உறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன் கவிதை மொழியாக்கம் குறித்து செந்தில் நாதன்:
மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் கவிதையைத் தேடுவதில்லை. படிக்கும்போது சட்டென்று ஒரு பொறி உண்டானால், இது நல்ல கவிதை என்று எனக்குத் தோன்றினால் மொழிபெயர்க்க முயற்சி செய்வேன். என் தனிப்பட்ட இரசனை சார்ந்த தேர்வே எனது அளவுகோல்.
விக்ரம் சேத் கவிதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட கவிதை இது. ஜெர்மானியக் கவிஞர் ஹின்ரீச் ஹீன் எழுதிய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் விக்ரம் சேத். முதலில் என்னைக் கவர்ந்தது அந்தக் கடைசி மூன்று வரிகள்தான். தூக்கம் தரும் தற்காலிகத் தீர்வு போதாது, மரணமே நிரந்தரத் தீர்வு என்று தன்னிரக்கத்துடன் பாடுவது உலக அளவில் கவிஞர்களுக்குப் பொதுவான ஒன்று. அதற்கு அடுத்த வரியான Best would be never to have been born எனக்குச் சட்டென்று தேவாரப் பாடல்களை நினைவூட்டியது. பிறவா வரம் வேண்டி இறைஞ்சும் அடியார் பாடல்கள் பல உண்டல்லவா? ஆனால் ஹீன் நடைமுறை வாழ்க்கையில் நின்று கவிதையைப் பாடுகிறார், ஆன்மிகத் தளத்தில் அல்ல.
நண்பர் ஒருவர் கவிதையில் வரும் பாப்பி மலர் பற்றிச் சுட்டிக் காட்டினார். பாப்பிச் செடியின் காய்களில் இருந்து தான் அபின் தயாரிக்கப்படுகிறது. ஆகவே தூக்கம் என்று கவிதையில் கூறப்படுவது உண்மையில் போதை தரும் மயக்கம் தானா?
ஹின்ரீச் ஹீன் (Heinrich Heine) 1800களின் முதல் பகுதியில் மிகப் பிரபலமான ஜெர்மானிய எழுத்தாளர். ஆளும் பிரபுக்களைத் தனது கிண்டலான கவிதைகளால் நையாண்டி செய்து அதன் காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிஸில் வாழ்ந்தவர். கார்ல் மார்க்ஸ், நீட்ஷே போன்றவர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். யூதராய்ப் பிறந்ததால் நாஜிக்களால் வெறுக்கப்பட்டார். 1933ல் நாஜிக்கள் எரித்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் இவரது புத்தகங்களும் உண்டு.1821ல் தனது நாடகம் ஒன்றில் ஹீன் எழுதிய வசனம், “இது வெறும் முன்னோட்டம்தான். எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே இறுதியில் மனிதர்களையும் எரிப்பார்கள்” .
ஹீன் தனது இறுதிக் காலத்தில் வாத நோய் தாக்கி எட்டு வருட காலம் படுக்கையிலேயே கழித்தார். அந்தக் காலத்தைக் கல்லறைப் படுக்கை என்றே குறிப்பிடுகிறார். இந்தச் செய்தியின் பின்புலத்தில் இந்தக் கவிதையைப் படித்தால் மற்றொரு கோணம் தெரிகிறது. அபின் தரும் தூக்கம் கொஞ்ச நேரம்தான், மரணமே தனது இறுதித் தீர்வு என்ற நோயாளியின் குரலும், பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்னும்போது இறுதிக் காலத்தில் தனது இலட்சியங்களின் தோல்வியைக் கண்டு மனமுடைந்த போராளியின் குரலும் புலப்படுகிறது.
செந்தில் நாதன் மொழியாக்கம் இங்கு – உறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன்