பாட்டு பயிற்சியை
அன்றே நிறுத்தி விட்டது
வடையை பறிகொடுத்த காகம்.
கால் செண்டரில் வேலை முடித்து
வீட்டுக்கு வந்து உடைமாற்றி
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டு
யோகா வகுப்புக்கு செல்கிறது.
ராயப்பேட்டையிலிருந்து
காரில் வரும் ஒல்லியான பையனுடன்
காதலாம்.
வடையை தின்றாலும்
இன்னொரு கதையில் வந்து
திராட்சையை எட்ட முடியாத நரி
சாலை விபத்தில்
கால் முறிந்து
புத்தூருக்குப் போய்
வைத்தியம்
பார்த்துக்கொண்டதாய் கேள்வி.
அதற்குப்பின்
எங்கே போனதென
அறிந்திலர் எவரும்.
திருவாரூர்
பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில்
மருந்துக்கடை வாசலில் பார்த்தாக ஒருவர்
விழுப்புரம்
அபிராமி திரையரங்கின் எதிரில்
தள்ளுவண்டியின் முன் நின்று
வாழைப்பழம் வாங்கி கொண்டிருந்ததாக
மற்றொருவர்
மும்பை ரயிலின்
முதல் வகுப்பு இருக்கையில்
இருமிக்கொண்டு சென்றதை
கண்டதாக இன்னொருவர்.
தவிர
ஊரை விட்டுச்சென்ற நரி
திரும்பி வந்தாக
தகவல் ஏதும் இல்லை.
கண்பார்வை மங்கி விட்டதால்
வடைக் கடையை மூடிவிட்டு
அறந்தாங்கியில்
பெரிய மகள் வீட்டுக்கு சென்ற பாட்டி
கேட்டராக்ட் செய்தபின்
கீரை ஆய்ந்து, காய்கறி நறுக்கி
வாணிராணியும் பிரியமானவளும் பார்த்து
தான் வடை சுட்டு விற்றதும்
இன்ன பிற
குட்டிக் கதைகளும் சொல்லி
பேரப்பிள்ளைகளுடன்
பொழுதைக் கழிக்கிறாள்.
திருடுபோன வடையும்
புளிக்கும் திராட்சையும் தவிர
சில கதைகள் மட்டும்
ஏன் இவ்வளவு நீளமானவையாக இருக்க வேண்டும்
என்பது மட்டும்
அவளுக்கு விளங்கவே இல்லை.