அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018
When the River sleeps – “நதி உறங்கும்போது” என்ற ஈஸ்டரின் கிரெ எழுதிய தி ஹிந்து இலக்கிய பரிசு (2015) பெற்ற ஆங்கில நாவல்.
இவர் நாகாலாந்து பகுதியை சேர்ந்த எழுத்தாளர். (தற்போது நார்வேயில்) இந்தியாவில் இன்னும் பழங்குடி மக்களும், கலாச்சாரமும் கொஞ்சம் நஞ்சம் உயிர்த்திருக்கும் வடகிழக்கு மாநிலங்கள். பூகோள ரீதியாக எளிதில் அடைந்து விட முடியாத பகுதியாக இருப்பதால் இந்த ஏழு சகோதரிகள் மாநிலங்கள் பின்தங்கியே இருக்கின்றன. அங்கே மழையும், மலையும் அதிகம். ஆனால் விளைச்சல்கள் குறைவு. இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை அந்த மக்கள் இன்றும் விரும்பி வாழ்கிறார்கள். கால மாற்றத்தால் அங்கே ஆங்கிலமும் (கிறித்தவ மதமாற்றங்கள் கூட ஒரு காரணம்) மேற்கத்தைய நாகரிகமும் வேகமாக விரவி வருகிறது. அங்கிருந்து மக்கள் பிற மாநிலங்களுக்கு சென்று சம்பாதித்து ஊருக்கு பணத்தை அனுப்பி வாழ்கிறார்கள்.
ஆனாலும் இந்த மக்கள் தமது கலாச்சார வேர்களை எளிதில் துறந்து விடாதவர்கள்.
சமீபமாக சிக்கிம் மாநிலத்தில் “மைத்” எனும் பாரம்பரிய வழக்கமான மரங்களை காப்பதை அரசாங்கமே சட்டபூர்வமாக செய்திருக்கிறார்கள். அதாவது ஒருவர் ஒரு மரத்தை தனது ரத்த உறவாக – அப்பா அம்மா சகோதரன் சகோதரி யாக பாவித்து அதனை வளர்ப்பதும். மரத்தை தத்தெடுப்பதும் அதனை ஒருபோதும் வெட்டாமல் இருப்பதையும் அரசு சட்டபூர்வமாகிக்கி இருக்கிறது.
இந்த புவியியல் மற்றும் கலாச்சார பின்னணியுடன் இந்த நாவலை அணுகும்போது நாம் அதற்குள் நுழைவது எளிதாகிறது.
=====
எளிமையான சொற்றொடர்களில் கச்சிதமான வார்த்தைகளை கோர்வையாக்கிய ஆற்றொழுக்கு நடை.
உறங்கி கொண்டிருக்கும் அந்த நதியில் மூழ்கி அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து வைத்துக்கொண்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் எனும் பழங்குடி நம்பிக்கையின் பேரில் விலி என்பவன் மேற்கொள்ளும் மலை மற்றும் காட்டுவழிப் பயணம்தான் இந்த நாவல். நாவலெங்கும் பசுமையும், இலைகளின் பச்சை வாசனையும், மழை மண்ணின் ஈரமும், சருகுகள் சப்தமும், புதர்களின் கீறலும், கற்களின் கரடுகளும், வெயிலும் நிழலும் இரவும் அச்சமும் பேய்களும், உருவிலிகளும் விலங்குகளுமாக தளும்பி இருக்கிறது.
குடும்ப நம்பிக்கைகளும், பழங்குடி கலாச்சாரங்களும் இருக்க அதில் மாயத்தன்மை கலந்து இருக்கும் இந்த நாவல் வித்தியாசமானது. மேலும் மார்க்வேஸுடன் ஒப்பிடப்பட்டும் இவர் குறிப்பிடப் படுகிறார். இயல்பிலேயே அமைந்திருக்கும் இந்திய பழங்குடி நம்பிக்கைகளின் ஊடாக சொல்லப்படும் இவருடைய மாயத்தன்மைக்கு மேலதிக இந்தியத் தன்மை இருப்பதால் நமக்கு சற்று நெருக்கமாகவே இது அமைகிறது.
உதாரணத்திற்கு ஒரு பருக்கை –
இந்த மலை வாழ் பகுதியில், ஒருவர் விலங்காக மாற மனதார விரும்பினால், அவரது உள்ளார்ந்த விழைவின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப, அவர் ஊரிலிருந்து ஒருநாள் திடீரென காணாமல் போய் விலங்கின் ஆன்மாவாக மாறி விலங்காக உதவுவார். ஆகவே காட்டுக்குள்ளே நாம் காணும் விலங்கு அசலான விலங்கா அல்லது உருமாறி திரியும் ஊர் மக்களா என்று பிரித்தறிய முடியாது. அதை அறிய இயல்பிலேயே ஒரு ஆற்றல் தேவை.
ஒரு முறை இவன் காட்டில் தங்குகையில் திடீரென புலியின் சலசலப்பை அறிகிறான். அதை தாக்குவதற்கு தயாராக இருக்கையில் ஏனோ அவனுக்கு இது விலங்கு அல்ல என்று தோன்றுகிறது. உடனே பெருங்குரலெடுத்து காணாமல் போன நண்பர்களின் பெயர்களை உரத்து சொல்லி கூவி, நான் உன் நண்பன். இந்த வனாந்திரத்தில் பிள்ளை. என்னை தொந்தரவு செய்யாதே என்று கூவுகிறான். புலி திரும்பி போய்விடுகிறது. (ராஜன் மகள் கதையில் கண்ணடித்தன்மையுடன் மரத்திலிருந்து ஜன்னல் வழியாக நுழைந்து சுவர்களை ஊடுருவிக்கொண்டு செல்லும் பா.வெங்கடேசனின் புலி நினைவுக்கு வருகிறது )
மாய யதார்த்தவகை என்று இதை அடையாளப்படுத்திக் கொண்டாலும், நமது இந்திய பழங்குடி மற்றும் கிராம பண்பாட்டுப் பின்புலத்தில், இதில் வரும் மாயங்கள் ஆச்சரியமூட்டும் படியானவை அல்ல. இத்தகைய புராணீக அல்லது தொன்ம கதை சொல்லல் முறைகள் நாம் கேள்விப்பட்ட சமூக வாழ்வுக்கு மிக நெருக்கமானதே . அந்த இயல்பின் சுதந்திரத்தில் இந்த நாவல் பயணிப்பது நமக்கு நெருக்கமாக உணர வைக்கிறது.
இந்த நாவலை ஏற்கெனவே படித்தவர்கள் தாண்டிப் போகலாம். பின்னால் ” உரு வெளி நலுங்கும் மாயச்சித்திரம்” என்ற பத்தியில் சந்திக்கலாம்.
இன்னும் வாசித்திராதவர்களுக்கு நாவலைப் பற்றிய சிறு தொகுப்பு. (தோராயமாக 250 வரிகளில்)
நதி உறங்கும்போது. உறங்கும் நதி என்பதே கவித்துவமான ஒன்றாக இருக்கிறது.
பெயர்களை தமிழில் எழுதும்போது உச்சரிப்பு குறைகள் இருக்கலாம். ஆகவே –
Vilie விலி
Ate அதெ
Zote சொதெ
Kani கனி
subala – சுபலா
weretiger – மாயப்புலி
Tragapon – காட்டுக்கோழி
விலி என்ற இளைஞன்தான் கதை நாயகன். உறங்கும் நதி ஒன்றுக்குள் மூழ்கி அதிலிருந்து ஒரு கல்லைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டால் வளங்கள் பெருகும் என்ற பழங்குடி ஐதீகத்தின்படி அவன் கிளம்பி சென்று திரும்புவதுதான் நாவல்.
“விலி தனது கையை ஆற்றுக்குள் விடுகையில் அதன் குளிர்ச்சி முட்டுகிறது. மூழ்கி சென்று கல்லை தொடுவதற்குள் அலை அவன் மேல் கவிந்து மூச்சு முட்டி பிராணவாயுவுக்கு தடுமாறும்போது பதறி எழுகிறான். அது ஒரு கனவு.”
இப்படித்தான் ஆரம்பமாகிறது 51 குறு அத்தியாயங்கள் கொண்ட நாவல்.
அடர்வனத்தின் பிள்ளையாக, உறங்கும் நதியில் மூழ்கி கல்லெடுப்பது என்பது அவனது சாகசம். கனவு. அவ்வளவே. பிறகு கல்லுக்கு பெரிய அதீத மதிப்பு ஒன்றையும் அவன் தருவதில்லை. அந்த ராட்சசி அதை பறித்துப் போகும்போது அவன் அவளை துரத்திப் பிடிக்காமல் அடிபட்டு விழுந்து கிடைக்கும் அதெ வுக்கு சிகிச்சை செய்கிறான். கிராமத்துக்கு வந்த பின்னும் அதை அவளுக்கு கொடுத்துவிட்டு காட்டுக்கு திரும்புகிறான். ஒரு வன மைந்தனால்தான் இந்த மனோலயலத்தை பெறமுடியுமோ என்ற ஆச்சரியம் உண்டாகிறது.
காட்டிலேயே வாழும் விலி தன் அம்மாவுக்கு ஒரே மகன். அவனை திருமணம் செய்த்துக்கொள்ள எவ்வளவு வற்புறுத்தினாலும் அவனுக்கு விருப்பில்லை. காடுதான் தன் மனைவி என்கிறான். ஆனாலும் ஒரு பெண் மீது அவனுக்கு ஒரு வித ஈர்ப்பு பனித்திரை போல இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நாவல் பேசுவதே இல்லை.
அந்த கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்து விடுகிறது. அவளுக்கு ஒரு காதலன். கடைசியில் இறந்தும் போகிறாள். ஆனால் இப்படியான துர்மரணம் அடைந்தவர்களை ஊருக்குள் புதைக்க கூடாது என்பதால் காட்டில் புதைக்கிறார்கள்.
அவளது சமாதிக்கு தினமும் யாரோ வந்து மலர்களை தூவுகிறார்கள். யாரென்று தெரிவதில்லை. அது அந்த காதலர்கள் என்று ஊர் நம்புகிறது. ஆனால் வ லி காட்டுக்காவலுக்கு சென்றபின் அவை நின்றுபோகிறது.
காட்டில் வாழும் டிராகப்பான் எனும் காட்டுக்கோழி வகை அழிந்துவிடாமல் காப்பதற்கு காட்டிலாகா இவனை காவலுக்கு நியமித்திருக்கிறது. ஆகவே காடே இவன் வீடு. அம்மாவின் மறைவுக்குப் பின் இவன் பயணத்துக்கு தேவையான உணவு வகை, துப்பாக்கி, மூலிகைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.
காட்டிடை குடிலில் கிருஷ்ணா என்பவனை காண்கிறான். அவனுக்கு மனைவி ஒரு குழந்தை. அவர்கள் உபசரிப்பில் தங்குகிறான். நள்ளிரவில் ஒரு ஒநாய்க்கூட்டம் வருகிறது. இவன் அவற்றை துப்பாக்கியால் சுட்டு விரட்டுகிறான். கைக்குழந்தை உயிர் தப்பியது என்று அவர்கள் நன்றி சொல்கிறார்கள். இந்த காட்டுக்கோழி காவலை பார்த்துக்கொள். காட்டிலாக சம்பளம் தரும் என்று சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு கிளம்புகிறான்.
பயணம் முழுதும் மலைகளை ஏறி இறங்கி காடுகளை தாண்டி செல்லவேண்டும். இடையிடையே ஓரிரு குக்கிராமங்கள் . வழியில் காடுகளில் அங்குள்ள மரத்தின் கிளைகளை வெட்டி தழைகளை வைத்து குடில் கட்டி இரவு தங்குவதுதான் ஒரே வழி. அப்படி தங்கும்போது மாயப்புலி உரு ஒன்று தாக்க வரும்போது அவன் அது நிஜப்புலி அல்ல அது ஆவி உரு என்று அறிந்து நண்பர்களின் பேரை கூவி அழைத்து தப்பிக்கிறான்.
பயணம் தொடர்கிறது. வழியில் நாயுருவிக்காடு ஒன்றை கிடக்கிறான். படுக்கை விரிப்புகள் நெய்வதற்காக அதை பெண்கள் அறுவடை செய்கிறார்கள். இவன் தானும் முயலும்போது அதன் நெளிவுசுளிவு தெரியாமல் கை அறுபடுகிறது. இடெல்லி என்ற ஒரு பெண் மருந்திட்டு இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்று கஞ்சி தருகிறாள். வெற்றியுடன் பயணம் முடித்து அதிர்ஷ்ட்டக் கல்லுடன் திரும்பி வருவதற்குள் தானே ஒரு பாயை பின்னி முடித்து அன்பளிப்பாக தருவதாக சொல்கிறாள்.
பயணம் தொடர ஒரு காட்டினை கடக்கும்போது மூன்று பேர் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறான். அவர்களிடம் தேநீர் பருகி இரவைக் கழிக்க. பின்னிரவில் யாரோ வரும் சப்தம் கேட்டு விழிக்க வெளியே மூவரும் சண்டைபோட்டு பேசுகிறார்கள். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்கிறது. அவர்கள் யாரோ ஒரு அனாமதேய ஆளை சுட்டிருக்கிறார்கள். விலி பயந்து தன் உயிரும் போகுமோ என பயந்து, இந்த கொலைக்காட்சியை கண்ட நாம் வம்பில் சிக்குவோமோ என்று எண்ணி தப்பித்து ஓடுகிறான்.
யாரும் காணாமல் பதுங்கி காடுகளை கிடக்கிறான். காய்ச்சல் வந்து விட, மூலிகை சாறு உண்டு இரண்டு நாட்கள் கிடக்கிறான். புகையிலையை வைத்திருந்தும் மோப்பம் அறியும் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி புகைக்காமல் வருகிறான்.
ஆனால் யாரோ சில தேடிக்கொண்டு வருவதை அறிந்து புதரில் மறைகிறான். பிறகு தானே சென்று அந்த கொலைக்கு நான் காரணம் அல்ல என்று சொன்னாலும் அவர்கள் அவனை கையை பின்னால் கட்டி ஒரு கிடை குச்சியில் கட்டி தூக்கிப் போகிறார்கள். கிராம பெரியவர் இவன் குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்து விடுவிக்கிறார்.
மறுபடி பயணம். போகும் வழியில் மோகினிகள் இருப்பார்கள் என்று முதியவர் எச்சரித்து அனுப்புகிறார். வழியில் சற்று தள்ளி ஒரு காடு தெரிகிறது. அது அபாயகரமான மாசுற்ற காடு. அதில் துர்தேவதைகள் இருப்பதால் கிராமம் அதை தவிர்க்கிறது. இவன் அதன் வழியாக கடந்து விடலாம் என்று முனைகிறான். ஒரு சுனை அருகே தடாகத்தில் நீர் அருந்த குனிகிறான். அவனது முக நிழல் தெரிகிறது. ஆனால் பின்னால் மற்றொரு முகம் அவன் மேல் குனிகிறது. பதறி திரும்புகிறான். யாருமில்லை. இது பேய்களின் ஆட்டம் என்று உணர்ந்து வேகமாக கடந்து ஓடிப்போகிறான்.
ஆனாலும் அவன் உணர்வற்று விழுந்து பேய்களின் அலைக்கழிப்பில் பிடிபடுகிறான். கோரமான ஒரு உருவம் அவனை தள்ளி மேலே அமர்ந்து அமுக்குகிறது. இவன் “என் ஆன்மா உன்னை விட சிறந்தது” என்று சொல்லி சொல்லி (பேயிடம் இருந்து தப்பிக்க அப்படி ஒரு பழக்கம் உண்டு) தப்பிக்கிறான். பரட்டை தலையுடன் கூன் முதுகுடன் உருவம் புலப்படாத ஒரு புகை உருவம் அவனை விட்டு சென்று மறைகிறது.
மீண்டும் பயணம். காடுகள் தாண்டி மலை ஏறி இறங்கி ஒரு சிறு எல்லையோர ஊரில் தங்குகிறான். சுபலா என்ற பெண் அவனை அழைத்துப் போய் உபசரிக்கிறாள். அவளது கணவன் மீனவன். இரவு தங்கி கிளம்பும்போது அவர்கள் சொல்லி அனுப்புகிறார்கள் இந்த கடினமான பயணத்தில் ‘மனம்தான் உனது கேடயம்’.
அப்போது கனி எனும் முதியவர் இவனது பயண நோக்கம் அறிந்து கொண்டு உடன் உதவிக்கு வருகிறார். இவனுக்கு சந்தேகம் இருந்தாலும் உஷாராகவே அவருடன் கிளம்புகிறான்.
முதியவர் உள்ளன்புடன் இவனுக்கு வழிகாட்டி உடன் பயணித்து உதவுகிறார். இரவுக்காக காத்திருந்து சப்தம் செய்யாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் செல்கிறார்கள். மலைப்பாறைகள் இடையே காணும்போது நதியின் சப்தம் கேட்கிறது. அதுதான் உறங்கும் நதி. ஆனால் அங்கே மனிதனை பிய்த்து உண்ணும் விதவையான துர்தேவதைகள் காவல் காக்கிறார்கள். அவர்கள் விலகி போகும் வரை காத்திருந்து, மிக மெதுவாக அதை அடைந்து நீரில் இறங்குகிறன். அலைகள் எழும்பி அவனை அழுத்த போராடி நதியின் அடியில் சென்று ஒரு கல்லை பற்றிக்கொண்டு வருகிறான்.
அவனை உடனடியாக ஓடி வருமாறு அழைக்கிறார் முதியவர் கனி. ஏனென்றால் விதவைப் பேய்கள் அவனை தின்றுவிடும். ஆனால் அவை அவனை பார்த்துவிட்டு துரத்திக்கொண்டு ஓடி வருகின்றன. இவர்கள் இருவரும் கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து ஓடி புரண்டு அந்த எல்லை தாண்டி தப்பித்து வந்து விடுகிறார்கள். அவை எல்லையில் நின்று சபித்தபடி திரும்பி போகின்றன.அவை ரத்தக்காட்டேரிகள்.
அதிர்ஷ்ட்டக்கல்லுடன் முதியவர் கனியுடன் திரும்பி வர சுபலே என்று அந்த பெண் இரவு உணவு தருகிறாள். அந்த கல் இரவில் வண்ண வண்ணமாக ஒளிர்கிறது.இந்த கல்லை பத்திரமாக கொண்டு போ. இது ஐஸ்வர்யங்கள் தருவது மட்டும் அல்ல. இது நல்ல உயர்ந்த ஆன்மாவை அளிக்க வல்லது. அதுதான் இதன் சிறப்பு. இப்படியான கல்லை கொண்டு வீணாகிப் போனவர்கள்தான் அதிகம் என்கிறார் கனி. அவரும் இப்படி கல்லை எடுக்க முனைந்து அந்த காட்டேரிகளிடம் பிடிபட்டு கையை அவை பிய்த்து விடுகின்றன. தப்பித்து வருகிறார். அந்த வடு அவருடலில் இருக்கிறது.
அந்த கல்லை அபகரிக்க பல ஆவிகள் நல்லவர்கள் போல வரும். பேய்போல மிரட்டும். எதற்கும் ஏமாறாதே என்று அறிவுரை சொல்கிறார்கள். அறிவுரைகள் ஏற்று கவனமாக கல்லுடன் கிளம்புகிறான். நீண்ட தூரம் பயணிக்கிறான். மறுபடி அந்த அசுத்தக் காட்டை காண்கிறான். அந்த வெட்ட வெளியில் அந்த காட்டுமட்டும் தனியாக அசைந்து ஆடுகிறது. உஷாராகி தவிர்த்து வேறு வழியே போகிறான்.
அங்கே சிற்றூர் எல்லைக்கு போகும்போது மாலை நேரம். சந்தையில் பலரும் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒரு பெண் அழகாக இருக்கிறாள். இவனை அடிக்கடி பார்க்கிறாள். இவன் பொதுவாகவே பெண்களை விரும்பும் நபர் அல்ல என்பதால் பொருட்படுத்துவதில்லை. சந்தை கலையும்போது ஒரு முதியவர் வந்து நீ புதிய ஆள் போல இருக்கிறாய். இங்கே இருந்தால் மோகினிகள் உன்னை இழுத்துப்போகும் என்று எச்சரித்து அழைத்து போகிறார். உன்னை சந்தையில் அடிக்கடி ஒரு பெண் பார்த்தாளே அவள் ஒரு மோகினி வகை என்று சொல்கிறார்.
திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு கோரமான பெண் வந்து அவனிடம் எங்கே வந்தாய் என சண்டைக்கு போகிறாள். ‘அதெ’ என்ற மற்றொரு பெண் வந்த குறுக்கிட்டு அவனை காத்து நீ என்னுடன் வா என அழைத்து போகிறாள். இவன் குழம்பி தவிக்கிறான்.
அதெ நல்லவள். சண்டைக்கு வந்த கோரமுகத்தால் பெயர் சொதெ. அதெ சொல்கிறாள். சண்டைக்கு வந்தவள் என் சகோதரிதான். ஆனால் மோசமானவன். உன்னிடம் இருக்கும் கல்லை பிடுங்கிப் போகவே வந்தாள். இவனுக்கு திடுக்கிடுகிறது. அப்போது அதெ சொல்கிறாள். கவலைப்படாதே. நான் உனக்கு உதவி செய்பவள். உன்னிடம் உள்ள அதிர்ஷ்ட்ட கல் பற்றி மட்டும் அல்ல உன்னுடைய கடந்த காலம் எல்லாமே என்னால் அறிய முடியம். உன் மனதுக்குள் ஒரு பெண் இருந்தாள். அவள் இறந்து போனால். அதற்கு காரணம் ஒரு பிசாசு அவளை கொன்றது என்கிறாள்.
மேலும் இந்த கல் எந்தவிதமான குற்றமோ பாவமோ செய்யாமல் இருப்பதாக அவனது மனசாட்சியே ஒத்துக்கொண்டால்தான் கிடைக்கும். நீ ஒரு கொலை சம்மந்தமான விஷயத்தில் சிக்கி இருக்கிறாய் என்கிறாள். அப்போது அவன் நான் கொலையைப் பார்த்த சாட்சி மட்டுமே என்கிறான்.
இந்த அதெ – சொதெ சகோதரிகள் தனி தனியாக ஒதுங்கி இங்கு வாழ்கிறார்கள். அதெ சொல்கிறாள். ஒரு மோசமான ஆன்மா உள்ளவள் எங்களை பார்த்து எப்போதும் காரி துப்பி கொண்டே போனாள். ஒரு நாள் அவளை சொதெ அவளை ஏதோ செய்துவிட நாங்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டோம். எங்களிருவரிடமும் துர்சக்திகள் உள்ளன. ஆனால் சொதெ. அதை உபயோகித்து தீங்கு செய்வாள். ஒரு நாள் என்னை ஒரு செடியைக் காட்டி கண்களால் பார்க்க சொன்னாள். பார்த்தேன். மறுநாள் அந்த செடி கருகிப் போனது. அதிலிருந்து நான் ஒரு முறைகூட தீங்கு நினைத்து எதையும் பார்க்கமாட்டேன். ஆனால் சொதெ.மோசமானவள் என்கிறாள்.
ஆனாலும் நாங்கள் ஒதுக்கப்ப் பட்டவர்கள். கிராமத்திலிருந்து எங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். ஏதாவது அவர்களுக்கு தீய சக்தி அலைக்கழிப்பு இருந்தால் எப்படி நிவர்த்தி செய்வது என்று கேட்க வருவார்கள். பரிகாரம் சொல்வோம். காணிக்கையாக எதையாவது தூரமாக வைத்து விட்டு போவார்கள். எங்களுக்கு குடும்பம், மணவாழ்வு, குழந்தைகள் என்பது கிடையாது என்று வருந்துகிறாள்.
அன்று இரவு இடி போல கதவு தட்டப்பட்டு அடித்து திறக்கப்படுகிறது. திடீரென சொதெ வந்து கூச்சலிட்டு வீட்டுக்குள் புகுந்து கோரமாக கூவி தங்கையை அடித்து நொறுக்கி விலி அதிஷ்ட்டக் கல்லை பையோடு தூக்கிப் போய்விடுகிறாள். அதெ அடிபட்டு கிடக்கிறாள். ஆனால் விலி அது போகட்டும் என விலி அதெயின் காயத்துக்கு மருந்திடுகிறான்.
அந்த கல்லை வைத்து மோசமான விளைவுகளை அவள் செய்வாள் என ஆச்சரித்தாலும் இவன் போகட்டும் என்று கவனிக்கிறான்.
சொதெ இரவு முழுதும் காத்திருந்து மறுநாள் விடியலில் ஒரு மூட்டையுடன் கிளம்பி தன்னை ஊரை விட்டு துரத்திய ஊருக்கு சென்று ஊரையே இருக்கிறாள். வீடுகள் வெடித்து சிதறி எரிகின்றன. பின்தொடர்ந்து சென்ற அதெ யும் விலி யும் அதை பார்க்கிறார்கள். இடையே மூதாதை ஆவிகள் வந்து சொதெ யை கொன்றுவிட இறந்து கிடந்த சொதெ கையில் இருந்த உறைந்து போன அதிர்ஷ்ட கல்லை மீட்டு கொண்டு வருகிறார்கள்.
இப்போது விலி தான் கிளம்புவதாகவும் தன்னுடன் வருமாறு அதெ யை அழைக்க அவள் தனது சகோதரி சொதெ ஆவியாக வந்து தன்னை தேடுவாள். அவள் மோசமானவள் என்றாலும் எனது அக்கா என்கிறாள். வி லி எப்போதுமே அதெ யை நீ நல்லவள். உன்னிடம் தீய சக்தி இருக்கிறது என்று அவள் சொல்வதெல்லாம் பொய் என்கிறான். அவள் உன்னை தீயவளாக நீயே நம்பவேண்டும் என சொல்லிய உத்தி ஏங்கினார். ஆனால் இவள் மறுக்கிறாள். விலி அவளுக்காக தங்கிவிடுகிறான். ஒரு நாள் இரவு சொதெ ஆவி வருகிறது. வீட்டுக்குள் வந்து அலைந்து அழுகிறது.பிறகு திரும்பி போகிறது. அதனை பின் தொடர்ந்து செல்லும் இவர்களை கவனிக்காமல் போக ஊர் எல்லையை தாண்டும்போது அதெ அவளை கூவி அழைக்கிறாள். அந்த உருவம் திரும்பி பார்க்காமலே போய் விடுகிறது. இவள் அழுகிறாள்.
விலி யும் அதெ யும் விலி யின் சொந்த கிராமம் திரும்புகிறார்கள். போகும் வழியில் துப்பாக்கி சுடலில் கொலை நடந்த இடத்தை பார்க்கிறார்கள். அங்கே எதையோ உண்டதால் விலி உடலில் விஷம் ஏறிவிட அதெ ஒரு மூலிகை தந்து காப்பாற்றி விடுகிறாள்.
மீண்டும் பயணம் தொடர நாயுருவி காட்டுக்கு வரும்போது அங்கே தனக்கு கஞ்சி தந்து உதவி, பாய் விரிப்பு பின்னி தருவதாக சொன்ன அந்த பெண் இருந்து விட்டதை அறிகிறான்.
காட்டில் இரவு தங்கும்போது பேயுருவ புலி வருகிறது. அவளை தாக்குகிறது. அவன் அதை அறிந்து பெயர் சொல்லி போகச்சொல்ல அது கந்தகப் புகையாக காற்றில் கரைந்து போகிறது.
அவள் கடந்து போக அதெ புலி கீறிய காயத்தால் மயங்கி விழுகிறாள். இறந்து போகிறாள். அசைவற்று கிடக்கிறாள். அதிர்ஷ்ட கல்லினை வைத்துக்கொண்டு கடவுளர்களை அழைக்க பெரிய புயற்காற்று கிளம்பி அடங்க, அதெ கண் திறக்கிறாள்.
மீண்டும் பயணம் தொடர கிருஷ்ணா அவன் மனைவி குழந்தையுடன் இருந்த குடிலுக்கு வந்து பார்க்கிறார்கள். யாரும் இல்லை. தேடும்போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள். குழந்தை குற்றுயிராய் கிடக்கிறது. விலி அதை அதெ இடம் தருகிறான். அவள் புது தாய் ஆகிறாள்.
கிராமத்தை ஒருவழியாக திரும்பி அடைகிறார்கள். ஊர் வரவேற்கிறது. அதெ தனக்கு இப்படி ஒரு மரியாதை கிடைப்பதை கண்டு கண்ணீர் மல்கி அவனை பார்க்கிறாள். அவன் கிருஷ்ணா மனைவியோடு கொல்லப்பட்டதை சொல்லி கொலையாளியை பிடிக்க ஊர்ப்படை கிளம்புகிறது.
உறங்கும் நதியில் இருந்து கொண்டுவந்த இந்த அதிர்ஷ்டக்கல் பற்றி ஊரே பேசுகிறது. அவனது இனி வரும் வளமான வாழ்வை எண்ணி வியக்கிறது. 28 வயது மூத்த அவன் அவளுக்கு ஒரு தந்தை போலவே அன்பு காட்டி பேசுகிறான்.
விலி அந்த கல்லை ‘அதெ’ விடம் தருகிறான். அது அழகாக மிளிர்கிறது. இது உனக்குத்தான். உனது பூரண வாழ்க்கைக்கு. நான் காட்டுக்கு போகிறேன். அதுதான் என் வாழ்விடம் என்று சொல்லி போகிறான்.
காட்டுக்குள் புகும்போது அவனிடம் கல் இருக்கிறது என்று எண்ணி ஒருவன் பணம் தருகிறேன் அந்த கல்லைக் கொடு என்கிறான். கல் அதெ விடம் இருப்பதை சொல்லாமல், இவன் “அந்த கல் உன்னைப் போன்ற தீயவர்களுக்கானது அல்ல” என்கிறான். கொள்ளையன் இவனைத் தாக்குகிறான். நீண்ட கத்தியால் இவனது வயிற்றில் மாறி மாறி செருகுகிறான். ரத்தம் தோய இவன் போராடும்போது ஒரு மாயப்புலி வந்து அந்த கொள்ளையனைத் தாக்குகிறது. இருவருமே ரத்தவெள்ளத்தில் இருக்க கொள்ளையன் செத்து விழுகிறான். மாயப்புலி காட்டுக்குள் மறைகிறது.
நான்கைந்து நாளுக்கு பிறகு தனியாக விலி சென்றிருப்பதை அறிந்த ஊர் ஆட்கள் சிலர் கவலையுடன் துணைக்கு போகலாம் என்று வரும்போது குடிசை அருகே காட்டு விலங்குகளால் தின்னப்பட்டு உரு இல்லாமல் கிடைக்கும் உருவத்தை கண்டு விலி இறந்து போனான் என்று துக்கம் மேலிட, ஊருக்குள் புதைக்க கூடாது என்பதால் காட்டிலேயே புதைக்கிறார்கள். ஆனால் குடிசைக்குள் ரத்த சுவடுகள் இருப்பதை பார்க்கிறார்கள். தன்னை காத்துக்கொள்ள வீட்டுக்குள் வந்து பிறகு வெளியே கொல்லப்பட்டிருப்பான் என்று எண்ணி வீட்டை மூடிவிட்டு போகிறார்கள். இறந்து போயிருக்க வேண்டிய சாத்தியக் குறிப்புகளுடன் விலி பற்றி பூடகமாகவே முடிகிறது இந்த அத்தியாயம். அத்தியாயத் தலைப்பு “இறந்துபோகாதவனைப் புதைத்தல் ”
சில மாதங்களுக்குப்பின் ஊரின் காட்சியை சொல்கிறார் ஆசிரியர். விலி பற்றிய நெகிழ்வான நினைவுகளோடு, ஒரு குடிலில் திருமணமான அதெ கர்பமாக இருக்கிறாள். வளர்ப்பு பிள்ளையான கிருஷ்ணாவின் பிள்ளைக்கு துணை கருதி மற்றொரு ஆண்மகன் தனக்கு பிறப்பான். இருவரும் சேர்ந்து மற்றொரு கல்லை கொண்டுவர உறங்கும் ஆற்றுக்கு வேட்டைக்கு செல்லவேண்டாமா! என்று அவள் ஆசைப்படுகிறாள் – என்று நாவல் முடிகிறது.
உரு வெளி நலுங்கும் மாயச்சித்திரம்
தொன்மையான வாழ்வு முறைகளின் வழியாக தொடர்ந்து உலவிக்கொண்டு வரும் நம்பிக்கைகள் மூலம் பழைமையை ஒரு வாசனையைப்போல காப்பாற்றிக்கொண்டு வரும் பழங்குடி மக்களின் வாழ்வும் பயணமும் ஊடாக பின்னப்பட்டிருக்கும் இந்த நாவல் முக்கியமான ஒன்று.
இதில் புனைவு எது பழங்குடி நம்பிக்கைகள் எது என பிரித்தறிய முடியாதபடி பின்னப்பட்டிருக்கிறது. இந்த எண்ணமே ஒரு மாய யதார்த்த வெளிக்குள் நம்மை இழுத்துப்போய்விடுகிறது.
நாவல் வெளியில் குக்கிராமங்களில் உள்ள வீடுகளில் தனி அறை ஒன்று இருக்கிறது. பயணப்பட்டு நிற்கும் முகமறியாத புதியவர்கள் தங்குவதற்கு அது. அவர்களுக்கு தாம் உண்ணும் உணவை அளித்து அனுப்பி வைப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. மனிதம் பேதமற்று தத்தம் வழிகளில் வாழ்கிறது. தீயவர்கள் தட்டுப்படும்போது மக்கள் ஒன்றுகூடி எதிர்த்து துரத்துகிறார்கள்.
மனிதனும் காடும் விலங்குகளும் ஒரே வானத்தின் கீழ் வாழும் உயிரிகளாகவே இருக்கின்றனர். உணவைத்தாண்டி வேறெதற்கும் அவர்கள் காட்டை காட்டுயிர்களை இம்சிப்பதில்லை.
காட்டு செடிகளை மருந்துக்காக வெட்டும்போது அல்லது எடுக்கும்போது பூமியிடம் வணங்கி அனுமதியும் பெற்று நன்றியும் கொள்கிறார்கள். காட்டு செடிகளும் தம்மை உவந்து மனிதர்களுக்கு வழங்குகின்றன.
மீனை மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து மூங்கிலை நெருப்பில் வாட்டி சமைத்தல், கஞ்சிகளுக்கு மூலிகைகளை போடுதல், உடல் வலி மற்றும் நோய்க்கு ஜின்செங் கஷாயம் அருந்துதல், காய்ச்சலுக்கு திரவ உணவு கொள்ளுதல், காய்ச்சலுக்கு பின் இரண்டு நாட்களுக்கு மிக மெதுவாக உணவை வாயில் மென்று நிதானமாக சாப்பிடுதல் போன்ற பல வழக்கங்களை காண முடிகிறது.
இயற்கை கொள்ளையர்கள் அரிதான வகை டிராகப்பான் எனும் காட்டுக்கோழிகளை வேட்டையாட முயல, காட்டிலாகா சார்பாய் ஊழியர்களாக கதாநாயகனும் அவனது நண்பனாக கிருஷ்ணனும் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். டிராகப்பான் என்பது மேகலாயாவின் மாநிலப் பறவை. இதை தங்களது அடையாளத்தைக் காத்துக்கொள்வதற்கான பழங்குடிகளின் விழைவு மற்றும் போராட்டமாகவே வைத்துப் பார்க்கலாம்.
அதைப்போலவே உறங்குகின்ற நதியில் மூழ்கி கிடைக்கும் கல் என்பது இயற்கை மனிதர்களுக்கும் சேர்ந்தது தனக்குள் வைத்திருக்கும் பொக்கிஷம் என்று பொருள் கொள்ளும்போது நாவல் வேறு ஒரு வித எழுச்சி கொள்கிறது. அந்த பொக்கிஷம் இயற்கைக்கானது அல்ல. மனிதர்களுக்கானதே. ஆனால் அதை கையாளும் விதம் குறித்தே இயற்கைக்கு ஒரு அச்சம் இருக்கிறது.
காடும் ஒருவகையில் மனித சமுதாயம் போலவே சித்தரிக்கப் படுகிறது. நல்ல காடு இருப்பது போலவே போலவே அசுத்த ஆன்மா உள்ள காடு சொல்லப்படுகிறது. மூலிகைகள் உள்ள காட்டின் இடையேதான் விஷப் புற்களும் வளர்கின்றன.
ஆனால் நன்மனம் பெற்ற மனிதர்களே வாழ்க்கைக்கான நம்பிக்கையை தருகிறார்கள். காட்டு வழியில் தங்குவதற்காக இடம் கொடுத்த கிருஷ்ணா வீட்டில் இரவில் ஓநாய்கள் வரும்போது, கிருஷ்ணாவின் மனைவி வைத்திருக்கிறாள். கைக்குழந்தை வாசனைக்கு ஒரு நிமிடத்தில் அது பலியாகிவிடும். விலி அவற்றை சுட்டு இவர்களை காப்பாற்றி விடுகிறான். ஒரு துப்பாக்கி கூட இல்லாமல் வாழும் அவனிடம் உனது மகன் வளர்ந்து படித்து முன்னேற வேண்டாமா என்று கேட்டு, எனது வீட்டை விற்று உனக்கு ஒரு துப்பாக்கி வாங்கி தருகிறேன் என்கிறான். நாவலில் மென்மையான நெகிழ்ச்சி தருணங்களில் இது ஒன்று.
உறங்கும் நதி என்பதை ஒருவன் கண்ணால் காண்பதே அரிது. பலவித இடையூறுகளை தாண்டி செல்பவனுக்கே அது காணக் கிடைக்கிறது. மேலும் அந்தர சுத்தி உள்ளவர்களுக்கே அது தன்னை அடையாளம் காட்டுகிறது என்று முதியவர் தனது அனுபவத்தில் சொல்கிறார்.
அதை அடைவது ஒரு சவால். மூழ்கி கல்லை கண்டெடுப்பது சவால். மீண்டு வருவது இன்னொரு சவால். அது மட்டும் அல்லாது அதை தீய கைகளிடம் இருந்து காப்பாற்றி கொண்டுபோவது மாபெரும் சவால்.
இத்தனை இடங்களுக்கும் இடையே, உயிரை பணயம் வைத்தது கொண்டு வந்த அதிருஷ்ட்டக் கல்லை , பயணத்தின் போது அறிமுகம் ஆனா ஒரு துரதிருஷ்ட்டம் பீடித்த பெண்ணிடம் வீட்டுக்கு அழைத்து வந்து தருகிறான். மனித மனத்தின் மிகப் பெரும் விசாலத்தை ஒரு பழங்குடி மனதின் வழியாக ஈஸ்டரின் கிரெ விரித்தெடுக்கும்போது நாம் சிலிர்ப்படைகிறோம்.
அதுவும் ஒரு தீய சக்தி என்று தன்னைத்தானே நம்பிக்கொண்டிருந்தவளை நீ மிக நல்ல சக்தி என்று ஏற்றம் பெற வைத்து அவளது கையில் ஐஸ்வர்யாக் கல்லைக் கொடுக்கும் விலி விடுக்கும் நாவல் செய்தி அற்புதமான ஒன்று.
தனக்கு இப்பிறவியில் திருமணம் குழந்தை என்பது பொய்க்கனவு என்று இருக்கும் தீய சக்தி என்று நம்பிக்கொண்டிருக்கும் அதெ என்ற பெண்ணிடம் , கொலையுண்ட கிருஷ்ணா தம்பதியின் ஒரு அனாதைக் குழந்தையை தருவது, இரு அனாதைகளை ஒருவருக்கு ஒருவர் சார்பாக்கி பொருள் கொள்ளும் வாழ்வை தூண்டிவிடுவது, விலியா ? ஈஸ்டர்ன் கைரா? என்று யோசிக்கலாம்.
மேலும் விலியும் அதெவும் சந்திக்கும் இடம் சற்றும் எதிர்பாராத ஒன்று. சந்தையில் இருந்து முதியவர் இவனை அழைத்துச் செல்லும்போது ராட்சச தமக்கையுடன் போராடி இவனை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை மாற்றி சகஜ வாழ்விற்கு தயார் படுத்துகிறான். ஏறக்குறைய இறந்து போனவளை கடவுளை அழைத்து மீண்டும் விலி உயிர்ப்பிக்கிறான். நாவல் முழுதும் ஒருவருக்கு ஒருவர் சக மனிதர்கள் எனும் உணர்வே இருக்கிறது. இறுதியில்தான் தந்தை மகள் எனும் சமுதாய அடையாள உறவு சொல்லப்படுகிறது.
இந்த நாவலில் மெய்சிலிர்க்க வைக்கும் வரி ஒன்று வருகிறது.
அதெ வை இறந்து போகும்படி மோசமாக தாக்கிய புலியை விலி அகன்று போகச்சொல்லி கேட்டுக்கொள்ள அது போய்விடுகிறது. மயங்கி கிடந்ததால் அதை பற்றி அறியாத அதெ என்ன பேசினாய் என்று கேட்கிறாள். விலி நடந்ததை சொல்கிறான்.
அப்போது அவள் “ மறுபடி அது வந்தால் நான் எனது விரலை நீட்டி சபிப்பேன்”- என்கிறாள். விலி சிரிக்கிறான். “ தேவையில்லை. மறுபடி நானே பேசி போகச்சொல்வேன். நீ மறந்து விட்டாயா. உன் அக்கா சொன்ன தீய சக்தி என்று எதுவும் உன்னிடம் இல்லை. அது பொய். உன்னை நீயே தீயவள் என்று நம்பவைக்க அவள் சொன்ன பொய். அன்பும் கொடூரமும் ஒரே இடத்தில் இருக்காது என்பதை நினைவில் கொள். ஒன்று மற்றொன்றுக்கு வழி விட்டே ஆகவேண்டும்” .
அப்போது எனக்கு ஆற்றல் கிடையாதா? என்று கேட்கிறாள் அதெ.
அதற்கு அவன் – “இல்லை இல்லை. இப்போதுதான் நீ மிகப் பெரும் ஆற்றல் உள்ளவளாக இருக்கிறாய். நீ யார் என்பதை நீயே உணர்ந்து கொண்டவளாக புது மனுஷியாக இருக்கிறாய். அப்படியான ஆற்றல் எதையும் அழிக்காது. புத்துருவாக்கம்மட்டுமே செய்யும்.” என்று சொல்கிறான்.
தன்னைத் தான் அறிவது எனும் மிகப் பெரிய விஷயத்தை ஒரு பழங்குடி மனிதனின் வாழ்வியல் நிதரிசனம் மூலமாக சாதாரண வார்த்தைகளால் சொல்லியிருப்பது அபாரம். அது ஞான மார்க்க கனத்துடன் இல்லாமல் அடிப்படையில் மனிதன் நல்லவன்தான் எனும் எளிமையான நம்பிக்கை. நல்மனம் ஒன்றே பேராற்றல் பெற்றது. அதற்கு வீழ்ச்சி இல்லை.
நாவலில் ஒரு முதியவர் சொல்கிறார். “ இந்த அதிஷ்ட கல் பெரும் வளங்களை, வளர்ப்பு பிராணிகளை, உணவை தருவதாக மட்டும் நினைக்காதே. இது உயர்ந்த ஆன்மத்தை தர வல்லது. அதுதான் உயர்ந்த வஸ்து என்று சொல்கிறார். இப்படியான கல்லை பெற்ற சிலர் ஊதாரித்தனத்தால் வளங்களை பெற்ற வேகத்தில் நழுவி அழித்திருக்கின்றனர். “ பேராற்றல் கொண்டது செல்வம் அல்ல. அதை கொண்டிருக்கும் மனம்.
இந்த நாவலில் கதாநாயகன் இலட்சிய புருஷனாக எதையும் பேசவோ செய்யவோ இல்லை. மிக சாதாரணமாக செய்துவிட்டு போகிறான்.
கனவு காணும்போதும் சரி, திட்டமிட்டு பயணப்படும் போதும் சரி, வழியில் பிற பழங்குடிகளை சந்திக்கும்போதும் சரி, பெரும்போதும் சரி, தரும்போதும் சரி ஒரு சாதாரண மனிதனாகவே இருக்கிறான்.
கல்லை திருடிவிடக்கூடிய மோகினிகள் நடமாட்டம் உள்ள அந்த ஊரில் மாலை நேரத்தில் எங்கிருந்தோ சண்டையில் இருந்து தன்னை மீட்டு வீட்டுக்கு என்னோடு வா என்று அழைத்து போகும் அதெ யின் கையில் அந்த கல்லை அவன் சாதாரணமாக தரும்போது, வாசகர்களாக நமக்கு இருக்கும் படபடப்பு கூட அவனுக்கு இல்லை.
மேலும் இத்தனை போராட்டம் மற்றும் திட்டமிடல் மூலம் தனது வாழ்நாள் கனவான அந்த அதிர்ஷ்ட கல்லை எடுத்து வருபவ ன் அதை காப்பாற்றிக் கொள்ள விசேஷ முயற்சிகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. அது அவனது பையில் கிடக்கிறது. மூர்க்கமான சொதேவிடம் பறிபோன பிறகும் கவலைப் படுவதில்லை. பிறகு இறந்துபோன அவளது கையில் இருந்து மீட்கும்போதும் கிளர்ச்சியுறுவதில்லை. இறுதியில் அதை எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்துவிட்டு காட்டை நோக்கி திரும்புகிறான். இந்த பண்பே நாவலை மேலுயர்த்திவிடுகிறது.
இத்தகைய பாமர மனம் ஒரு துறவு மனநிலைக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதை நாம் நாவலில் கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டம் விலகும் காலைப் பொழுதைப்போல கண்டுணர முடிகிறது.
காட்டுச்செறிவுகள் மற்றும் காட்டுயிர்கள் பற்றி சொல்ல கிடைத்த நாவல் சூழலில் காட்டு மரங்களின் பெயர்கள், பறவைகளை பற்றிய குறிப்புகள் எதுவும் அதிகம் இல்லை என்பது சுட்டிக்காட்டப் படவேண்டிய ஒன்று. நாவலில் ஒரு பட்டாம் பூச்சி கூட பறக்கவில்லை.
விலி அந்த சண்டையில் இறக்கவில்லை. அது அவன் உடல் அல்ல என்று அதெ நம்புகிறாள். எப்படி என்று கேட்கும்போது பதில் சொல்லாமல் காட்டை பார்வையால் அளக்கிறாள். “சொல்ல தெரியவில்லை” என்கிறாள். காடே அவனாக நமக்கு தெரிகிறது அப்போது.
தனது வயிற்றில் இருப்பது ஒரு ஆண் குழந்தை என நம்புகிறாள். அவன் பிறந்து வளர்ப்புப் பிள்ளையாக இருக்கும் முதல் பிள்ளையோடு சேர்ந்து இருவருமாக வேட்டைக்கும், நீண்ட பயணத்துக்கும் செல்லவேண்டும். ஒருவராக தனியாக அனுப்பமாட்டேன் என்கிறாள்.
விலங்குகள் தின்று அடையாளம் காண முடியாமல் மீந்திருந்த கொள்ளையன் உடலை கதாநாயகன் விலியின் உடல் என்று எண்ணி ஊர்மக்கள் அந்த உடலைப் புதைத்துவிட்டு அவனது குடிசையை பூட்டிவிட்டு போகிறார்கள். துர்மரணம் அடைந்தவர்களை ஊருக்குள் புதைப்பது கிடையாது. (இப்படியான வழக்கம் ஆப்பிரிக்க இனத்திலும் இருப்பதை “சினுவ அச்சிபி” யின் நாவலில் காணலாம்). ஆனால் அவனது குடிசைக்குள் ரத்தக்கறைகள் இருக்கின்றன. இரண்டு உடல்கள் அங்கே இல்லை. ஒன்றுதான் கிடக்கிறது. விலி இறந்துபோனான் என்று நாவலில் வெளிப்படையாக சொல்லாமல் “இறந்து போகாதவனை புதைத்தல்” என்ற அத்தியாய தலைப்போடு மறைபொருளாக விட்டுப்போதல் நாவலுக்குள் வாசகன் நுழையும் திறப்பு.
காடுதான் தன் மனைவி என்று காட்டை நேசித்து, சாகசத்தில் அதிர்ஷ்ட கல்லை வென்று, தன்னைத்தானே தீயவள் என்று நம்பிக்கொண்டிருந்தவளை, மனதளவில் உயர்த்தி மகளாக பாவித்து அந்த கல்லையும் அவளிடமே தந்து, தனது பெரு விருப்பமான காட்டுக்கு திரும்பும் ஒரு நல்லவன் விலி. மலினமான மனதுடைய கொள்ளையனால் கொல்லப்படும் அவலத்தில் முடியும் இந்நாவலில், குற்றுயிராக இருக்கும் அவன் என்ன ஆகி இருப்பான் ?
காட்டை நேசிக்கும் அவன் ஆத்மார்த்தமாக தான் ஒரு காட்டு விலங்காக மாற விரும்பி ஒரு மாயப்புலியாக மாறி இருக்கலாம். அல்லது குடிசையில் வயிற்றுப்பிள்ளையோடு இவனது நினைவோடு பிரசவத்துக்கு காத்திருக்கும் அதெ யின் உதிரத்திலிருந்து குழந்தை உருவில் வெளிப்படலாம்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது!
ஏனென்றால் உங்களுக்குத் தோன்றுவதையும் நீங்கள் இந்த நாவலுடன் இணைத்துக்கொள்ளும்போது, இந்த நாவல் தன்னை முழுமையாக ஒரு வாசகரான உங்களிடம் ஒப்படைத்துக்கொள்ளும் சந்தோஷத்தை பெறக்கூடும்.
When the River sleeps
Eastern Kire
Published by Zubaan Books Aug 2015