண்டம் வாங்கித் தின்பதே அபூர்வமான விஷயம். அதிலும் தியேட்டரில் முறுக்கு சாப்பிடுவதில் எனக்கு ஒரு தனிச் சந்தோஷம் உண்டு. “சரி வாரேன்.” என்று உடனே கிளம்பிவிட்டேன்.

அம்மாவின் அத்தனை அன்பிற்கும் பின்னால், வேறொரு பெரிய காரணம் இருந்தது அப்போது எனக்குப் புரியவில்லை.

“ஏல படம் போட்ருவான், சீக்கிரம் போய் அப்பாட்டக் காசு வாங்கிட்டு வால, நாங்க முன்னால போய்ட்டு இருக்கோம். நீ சீக்கிரம் வாங்கிட்டு ஓடி வந்துருல” என்றாள் அம்மா.

எங்கள் ஊரில் இரண்டு திரையரங்குகள் இருந்தன. ஒன்று கே.ஆர். தியேட்டர், மற்றொன்று ஸ்ரீ தேவி தியேட்டர். கே.ஆர்.தியேட்டர் – ஊரின் நடுவே அமைந்திருக்கும் பெரிய தியேட்டர். பார்ப்பதற்கு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கும். மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் இரண்டையும் மாற்றி மாற்றி வெளியிடுவார்கள். நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கும். தினமும் மாலை 6 மணி ஆனதும் சொல்லி வைத்தாற் போல் இளையராஜா இசை அமைத்த, கமல்-ராதா நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் வரும் ‘நானாக நான் இல்லைத் தாயே’ என்ற ஒரே பாடல் தான் போடுவார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அந்தப் பாட்டு மட்டும் தான் கேட்டதாக ஞாபகம்.

ஸ்ரீ தேவி தியேட்டர் – ஊரிலிருந்து சற்று தொலைவில் தேயிலைத் தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் அழகான இடம். கே. ஆர். தியேட்டரை ஒப்பிடும்போது சற்று சிறியதுதான். ஆனால் பார்ப்பதற்கோ மிகவும் அழகாக இருக்கும். தமிழ்ப் படம் மட்டுமே திரையிடுவார்கள். இத்தியேட்டருக்கு நடந்தோ அல்லது பேருந்திலோ செல்லலாம். ஆனால் தேயிலைத் தோட்டத்தின் நடுவே நடந்து செல்லத்தான் அனைவரும் விரும்புவோம். சிறு வயதில் எங்களின் ஒரே பொழுதுபோக்கு படம் பார்ப்பதுதான். அடிக்கடி படத்துக்குப் போவோம்.

அம்மா, அக்கா, சித்தி, அத்தை, அவள் மகன் முருகேசன் என அனைவரும் தேயிலைத் தோட்ட ஒற்றையடிப் பாதையில் முன்னால் நடந்து சென்றார்கள். நடந்து என்ன நடந்து, ஓடினார்கள். நான் கடை வீதியில் இருக்கும் எங்கள் கடைக்குச் சென்று அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து ஓடினேன். எவ்வளவு வேகமாக ஓடியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. நானும் மூச்சு வாங்க பின்னாலே விரட்டிக் கொண்டு போய் அம்மாவைப் பிடிக்கும்போது அவள் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தாள். நான் வந்தவுடனே என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள். மூச்சு வாங்க ஓடி வந்த என்னை ஆசுவாசப்படுத்தத்தான் பாசத்தோடு தூக்கி வைத்துக் கொண்டாள் என்று நினைத்தேன். வழக்கம் போல அம்மாவின் செயலுக்கான அர்த்தம் சில நிமிடங்கள் கழித்துத்தான் தெரிய வந்தது.

தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் பொங்கி வரும் காட்டாற்று வெள்ளமென போய்க் கொண்டிருந்த எங்களை மடக்கிப் பிடித்தார்.

“என்னம்மா பையனோட சேர்த்து மொத்தம் 8 பேர் வந்துருக்கீங்க, ஆனா 7 டிக்கெட் தான் இருக்கு?” என்று கேட்டார்.

அவருடைய கூர்மையான பார்வைக்கு அசராத அம்மா என்னை இன்னமும் ஏற்றி தோளில் சாய்த்துக் கொண்டு, “ஏம்பா இந்த பால் குடி கூட மறக்காத பச்ச புள்ளைக்குப் போய் டிக்கெட் கேட்குறியே?” என்றாள்.

அம்மா கொடக்கண்டவள் என்றால் அவர் விடாக்கண்டவராக இருந்தார்.

“அதெல்லாம் முடியாதும்மா போய் இன்னொரு டிக்கெட் வாங்கிட்டு வா, இல்லேன்னா பையன இங்கயே விட்டுட்டுப் போ,” என்றார் அதிரடியாக.

அடப் பாவி இப்படி முதலுக்கே மோசம் செய்கிறாரே என்று நினைத்தேன். கண்டிப்பாக டிக்கெட் வாங்கிட்டு வாவென சொல்லாமல் இப்படிச் சொன்னால், இவர்கள் வந்த வேகத்திற்கு என்னை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்களே என்று பயமாக இருந்தது.

நல்லவேளை, தியேட்டர் மேனேஜர் அவ்வழியே வந்தார். எங்களைப் பார்த்தவர் டிக்கெட் பரிசோதகரிடம், “சரிப்பா அவங்கள உள்ள விடு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்தச் சலுகை. இப்படிச் சண்டை போட்டு உள்ளே செல்வதற்குள் படத்தில் 10 நிமிடம் முடிந்து விட்டது. உள்ளே சென்று இருக்கையில் உட்கார்ந்தவுடன் அம்மா பக்கத்து இருக்கையில் இருபவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“என்னக்கா படம் எவ்ளோ போச்சு?”

“ஒரு 10 நிமிஷம் போயிருக்கும்கா”

“எழுத்து போட்டு ரொம்ப நேரம் ஆச்சோ?”

“இல்லக்கா இப்போதான் போட்டு முடிச்சான்.”

“முக்கியமான சீன் ஏதும் போயிடுச்சாக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் போகலக்கா, இன்னும் ஹீரோ ஹீரோயனியே வரல பேசாம படத்தப் பாருவேன்” என்றாள் எரிச்சலுடன்.

படத்தில் சண்டைக் காட்சி வருவதற்குள் இங்கு ஒரு சண்டைக் காட்சி ஓடி முடிந்தது. ஒரு வழியாக படத்தின் இடைவேளையும் வந்தது. கையில் ஒரு தட்டுடன் அழகாக முறுக்குகளை அடுக்கி வைத்து முறுக்கு விற்பவன் வந்தான். நான் அவனை ஆவலோடு பார்ப்பதை மோப்பம் பிடித்தவன் போல அவனும், எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து, “முறுக்கு முறுக்கு முறுக்கேய்…. முறுக்கு முறுக்கு முறுக்கேய்” என்று என் ஆவலை மேலும் முறுக்க ஆரம்பித்தான்.

“எம்மா…” என்று அம்மாவின் கையைச் சுரண்டினேன். பதிலேயில்லை. சினிமா வந்து விட்டால் அம்மா இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாள்.

“எம்மா…. முறுக்கு வாங்கித் தாம்மா” என்று மேலும் அழுத்தமாக சுரண்டினேன். கிளம்பும்போது அவள் வாக்கு கொடுத்திருந்ததால் கொஞ்சம் தைரியம் இருந்தது.

சட்டென்று விழித்துக் கொண்ட அம்மா, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல் என்னைப் பார்த்து முறைத்து விட்டு, “இதான் உன்னெல்லாம் படத்துக்குக் கூட்டிட்டு வர கூடாதுன்னு சொன்னேன்” என்றவள், வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் அவித்த கடலையை நீட்டினாள்.

“எனக்கு கடலை வேணாம் முறுக்கு தான் வேணும். நீதான விளையாடிட்டு இருந்த என்ன முறுக்கு வாங்கித் தாரேன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்த” என்று அழாக்குறையாகக் கேட்டேன்.

“ஆமா சொன்னேன். அது அப்போ. இப்போ ஒழுங்கா இந்தக் கடலையத் தின்னு. காசு என்ன மரத்துலயா காய்க்கி?” என்று ஒரேயடியாக அடித்து விட்டாள். என் பக்கத்தில் இருக்கும் பையனோ முறுக்கை வாங்கிக் கருக்கு முறுக்கு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “பணக்காரப் பையன் போல” என்று நினைத்துக் கொண்டேன். அதைப் பார்த்த எனக்கு மேலும் ஆவல் பெருகியது.

“எம்மா எனக்குத்தான் நீ டிக்கெட் எடுக்கலையே, அந்த காசுலயாது முறுக்கு வாங்கித் தாம்மா” என்றேன் பரிதாபமாக.

“பேசாம இருக்கியா இல்லையா? உன்ன அங்க வெளிலையே விட்டுட்டு வந்திருக்கணும். அப்போதான் நான் நிம்மதியா படம் பாக்க முடியும்” என்று அம்மா அதட்டினாள்.

நானும் விடுவதாக இல்லை. முறுக்குப் பையனின் கூவலும் என்னை விடுவதாக இல்லை.

“எம்மா வாங்கித் தாம்மா” என்றேன்.

குஷ்பு நடித்த ஒரு படத்தில் 108 சாமி பெயர் சொல்லி ஒரு பாடல் வருமே அதில் வரும் அத்தனை சாமிகளின் மொத்த ஆங்கார உருவமாய் மாறிய அம்மா, “பேசாம இருக்கியா இல்ல அந்தக் கடலையையும் புடுங்கிரவா? உன்னப் பட்னி போட்டாத்தான் சரி வருவ, பெரிய ராசா வீட்டு கன்னுக்குட்டி இவரு, படத்துக்கு வந்தா முறுக்கு வாங்கித் திங்காம இருக்க முடியாதோ தொரைக்கு? எத்தனை பேர் படத்துக்குக்கூட வர வழி இல்லாம இருக்காங்க?” என்றாள்.

இதற்கு மேல் அழுத்திக் கேட்க முடியாது. அப்புறம் கையில் இருக்கிற கடலைக்கும் ஆபத்து வந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு என் முறுக்கு ஆசையை குழிதோண்டி புதைத்தேன்.

மறுநாள் மதியம் அப்பா சாப்பிட்டுவிட்டு கடைக்குச் சென்றதும், பக்கத்துக்கு வீட்டு மாலதி அத்தை வந்தாள். அதெல்லாம் கணக்காக அப்பாவின் நடமாட்டம் தெரிந்துதான் வருவாள்.

“எக்கா இன்னைக்குப் படத்துக்குப் போலாமா?”

நேற்றைக்கு தியேட்டருக்கு பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் மாலதி அத்தையும் இருந்தாள்தான். மாலதி அத்தையின் கேள்வியைக் கேட்டதும், உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட அம்மா, “சரிடி போலாம். நேத்து வேற படத்தை மொத 10 நிமிஷம் பாக்காம விட்டுடோம். இன்னைக்காவது சீக்கிரமா கிளம்பி போலாம்டி” என்று சந்தோஷமாகத் தயாரானாள்.

இதை நானும் என் அக்காவும் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்படியும் இன்று எங்களைக் கூட்டிச் செல்ல மாட்டாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் அக்காவால் வாயைக் கட்டி வைக்க முடியவில்லை, பாவம்.

“எம்மா நானும் படத்துக்கு…” என்று கேட்டு முடிப்பதற்குள், “தெனமும் படம் கேக்குதோ உனக்கு? பெரிய மகாராணி இவ. போய் ஒழுங்கா வீட்டு வேலையப் பாரு,” என்று அக்காவின் ஆசையில் மண்ணளிப் போட்டாள் அம்மா.

நேற்று நான் தியேட்டரில் வாங்கிய அதேப் பரிசு இன்று என் அக்காவுக்கும் கிடைத்ததில் எனக்கு கொஞ்சம் சந்தோசம்தான்.

சிறிது நேரத்தில் மாலதி அத்தை கிளம்பி வந்தாள்.

“என்னடி இவளே… இம்புட்டு நேரமா கெளம்பிட்டிருக்கே… சரி வா, இன்னைக்காவது சீக்கிரம் போய், படத்த முதல்ல இருந்து பார்க்கலாம்”, என்று கால்களை வீசிப்போட்டுக் கிளம்பினாள் அம்மா.

“சரிக்கா,” என்று கிட்டத்தட்ட கூடவே ஓடிய அத்தை, ”இருந்தாலும் உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப தாராள மனசுக்கா, தெனமும் படத்துக்குக் காசு கொடுக்கிறாரு” என்று ஆச்சரியப்பட்டாள்.

“அடிப் போடி பைத்தியக்காரி, நல்லா சொன்ன போ. உனக்குத்தான் நல்லா தெரியுமே எங்க வீட்டுகாரரப்பத்தி. அவர் ஒரு கடைஞ்செடுத்த கஞ்சாம்பட்டினு… அவராச்சும் காசு குடுக்குறதாச்சும். நேத்து இந்தப் பயலுக்கு டிக்கெட் எடுக்கலேல்ல அந்தக் காசுதாண்டி” என்று அம்மா தன் ராஜதந்திரத்தைப் போட்டுடைத்து என்னை அதிர வைத்தாள்.

“ஆமா உனக்கு ஏதுடி காசு?” என்று அத்தையிடம் கேட்க, அவள் பதில் சொல்வதற்குள் அவர்கள் சிறிது தூரம் சென்று விட்டதால் எனக்கு என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கேட்கவில்லை. ஆனால் மாலதி அத்தையின் மகன் முருகேசனும் முறுக்கும் தான் நினைவுக்கு வந்தார்கள். அவனையும் இன்றைக்குக் காணோம்.

Advertisements

One comment

  1. என்ன வெங்கி, முறுக்கைவைத்து கதை பண்ணிவிட்டீர்களே, இது கதையா, உண்மைப் பதிவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.