உயிர்ப்பித்தல்
கிளைகள் சொடக்கிடும்
காற்றில்
இலைகளென்ன
சருகுகளும் சலசலக்கும்
செவ்விந்திய மாந்திரிகனின்
மேளம் துடிப்பு எனில்
கருப்பினக் கூத்துக் கலைஞனின்
சாக்ஸஃபோன் மூச்சு
யாழும் பேஸும் இசையின்
அதிநுட்ப வடிவங்கள் எனில்
மேளதாளத்தை மிகுவேகத்தில்
நிகழ்த்தும் பறையாட்டம் இசையின் உச்சம்
இன்மை இருப்பு இவற்றின்
ஊசலாட்டத்தினூடாக கலைகள்
திரும்பத் திரும்ப இருப்பை
சுட்டுகின்றனவே கோருகின்றனவே
உயிர்ப்பித்தலின் அகமகிழ்வா
இசையென்ன ஓவியம் உள்பட
அனைத்து கலைகளும்
இதயத்துடிப்பையும்
மூச்சியக்கத்தையும்
நிகழ்த்திக் காட்டவோ
உணர்த்தவோ
உணர்த்தாது தோற்கவோ
யத்தனிக்கின்றனவே
தூர்வாரிய ஏரியில் நீருக்காக
அலைகழியும் துடுப்பில்லா
மரப்படகுகள்
நாம்
கட்டுமரங்கள்
இயற்கையின் நீட்சிகளா
ஆம் பச்சையத்தின் எச்சங்கள்
……………………………………
மேய்ப்பரற்றவன்
கூண்டுக் கிளியாய்
கேட்டதை ஒப்பித்து
சதாகாலமும்
மாறாதிருக்கும்
அந்த மேய்ப்பர்
இல்லை
என் மேய்ப்பன்
என் மேய்ப்பன்
கூடுகள் கலைத்து
படிநிலை தகர்த்து
கலைகளின் கலவையை
ஒப்பனை செய்துகொள்ளும்
வண்ணத்துப்பூச்சி
பிடிவாதமாய்
வெவ்வேறு
வாதத்தினால்
தாக்குதலுக்குள்ளாகும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்
என் மேய்ப்பன்
பேதமின்றி
அனைவரையும்
அனைத்தையும்
தழுவிக்கொள்ளும்
நுண் நன்னுயிரி
அவ்வப்போது
கணவனுக்காய் மனைவியை
மகளுக்காய் பெற்றோரைப்
பழிக்கும் வசைக்கும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்
என் மேய்ப்பன்
வசையை உட்கொண்டு
ஆசியை வெளியிட்டு
குட்டிக்கரணமிட்டு
முக்குளிக்கும்
ஓங்கில் குட்டி
மேடையில் லபலபத்து
வீட்டில் லகலகத்து
சுற்றி வளைத்துப்
பேசும் அறிவார்ந்த
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்
என் மேய்ப்பன்
மரம் விட்டு மரம் பாய்ந்து
உச்சக்குரலில் கீறிச்சிட்டு
புட்டுப் புட்டு வைத்திடும்
உள்ளங்கையில் அடங்கினும்
அடங்கா அணிற்பிள்ளை
அடிக்கடி
பெயரளவில்
நற்செய்தி கூறி
சாபங்களைத் தூவி வீசும்
மேய்ப்பர் இல்லை
என் மேய்ப்பன்
என் மேய்ப்பன்
அகத்தின் கும்மிருட்டில்
ஒளிர்ந்து மகிழ்ந்து
வதைந்து மரித்து
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மின்மினிப்பூச்சி