சாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை

சாட்சிக் கூண்டில் ஏறிய போது
தூரத்திலிருந்து முறைத்த குற்றவாளி
முட்டையொன்றை மந்திரித்து  வீசினார்.
அவசரத்தில்
உடைத்துக் குடித்து விட்டேன்.
கோபமுற்றவர்
நாக்கை முழுவதுமாக இழுத்து வைத்து
நான் சொல்லவிருந்த சம்பவத்தை
தடயமில்லாதபடி அழித்துக் கொண்டிருந்தார்.
வயிற்றில் குஞ்சு பொரித்த
சத்தியத் தவளைகள்
சம்பவத்தைத்
தொண்டைக்குள் இழுத்துக் கொண்டன.
தண்டனைப் புத்தகத்தை விரித்தபடி
நான் தவளை போலக் கத்துவதாக
எச்சரிக்கை மணி அடித்தார்
குற்றவாளிக்காக வாதாடியவர்.
சம்பவம் எச்சிலில் கரைந்து கொண்டிருக்க
வளாகத்தில் ஒரு பெரிய குதிரை
கால்களை உயர்த்தியபடி
துள்ளிக் கொண்டிருந்தது.
பிடரியை இழுத்துப் பார்த்த காவலர்
கழுத்தைத் தடவிய போது
“சத்தியம் சாகாது
சத்தியம் பலமாக உதைக்கும்”
என்று பாட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் நின்ற வழக்கறிஞர்
” இவர் கைரேகையைப் பாருங்கள்
யுவர் ஆனர் ! “
சம்பவத்தின் போது
குற்றவாளியின் சட்டையைக் கிழித்திருக்கிறார்
என்று என் கைவிரல்களை
உயர்த்திக் காண்பித்தார்.
கண்கள் பொய் பேசுவதில்லை என
நீதிபதியை உற்றுப் பார்த்தபடி
சம்பவத்தைச்  சொல்ல ஆரம்பித்தேன்.
வாக்குமூலத்தின்
ஒவ்வொரு சொல்லும்
நான்காகப் பிரிந்து  ஓட
தட்டச்சு செய்தவர் கதற ஆரம்பித்தார்.
அடித்துப் பிடித்து
ஒரே வரிசையில் அடுக்கியபோதும்
சம்பவம்
சேராமல் பிரிந்து கொண்டே இருந்தது.
குற்றவாளி
அடுத்த முட்டையை எடுத்த போது
குதிரை வேகமாகப் பாய்ந்தது
தண்டனைப் புத்தகம்
பறந்து வந்து தாக்கவே
சத்தியம் !சத்தியம் !சத்தியம் !
என்ற பெருமுழக்கத்தோடு
குதிக்க ஆரம்பித்தன
தவளைக் குஞ்சுகள்.
கட்டிடம் அதிர ஆரம்பித்தது
தலைவலி தாங்கமுடியாமல்
சம்பவம் நடந்த இடத்திற்கு
என்னை அழைத்துச் சென்றார்கள்.
உள்ளதை
உள்ளபடியே சொல்வதற்காக
ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய இரவை
இழுத்துக் கொண்டிருந்தேன்
சம்பவம்
அசைந்து அசைந்து
வந்து கொண்டே இருந்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.