​காணாமல் போனவர்கள், கனவு! – வி.பி கவிதைகள்

​காணாமல் போனவர்கள்

பூட்டிய வீட்டைப் பார்க்காமல்
முன்தின மழையால் நனைந்த வாசலில்
நின்றுக் கொண்டு
சூரியனோடு  கதவைத்
தட்டிக்கொண்டிருக்கி​​றேன்

சிறு சத்தத்திற்கும் சலனப்படும் இவர்கள்
இப்பொழுது மட்டும் எப்படி?

கலைந்த பொருட்களை
மீண்டும் மீண்டும்
அடுக்கி வைக்கும்
பெயரிலி விளையாட்டில்
சலித்துப் போக
ஒளிந்துக் கொண்டிருப்பார்களோ?

பிடித்தவர்கள் இடத்திற்கு
யாரும் அறியாமல்
ரகசியமாக  போய் வர
கிளம்பிருக்கலாம்

பாதாள உலகின் வாசல்கள்
கடந்து இருப்பது
எதுவென்று அறிய
சென்றிருக்கலாம்

காற்றின் அலைவரிசைகளில் ஒன்றை
தனக்கென்று வாங்கி வர
திட்டம் இருந்திருக்கலாம்

கடைசியாக,
காணாமல் போனவர்களின்
காலின் தடம்
அமைதியற்ற கேள்விகளில்
ஆழமாக பதிந்திருப்பதை
அறிகிறேன்!

கனவு!
சூரியப்பாதம் விளையாடும் மரக்கிளை
வான்மழை சிறைப்பிடிக்கும் வீடு
விதவிதமாய் பூக்கள் சூடும்  மொட்டை மாடி
உப்பரிகை சாளரங்களில்
வேடிக்கை பார்க்கும் பச்சை தேவதை
மந்தகாசம் உதிர்க்கும் மனித வாகனம்
அடர்ந்த இருட்டில்
கண் மூடி கனவு காண்கிறது
அடுத்த நகரமாய்
ஆகப் போகும் காடு!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.