​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை

பெரிய பட்டை வைத்த உள்​​ளாடை
சிறிய கோடு வைத்த உள்ளாடைக்கான
சூரிய ஒளியை மறைத்தபடி
காய்ந்து கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து நெருக்கப்பட்ட
பெரிய ஆடைகள்
இரண்டையும் தள்ளியபடி
சூரியனை எடுத்துக் கொண்டன.
கிளிப்பை விட்டுப்
பறக்க நினைத்தாலும் அவசரத்திற்குக்
காய்ந்தால் போதுமென நகருகின்றன.
ஈரத்துடன் மோதிக் கொள்வது
எரிச்சலாக இருந்தாலும்
நறுமணத் தண்ணீரில் மூழ்கி எடுத்ததால்
சகித்துக் கொள்வது பழகியிருந்தது.
காய்ந்த பெரிய ஆடைகளை
இரவில் மழைக்கு பயந்து
எடுத்துச் சென்றவர்கள்
உள்ளாடைகளை மறந்து விட்டனர்.
திடீரென கிட்டிய தனிமையில்
கிளிப்பை மறந்து குதித்து
தலையும் கால்களும் முளைத்து
நடனமாட ஆரம்பித்தன.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.