அம்மாவுடன் மலர்க்கொடி அத்தை வீட்டிற்கு சென்றபோது பத்துமணியாகிவிட்டது.சுற்றுச் சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்த பூத்திருந்த செம்பருத்தி செடிகளுக்கு காலையில் ஊற்றிய நீரின் ஈரம் காயாமல் இருந்த மண்ணில் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த புழு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது. எனக்கு இங்கு வர விருப்பமேயில்லை.இம்மாதிரியான நேரத்தில் யார் வீட்டிற்கும் செல்வதற்கு பிடிப்பதேயில்லை.இன்று ஊருக்கு கிளம்புகிறார்களாம்..பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகுமாம் வருவதற்கு, கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம் என அம்மா, நச்சரித்தவுடன் வரவேண்டியதாகிவிட்டது.
வாசலோரம் கிடந்த காலணிகளைப் பார்த்தபோது வேறு சிலரும் வந்திருப்பார்கள் எனத் தோன்றியது.எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.பத்து வருடங்களுக்குப்பின் வருவது கேதம் கேட்பதற்காகவா இருக்கவேண்டும்.கடைசியாக நான் வந்தது சிங்கப்பூர் செல்வதற்கு விடை பெற்றுச்செல்ல.அப்போது தேனம்மையை எனக்கு மணமுடித்துத் தருவார்கள் என நானும் என் குடும்பமும் நம்பிக்கொண்டிருந்த சமயம்.அவர்களுக்கும் விருப்பம் என்பதுபோலவே அவர்கள் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தை மாமாவிடம் எவ்விதமான குறிப்புகளையும் என்னால் உய்த்தறிய முடியவில்லை.தேனம்மையின் பேச்சிலும் எதுவும் தென்படவில்லை.சென்று வருகிறேன் எனக் கூறியபோது அவளுடைய அடையாளமான காகிதமலர்ப் புன்னகையுடனேயே தலையாட்டினாள்.
சிங்கப்பூர் சென்று மூன்று மாதங்களுக்குப் பின் என் சின்னக்கா தொலைபேசும்போது சொன்னார்கள், தேனம்மையை அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என.அத்தையின் அம்மா மரணத்தருவாயில் அவர்கள் ஊரில்தான் தேனம்மையை மணமுடிக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம்.தசாவதாரத்தில் கமல் சொல்லும் “கேயாஸ் ” தியரியை அப்போதுதான் உணர்ந்தேன். அத்தை எப்போதுமே உற்சாகமானவர்.அவர் முகம் சோர்ந்தோ,புன்னகையின்றியோ பார்த்த நினைவில்லை.குறையாக இருந்தாலும் அதிலொரு நிறையைக் கூறி பெருமைப்படுவார்.ஊருக்குச் செல்ல ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ரயிலில் சென்றால் பேருந்துபோல வீட்டருகிலேயே இறங்கமுடியுமா எனக் கூறியபடி கடந்துவிடுவார்.வாங்குவதற்கு சிறிய வீடாக அமைந்தபோது இப்படி இருந்தால்தான் சுத்தமாக பராமரிக்க இயலும் எனக் கூறினார்.மூத்த பையன் காதல் மணம் செய்துகொண்டபோது பொண்ணு தேடும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே அருமையான பெண்ணை பார்த்துவிட்டான் என விழிவிரியச் சமாளித்தார்.மாமா சீட்டுப் பிடிக்கிறேனென சில லட்சங்களை இழந்தபோது, கண்டம் இருப்பதாக ஜாதகத்தில் இருந்தது,ஆளுக்கு ஏதுமில்லாமல் பணத்தோடு போயிற்றே என மகிழ்ந்தார்.தேனம்மையின் கணவர் பணியாற்றிய பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறு தொழிற்சாலையில் பணியாற்ற நேர்ந்தபோது சம்பாத்தியம் குறைவாக இருந்தால்தான் மாமியார் வீட்டினரை தாழ்த்திப் பேசாமல் கொஞ்சமாவது மதிப்போடு நடத்துவார் என மெல்லிய குரலில் கூறினாராம்.
நாங்கள் இப்போது வந்திருப்பது, தேனம்மையின் கணவர் சில நாட்களுக்குமுன் இறந்ததற்கு கேதம் கேட்பதற்காக. விருப்பம் இல்லாமல் வந்தாலும் உள்ளுக்குள் ஓர் ஆர்வம் ஊறிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொண்டு மருமகன் மாய்ந்தற்கு எம்மாதிரியான காரணம் கூறப்போகிறார் என. வாசலுக்கருகில் சென்றதுமே ஒளி மாறுபாட்டை கவனித்து திரும்பிய அத்தை “வாங்க ” என்று எழுந்தார்.”பரவாயில்ல அத்தாச்சி , உக்காருங்க” என்றபடி நுழைந்து காலியாக இருந்த நாற்காலியில் அம்மா அமர்ந்து , அருகில் அமர எனக்கு கை காட்டினார். எங்களைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தம்பதியர் போன்றிருந்தவர்கள் “பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்முன் சென்றுவிடவேண்டும் “என்றபடி எழ அத்தை மெல்ல தலையசைத்தவுடன் கிளம்பினார்கள். அத்தையின் உடல் சற்று பருத்திருந்தபோதும் தளரந்திருந்தார். அத்தை எழுந்துபோய் இரண்டு சிறிய தம்ளர்களில் காபி எடுத்துவந்தார்.நான்,இன்றைய தேதியைக் காட்டிய காலண்டரையும் சற்று தள்ளி மாட்டியிருந்த பெரிதாக்கப்பட்ட அவர்களின் குடும்பப் புன்னகையைக் காட்டிய புகைப்படத்தையும் , மேசை மீீீது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சாடியையும் நோக்குவது போல அம்மாவின் உரையாடலுக்காக செவியைக் கூர்ந்திருந்தேன்.
“எப்படி அத்தாச்சி, திடீர்னு இம்மாதிரி முடிவுக்கு போனாரு..விசயத்தை கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியல.வேற யாராவது இருக்கும்னு இவனப்பாக்கிட்ட கோபமா திட்டினேன்.அவருதான் நல்லா விசாரிச்சிட்டேன்.மலரோட மாப்பிள்ளைதான்னு சொன்னாரு.அப்பயிருந்து இன்னும் மனசே ஆறல.அழகுபெத்த புள்ள இப்ப நாதியத்து நிக்குதே.எப்படித்தான் நீங்க தாங்கிக்கிட்டு இருக்கீங்களோ ” என்றபடி அத்தையின் கைகளை தன் பருத்த கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி விசும்பினாள்.எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான், பயணம் முழுக்க கூடவேயிருந்து ஏதாவது விபரங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வருபவர்கள் கேத வீட்டின் அருகில் வந்தவுடன் சட்டென சன்னதம் வந்ததுபோல கதறியபடி வீட்டை நோக்கி ஓடுவதும் நெருங்கிய உறவினரை கட்டிக்கொண்டு ஓங்கிய குரலில் அழுவதும். பெண்களின் அறிய முடியாத ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஆண்களால் இயன்றது , தலையை தொங்கப்போட்டபடி சென்று அங்கு நின்று கை நீட்டும் ஆண்களின் விரல்களை ஆதுரத்துடன் அழுத்துவது மட்டும்தான்.
சற்றுநேரம் விசும்பிய அத்தை அதை நிறுத்தியபோது பார்வையைத் திருப்பி அவரின் விழிகளை நோக்கினேன்.நீர்வழிந்தபடியிருந்தாலும் சட்டென சிறு சுடர் ஒன்று எழுந்தது. “என்ன சொல்வது,என் வினையோ அல்லது தேனோட வினையோ நல்லாத்தான் பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருந்திருக்காரு.மறுநாள் குடும்பத்தோட குற்றாலத்திற்கு போறதா இருந்ததாம்.இருந்த கம்பளியாடகளே போதுமான்னு பாத்தப்ப பெரியவளுக்கு இருந்தது சேராத மாதிரி தெரிஞ்சிருக்கு.வாங்கிட்டு வந்தர்றேன்னு கிளம்பி போனவர்தான். ஏழு மணிக்கு போனவரை ஒன்பது மணிவரை வரலையேன்னு போன் பண்ணியிருக்கா.போனை எடுக்கலை.என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அவரோட தம்பிக்கு போன் பண்ணி இந்த மாதிரி போனவரை இவ்வளவு நேரம் காணல,எங்கே ,எப்படி தேடுவதுன்னு புலம்பியிருக்கா.அவருதான் இவளையும் கூட்டிக்கிட்டு கடைத்தெருப்பக்கமெல்லாம் தேடியிருக்காரு.அப்பறம் ஏதோ தோணியிருக்கு,கம்பெனிப் பக்கம் போயிருப்பாரோன்னு.அங்க போயி செக்யுரிட்டிகிட்ட கேட்டப்ப ஆமா , எட்டு மணியப்போல உள்ள போனாருன்னு சொல்லியிருக்கான்.உள்ள போயி ஆபீஸ் ரூம்,மெசின் ஹாலெல்லாம் பார்த்தும் ஆளக் காணாம பழைய சாமான்களெல்லாம் போட்டுவைக்கிற சின்ன அறை ஒண்ணு பின்னாடி இருக்கிறது நினைவுக்கு வந்து ,போய் பார்த்தா … உடைந்த,தேய்ந்துபோன மெசின் பாகங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களுமா நெறஞ்ச ஆறுக்கு எட்டு அடில இருக்கற அந்த இடத்தில பேன் மாட்ற கொக்கியில கயிறக் கட்டி தொங்கிட்டிருக்காரு.என்ன பிரச்சனையின்னு யாருக்கிட்டையும் சொல்லவும் இல்ல காட்டிக்கிடவும் இல்லை…”என்றபடி குலுங்கியழ ஆரம்பித்தார்.
எனக்கென்னவோ இன்னும் சொல்லி முடிக்கவில்லையெனத் தோன்றியது.நான் எதிர்பார்த்து வந்ததை இன்னும் கூறவில்லையே. குலுங்கல் சற்று தணிந்தபோது அரிதான தின்பண்டத்தைப் பார்த்து உமிழூறும் சிறுவனென கூர்ந்து கவனித்தேன்.விழிகள் சற்று மலர, “என்னதான் இருந்தாலும் இதுவரை இப்படி பார்த்ததோ கேள்விப்பட்டதேயில்லை.அவரோட லேப்டாப்ல கடைசியா என்ன பார்த்திருக்கிறார்னு பார்த்தா அதுல வலிக்காம தூக்குப்போட்டுக்கிறது எப்படின்னு பார்த்திருக்கார்.எந்த மாதிரி கயறு வாங்கனும் எந்த மாதிரி முடிச்சுப் போடனும் ,எம்மாதிரி போட்டா முகம் விகாரமா தெரியாதுங்கறதயெல்லாம் பார்த்திருக்கார்.அதே மாதிரி செஞ்சிருக்காரு.நாங்க போயி பார்க்கிறப்ப சும்மா படுத்து தூங்கற மாதிரியே இருக்கு. அந்த கந்தசாமி மகன் செத்தப்ப பார்க்க சகிக்காத மாதிரி நாக்கு ஒருபுறம் கடிபட்டு தொங்க அந்த மூஞ்சி வேற பக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தது.ஆனா இவர் முகத்துல எந்த வலியோ வேதனையோ எதுவுமே தெரியலை.காலையில பறிச்ச பூ மாதிரியே பொலிவா இருந்துச்சு.செத்தாலும் இந்த மாதிரியில்ல சாகனும்னு மகராசன் காட்டிட்டு போயிருக்கான்” என்றபடி மூக்கைச் சிந்தினார்.