ஒரு பயணமும் சில கதைகளும் – மாதவன் ஸ்ரீரங்கம்

ஒரு தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும்போல் தோன்றியது. மகாபலிபுரம் நுழைந்ததும் சாலையோர விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். சாலையை பார்க்கும்படியான மேஜையொன்றில் அமர்ந்துகொண்டேன். சாலைக்கு எதிரிலிருந்து ஒருவன், ஒரு பார்வையற்ற பெரியவரை கைப்பிடித்து அழைத்துவந்து விடுதியில் விட்டுவிட்டுச் சென்றான்.

பெரியவர் பார்ப்பதற்கு, நல்ல உயரமாகப் பழைய கருப்புவெள்ளை திரைப்படங்களில் வரும் கவுபாய்க்கிழவர் போலிருந்தார். தொப்பி மட்டும்தான் இல்லை. அடர் கருப்பு நிறத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சாலையில் சென்ற வாகனங்கள் பிரதிபலித்தன. என் தேநீரை அருந்தியபடியே அவரைக் கவனித்தேன். அவர் தனது தேநீரை ஒரு குழந்தையைப்போல ரசித்துக்குடித்துக்கொண்டிருந்தார். டீ மாஸ்டர் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“எங்க சார் மெட்ராசா போவனும்”?

அவர் குரல் வந்த திக்கில் குத்துமதிப்பாகத் திரும்பி பதிலளித்தார்.

” ஆமாப்பா. என்னைக்கொஞ்சம் பஸ்டாப்பில கொண்டுபோய் விட்ரமுடியுமா”? என்றார் தனது காலித்தம்ளரை அருகில் வைத்துவிட்டுச் சில்லறையை எடுத்தபடி.

நான் எழுந்து தேநீருக்கான காசைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். பெரியவரிடம் கேட்டேன்.

“நானும் சென்னைதான் போறேன் சார். வரீங்களா இறக்கிவிட்டிடறேன்”

இதில் சம்மதமென்பதை அவர் முகத்தின் மகிழ்ச்சியின்வழி உணர்ந்துகொண்டேன். என் முழங்கையைப் பிடித்துக்கொண்ட அவர் உள்ளங்கை உஷ்ணமாக இருந்தது. உள்ளே அமர்ந்தபின் நான் காரைக்கிளப்பியபடியே அவரிடம் கேட்டேன்.

“யாரையாவது கூட கூட்டிட்டு வந்திருக்கலாமே சார். தனியா போக்குவரத்தெல்லாம் கஷ்டமில்லங்களா”

அவர் நேராக முன்புறத்துச் சாலையின் திசையில் முகத்தை வைத்தபடி மெலிதாகச் சிரித்தார்.

“சுத்தியும் மனுஷங்க இருக்கும்போது எனக்கென்ன தம்பி கவலை. உதவற மனுஷங்க இன்னும் இருக்காங்க உலகத்தில”

நான் சற்று அமைதியாக இருந்தேன். கார் சவுக்குத்தோப்புகள் அடர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்தது.

“தம்பியும் சென்னைதானா”?

” ஆமா சார். அஷோக் நகர். நீங்க”?

“திருவான்மியூர் தம்பி.

“இங்க சும்மா சுத்திப்பாக்க வந்தீங்களோ”?

” இல்ல சார். ஒரு கம்பெனில ஆர் எம்மா இருக்கேன். சைட் விஸிட்டிங்காக கடலூர் போயிட்டு வந்திட்டிருக்கேன்”

“அப்ப பொறந்து வளந்ததெல்லாமே சென்னைதான்னு சொல்லுங்க”

“ஆமா சார். நீங்க”?

” இப்பத்தான் தம்பி கொஞ்சநாளா சென்னைல இருக்கேன்”

“ஓ ! அப்ப அதுக்கும் முன்ன”?

” அதெல்லாம் பெரிய கதை தம்பி. எதுக்கு உங்களை போரடிக்கனும்”

நான் சிரித்துக்கொண்டேன்.

“அப்டியெல்லாம் இல்ல சார். நீங்க வயசுல பெரியவங்க. எத்தனையோ அனுபவங்க இருக்கும். எப்டியும் முக்கால் மணிநேரம் ஆவுமே”

அவர் தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டார்.

“சரி அப்ப ஒண்ணு செய்வோம். நா உங்களுக்கு சில கதைங்களைச் சொல்லுறேன். அதுல எந்தக் கேரக்டர் நான்னு நீங்க சொல்லுங்க”

எனக்கும் பெரியவரின் இந்தப் பீடிகை பிடித்திருந்தது. நான் சம்மதம் என்றதும் அவர் துவங்கினார்.

கதைக்குள் கதை
————————
கண்விழித்தபோது அவன் உடலெங்கும் வலித்தது. குறிப்பாக இடதுகால் ஆடுதசைப்பகுதியில் அதிகம் வலித்தது. அவன் கூரையின் துளைகள் வழி சூரியவெளிச்சம் வழிந்தது. பக்கத்தில் தகர டிரம் ஒன்றின்மீது அவன் சீருடை கசங்கலாகக் கிடந்தது. அவன் சுற்றிலும் நோட்டமிட்டான். நிறைய தட்டுமுட்டுச்சாமான்களுடன் ஒரு பழைய அம்பாஸிடர் காரும் நின்றிருந்தது. கார்ஷெட்டாக இருக்கலாமென்று யூகித்தான்.

ஒரு மூலையில் மர அடுக்குகளில் விதவிதமான பறவைகள் கத்திக்கொண்டிருந்தன. இருந்தன. ஷெட்டின் தகர கேட்டின் மெலிதான கிரீச்சிடலுடன் உள்ளே நுழைந்த அந்தப்பெண் முக்காடு அணிந்திருந்தாள். தொலைவில் எங்கோ ராணுவவிமானம் பறந்த ஒலியைத்தொடர்ந்து பெரும் வெடியோசை கேட்டதில் அவன் படுத்திருந்த கட்டில் அதிர்ந்தது. அவள் நெருங்குவந்து அவன் கால் காயத்தைப் பரிசோதித்தாள். அவன் வலியில் முனகினான்.

“இது என்ன எடம் ? நா எப்டி இங்கவந்தேன்”?

அவள் பதில்கூறாமல் கட்டை அவிழ்த்துவிட்டுப் புதிதாக கட்டிட்டாள். அவனுக்குத் துளிகூட வலித்துவிடக்கூடாது என்பதுபோல் அவள் செயல்பட்டது அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் தன் குரலில் ஒரு கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டான்.

” கேக்கிறேனில்ல ? இது என்ன இடம்”?

“உங்க கால்ல இருந்த புல்லட்டை எடுத்தாச்சி. ஆனா காயம் ஆறக்கொஞ்சம் நாளாவும். அதுவரை நீங்க ஓய்வுலதான் இருந்தாவனும்”

அவனுக்கு அப்போதுதான் கடைசியாக நிகழ்ந்தவை நினைவுக்கு வந்தது. அவன் சுடப்பட்டான். எந்த திசையிலிருந்து என்று கவனிக்கக்கூட வாய்பின்றி மயங்கிவிட்டான்.

“இல்ல நா ஒடனே போயாகனும். இது என்ன இடம்னு சொல்லு. பக்கத்தில போன் எங்க கெடைக்கும்”?

அதற்கு அவள் கூறிய பதிலில் அதிர்ந்துபோய்விட்டான். ஏனெனில் அவள் கூறிய ஊரிருந்தது எதிரி தேசத்தில். அவன் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரதேசத்தின் அருகில். யார் கண்டது. இவளே கூட அந்த தேசத்தின் பெண்ணாயிருக்கலாம். அவன் அவளிடம் என்னவோ கேட்க வாயைத்திறக்க அவள் அவசரமாக கைகளால் பொத்தினாள்.

வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது. வாயில் விரல்வைத்து அமைதியாயிருக்கும்படி சைகை செய்து விட்டு அவள் வெளியேறினாள். வெளியில் சிலவிநாடிகள் பேச்சுக்குரல்கள் கேட்டன. பறவைகள் கீச்சுக்கீச்சென கத்திக்கொண்டிருந்தன. மறுபடி அவள் உள்ளே வந்தபோது சற்று வருத்தத்துடனிருந்ததை கவனித்துக்கொண்டான்.

” இங்க பக்கத்துல போன் எதுவும் கெடையாது. உங்காளுங்க ஒண்ணுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டு போயிட்டாங்க”

“புரியல. சண்டைல யார் ஜெயிச்சது”?

” யாரும் ஜெயிக்கல. உங்காளுங்க பார்டர்லதான் கேம்ப் போட்டு தங்கிருக்காங்களாம். இங்க உள்ளவங்க திட்டம் போட்டுட்ருக்காங்க”

“நீ என்னை ஏன் கொல்லாம காப்பாத்தின”?

” நா ஒரு டாக்டர். நீ குண்டடிபட்டுக் கெடந்தப்ப அப்டியே விட்டுட்டு வரமுடில. அதான். நீ இங்க இருக்கிறதுகூட யாருக்கும் தெரியாது”

அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான். இருந்தால் அவளுக்கு முப்பது வயதிருக்கலாம். சிவந்த அவள் உடலில் சில இடங்களில் வெண்மைபுள்ளிகள் தென்பட்டன. செம்பட்டைநிறத்து அவள் கூந்தல் குட்டையாக கத்திரிக்கப்பட்டிருந்தது.

“உன் வீட்ல உள்ளவங்க ஒண்ணும் சொல்லலியா”?

அவள் வசீகரமாக புன்னகைத்துவிட்டுக் கூறினாள்.

“ யாரு இருக்காங்க கேட்க. என் வீட்டுக்காரர் இறந்துபோயிட்டார். அவரும் உங்களை மாதிரி சிப்பாய்தான். அது இருக்கும் ரெண்டு வருஷம்”

“கொழந்தைங்க”?

அவள் மவுனமாக வெளியேறினாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. தினமும் அவள் அவனுக்கு உணவு கொண்டுவருவாள். புண்ணுக்கு மருந்திடுவாள். அங்கிருக்கும் பறவைகளுக்கு தானியங்கள் தூவுவாள். . மெல்ல மெல்ல அவன் கால் குணமானது. துணிவுபெற்ற ஒருநாளில் அவன் நடக்கமுயற்சித்தான். வலியிருந்தது. ஆனாலும் நடக்கமுடிந்ததில் மகிழ்ந்தான்.

ஒருநாள் அவள் கேட்டாள்

“ஒரு சிப்பாயா இருக்கிறதுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டிருக்கியா ? எதிர்ல நிக்கிற மனுஷங்களை கொல்றதுக்காக சங்கடப்பட்டிருக்கியா”?

” இது ரொம்ப கஷ்டமான கேள்வி. நீ ஒரு பொண்ணுங்கிறதால இப்டி யோசிக்கிறன்னு நெனைக்கிறேன்”

அவள் மவுனமாக புன்னகைத்தாள்.

“சரி நா இங்கிருக்கிறது தெரிஞ்சா உன்பக்கத்து ஆளுங்க உன்னை உயிரோட விடுவாங்களா”?

அதற்கும் அவள் பதில்கூறவில்லை. மறுநாள் அதிகாலையில் வந்தவள் அவசரமாக அவனைக் கிளம்பச்சொன்னாள். அவள் தேசத்து பட்டாளம் அதிகளவில் வந்துகொண்டிருப்பதாகவும், அங்கிருந்தால் அவன் பிடிபடுவான் என்றும் எச்சரித்தாள். அவனைத் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் பயணித்து ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டாள்.

” இதுக்குமேல என்னால உனக்கு உதவமுடியல மன்னிச்சிடு” என்றபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. ஒரு சிறிய ட்ராவல் பேகில் உணவுப்பொருட்களும், டார்ச் லைட் மருந்து போன்ற சில பொருட்களும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

அவள் நகர்ந்தபின்புதான் சட்டென்று சொல்லிவிட்டு நினைவிற்கு வந்தவனாக, காரைப்பின் தொடர்ந்தபடியே ஓடி கத்தினான்.

“உன் பேரென்ன”?

கார் ஒரு சிறிய கிறீச்சிடலுடன் நின்றது. அவள் தலையை வெளியில் நீட்டி, தன்னுடைய வழக்கமான புன்னகையை வழியவிட்டபடி காரை வேகமெடுத்து மறைந்துபோனாள். அவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான்

“அப்புறம்”? என்றேன் நான்

” இப்போது அடுத்தகதை” என்றார் பெரியவர்

“அய்யோ அதுவே இன்னும் முடியலியே”

அவர் சிலவிநாடிகள் அமைதியாக இருந்தார். காரினுள் ஏஸியின் குளிர்கடந்தும் முன்புறத்து வெயில் உஷ்ணம் கூட்டியது.

கதைக்குள் கதை 2
——————————-
காலடியோசை கேட்டு அந்தச்சிறுவன் திடுக்கிட்டான்.

“வந்துட்டியா அக்கா”? என்றான்.. பதில் வராதுபோகவே மறுபடி சந்தேகமாக கேட்டான்

” யாரது”?

அதற்கும் பதில் வரவில்லை. அறையின் நிசப்தமும் காற்றின் ஓசையும், தொலைவில் பறவையொன்று கூவும் ஓசையும் மட்டும் கேட்டன. சிறுவன் தனது இருக்கையிலிருந்து மெல்ல சுவரைப்பிடித்தபடியே நடந்து வாசலுக்கு வந்தான். வாசற்படியருகே காலில் ஏதோ இடற, குனிந்து கைகளால் தடவிப்பார்த்தான். யாரோ ஒருவர் விழுந்துகிடப்பது தெரிந்து அதிர்ந்தான். கீழே கிடந்த உருவத்தின் முகத்தில் கைகளால் தட்டி உலுப்பினான்.

“யாரு ? யாருங்க ? என்னாச்சு

உருவம் மெல்ல அசைந்தது கைகளில் தெரிந்தது.

“தண்ணீ… தண்ணீ” என ஈனஸ்வரத்தில் முனகியது கேட்டது. சிறுவன் மறுபடி சுவரைப்பிடித்தபடியே சமையலறை சென்று, பழக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தான். வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் சற்றே அஞ்சினாலும், வந்தவரின் தாகத்தை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

சற்றைக்கெல்லாம் அந்த உருவம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு படுக்கையறை வரை வந்தது.

“யார் நீங்க ? சாப்பிட எதாச்சும் வேணுமா ? அங்க ஒரு பெரிய பானையிருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் ரொட்டி இருக்கு. எடுத்துக்கோங்க” என்று ஒரு மூலையைக் காட்டினான். அந்தமூலைவரை சென்ற காலடியோசையில் அந்த உருவம் ரொட்டியை எடுத்திருப்பதை உணர்ந்துகொண்டான். பிறகு அவன் நாசியருகே சிகரெட்டின் நெடி படர்ந்தது.

காலருகே எதுவோ உரச, அவன் குனிந்து தடவினான். அவனது வளர்ப்புப்பூனை. மெல்ல அதைக்கைகளில் எடுத்து மடியில் வைத்து தடவிக்கொடுத்தபடியே கேட்டான்.

“அக்கா வெளிய போயிருக்காங்க. அவங்க இருந்தா டீயாவது வச்சித்தந்திருப்பாங்க. எனக்கு தெரியாது மன்னிச்சுக்கங்க”

இப்போது அந்த உருவம் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்துகொண்டது மெத்தையின் அழுந்தலில் தெரிந்தது. சிலவிநாடிகளில் சிறுவனுக்கு மருந்து நெடியடித்தது. சமயங்களில் அவன் தடுமாறி விழுந்து சிராய்த்துக்கொண்டால் அக்கா போட்டுவிடும் மருந்தின் வாசனை அது.

“உங்களுக்கு அடி பட்டிருக்கா ? மருந்து வாசனை வருதே”?

அவன் தலைமுடியை கோதிய விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

” உங்களுக்கு பேச வராதா ? எனக்கு பார்க்கமுடியாத மாதிரி “?

வாசலில் மாடுகளின் கனைப்பொலியும் கழுத்து மணியோசையும் கேட்டு சிறுவன் உற்சாகமானான்.

“அக்கா வந்துட்டியா ? ஏன்கா இவ்ளோ நேரம் ? நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க பாரு”

அறையில் தடாரென்று எதுவோ விழும் ஓசையும், அகக்அவின் முனகல் ஒலியும் கேட்டது. கட்டிலின் கிரீச்சிடலிலிருந்து பக்கத்திலிருந்த உருவம் எழுந்துகொண்டுவிட்டதென்று உணர்ந்துகொண்டான்.

“அக்கா…. அக்கா… என்னாச்சுக்கா”? என்றபடியே தரைகளில் ஒரு குழந்தைபோல தவழ்ந்துசென்றான். கைகளில் தட்டுப்பட்ட அக்காவின் கால்கள் உதறிக்கொண்டிருந்தன. அவள் முனகல் முன்னிலும் அதிகமாக வெளிவந்தது. சிறுவன் மெல்ல நகர்ந்த அவள் முகத்தைத் தடவினான். அவள் வாயோரம் ஈரமாக வழிந்துகொண்டிருந்தது.

அவன் பயத்தில் அழத்தொடங்கினான். வாசலில் மாடுகள் கத்தத்துவங்கின. மெல்லிய குளிர்காற்று அறைக்குக் நுழைந்ததைத்தொடர்ந்து மழையோசை கேட்டது.

தடார் தடாரென்று குச்சியுடையும் சப்தம் கேட்டது.

” அக்கா என்னாச்சுக்கா உனக்கு ? அக்கா என்னை பயமுறுத்தாதக்கா. ஏங்க யாரு இங்க இருக்கிறது ? அக்காவுக்கு என்னாச்சு”?

இப்போது அவன் முதுகில் ஆதரவாகத் தடவிய ஒரு கை, அவனை அங்கிருந்து நகர்த்திச்சென்று அமரவைத்தது. பின் அவன் கைகளைத் தரையில் நகர்த்தியது. ஓரிடத்தில் சிறுவனின் கைகளில் அகப்பட்ட பொருள் நீளமாக வழுவழுவென இருந்தது. அதன்பேரிலும் ஈரமாக இருந்தது.

சமையலறையில் அடுப்பு பற்றவைக்கும் ஒலியைத்தொடர்ந்து தண்ணீர் கொதிக்கும் சப்தம் வந்தது. சற்றைக்கெல்லாம் அவன் அக்காவின் விரல்கள் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. அவன் முடிகளை கோதிவிட்டன. மழை வலுவாகப் பெய்யத்தொடங்கியது. யாரோ வாசற்படியிறங்கி வெளியேறும் ஓசைகேட்டது.

*

இந்த இடத்தில் பெரியவர் நிறுத்திவிட்டார். கார் வீஜிபியைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நான் கேட்டேன்.

“ஆக்சுவலா அந்தப்பொண்ணுக்கு என்னாச்சு சார்”?

” இப்ப அடுத்தது” என்றார்.

“ஏன் இப்டி பாதில பாதில விடுறீங்க”?

அவர் எனக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அடுத்ததைத் தொடங்கினார்.

கதைக்குள் கதை 3
——————————
அவன் உடல் அசதியில் சோர்ந்துவிழுந்தபோது அவர்கள் நான்குபேர்களும் அவனைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள். அவனால் அவர்களை முழுமையாகப் பார்க்கக்கூட இயலாதபடி கண்கள் இருளடைந்துகிடந்தது. இடதுகாலைக் கழற்றியெறிந்துவிடவேண்டும்போல் வலித்தது. அவர்கள் விழுந்துகிடந்த இவனைப்பற்றி பரிகாசமாக பேசிச்சிரித்தனர்.

ஒருவன் அவன் தோள்பையினை ஆராய்ந்தான். ஒரு டார்ச் லைட்டும், கத்தியும் சில துணிகளும் ஒரு மருந்துப்புட்டியும் பஞ்சு உருண்டையும், மதுப்புட்டியும் கிடைத்தன.

ஒருவன் கேட்டான்,

“யார் நீ ? இந்தக்காட்டுக்குள்ள என்ன செய்யிற”?

இவன் சிலகணங்கள் தயங்கினான். கண்களை நான்குமுறை மூடிமூடித்திறந்துகொண்டான்.

” நா ஒரு பிரயாணி. இந்த மாதிரி காடுகள்ல அலைஞ்சு திரிஞ்சு ஆய்வு பண்ணிட்ருக்கேன்”

“கால்ல எப்டி அடிபட்டிருக்கு”?

” வழில ஒரு பாம்பு கடிச்சிடுச்சி”

அவன் கையிலிருந்த ரேடியோப்பெட்டி அலறியது. அதில்யாரோ கரகரப்பாக பேசினார்கள். அவர்கள் தங்களுக்குள் உடனே கிளம்பவேண்டுமென பேசிக்கொண்டே இவனைப்பார்த்தார்கள். பிறகு இவன் உடைகளை அகற்றி நிர்வாணமாக்கி சோதனையிட்டார்கள். இப்போது அங்கே இன்னும் சிலர் வந்தார்கள்.

இவனுக்கான சான்று அட்டைகளோ இன்னபிறவோ இல்லாததில் சந்தேகித்தார்கள். வழியில் அனைத்தும் ஒரு நதி அடித்துச்சென்றுவிட்டதாக இவன் கூறியதை அவர்கள் நம்பத்தயாரில்லை. அருகிலுள்ள உயரமான மரத்தின் உச்சியில் கிளைதாவிக்கொண்டிருந்த மந்திகளைப் பார்த்தபடியிருந்தான் இவன். சிகரெட் பற்றவைத்துக்கொண்ட ஒருவனிடம் கைநீட்டினான் இவன். கோட்டுக்குள்ளிருந்து ஒரு பாக்கெட்டை இவன் பக்கம் எறிந்தான்.

தொலைவில் எங்கோ தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்க, அவர்கள் அவசரமாக இவனது மதுப்புட்டியை பறித்துக்கொண்டு தன் வழியே சென்றார்கள். இவன் தனது காலை விந்தியபடி நடக்கத்துவங்கினான். அருகில் எங்கோ மாடுகளின் கழுத்துமணியொலி கேட்டது.

*

கார் நீலாங்கரையைக் கடந்து திருவான்மியூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

“திருவான்மியூர்ல டெர்மினஸ்கிட்ட விட்ருங்க தம்பி. அதுக்குப்புறம் நான் போயிப்பேன்”

“ஆனா நீங்க அந்தக்கதைகளை முழுசாச் சொல்லிருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன்.

“நாந்தான் எல்லாத்தையுமே சொல்லிட்டனே தம்பி” என்றார்.

அவர் கூறியதின் பொருள் எனக்குப்புரியவில்லை. டெர்மினஸில் இறங்கிக்கொண்டு எனக்குக்கையை நீட்டினார். நான் அவர் கையைப்பிடித்துக் குலுக்கினேன். அவர் மெல்ல அருகிலிருந்த யாரிடமோ என்னவோ கேட்டார். பின்புறத்திலிருந்து பேருந்து ஒன்று விடாமல் ஹாரனிக்க நான் காரை நகர்த்தியபடியே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். யாரோ ஒருவரின் கையைப்பிடித்தபடி சாலையைக் கடந்துகொண்டிருந்தார் பெரியவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.