“உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன” – எம். கோபாலகிருஷ்ணன்.
மனித உறவுகளின் மர்மங்களில் சற்று வெளிச்சம் பாய்ச்ச எத்தனிக்கும் முயற்சியில் தோன்றியவை இலக்கியங்கள். நீண்ட மனித உறவு நிலையில் மனமும் காமமும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. மனம் சார்ந்த ஆய்வு உளவியலுக்கு வித்திட்டது. உளவியல் தனது நீண்ட ஆய்வில் காமத்தின் அடியாழத்தைத் தொட்டுவிட முயன்றது. மனித உறவுகளின் அனைத்துச் செயல்பாடுகளும் பாலுணர்வு நடத்தையால் தீர்மானிக்கப்படுவதைச் சிக்மண்ட் பிராய்ட் தனது ஈரோஸ் மற்றும் தனடோஸ் கொள்கையால் விளக்கியுள்ளார். இக்கொள்கையின் வாயிலாக சு. வேணுகோபாலின் ‘ஆட்டம்’ நாவல் இங்கே உளப்பகுப்பாய்வு நோக்கில் வாசிக்கப்படுகிறது செய்யப்பட்டுகிறது.
“பாலுணர்வு நடத்தை என்பது உயிரியல் சார்ந்த, உள்ளத்துள் ஊக்குவிக்கும் முக்கிய சக்தியாகும்.”
ஈரோஸ் (பிறப்பு) – இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வியல் ஊக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. அதாவது பாலுணர்வு நடத்தை என்பது மனிதன் இயற்கையில் தொடர்ந்து வாழ்வதற்கான, இருத்தலுக்கான ஊக்கச் சக்தியாக விளங்குகிறது. மேலும் வாழ்வதற்கான ஆற்றலையும் இன்பத்தையும் தந்து மனிதச் சமூகம் உருவாவதற்கும் அதைக் கட்டமைப்பதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்துள்ளது என்று சிக்மண்ட் பிராய்ட் கூறுகிறார்.
தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு, சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. பாலுணர்வு நடத்தை மனிதனின் தன்முனைப்பு செயல்பாட்டை உடைத்தெறிந்து விடும் என்று கூறிவந்த நிலையில் அவ்வாறு இல்லாமல் மனித மனதின் இறப்புச் சிந்தனையிலிருந்து (தனடோஸ்) அவனைப் பாதுகாப்பது இரோஸ் என்று சிக்மண்ட் பிராய்ட் கூறினார். ஆக தனடோஸ் என்ற இறப்பை நோக்கிய பயணத்திலிருந்து மனிதனை விடுபட செய்யும் எதிர்வினையே இரோஸ் என்ற காதலும் காமமும்.
இரோஸ் என்பது ஆன்ம சக்தியைத் தொடக்கத்தில் தந்தாலும் பிறகு படிப்படியாகக் கீழ்நோக்கி இழுத்துச் சென்று விடுகிறது என்று பிளாட்டோ கூறுகிறார். இவரின் கருத்திற்கு எதிர்நிலையாக பிராய்ட், இரோஸ் என்பது உடற் சக்தியைத் தருகிறது, மேலும் படிப்படியாக உயர்ந்து வாழ்தலுக்குத் தேவையான ஊக்கத்தைத் தருகிறது என்று கூறுகிறார்.
ஆட்டம் நாவலின் முதன்மை கதாபாத்திரம் வடிவேல். சிறந்த கபடி வீரன். வீரபாண்டி ஊரில் ஒவ்வொரு ஆண்டும் கோமாரியம்மன் திருவிழாவில் முக்கிய நிகழ்வாகக் கபடிப் போட்டி நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு இளைஞனையும் வீரனாக மாற்றுவது அவன் சார்ந்த பின்புலத்தில் இயங்கும் பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. கபடி விளையாட்டைக் காண வரும் பெண்களின் பார்வையே ஒரு வீரனைச் சிறந்தவனாக மாற்றுகிறது. அவளின் வருகையும் அவள் நோக்கும் அவனுக்கு வாழ்வதற்கான மிகப் பெரும் ஆற்றலைத் தருகின்றன. அனைவர் மத்தியிலும் அவனை ஏற்பதற்கான எத்தனிப்புகள் அவனது மனதால் திட்டமிடப்பட்டு விளையாட்டில் நுண்மையாக அவனையும் மீறி வெளிப்பட்டு நிற்கின்றன. அவனது மனம் அவளை மயக்குவதிலும் அவளை வியப்படையச் செய்வதிலும் மையம் கொண்டு பெரும் ஆற்றலை அவனுள் உருவாக்கி அவனை மற்றவர்களிடமிருந்து சிறந்தவனாக மாற்றுகிறது. இவ்வாறு வடிவேல் தனது ஆட்டத்தில் வெளிப்படுத்தி நிற்கும் அனைத்து வித்தைகளும் கனகாவைத் தன்னகத்தே ஈர்க்கச் செய்யும் தந்திரங்கள் என்றாலும் மற்றவர்கள் பார்வையில் மட்டுமல்ல அவனது மனதிலும் அது அவனது திறமையாகப் படுவதும் சிந்திக்கத்தக்கது.
பிறகு கனகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டு பல இன்னல்களையும் இழப்புகளையும் பெறுகிறான். அவளோடு வாழ்ந்து காதலின் அனைத்துத் தேவைகளும் தீர்ந்த போதும் அவள் தேவையில்லாத ஊக்கியாக மாறிய நிலையிலும் அவள் மேல் அவனது அளவு கடந்த அன்பு மேலோங்கி மீதி வாழ்க்கையை அவளோடு வாழ்ந்துவிட எண்ணும் நிலையில் அவள் தனது வாழ்க்கையை மற்றவனோடு வாழ்ந்துவிட எண்ணி செயல்பட்ட நிலையிலும் அவனது மனம் இறப்பின் உச்சத்திற்குச் சென்று விடுவதில்லை. “உயிரைப் மாய்த்துக்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை,” என்றும் மீண்டும் அவளோடு வாழ்ந்து விடலாம் என்றும் அவனது மனம் எண்ணுகிறது. இத்தகைய எண்ணங்களுக்குக் காரணம் அவளுக்காகக் கபடி விளையாட்டில் தான் காட்டிய திறமை, இதனை மதித்து மற்றவர்கள் கொண்டாடிய, கொண்டாடி வருகின்ற விதம், அவளோடு ஊரை விட்டு ஓடி வந்து வாழ்ந்த காதல் வாழ்க்கை என்று அனைத்திலும் அவள் அவனுக்கு ஊக்கச் சக்தியாவே இருந்து வந்துள்ளதைப் பல நேரங்களில் எண்ணி ஏங்குவான்.
மகளோடு ஊர் வந்த பிறகும் மறுமணம் செய்துகொள்ள அவனது தாய் ஏற்பாடு செய்யும்போது தனலட்சுமி தன்னை மறுத்துவிட்டதைக் கேள்விப்பட்டுத் தனது உடலையும் மனதையும் இளமையாக்க அவன் மேற்கொள்ளும் பயிற்சிகளும் அதனை வெளிப்படுத்த அவன் கலந்து கொள்ளும் கபடியும் அவனையே வியப்பில் ஆழ்த்தி மறு சிந்தனை செய்யத் தூண்டினாலும் காமம் அவனை ஆடுகளத்தில் போராடவே தூண்டியது. இந்த வயதில் இளைஞர்களோடு சரிசமமாகக் கபடி விளையாடுவது முழுக்க முழுக்க தனலட்சுமியைக் கவர்ந்து அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மனதின் ஊக்கநிலையே, அவன் அந்த விளையாட்டில் தோற்றுப் போனாலும் அவனது மனத்துக் காம இச்சை அவனை விடுவதாக இல்லை. அடுத்த வீரபாண்டி திருவிழாவில் தனலட்சுமியைத் தனது கபடி ஆட்டத்தால் கவர்ந்து விட வேண்டும் என்ற அவனது வைராக்கியம் அவனது வாழ்தலின் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் பெண் சார்ந்த இருப்பே தீர்மானிக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் தனது மகளது, ‘அம்மா எப்ப வருவாங்க?’ என்ற கேள்விக்கு வடிவேல், ‘விரைவில் வந்து விடுவாங்க,’ என்று இயல்பாகப் பதில் சொல்கிறான். அவனது மனநிலை கோபங்கள் அற்று, விரோதங்கள் அற்று, வன்மங்கள் அற்று, வேறொருவனுடன் சென்று விட்ட கனகாவைத் தேடிக் கண்டு பிடித்துக் கூட்டிவர எண்ணுகின்ற மனதின் ஆக்கநிலையை அவனது காமம் வெளிப்படுத்தி நிற்கிறது. இங்கே அவனது ஈகோ இறந்து விடுகிறது. தொடர்ந்து வாழ்தலும் கனகாவின் மேல் அவனது ஈர்ப்பும் வாழ்வியல் ஊக்கியாக வெளிப்படுகின்றன.
வடிவேலுவின் தாய் கடின உழைப்பாளியாக இதில் காட்டப்படுகிறாள். கணவன் இறந்த பிறகு தனது வாழ்க்கை முறையைக் கடினமாக மாற்றிக் கொண்டு விடுகிறாள். மற்றவர்களிடம் பேசுவது குறைந்து விடுகிறது. எப்போதும் வேலை வேலை என்று தன்னை வருத்திக் கொள்கிறாள். தனது உடல் வெம்மையையும் காம இச்சையையும் மடை மாற்றும் கருவியாக அவள் உழைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். உழைப்பின் மூலம் தனது காமத்தைக் கொன்றுவிட அயராது உழைக்கிறாள். உழைப்பின் வெகுமதி தனது குடும்பத்தை எடுத்துச் செல்வதைக் காணும்போது இதுவே சிறந்த வழி என்று வாழ்தலின் ஊக்கத்தை இதில் பெற்றுக் கொள்கிறாள். யாரோடும் மனவருத்தமில்லை, வெறுப்பில்லை, உழைப்பால் கடந்து செல்கிறது அவளது வாழ்க்கை. இங்கே காமமும் காதலும் வாழ்தலுக்கான ஆக்க ஊக்கிகளாக வினையாற்றுகின்றன.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விளையாட்டு வீரனையும் ஏதோவொரு மூலையில் கண்டு களிக்கும் இரண்டு கண்களே தீர்மானிக்கின்றன. வெற்றியில் மகிழ்ச்சியும் தோல்வியில் அவமானமும் அந்தக் கண்களின் வழியே கண்டடைகிறான் அவன். அவனது ஒவ்வொரு அடுத்தக் கட்ட செயல்பாடுகளும் அந்தக் கண்களில் இருந்தே தொடங்குகின்றன. அவனது மனம் அவளது ஏற்பிற்காக அவனை வீரனாக, கோழையாக, கொடூரனாக மாற்றிப் போடுகிறது. வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் வெற்றி கிடைப்பதில்லை. காலமும் பருவமும் அதனைக் காமத்தோடு சாத்தியப்படுத்துகிறது. மற்ற நேரங்களில் இயல்பான வாழ்தலின் பெரும் உந்துதல் சக்தி காமமும் காதலுமே.
ஊக்கச் சக்தியாகக் காதலும் காமமும் இருப்பதைப் போல அழிவு சக்தியாகவும் செயல்படுவதைப் பிராய்ட் தனது தனடோஸ் கோட்பாட்டின் மூலம் எடுத்துக் கூறுகிறார். வடிவேலின் கபடி விளையாட்டில் ஈர்க்கப்பட்ட கனகா அவனோடு காதல் திருமணம் செய்து கொண்டாள். அவர்களுக்குப் பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அவளது காமம் அவளது எல்லைக்குள் அடங்க மறுத்து விடுகிறது. விளையாட்டில் அவளைக் கவர்ந்தவன் வாழ்தலில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஏமாற்றவுணர்வு கனகாவை நிம்மதியிழக்கச் செய்கிறது. அவளது மனதின் தேவைகள் மற்றொரு ஆடவனால் நிறைவேற்றப்படும்போது வடிவேல் காணாமல் போகிறான். ஆனால் அவளின் உள்மனம் பெரும் போராட்டக் களமாக மாறுகின்றது. அவளது இந்தச் செயல்பாட்டைச் சமூகம் ஏற்க மறுக்கும் நிலையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள துணியும் மனநிலை அழிவுத்தன்மை கொண்டது.
இதேபோல வடிவேலின் சக விளையாட்டு வீரன் காளையன் வாழ்க்கையில் நடைபெற்ற காமச் செயல்பாடுகள் இதனுடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டும். அவனது சித்திக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்ட காமச் செயல்பாடுகளை மறைக்க முடியாமல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அவளின் அன்பையும் அதீத காமத்தையும் மறுக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் உடன்படுகிறான். கபடி விளையாட்டுக்கென்றே பிறந்தவன் என்று அனைவரும் பாராட்டும் வீரனாக வலம் வந்தவன். “கபடியில் மகா கில்லாடி. எத்தனையோ பேருக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டியவன். விழுந்த காமச் சுழலிலிருந்து அவனால் மீண்டு வரவே முடியவில்லை.” அவனின் உடற்கட்டும் வேகமும் அவளைத் தூங்க விடாமல் செய்துவிட்டது. அவளின் பார்வைக்கு எதிர் பார்வை தர மறுக்கும் வீரனாக அவனிருந்தாலும் அவனது பருவமும் அவளின் தேவையை ஏற்றுக்கொண்டது. ஆனால் இது ஏற்புடைய செயலல்ல. அவனது சித்தி அவனுக்கு ஒவ்வொரு நாளும் நல்விருந்து தருகிறாள். உணவின் சுவையிலும் ஊட்டத்திலும் அவளோடு காம விளையாட்டு அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. அவனுள் குற்றவுணர்வை மெல்ல ஏற்படுத்தி விடுகிறது. சிறு காலத்தில் அவனது கட்டுடல் களைத்து விடுகிறது. “காளையன் மடித்துக் கட்டியிருக்கும் வேட்டிக்குள் தொடைகள் கனத்திருக்கின்றன. நேராக வடிவேல் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து மூச்சுவிட்டான். எப்படியும் நூற்றியிருபது கிலோ இருக்கலாம். கிட்டத்தட்ட இருவரின் எடை” இவ்வாறு நடக்க முடியாத உடல் பருத்தவனாக மாறிவிடுகிறான். அவனைக் காணும்போது காமம் அவனது இருப்பை அழித்துச் சிரிப்பதையும் அவள் இன்றும் தன்னிலை மாறாமல் இருப்பதையும் எண்ணும் போது இங்கே தனடோஸ் செயல்படுவதை உணரலாம்.
சமூகச் செயல்பாடுகளில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன்னை இணைத்துக் கொண்டு பங்காற்றும்போது அவர்களின் எண்ணங்கள் வினையாற்றும் வெளிப்பாடுகள் வியப்பானதாகத, தனித்துவமானதாக, மாறும்போது உளப் பகுப்பாய்வு தன்னிலை பெறுகிறது. உள்ளத்தின் அசைவியக்கத்தை உற்று நோக்கும் நிலையில் ‘ஆட்டம்’ நாவலின் வாழ்வியலும் மனிதர்களும் இக்கோட்பாட்டின் வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்தி வருவதை வடிவேல், கனகா, காளையன் போன்றோரின் வாழ்க்கையால் உணரமுடிகிறது.