இரட்டை உயிரி – ராம் முரளி

ராம் முரளி

கிருஷ்ணமூர்த்தி தனது குடிசையின் வாயிலுக்கு எதிரில் மண்ணில் குந்தி அமர்ந்திருந்த கணபதியிடம் குரல் கொடுத்தபடியே, தனது இடுப்பிலிருந்து அவிழ்ந்து நழுவும் கைலியை ஒரு கையால் இறுக்கமாக பிடித்தபடி பாதையில் இறங்கி உடல் வெடவெடக்க அவசரமெடுத்து ஓடினான். அவசரத்தில் வேலிப் படலையும் அவன் சாத்தவில்லை. குடிசையையும் தாழிட்டிருக்கவில்லை.

கணபதிக்கு செய்தியொன்றும் விளங்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் நடை வேகத்தை கண்டவனுக்கு விபரீதம் எதுவோ உண்டாகியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு பின்னாலேயே நீலாவதியும், சக்கரப்பூச்சியும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மல்லாட்ட கெழவி என்று அழைக்கப்படும் சகுந்தலை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தனதுடலை நகர்த்தும் வலுவற்று தரையில் அமர்ந்து அரற்றியபடி கிடந்தாள். கணபதி ஒவ்வொருவராக தன்னை கடந்து ஓடப் பார்த்தபடி மெல்ல சலிப்பு கொண்டவனாய் அவசரமின்றி நிதானமாக எழுந்தான். அவன் பிறரைப்போல விரைந்துச் செல்லும் நிலையில்லாமல் இருந்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, சீட்டுக்கட்டு ஆட்டத்தில் உண்டான கைத் தகராறில் அவனுக்கு பலமாக அடி விழுந்துவிட்டது. சந்திரன்தான் அவனை அடித்தது. தொடையின் அடியில் சீட்டட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு மற்றவர்களின் கவனம் சிதறுகையில் அந்தச் சீட்டை, கையில் பிடித்திருக்கும் சீட்டட்டைகளின் இடையில் சொருகி, தன்னை வெற்றியாளனாக தொடர்ந்து தந்திரம் செய்து வந்தது கண்டு சந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவியெடுத்து வெளுத்துவிட்டான். தொடையில் பலமாக அடி விழுந்துவிட்டது. இயல்பாக நடக்கும் திராணியற்று ஒவ்வொரு அடியாக, கருவாட்டு ருசிக்கு மோப்பம் கொண்டலைகின்ற பூனையினைப்போல தரையில் அடிமேல் அடிவைத்து முன் நடந்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கடந்தோடும் சண்முகம்கூட அவனிடம், “ஏய்… நம்ம பூபாலன் பைய. தூக்குல தொங்கிட்டான். ஊரே கலவரம் கொண்டலையுது. நீ என்ன கண்ணி வெடிக்கு தடம் பாத்து நடக்குறாப்ல நடந்துட்டு இருக்க. வேகமாக வா நாய..” என்று உதடுகள் துடிக்க சொல்லிவிட்டு போனான்.

கணபதிக்கு எதுவொன்றும் விளங்கவில்லை. அவனது நினைவுகள் முன்னும் பின்னுமாக சிதறி ஓடியது. ஊர் விடலைகளின் முகங்கள் ஒன்றன் மீதொன்றாக விரைவதும் கரைவதுமாக இருந்தது. தனது சட்டையை இழுத்து முகத்தை ஒருமுறை அழுந்தத் துடைத்த நொடியில் சட்டென எதுவோ புரிபட,  வெறித்த பார்வையுடன் உணர்வுகள் வற்றி அப்படியே நிலைத்து நின்றுவிட்டான். பூபாலனின் முகமும், குரலும் அவனது நினைவில் உருத் திரண்டன. ”ஆறேழு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சிக்கிட்ட பூபாலனா,” என தன்னிச்சையாக உச்சரித்த அவனது குரலை கவனித்தவர்கள் யாருமில்லை. கணபதி தன் போக்கில் நடந்துக்கொண்டிருந்தான். அவனது மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஊர் முழுவதிலும் பரபரப்பு கூடியிருந்தது.

”அம்சமான பயலாச்சே. அவனுக்கா இந்த கெதி. மாரியாத்தா இந்த பயலுக்கு ஏன் இந்த தண்டனை. அவனொன்னும் விஷமம் புடிச்ச பையனில்லையே. தங்கமா பொண்டாட்டி, நல்ல எடத்தில டியூட்டிக்கு போனான். அவன் வூட்டுல மல்லிகைப்பூ மணம்கூட இன்னும் நின்னப்பாடில்ல. அதுக்குல்ல அவனுக்கா இந்த கெதி”

கணபதிக்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு முகத்தில் கோடுகளாக வழிந்து உருண்டது. தனதெதிரில் உடம்பில் சட்டையின்றி வேகமாக வந்து கொண்டிருந்த சிலம்பரசனை அடையாளங்கண்டவனாய்,

“ஏய் செலம்பு. செய்தி கேட்டீயா.. நம்ம பூபாலப் பெய. கயித்துல தொங்கிட்டானாம். அவனுக்கென்ன அப்படியொரு கேடு”

“நானும் அங்கிருந்துதான் வாரேன். இதுப்போல ஒரு சாவு என் வாழ்க்கையில நான் கண்டதில்லை. வயித்து புள்ளத்தாச்சு தரையில் கெடந்து தவியா தவிக்கிறா. பாக்க மனசு வரல. அதான் போயி ஒரு கட்டிங் ஏத்திட்டு வரலாம்னு இருக்கேன். வரீயா…”

”சாவு சங்கதி கேட்டதுல இருந்து கையும் காலுங் ஓட மாட்டேங்குது. மனசு கெடந்து படபடன்னு அடிச்சிக்குது. என்னால எப்படி சாராயத்த குடிக்க முடியும். நீயே ஊத்திக்க. எனக்கப்புறம் அந்த பழி பாவத்த சுமக்க முடியாது”

“நான் சொல்லுறத கேளு. சாவு நீ நினைக்கிற மாதிரி இல்ல. அவனவன் பேயி புடிச்சி திரியுறானுவோ. பொணத்துக்கு பக்கத்துல போவக் கூட எவனுக்கும் துணிவில்ல. நைனாவும் கிருஷ்ணமூர்த்தியுந்தான் அவன அம்மணப்படுத்திக்கிட்டு இருக்காங்க”

கணபதிக்கு திடுக்கிடல் உண்டானது. ஊரில் அவன் பார்க்காத சாவு ஒன்றுமில்லை. அரளி விதை கடித்து உயிர் துறந்த செங்கனியிலிருந்து, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆராயி வரை அவனது நினைவில் அக்கணத்தில் வந்து போனார்கள். ராவணனின் அப்பா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. சாலை விபத்தில் நிகழ்ந்தேறிய கோர மரணமது. கணபதி அன்றைய தினத்தில் ராவணன் வீட்டை விட்டு துளியும் அகன்றிருக்கவில்லை. அவரது உடலை மருத்துவனையிலிருந்து ஆம்புலன்ஸில் தூக்கி வந்து வாசலில் நிறுத்தியபோது, வீட்டினுள் அதனை தூக்கிச் சென்ற கரங்களுள் ஒன்று கணபதியுடையது. சிறுவயது முதலே அந்தப் பகுதியில் பலபல மரணங்களுக்கு சாட்சியாளனாக அவனிருந்திருக்கிறான்.

“அதென்னப்பா அப்படியொரு சாவு. நான் பார்க்காததா? அந்த பயலோட மொகம்தான் கொஞ்சம்போல இம்சப்படுத்த செய்யுது. ரெண்டு நாளுக்கு முன்னாடிக்கூட பொட்டிக் கடையாண்ட பாத்தேனே. பயலுவோ கூட கூடி நின்னு பேசிட்டிருந்தான். என்ன பாத்து லேசாக சிரிச்சிட்டு போனான். அதுக்குள்ள என்னயா ஆச்சு என் தம்பிக்கு?”

கணபதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பூபாலனின் முகம் அவனது நினைவை விட்டு அகலாதிருந்தது. துணித் துண்டினை எடுத்து முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டான். சிலம்பரசனுக்கும் அவனது அழுகையை எதிர்கொள்கையில் கண்ணீர் திரண்டுவிட்டது. அவனை மேற்கொண்டு பேசவிடாமல், தனதுடலோடு அவனை அணைத்துக்கொண்டு பனந்தோப்பு பகுதிக்கு இழுத்துக்கொண்டு போனான்.

பனை மரங்கள் அவ்விடத்தில் வரிசை வரிசையாக நிலத்தில் உறுதியுடன் நின்றுக் கொண்டிருந்தன. பனை மரங்களின் அடர்த்தி கருங்கோடுகளைப் போல கணபதியின் கண்களுக்கு புலனாகியது. அசைவுகளற்று நித்திய மெளனம் சாதித்துக் கொண்டிருந்த அவைகளை கண்களை உருட்டிப் பார்த்தபடியே, முன் செல்லும் சிலம்பரசனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான். நிரந்தர அமைதி அவ்விடத்தில் குடிகொண்டிருந்தது. உயிரியக்கமற்ற நிசப்த வெளியினில் நின்று கொண்டிருப்பதாக கணபதிக்கு ஒருகணம் எண்ணம் தோன்றலாயிற்று. ஒவ்வொரு பனை மரத்திற்கும் இடையிலிருக்கும் வெற்றுவெளியில் கவிந்திருந்த வெறுமையை எதிர்கொள்ள கணபதிக்கு சற்றே கலக்கமாக இருந்தது. வெளியில் சூழ்ந்திருந்த வெறுமை மெல்ல அவனது மனத்துக்குள் சென்று ஆற்றொவொண்ணா துயரை இறக்கியபடி இருந்தது.

சிலம்பரசன் தனது கால்சட்டையில் திணித்து வைத்திருந்த சாராய பாட்டிலை வெளியில் எடுத்து தரையில் வைத்துவிட்டு, செருப்பைக் கழற்றி அதன் மேலேறி அமர்ந்து கொண்டான். கணபதிக்கு உள்ளுக்குள் நெருடலாக இருந்தது. எனினும், தன்னெதிரில் அசைவு கொண்டிருக்கும் ஒற்றை உயிரியான சிலம்பரசனின் துணை அவனை சாந்தமடையச் செய்தது. தனது துண்டை எடுத்து ஒருமுறை உதறிவிட்டு தரையில் மரமொன்றில் தோள் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

”என்னயிருந்தாலும், நான் அவன் மொகத்த ஒரு தடவ பாத்திருக்கனும் செலம்பு. மனசு கெடந்து தவிக்குது”

சிலம்பரசன் அவன் பேசுவது எதையும் கவனிக்க விருப்பமில்லாதவனாய் விறுவிறுவென முனைப்புடன் இரண்டு பிளாஸ்டிக் தம்ப்ளர்களில் சாராயத்தை ஊற்றினான். தண்ணீர் பாக்கெட்டை பற்களால் இழுத்துக் கடித்து நீரை அதன் மேல் பீய்ச்சி அடித்தான். நீரோடு கலந்து சாராயம் பொன் நிறத்தில் பிளாஸ்டிக் தம்ப்ளரில் தேங்கியிருந்தது. சிலம்பரசன் கையில் எடுத்து மடமடவென குடித்துவிட்டான். அவன் முகத்தில் சுணக்கம் உண்டானது. ருசி நாவினை எரிச்சல் படுத்தியதைப்போல சட்டென சிறிது தண்ணீரையும் குடித்துக்கொண்டான்.

“ஏய் கணபதி. நான் ஒன்னும் கல் நெஞ்சுக்காரனில்லை. ஊருல எழவு உழுந்து எல்லா பயலுகளும் பேயி புடிச்சி திரியும்போது, இங்க இப்படி ஒக்கார்ந்து சாராயம் குடிக்கிறேன்னு என்னைய ஈனப்பயனுக்கு நெனச்சிடாத”

“அதெல்லாம் நான் ஒன்னும் அப்படி நெனக்கிற ஆளில்ல”

“உனக்கு இன்னும் செய்தி சரியா தெரியல. தூக்குல தொங்குனது பூபாலனில்ல. அது வேற”

கணபதி சிலம்பரசனையே கூர்ந்து நோக்கினான். அவனது உடலில் மயிர்கள் சிலிர்த்துக்கொண்டு எழுந்தன. தலையில் இருபுறமும் சுரீரென உணர்வு உண்டானது. அந்த பனந்தோப்பினை தலையுயர்த்தி மேலே பார்த்தான். பனையோலைகள் கூராயுதத்தைப்போல விரிந்து புடைத்துக் கொண்டு நின்றிருந்தன. வானத்தில் பழுப்பு நிறமேறியிருந்தது. காக்கைகள் கிலி கொண்டலைவதைப் போல தொடர்ந்து நிறுத்தாமல் கரைந்தபடியே இருந்தது. கணபதி இன்னமும் தன் பங்கு சாராயத்தை குடித்திருக்கவில்லை.

“ஏழு மாசமிருக்குமா அவனுக்கு கல்யாணமாகி?”

பேச்சற்ற நிலையிலிருந்த கணபதி சட்டென உணர்வு கொண்டவனாய், “ஆமாப்பா. ஏழு மாசமிருக்கும். முருகன் கோயில் திருவிழா சமயத்துல கட்டுனதுன்னு நெனக்கிறேன்”

“பாவம்யா. அதுக்குள்ள ஆத்தா அவன மேல கூப்டுக்கிட்டா”

“ஏய்… தெளிவா சொல்லுயா. தூக்கில தொங்கினது அவனில்லன்னு சொன்ன..?”

”தூக்குல தொங்குனது பூபாலனோட உடம்புதான். ஆனா உயிரு அவனோடதில்ல. அந்த கோலத்த நீ பாத்திருக்கனும். எனெக்கெல்லாம் உடம்புல கரெண்ட் பாஞ்ச மாதிரி இருந்துச்சு”

கணபதிக்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. அவனாக நடந்தவைகளை சொல்லிவிட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவனைப்போல அமைதியுடன் சிலம்பரசனின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“கிரிக்கெட் விளையாடிக்கினு இருந்த பயலுவோதான்யா மொதல்ல அத பாத்திருக்கானுவோ. பந்து அவன் வூட்டுப் பக்கமா போயி விழுந்திருக்கு. அத எடுக்குறதுக்கு அந்த வூட்டுப் பக்கமா போயிருக்கானுவோ. திடீர்னு வீட்டோட ஜன்னல் சந்து வழியா எதுவோ அந்தரத்துல தொங்குற மாதிரி தெரிஞ்சிருக்கு. என்னுமோ ஏதோனுமுட்டு வீட்டு கதவ தட்டித் தட்டிப் பாத்திருக்கானுவோ. எந்த நெளிவும் சுளிவுமில்ல. ஊமையாவே கெடந்திருக்கு வூடு. திரும்பவும் ஜன்னல் சந்து வழியா பாத்தா, கால் பாதம் ரெண்டு தொங்குறது இவனுங்களுக்கு புரிஞ்சிருக்கு. உடனே லபோதிபோன்னு கத்தி கூப்பாடு போட்டுருக்கானுங்க.. முந்திரி தோப்புல தண்ணி காட்டிட்டு இருந்த என் காதுலயும் எனுமோ சத்தம்  கேட்டுது, அலறியடிச்சிக்கிட்டு போயி பாத்தா…”

உணர்ச்சி வேகத்தில் தடையற்று சொல்லிக் கொண்டிருந்தவன் திடீரென தனது பேச்சினை நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் ஒருமுறை தலையை திருப்பிப் பார்த்தான். அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை.

”அந்த பய தன்னோட பொண்டாட்டி புடவைய ஒடம்புல சுத்திக்கிட்டு அந்தரத்துல தொங்கியிருக்கான்”

அதிர்வு கொண்ட கணபதி புருவம் புடைக்க,  ”என்னது பொண்டாட்டி உடுப்பையா..? என்னய்யா அக்கிரமமா இருக்கு. நெஜமாவா சொல்ற..?”

சிலம்பரசன் அவனுக்கு பதில் கூறாதவனாய் கீழே கணபதிக்கு ஊற்றி வைத்திருந்த சாராயத்தையும் எடுத்து மொடமொடவென குடித்தான். அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. சுற்றும்முற்றும் எதையோ வெறிகொண்டு தேடுவதைப்போல முகத்தை அங்குமிங்குமென அலையவிட்டான். கணபதிக்கு அவனது செய்கைகள் எதுவும் புரியவில்லை. அரற்றல் அடங்காமல் தொடர்ந்தபடியே இருக்க, அவனது உடலில் மீது கை வைத்து, “ஏய் என்னாச்சுப்பா உனக்கு..? நீயேன் இப்படி கெடந்து உடம்ப ஆட்டுற..?” என்று உதறுலுடன் கேட்க, சிலம்பரசன் தன் மேலிருக்கும் அவனது கையை தட்டிவிட்டபடி,

”நான் மட்டுமில்ல ஊருல எல்லா பயலும் இப்படித்தான் பயங்கொண்டு திரியுறானுவ. நேத்து வரை ஊருல நல்லவிதமா சுத்திக்கிட்டு இருந்த பய, திடீர்னு ஒடம்புல பொடவைய சுத்திக்கிட்டு தொங்குனா உனக்கு எப்புடி இருக்கும். நானெல்லாம் ஆடிப் போயிட்டேன்”

“அவனுக்கென்ன பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிடுச்சா..? அப்படியொன்னும் தெரியலய்யே…?! நல்லவிதமாத்தான குடும்பம் நடத்திட்டு இருந்தான்…?”

”அங்கத்தான் விஷயமிருக்கு. பூபாலன் தாயில்லாம வளர்ந்த பெய. அப்பன்தான் அவனுக்கு எல்லாமா இருந்து வளர்த்துவுட்டான். பொம்பள பாசமே கெடைக்காத பயலுக்கு, புதுப்பொண்டாட்டி உண்டானது கொள்ள சந்தோஷமாயிருக்கு. அவ முந்தானையே புடிச்சிட்டு திரிஞ்சிருக்கான். ஊருல எல்லாவனும் அத சொல்றானுவோ. அவள எங்கயும் வுடுறது கெடையாது. கடைக்கண்ணி எல்லா எடத்துக்கும் அவனே போயிட்டு வந்திருக்கான். அவள ஒரு இளவரசி கணக்கா பாத்துருக்கான்”

“அந்த கதெதான் எனக்கும் தெரியுமே. பொண்டாட்டிய எப்படி பொத்தி பொத்தி பாத்துக்கிட்டான்னு. ஒரு தடவக்கூட அவள மத்த வூர் பொம்பளங்க மாதிரி வெளியில பாத்ததில்ல. எல்லாரும் பேசிக்கிட்ட மாதிரி கல்யாணமான புதுசில அப்படித்தான் இருப்பானுங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன்”

”மயித்துல இருப்பாங்க. டேய் அவன் உன்ன மாதிரி என்ன மாதிரின்னு நெனச்சியா..? அவள ஒரு கொழந்த கணக்கா பாத்துட்டு இருந்திருக்கான். கிட்டத்தட்ட நம்ம சிவனும் பார்வதியும் மாதிரி, அவன் தன்னோட ஒடம்புலயும் உசிருலயும் அவ சரி பாதியா இருக்கான்னு நம்பிட்டு இருந்திருக்கான்”

“அதுக்கும் அவன் செத்ததுக்கும் என்ன சம்பந்தம்?”

”அவ முழுகாம ஆனதுக்கு அப்புறம், அவள இன்னும் அக்கறையோட பாத்துட்டு இருந்திருக்கான்… இரு இரு..”

சிலம்பரசன் பாட்டிலில் மிச்சமிருந்த சாராயத்தையும் தம்ப்ளரில் ஊற்றி மடமடவென குடித்தான். கணபதிக்கு அங்கிருந்து எழுந்துச் சென்றுவிட வேண்டும்போல இருந்தது. பூபாலனின் சாவு சங்கதி அவனை மேலும் அமைதியுடனிருக்க விடவில்லை. எழுந்து சென்று அவனது முகத்தையும், அவனது மனைவியையும் பார்க்க வேண்டுமென அவனுக்கு தோன்றியது. பின் திரும்பிப் பார்த்தவன், அவ்விடத்தில் எவ்வித அசைவுமில்லை என்பதுணர்ந்து எழும் துணிவில்லாமல் சிலம்பரசனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நேரம் கடந்துக்கொண்டே போனது.

நீண்ட நேரமாக தலையை கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சிலம்பரசன், திடுதிப்பென நினைவு மீண்டவனாக, “டேய் கணபதி. உனக்கென்ன மயிரா தெரியும். முன்னபின்ன பொஞ்சாதி கட்டியிருந்தா அரும தெரியும். பெருசா பேச வந்துட்ட. நீயும் உம் மூஞ்சியும். நீயெல்லாம் இருக்குற ஊருல அவனெப்படிடா உசிரோட இருப்பான். கருமாந்திரம் புடிச்சவனே எழுந்துப் போடா. செத்தவன் மூஞ்சிய ஒரு தடவயாச்சும் பாக்கனும்னு தோனுச்சா உனக்கு? கழுத மூத்திரம் குடிக்க நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துட்ட”

சிலம்பரசனின் குரலின் தொனி முற்றிலுமாக மாறியிருந்தது. சிலம்பரசனுக்கு போதை அதிகளவில் ஏறியிருந்தது. அவனால் இவனை எதிர்கொண்டு பார்க்கக்கூட முடியவில்லை. இங்குமங்குமென வசைகளை இரைத்துக் கொண்டிருந்தான். கணபதிக்கு அதற்கு மேலும் அங்கிருப்பதில் விருப்பமில்லை. எதுவானாலும் பார்த்து விடுவதென்றெண்ணி, எழுந்து செருப்பை காலில் மாட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினான். சிலம்பரசன் தன்பாட்டுக்கு கணபதியை திட்டியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

கணபதி மெல்ல அந்த பனந்தோப்பில் ஒவ்வொரு மரமாக கடந்துக் கொண்டிருந்தான். மரங்களனைத்தும் பூபாலனின் நிழலை கொண்டிருந்தன. அதனை சந்திக்க துணிவில்லாமல் முகத்தை தாழத் தொங்கப் போட்டபடி முன்னால் நடந்துக் கொண்டிருந்தான். அவனது மனதுக்குள் பெண் உறவு  குறித்தான எண்ணங்கள் எழுந்தன.

நாற்பது வயதுக்கு மேல் கடந்துவிட்ட கணபதிக்கு இன்னமும் திருமணம் நடந்தபாடில்லை. அவனது ஒற்றை உறவுக்காரரான சன்னாசி பலமுறை சொல்லிப் பார்த்தாயிற்று. கணபதிக்கு துளி விருப்பமும் உண்டானதில்லை. ஒரு பெண்ணுடலோடு பந்தமுண்டாக்கிக் கொள்ளும் நினைவே அவனது மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. தெருவில், எதிர் நடையில், கோயில் குளங்களில், கடைக்கண்ணிகளில் எங்குமவனது மனது பெண்பிள்ளைகளை கண்டு சஞ்சலமடைந்ததில்லை. பெண் என்றாலே, அவள் பிற குடும்பங்களை சார்ந்தவள், நெருங்கி தொந்தரவுக்குட்படுத்தக் கூடாத அபூர்வர்கள் கணபதிக்கு. அதென்னவோ அப்படியொரு நினைப்பவனுக்கு.

கணபதி உணர்வற்ற நிலையில் பூபாலனின் வெள்ளந்தியான சிரிப்பை அசை போட்டபடியே தலை கவிழ்ந்து நடந்து கொண்டிருந்தான். அவ்வப்போது பொட்டிக்கடை வாசலில் வெட்டியாய் பொழுதைக் கடத்தியபடி சைக்கிளில் கணபதி அமர்ந்திருக்கும் தருணங்களில், ஒரு கண் சிமிட்டலை பரிசளித்தபடி பூபாலன் அவனை கடந்துச்  சென்ற மாலைப்பொழுதுகள் பொலிவுடன் மனதில் துலங்கியது. ”இதெல்லாம் அக்கிரமம்” என்று கைகளில் காற்றில் ஏவி புலம்பிக்கொண்டு முன்சென்ற கணபதிக்கு, திடீரென பின்னாலிருந்து, “கணபதி” என்ற குரல் கிசுகிசுப்பாக கேட்க, வெடுக்கென தலையை திருப்பிப் பார்த்தவன், பின்புறம் ஒரு அசைவுமில்லாதது கண்டு மேலும் மேலும் துணுக்குற்றபடியே நடை வேகத்தை கூட்டினான். பனங்காட்டில் இப்போது சிலம்பரசனின் குரல் மட்டுமே நிரம்பியிருந்தது.

கணபதி நேராக நடந்துச் சென்று வீரன் கோவிலை அடைந்தான். பரந்த செம்மண் தடத்தில், ஒற்றை அரிவாளைக் கையிலேந்தியபடி வெறித்த பார்வையுடன் ஆங்காரத்துடன் வீற்றிருந்த உயரிய வீரன் சிலையின் எதிரில் போய் கணபதி நின்று கொண்டான். அவனது கண்களில் நீர்க்கோடுகள் உருண்டு வழிந்தபடியே இருந்தது. கணபதியின் பார்வை புகாருரைப்பதைப்போல இருந்தது. இனியொருபோதும், உயிர்பெற முடியாத  நினைவுகளின் அரூப தடத்தில் கண் சிமிட்டி விலகிக் கரையும் பூபாலன் வாழ்ந்த காலத்தை வீரன் சிலையின் முன் நின்று காற்றலையில் ஓதினான். மனதில் கொஞ்சம் நிம்மதியுண்டானது.

தொலைவில் கூடி நின்ற ஊராரை மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தான் கணபதி. அதற்குள் அங்கு ஓலைப் பந்தலை நட்டுக்கொண்டிருந்தார்கள். சில பிளாஸ்டிக் இருக்கைகள் போடப்பட்டு, ஊர் பெருசுகள் வாயில் துணி வைத்து மூடியபடியே முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அமர்ந்திருந்தனர். மாலையுங்கையுமாக சிலர் வீட்டினுள் நுழைந்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி பாடை கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஒத்தாசையாக இரண்டொருவர் அவரருகில் அமர்ந்து மூங்கில் கழிகளை அரிவாளால் சீவிக் கொண்டிருந்தனர்.  ஆங்காங்கே சில பொடியன்கள் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். கணபதியின் வருகையை ஒருவரும் அவ்வீட்டில் அக்கணத்தில் பொருட்படுத்தவில்லை. தெரிந்த முகத்தை தேடி சில நிமிடங்கள் அங்குமிங்குமென அலைபாய்ந்து கொண்டிருந்தான். எவரிடம் பேசுவதென்று அவனுக்கொன்றும் புரியவில்லை. உள்ளே பெண்கள் சடலத்தைச் சுற்றியமர்ந்து தலைவிரி கோலமாக ஒப்பாரிப் பாட்டிசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமித்தெழுந்த பல குரல்களின் சப்தம் கணபதியின் குரல்வளையை நெரிப்பதைப் போலிருந்தது. அங்கிருக்கச் சகியாமல் வீட்டின் பின்புறத்திற்கு சென்றான்.

அவ்வூரிலிருக்கும் நான்கைந்து ஓட்டு வீடுகளில் பூபாலனின் வீடும் ஒன்று. அதன் சுவர்களில் பூசப்பட்டிருந்த நீல நிறத்தை விரல்களால் தேய்த்தபடியே பின்புறமாக சென்றவன் அங்கு சிலர் கூடியமர்ந்து சாராயம் அருந்திக் கொண்டிருந்ததை கண்டான். அவர்களைக் கடப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முகமும் தனக்கு மிகவும் அன்னோனியமானதுதான் என்றாலும், அவ்வீட்டில் எல்லோரும் புதியவர்களாக, தனக்கொருபோதும் அறிமுகமற்ற மனிதர்களைப்போல நடந்து கொண்டார்கள்.

கணபதி பின்புறத்தில் நின்றபடி அங்கிருந்த மைதானத்தைப் பார்த்தான். சிலம்பரசன் சொன்னது நினைவுக்கு வந்தது. பின் திரும்பி சுவரைப் பார்க்கையில், அங்கு சுவரின் மையத்தில் சிறு துளையிடப்பட்டு இரண்டு இரும்பு கம்பிகள் அதன் குறுக்காக இடப்பட்டிருந்தன. அந்த ஜன்னலின் வழியாகத்தான் பூபாலன் கயிற்றில் தொங்குவதை ஊர் பசங்கள் கண்டிருக்கிறார்கள். கணபதி மெல்ல குனிந்து அந்த ஜன்னல் சந்தினில் எட்டிப் பார்த்தான். உள்ளே குவியலாக அமர்ந்திருக்கும் பெண்களின் ஓலம் அந்த ஜன்னல் துளையின் வழியே கசிந்து கொண்டிருந்தது. கணபதிக்கு சங்கடமாக இருந்தது. சாவின் வாசனை அந்த சுற்றுப் பிரதேசத்தில் ஒன்றுகலந்து பெரும் மரணக் காடாக ஊரே உருமாறியிருந்தது.

மெல்ல எழுந்து கழி வெட்டிக் கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் அருகில் தரையில் அமர்ந்தான். அவனும் இவனை கவனியாதது போலவே கழியை மும்முரமாக நறுக்கிக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் பேண்ட் வாத்திய குழுவும் வந்துச் சேர்ந்திருந்தது. செம்மண் நிற தலை மயிருடன் அவர்கள் தங்களுக்குள் ஹாஸ்ய கதைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றையவர்களை போல மரணம் குறித்தான அக்கறையற்று வெகு சகஜமாக அவர்கள் அவ்விடத்திலிருந்தது கணபதிக்கு வினோதமாக இருந்தது. பின் இறப்பு வீடுதானே இவர்களுக்கு பொருளீட்டும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது, அதனால் அவர்களது சந்தோஷமொன்றும் அத்தனை குறைபாடில்லை என்று நினைத்தபடியே, தன்னருகில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தியை பார்த்தான். அவனது முகத்தில் கடுமை ஏறியிருந்தது.

“மனசு ஆறலண்ணே. இப்படி பண்ணுவான் என் தம்பி?”

கிருஷ்ணமூர்த்தி தலையுயர்த்தி கணபதியை ஒருமுறை பார்த்துவிட்டு, “யேய் உன்ன எப்ப வரச் சொன்னன். இப்போ வந்து கேக்குற? எங்க போயி ஊர் மேய்ஞ்சிட்டு வரே”

“அண்ணே நான் அப்பவே உங்க பின்னாடியே கிளம்பிட்டேன். அந்த செலம்பு பயதான் இழுத்துட்டு பனங்காட்டுக்கு இட்டுட்டு போயிட்டான். என்னென்னுமோ சொன்னாண்ணே. அதெல்லாம் நெசமா?”

“என்ன பொம்பள பொடவ கட்டிக்கிட்டு தொங்கிட்டான்னு சொன்னானா?”

“ஆமாண்ணே”

“சங்கடமான செய்திதான். இந்த வீடியோ சமாச்சாரம் எதுவும் சொன்னானா..?”

“வீடியோன்னா..?” ஒன்றும் புரியாமல் கிருஷ்ணமூர்த்தியிடம் கணபதி கேட்க,

”அடேய். இவம் பொண்டாட்டி பிரசவத்துக்காக ஆத்தா வூட்டுக்கு போயி ரெண்டு மாசமாவுது. இவன் கல்யாணம் கட்டினதில இருந்து ஒரு நாளும் அவள பிரிஞ்சி இருந்ததில்லைப் போலிருக்கு. இங்கிருந்து பல மைல் தாண்டியிருக்கிற குள்ளஞ்சாவடி வரைக்கும் தினமும் போயிட்டு போயிட்டு வந்திருக்கான். அத அந்த பொண்ணு கண்டிச்சிருக்கு. உடம்பு என்னத்துக்கு ஆகுறது. ஏன் எப்படி அலையுறீங்க. சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லி அனுப்புறேன்னு சொல்லியிருக்கு. பய ரெண்டு மூனு நாளைக்கு ஒரு தடவ அங்க போயி வந்துட்டு இருந்திருக்கான். அதுக்கப்புறம் கடைசி ஒரு மாசமா அவன் அங்க போகவே இல்லையாம். பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுறதோட சரியாம். அவளுக்கும் இவனெ பாக்காம சங்கடமா இருந்திருக்கு. ஆனா அவனோட ஒடம்பு வீணாபூடுமுன்னு அவ அப்படி சொல்லியிருக்கா…”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை இமை மூடாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் கணபதி.

“அந்த பயலுக்கு அப்படியென்ன பொண்டாட்டி மேல பிரியம்னு தெரியல. அப்பன் போயி சேர்ந்ததுக்கு அப்புறம் அவனுக்கிருந்த ஒரே ஒறவு இவத்தான். இந்த பயெ என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? வூட்டுல நடு சாமத்துக்கு அப்புறம், அவள போலவே பொடவ கட்டிக்கிட்டு, நகை நட்டுன்னு மாட்டிக்கிட்டு, மொகத்துல மஞ்சளயும் பூசிக்கிட்டு முழுசா அவள மாதிரியே மாறி அந்த வூட்டுக்குள்ள நடமாடிக்கிட்டு இருந்திருக்கான். அவனோட போன்ல அத பதிவும் செஞ்சி வச்சிருக்கான்”

கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கேட்கக் கேட்க கணபதிக்கு அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது. பூபாலன் உடனான தனது அனுபவங்களை அவன் மனதில் அசை போட்டபடியே கிருஷ்ணமூர்த்தி சொல்வதையும் காதில் வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல கடைசி இருபது நாளா அப்படித்தான் இருந்திருக்கான். அவ நெனப்பு வரும்போதெல்லாம் அந்த வீடியோ போட்டு பாத்துக்குவான் போலிருக்கு. அவ தன்னோட குடும்பம் நடத்தலங்கறது அவன நிறைய தொந்தரவு பண்ணியிருக்கு. ஒரு கட்டத்துல என்ன ஆகியிருக்கும்னு தெரியல, தூக்குல தொங்கிட்டான் போலிருக்கு”

கணபதி ஒருமுறை வீட்டினுள் பார்வையை மேய விட்டான். பெருத்த பெண் கூட்டம் அவ்வறையில் நிறைந்திருந்ததால் எந்தவொரு முகத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. அவனுக்கு அழுகையும், மனவலியும் சேர்ந்து உண்டானது. சுயமாக பிரசவித்து திரண்டொழுகிய கண்ணீரை கிருஷ்ணமூர்த்தி பார்க்காதபடி மறைவாகத் துடைத்துக் கொண்டான். கல்யாணம் குறித்தான யோசனையே பெரும் பாரமாக நெஞ்சை அமிழ்த்திய நிலையிலிருந்த கணபதிக்கு ஒரு பெண்ணின் மீதான நேசத்தால் நேர்ந்திருக்கும் விசித்திரத்தை இயல்பாக உட்கிரகித்துக்கொள்ள இயலவில்லை. அப்பனும் ஆத்தாவும் போய் சேர்ந்ததும், தனக்கொரு நாதியுமில்லை, தன்னால் இனி யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்று கூறி, எந்தவொரு உறவு குறித்த யோசனைகளையும் தவிர்த்துவிட்டு, தனது உலகத்தில் தான் மட்டுமே இருந்து கொண்டிருந்த கணபதி முதல் தடவையாக தனக்கெதிரில் ஒரு பெண்ணின் இருத்தலின் மீது தீராக் காதல்கொண்டு தனது உயிரையே மாய்த்துகொண்ட பூபாலனுக்காக கண்ணீர் சாத்தினான்.

“சாவுற வயசாண்ணே இது. ஏன் இவ்ளோ லவ்ஸு அந்த பொண்ணு மேல”

“எனக்கென்னடா தெரியும். இப்படியெல்லாமா பொண்டாட்டிய விரும்புவாங்கன்னு எனக்கே விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு. இனி அந்த பொண்ணு என்ன பண்ணும்னு நெனச்சாத்தான் மனசு ஊமையாகிடுது”

கிருஷ்ணமூர்த்தி சில நொடிகள் எதுவும் செய்யாமல் அமைதியோடிருந்தார். கணபதி சுற்றி நின்றிருந்த எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அந்த இளம் வயதினனின் மரணத்தில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. எல்லோருக்கும் ஏதேனுமொரு வகையில் பூபாலன் அறிமுகமானவன். பெருத்த அமைதி அவ்விடத்தில் நிலவியிருந்தது.

உள்ளே இருந்து சற்றே நேரத்திற்கெல்லாம் பூபாலனின் உடலை தூக்கி எடுத்து வந்து வாசலில் இருத்தினார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த உடலை பார்க்கத் துவங்கியது. கிருஷ்ணமூர்த்தியும் நைனாவுமாக சேர்ந்து அந்த உடலுக்கு புது ஆடை உடுத்தினார்கள். கழுத்து நிறைய மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. கணபதி அந்த உடலையே உற்று நோக்கினான். பூபாலனை தான் கடைசியாக சந்தித்த இரவு அவனுக்கு சட்டென நினைவுக்கு வந்தது. அன்றைய தினத்தில் அவன் புடவை கட்டியிருந்ததாக அவன் நினைத்துக் கொண்டான். மஞ்சளும், குங்குமமும் மேனியெங்கும் ஏறி மினுங்கிக் கொண்டிருந்ததாக அவனுக்கு நினைவுக்குள் வந்தது. அவனால் பூபாலனை அக்கணத்தில் ஒரு ஆணாகவே கருத முடியவில்லை. உள்ளே தரையில் கிடந்து வெறித்த பார்வையுடனிருந்த அவனது மனைவியை பார்த்தான். இரண்டொரு பெண்கள் அவளை தாங்கிப் பிடித்தபடி நின்றிருந்தார்கள்.

கணபதி அவளை ஒன்றிரண்டு முறை பாத்திருக்கிறானேயொழிய, அப்படியொன்றும் அவளது முகம் அவனது மனதில் பதிந்திருந்ததாக படவில்லை. எவ்வளவு சாமர்த்தியமாக அவளை பாதுகாத்திருக்கின்றான். அந்த பெண்ணின் கதியை நினைத்துதான் அவனுக்கு பாவமாக இருந்தது. அவளது வயிற்றில் கருக் கொண்டிருக்கும் உயிர் எவ்வித சிரமமுமின்றி வெளியுலகம் பார்க்க வேண்டுமென அவன் தனக்குள்ளாக வேண்டிக் கொண்டான். அவள் எவ்வித அசைவுகளுமற்று பூபாலனின் சடலத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பூபாலனின் உடலை தூக்கி அமரச் செய்து தண்ணீர் கொண்டு அவனை துடைத்து சுத்தப்படுத்தினார்கள். நெருங்கிய ரத்த சொந்தம் ஒன்றிரண்டு அழுதபடியே கையில் காசும் அரிசியும் தானியங்களுன் சுமந்துக்கொண்டு அந்த உடலை சுற்றிக் கொண்டார்கள். நெல்மணிகளுக்குள் பூபாலனின் உடல் புதைந்திருந்தது. கணபதி பூபாலனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அத்தனை பிரகாசமாக ஒளி பொருந்தியதாக இதற்கு முன்பு அவன் பூபாலனை கண்டதில்லை.  பூபாலனின் மேனியெங்கும் அழகேறியிருந்தது. ஆண் என்பதன் சாயல் அழித்தெறியப்பட்டு, முழு முற்றாக ஒரு பெண்ணாக பூபாலன் பலரின் பார்வைக்கும் தெரிந்தான். அவனது உடலை அள்ளியெடுத்துச் சென்று தனது வசிப்பிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென திடீரென அவனுக்கு வினோதமான பிரேமை உண்டானது. ஒரு ஆணாக அவனைக் கருத முடியாத நிலையிலிருந்த கணபதி இப்படியும் ஒருமுறை தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்,

“ஒரு பொண்ணோட உசுரு அவ்ளோ உசந்ததா? ஏண்டா பூபாலா? நீயேன் பொண்ணா மாறுன? உனக்கென்ன அப்படியொரு எண்ணம். இப்பம் சொல்லுறன் கேளு. உன்னால் திரும்பவும் உயிரோட திரும்பி வர முடியும்னா, ஒரு பெண்ணாக மாறியிருக்குற உன்னை, நான் காலம் போற வரையிலும் பத்திரமாக பாத்துக்க தயாரா இருக்கேன்”

உலுக்கியெடுக்கத்தாற் போல அந்நினைவிலிருந்து மீண்ட கணபதி, அர்த்தநாரியாக பூபாலன் சில நாட்கள் சிவ பார்வதியாக வாழ்ந்த காரணத்தை நினைத்துப் பார்த்தான். உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது.

நிகழ்வதற்கு சாத்தியமில்லை என்றாலும், சொந்தம் எனச் சொல்லிக் கொள்ளவிருந்த ஒரே உறவினர் சன்னாசி தாத்தாவிடம் தன் மனத்தை திறந்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட வேண்டும் எனவும் அக்கணத்தில் அவன் விநோதமான முறையில் தனக்குள் அறிவித்துக்கொண்டான்.

 

 

3 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.