தீபாவளிக்கு மறுநாள் மதியம் சாப்பிட்டு வீட்டிலேருந்து வேலைக்கு போயிட்டு இருக்கேன். பெரிய மதுவு திரும்பும்போது தம்பின்னு ஒரு குரலு கேட்குது.
தம்பின்னு திரும்பவும் குரலு உடைஞ்சு அதுல ஒரு பதட்டம். நான் வண்டிய திருப்பி அந்த பெரிய மதுவு பஸ் ஸ்டாண்ட்கிட்ட வந்து நிறுத்தினேன்.
சைக்கிள் கடைக்காரர் மனைவிதான் கூப்புடுராங்க.
“என்னம்மா? “
“இங்க வாயேன் தம்பி”
அங்கதான் சைக்கிள் கடைக்காரர் ஒக்காந்து இருந்தாரு. அப்பாக்கு தெரிஞ்சவரு. உடம்பு கொஞ்சம் பலவீனமா நடுங்குது. கையெல்லாம் சருகு போல தோல் சுருக்கம் தெரியுது.
“என்னம்மா? என்னாச்சு? “
“பஸ்சே வரல தம்பி ஒரு மணி நேரமா! கொஞ்சம் கரிக்குப்பம் வரைக்கும் போகனும், தெரிஞ்சவங்க வீட்டுக்கு. நீ கொஞ்சம் இவங்கள கொண்டு உட்டுடேன். நான் பின்னாடியே வந்துடறேன்.”
“அதுக்கென்னமா… நீங்க மெல்ல வந்து உட்காருங்கப்பா!”
அவரால நடக்க முடியல. ஒரு தள்ளாட்டம் இருந்தது. வண்டியில ஏறும்போது.
“என்னம்மா தனியா அனுப்புறிங்களே, நீங்களும் வாங்களேன்?”
“ஏய், நீயும் ஏறிக்க. இடம் இருக்கு பாரு…”
சைக்கிள் கடைக்காரர்தான் சொன்னாரு. அந்த குரலு, அந்த சத்தம், கொஞ்சம் கூட பலவீனம் இல்லாம உறுதியா தெரிஞ்சுது.
பஜாஜ் 125 விண்ட் மாடல். நல்ல நீளமான சீட்டு உள்ளது. நல்லா உட்கார்ந்து வண்டிய பிடிச்சுக்க சொல்லிவிட்டு எடுத்தேன். முதல்ல அந்த அம்மா கொஞ்சம் கூச்சமும் சங்கடமும் பட்டாங்க. பிறகு ஏறிகிட்டாங்க. கையில இருந்த கட்டப்பைய வாங்கி முன்னாடி வச்சிக்கிட்டேன். வண்டி ஓட ஆரம்பித்தது.
இவர் பேரு ராயரு சைக்கிள் கடை தான் வச்சிருந்தாரு. என்னோட புது சைக்கிள அப்பா ஒவராயிலுங்காக இவர் கிட்ட விட்டு இருந்தாங்க. அப்ப இவரு கடையில நிறைய சைக்கிள் இருக்கும் சின்ன சைக்கிள்லாம் இருக்கும். எப்பவும் கூட்டமா இருக்கும். பரங்கிப்பேட்டை ரேவுதுரைக்கு மீனு வாங்கப் போற சைக்கிள் எல்லாம் கூடையோட நிக்கும். எப்பவும் ஆளும் பேச்சும் பஞ்சர் ஒட்ட காத்தடிக்கன்னு இருக்கும்.
நான் அன்னைக்கு சைக்கிள் வாங்கப்போனேன். அப்ப ரோட்டோரம் பெரிய வேப்பமரம். நிழல்ல பூவும் பழமுமா அது ஒரு தனி வாடை. நல்லா காத்தடிச்சுகிட்டு இருந்திச்சு. ஒரு ஆயா அந்த பழத்த பொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. நான் சைக்கிள் கொடுங்கன்னு கேட்டேன்.
“ஒக்கார்றா என் கூட்டாளி. மவனே, கொஞ்சம் நேரமாவும் நீ போயி விளையாடுடா,”ன்னாரு அப்ப இத எல்லாம் பார்த்தன்.
இப்ப தெரியற இந்த சைக்கிள் கடைக்காரர் வாட்டம் சாட்டமா நல்ல நிறம் கையில பச்சை நரம்பு தெரியும். பாவம் இப்ப இப்படி தளந்து நிக்கிறாரு.
வாய்க்கால் பிரிந்ததும் ஆனைக்குட்டி மதுவு வந்தது. இருபுறமும் மாந்தோப்பு. தாழங்காடு தாண்டியதும் குட்டியாண்டவர் கோயில் சாலையில் இருபுறமும் புளியமரமும் பனைமரமும் வரிசையாக நின்றது. தைக்கால் வந்ததும் தர்க்காவின் விளக்கு கம்பத்தை பார்த்துவிட்டு நான் சைக்கிள் கடைக்காரர் மனைவியைக் கேட்டேன்.
“அம்மா, அங்க யாரு வீட்டுக்கு போறிங்க?”
“அதுவா தம்பி அங்க சொந்தக்காரங்க இருக்காங்க அங்க போறோம்”
தோப்பிருப்ப வண்டி தாண்டுச்சு. நான் ஒன்னும் பேசல.
“அம்மா கரிக்குப்பம் வந்துட்டுது”
“இன்னும் கொஞ்சம் தூரம் தான் போயேன்”
சிறிது தூரம் போனபின் ரோடு இடப்புறம் பிரியும் இடத்தில், “இங்க தான் நெறுத்து நெறுத்து” என்றார்கள்.
நான் வண்டிய மெதுவா நிறுத்தினேன்.
“மெதுவா மெதுவா,”ன்னாரு சைக்கிள் கடைக்காரர்.
மனைவி இறங்கும்போது குரல் கணீர்ன்னு இருக்கு. இறங்கியதும் பைய வாங்கி கிட்டாங்க. சைக்கிள் கடைக்காரர் இறங்கி கால் தாங்கிகிட்டே போயி ரோட்டோரம் இருந்த எல்லக்கல் மேல கைய ஊணி உக்காந்ததுட்டாரு. நான் அவர் மனைவிய கேட்டேன்.
“ஏம்மா ரொம்ப முடியல போல இருக்கே, பையன் வீட்டுக்கு போகக்கூடாதா?”
அவ்வளவுதான் அந்த அம்மா கண்ணுலேருந்து தண்ணி கொட்டுது, உதடு பச்சைப்புள்ள மாதிரி துடிக்குது.
“அழுவாதம்மா, யாரையாவது கூப்புடனுமா? என்ன கஷ்டம் சொல்லும்மா?”
முந்தானையால முகத்த தோடைச்சிக்கிட்டு, “எல்லாம் தப்பாயிடுச்சுப்பா,”ன்னு சொல்றாங்க.
“என்னம்மா சொல்றிங்க?”
“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடியிருக்கர வீட்ட உட்டுடக்கூடாதுப்பா. புள்ளைவோ இருக்கு பொண்ணு இருக்குவோ ஆனால் இருக்கதான் இடமில்லே”
“ஏம்மா?”
“பெரிய பொண்ணு கல்யாணத்துக்கு வீட சொச்ச பணத்துக்காக போக்கியம் போட்டோம். அவ்வளவுதான், அத மூக்க முடியல. இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு அதையே வித்து முடிச்சோம்..
“மளிகை கடை வச்சாரு. பொட்டிக் கடை கூட வச்சு பார்த்தாச்சு, கொடுத்தத வாங்கத் தெரியாது தம்பி, திரும்ப சைக்கிள் கடைக்கே வந்தாச்சு
“பசங்க அவன் அவன் சம்பாரிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானுங்க. இந்த சரியா படிக்காத புள்ளைவோ என்ன பண்ணும்? அங்க அங்க கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கஷ்டப்படுதுவோ, நாங்க எங்க போறது?
“முதல்லாம் எல்லாம் சைக்கிள் வேலைக்கு வரும், ஒன்னும் கஷ்டம் தெரியல. இப்பல்லாம் எங்க, அதுவும் கிடையாது, ஞாயிற்றுகிழமை ஒன்னு இரண்டு வரும். இவங்களுக்கு உடம்பு தெம்பு கொறைஞ்சதும் அதுவும் போச்சு“
சைக்கிள் கடைக்காரர் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு இருந்தாரு.
“காலையில கிளம்பினோம், யார் கண்ணிலும் படாம வந்துடனுமுன்னு.
“எல்லாம் விபரமா ஒரு நாளைக்கு சொல்றன். உன்னதான் தெரியும, நல்ல புள்ள இல்ல நீ வேலைக்கு போ. நேரம் ஆவுது பாரு. இங்க பக்கத்துல தான் நான் போவனும் நீ போ“
நான் வண்டி எடுத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்து கண்ணாடி வழியாக பார்த்தேன்
சைக்கிள் கடைக்காரரை கைத்தாங்கலா முதல்ல நிக்க வச்சாங்க. அவரு கையை உதறி முன்னாடி சாயப்பார்த்தாரு.
நான் வண்டியைக் கீழப்போட்டுட பார்த்தேன்.
சைக்கிள் கடைக்காரர் மனைவி சிரமப்பட்டு நிமித்தி பிடிக்கிறாங்க, அவரு நெஞ்சு உயரம்தான் இருக்காங்க. எனக்கு புரியுது. இப்ப அழுவுறாங்க. அவுங்க உதடு துடிக்குது. செட்டியார் குனிஞ்சு அவங்கள பார்க்குறாரு. சைக்கிள் கடைக்காரரை ஆதரவா அவரு மனைவி புடிச்சு இருக்காங்க. நான் அப்படியே திரும்பி ரோட்ட பார்த்து இருக்கேன். ஒரு ஐம்பதடி தூரத்தில ஒரு கட்டடம்
இருந்துச்சி. நான் அந்த கட்டத்த முன்பே பார்த்து இருக்கேன். ஆனால் அதுல இருந்த போர்ட அன்னைக்குதான் பார்த்தேன். அதுல அரசினர் ஆதரவற்றோர் முதியோர் இல்லமுன்னு இருந்துச்சு.
நான் வேலைக்குப் போயிட்டேன். மனசுல அவங்க ரெண்டு பேரோட நினைப்பு மட்டும் இருந்துச்சு. எப்படி இருந்தவங்க இப்படி ஒரு சூழ்நிலை வந்து போச்சே, என்னா ஆவாங்கன்னு தெரியலையே, அவங்கள பார்க்கனும்னு நினைச்ச நான் தொடர்ந்து வேலையால மறந்துட்டேன்.
ஒரு வாரம் போயிருக்கும். மாலை வேல முடிஞ்சு திரும்பும்போது 6:30 மணி இருக்கும் வெளிச்சம் இருந்தது. செட்டியாரம்மா கரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்குறாங்க வண்டிய நிறுத்தி, “வாங்கம்மா நான் கொண்டு விடறேன்“ன்னு சொன்னேன்.
“இல்லப்பா. பையன் பார்த்தா ஏசுவான், நீ போ. நான் பஸ்ல வந்துடறேன்“
“சரிம்மா?”
வண்டி எடுக்கப்போறேன். “தம்பி, தம்பி. இருப்பா… நேரம் வேற ஆவுது. பெரிய மதுவுல உட்டுடு”
“சரிம்மா ஏறிக்குங்க. கம்பி புடிச்சுக்குங்க”
வண்டி போயிகிட்டு இருக்கு. அவங்களாவே சொல்ராங்க,
“ஒன்னும் சரியில்ல தம்பி. நான் பொறந்த ஊரு குறிஞ்சிப்பாடி. என்ன இந்த குடும்பத்துல இவருக்கு கட்டி குடுத்தாங்க. நான் வந்தப்பிறகுதான் இவரு தம்பிவோளுக்கு கல்யாணம் ஆச்சு. அப்புறம் சொத்த பிரிச்சு கொடுத்தாங்க , பங்கா ஊடும் கொஞ்சம் நிலமும் வந்துச்சி. சரியா பார்க்க தெரியல. சாமர்த்தியம் இல்ல. ஒரு சூழ்நிலையில வீட்ட போக்கியம் போடப் போவ, அத மூக்கவே முடியல என்தம்பிவோ மளிகை கடை போட்டு கொடுத்தான். அதையும் கட்டுசிட்டா இல்லாமல் கடன கொடுத்துட்டு வாங்க தெரியல. கடன் வாங்கனவன் அடிக்க வரான்பா . நாங்க வாங்கன கடத்துக்கெல்லாம் போயிடுச்சு. மீளவே முடியல. எல்லாம் போச்சு.
“கடைசியாக அவ ராஜம் ஊட்டுலதான் ஒரு வருசமா இருந்தோம். அவ ரொம்ப நாளா காலி பண்ணுங்கன்னு சொன்னா. இந்த மாசம் இந்த மாசம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டு இருந்தோம். இந்த மாசம் வர்ற முதியோர் பணம் வரல. நானும் எங்கெங்கோ ஓடிப் பார்த்தேன். பெரட்ட முடியல. தீவாளிக்கு மொத நாளு பொட்டிய தூக்கி வெளில வச்சுட்டு கதவ சாத்திட்டா. மழை புடிச்சுக்கிச்சு.
“பொழுது போனப்பிறகு பையன் வூட்டுக்கு போனேன். தீபாவளி. மவன் வூட்டுல இருந்துட்டு இங்க வந்தாச்சு. அம்மா பையன் வீட்டுல இருக்க முடியாதா? என்னோட பெரிசா கஷ்டப்படறான்பா, கிடைக்கற வேலைய செய்யறான், நாங்க ஒன்னும் செய்யல அவனுக்கு. சுனாமி வீட்டுல வாடகைக்கு இருக்காம்பா. இவரு முடியாதவர இரண்டுநாளு வச்சிக்க முடியல. தண்ணி வசதி கிடையாது. மருமக ஏதாவது சொல்றதுக்கு முன்னே நம்மளே போயிடும்முன்னு வந்துட்டேன்.”
“எங்க வந்திங்கம்மா?”
“ஆமா இனி மறைச்சிதான் என்ன ஆவப் போவுது? அதாம்பா கரிக்குப்பத்துல அனாதை இல்லம் இருக்கு இல்ல, அங்கதான் கொணாந்து தங்க வச்சேன். முதல்ல சேர்த்துக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. அப்புறம்தான் நான் படற கஷ்டத்தை பார்த்துட்டுஒத்துகிட்டாங்க.
“மவன் வீட்டுல இரண்டு நாள் தங்கியிருந்து பார்த்தேன், மருமகள் அனுசரனை இல்லை, பிறகு அங்க இங்கன்னு விசாரிச்சப்ப இங்கே வயசான காலத்துல தங்கற இடம் இருக்குன்னு தெரிஞ்சு கொண்டு வந்து சேர்ந்தேன். அவருக்கு முடியாம போனப்பிறகு கூடயேதான் இருக்கேன். பகல்ல அப்படியே யாருக்கும் தெரியாம வந்து கூடயே பொழுதுக்கும் தேவையானத செஞ்சு கொடுப்பேன். அங்க இருக்குறவங்களுக்கும் வேத்தும்மையில்லாம செய்வேன். இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. ரா ஒரு பொழுது எல்லாரும் பார்த்துக்கிறாங்க. பகல்ல நான் வந்துடப் போறேன். என்னமோ போப்பா, நான் இருக்கறவரைக்கும் யாரும் ஒரு சொல்லோ கஷ்டப்படவோ அவர உடமாட்டேன். ஆனால் அவரு கஷ்டப்படாம நல்லவிதமா போயிட்டாபோதும் அல்லும் பகலும் அதே நினைப்பு ஓடிக்கிட்டு கிடக்கு. பகீர்ன்னு ஒரு பதட்டம் எந்த செய்திய கேட்டாலும் வந்து நெஞ்சடைக்குது. இன்னும் எவ்வளவு நாளைக்கோ?”
“சரிம்மா கவலைப்பட்டு நீங்களும் உடம்பு கெடுத்துக்காதிங்க? இப்ப எங்க போறிங்க?”
“மவன் வீட்டுக்குத்தான். மருமக முழுகாம நிற மாசமா இருக்கா. கைப்புள்ளய வச்சிக்கிட்டு கஷ்டப்படறா.அப்புறம் யார் பார்ப்பா? நான் தான் பார்க்கனும்”
பெரிய மதுவு வந்து விட்டது.