ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம், அழகேசன் கடையில் வெளியே கயிரில் தூக்கில் தொங்கியப்படி திணறும் தினசரிகளை கடக்காமல் காலை எட்டறை நகர்ந்து சென்றதில்லை. வாய் சவடால்கள் நிறைக்கும் அரசியல் வசைகள், நடிகையின் தொப்புளை வருடும் வயதான விரல்கள் எல்லாமுமே நிறைந்த குப்பை மேடு. அன்றைக்கும் நாள் அப்படியே கடந்திருக்க வேண்டும்.
கடுக்கரை நுழைய வேண்டுமானால் குறத்தியறை மலைக்குன்றை கடக்க வேண்டும். வாழைத் தோப்பும், சாலையோரம் கூடவே பக்கவாட்டில் ஓடையாறு ஒன்றும் உண்டு. பகலில் யாரோ குளித்தவாறே, பேசியப் படியும், சிரித்தப் படியும் இருப்பாராம். கடுக்கரையை ஒழுகினசேரி கலைவாணர் தெரு இளவட்டம் ராஜுவின் கதைகளை கேட்டே அதன் முடுக்குகளையும், ஓடு வேய்ந்த சுத்துக் கட்டு வீடுகளையும் கண்டுவிட்டனர். அப்படித்தான் தட்டு வீட்டு அய்யப்பன் அவனின் அத்தை மகள் சடங்குக்கு செல்லும் போது ஒவ்வொரு முடுக்கிலும் எந்த இசக்கி இருக்கிறாள் என அம்மையிடம் சரியாய் சொன்னானாம்.
விஜி பவனம், தட்டு வீட்டில் மேலே விஜயாவின் குடும்பம் இருக்க, மொத்தம் இரண்டு மாடி வீட்டில் கீழே தரைத் தளத்தில் இரண்டு வீடு உண்டு. முதல் மாடியில் அவளின் அக்கா, அத்தானுடன் சண்டைப் பிடித்து பிள்ளைகளுடன் தனியாய் இருக்கிறாள். கீழே ஒரு வீட்டில் பத்மினி மிஸ் டியூஷன் எடுத்தாள். நானும் அங்கேதான் படித்தேன். நெடுனாள் பூட்டிக் கிடந்த பக்கத்து வீட்டில் ராஜு குடியேறினான். நான் ஒன்பது படிக்கும் போது, அவன் எட்டாவது படித்தான். என் வயது தான், அவன் அப்பா மனம் குழம்பி கோம்பையாய் ஆகிவிட்டார். அதே வருடம் அம்மா அவளை விட பத்து வயது இளையவன் உடன் எங்கோ செல்ல, அந்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டான். தெரியுமா! ராஜுவை தவிர்த்து அவளுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகள். ஓடி போகும் போது இரண்டையும் கூட கூட்டிப் போனாள். ராஜு அப்பா வீட்டில் இருக்க நேர்ந்தது. வீட்டை விட முடுக்குகளும், குன்றில் இருக்கும் சாஸ்தாவும் தான் எல்லாமுமே. பேச பேசக் கதைகள் அங்கிருந்து தான் வரும்.
பின்னர் ஒரு வருடம் கழித்து, அம்மா திரும்பி வந்தாள். சொந்த ஊரை விட்டு, ராஜுவையும் உடன் அழைத்து விஜி பவனத்தில் இடப்பாகம் இருக்கும் வீட்டில் குடியேறினார்கள். விட்ட படிப்பை தொடர, மீண்டும் எட்டில் ஆரம்பித்தான். நிஜத்தில் கூட இருக்கும் அவரையே நாங்கள் அவர்கள் அப்பா என நம்பினோம். அந்த சனிக் கிழமை கிரிக்கெட் ஆட மணி வராமல் அவன் சித்தி வீடு திருநந்திக்கரைக்கு செல்ல, பதினோன்றில் ஒருவர் குறைய கார்த்தி ராஜுவை அழைத்து வந்தான். சுமாரான ஒரு ஆட்டம் தான், ஆனால் அவனின் நளியும், இயல்பும் பிடித்துப் போக, விடுமாடன் கோவில் திண்டில் அவனும் ராத்திரி இருப்பான். ரெட்டைத் தண்டவாளம் வேப்பமூட்டில் அவனுக்கும் சிகரெட்டில் இரண்டு இழுப்பு உண்டு. அன்றைக்கு ரெண்டு ருபாய் கூடக் கிடைக்கவே இந்த கதையெல்லாம் சொன்னான். அம்மா பாவம் தான், இரண்டாவது கட்டியவனை அவனுக்கு பிடிப்பதில்லை. தம்பிகள் அவனை அப்பா என்றே அழைத்தனர். பின்புலம் தெரிய, கலைவாணர் தெருவில் பசங்க அனைவரின் வீட்டிலும் ராஜு மேல் தனிப் பிரியமுண்டு. சாப்பாடு, ஒரே வீட்டில் உறக்கம்,ஒருப் படி மேலேறி தீபாவளிக்கு பழனி அண்ணன் அவனுக்கு எடுத்த அதே நிறத்தில் சட்டை, பேண்ட் வாங்கி கொடுத்தான்.
காட்டுபுதூர் மலையில் தேன் எடுத்த கதை, காளிகேசம் அருவியில் மலைபாம்பு தலையில் விழுந்த கதை, சாஸ்தா கோயில் ஊட்டுப் படைப்பு எல்லாமும் சேர்த்து ராஜு பெயரே மாறி, அவனை கடுக்கரை என்றே அழைக்க ஆரம்பித்தோம். சரி, சனிக் கிழமை பள்ளி நடத்தலாம் வாய்ப்புண்டு. ஆனால் எல்லா சனியும் இருக்குமா? சந்தேகம் வரவே காதல் கதையையும் சொன்னான். கௌரி, சினேகா மாதிரி இருப்பாளாம். அவன் குறத்தியறை அரசு மேல்நிலை பள்ளியில் படித்தான். அவள் எட்டு வரை அவனோடு படித்திருக்கிறாள், ஒன்பது முதல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி யில் படிக்கிறாளாம். ஆக, சனிக்கிழமை அவளைப் பார்க்க போகிறான், கள்ளப்பயல். கௌரி, பள்ளியில் பார்க்காத கண் உண்டா. மதியம் உணவு முடித்து பெண்பிள்ளைகள் , கலையரங்கத்தில் இருப்பார்கள். பசங்க அப்பக்கமாய் போவது சத்தியமாய் அவளையும் பார்க்கத்தான். கடுக்கரையின் கதையில் பொய்யுமுண்டு. ஆனால் கௌரி அத்தனையும் நிஜம். சினேகா தான், அதே சிரிப்பு. கடுக்கரையும் அழகுதான், இமைவொட்டும் மெல்லிய புருவம். கூர் மூக்கு, அழகாய் இருப்பான்.
ஒரு வருடம் கழிந்ததே தெரியவில்லை. இடையிடையே அவன் வீட்டில் சண்டை நடக்கும். அவன் கண்டுகொள்வதில்லை. தம்பிமார்கள் இவனிடம் பெரிதாய் பேசுவதில்லை. அப்பா என்று இவன் அவனை அழைத்ததே இல்லை. எங்களிடம் அவனை ஒருநாள் அடிப்பேன் என்று சத்தியமே செய்தான். கடுக்கரை அடிக்கடி கோம்பையாய் மாறிய அப்பாவை பார்ப்பதுண்டு. அம்மா தான் காரணம் என்பான். இந்த பழக்கத்தில் தான் அப்பா இப்படி ஆகிவிட்டார் என்பான். சிலசமயம் அப்பாக்கு எதுவுமில்லை. ஊர் உண்மையை அறிந்தால் என்ன பேச்சு பேசும் எனப் பயந்தே அப்பா நடிக்கிறார் என்பான். பின் அவர் கடுக்கரையை விட்டு மீனாட்சிபுரத்தில் நகைக் கடைகளில் இரவு காவலாளி வேலைப் பார்த்தார். கடுக்கரை பைசா தேவைப்படும் போது அப்பாவை பார்ப்பான். அவனைப் பார்த்தால் நடிப்பை மறந்து விடுவாராம்.
அதுவும் ஒரு சனிக்கிழமை, கௌரியை பார்க்க கடுக்கரை செல்லவில்லை. காரணம் கிரிக்கெட் என்றே நினைத்தோம். உண்மையில் அன்றைக்கு வீட்டில் பயங்கர சண்டை. அம்மாவை இரண்டாவது கட்டியவன் அடித்து விட்டான். சண்டையோ பெரிதாக, ஆவணி மாதம் என்பதால் பெருமாள் மண்டபத்தில் பொருட்காட்சி நடக்கும், அங்கு தம்பிகளை பைசா கொடுத்து அனுப்பிவைத்தான். வீட்டில் அம்மாவும், அவனும் மாத்திரமே. வெளியே செல்லவும் இவனுக்கு தோணவில்லை. எங்களுடன் கிரிக்கெட் ஆட வந்துவிட்டான். ஆடிமாத மிச்ச காற்று பயங்கரமாக வீசியது. நான் பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றேன். கடுக்கரை கீப்பிங் செய்தான். தூரத்தில் பகவதி வேகமாய் ஓடி வந்தான். என்னிடம் அவசர அவசரமாய் ஏதோ கூறினான். கடுக்கரையின் அம்மா தூக்கில் தொங்கி விட்டாள் என்பது மாத்திரமே புரிந்தது.
எல்லோரும் சென்றோம். கடுக்கரை இரண்டாவது கட்டியவனை அடித்தான். அவனோ பித்து பிடித்தவன் போல உளறினான். தெருவில் புரண்டு அழுதான். தம்பிமார்களை யாரோ அழைத்து வர, ஊர்ப் பெரியவர் மாறாசா மாமா, போலீஸ் கேஸ் வேண்டாம் என்றார். நடந்தவை பல, எதுவுமே சொல்லிவைத்தார் போலவே நடந்தது. தூக்கில் தொங்கியது மதியம் இரண்டு மணி, நாலு மணிக்கு பாடை தூக்கியாச்சு. கடுக்கரை கூடவே பசங்க இருந்தோம். சொந்தமென சொல்லி வந்த நான்கு பேரும் அன்று இரவே மூவரையும் அழைத்து கூடவே சென்று விட்டனர். அதன் பிறகு கடுக்கரை எப்போதாவது தெருவிற்கு வருவான். அன்றைக்கு ஏதோ வீட்டில் உறங்குவான்.
ஒன்பதை முடிக்கவில்லை, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். கடுக்கரை ஷேர் ஆட்டோவில் கண்டக்டர் வேலை பார்த்தான், அது ராமன்புதூர் ரூட். மூன்று வருடம் கழித்து நான் பழவிளை பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். செல்லும் வழியில் அடிக்கடி சந்திப்போம். பசங்க வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் கடுக்கரையும் ராத்திரி சரக்கடிக்க வருவான். வளர வளர சிகரெட் பீருக்கு முன்னேறி விட்டது. கௌரி பேசுவது இல்லையாம் வருத்தப்படுவான். அப்பா அம்மா இறந்ததும் நிஜத்தில் மனம் பிசகி ஒருமாதிரி ஆகிவிட்டராம். இப்போது அவனும், அப்பாவும் சேர்ந்து இருக்கிறார்கள். தம்பிகள் ஊரில் இருக்கிறார்கள். முன்னர் போல பேச்சில் நளி அடிப்பதும் இல்லை, புரிவது போல அவன் பேசுவதுமில்லை. பின்னர் அவனைப் பார்க்கவேயில்லை.
காலை எட்டறை மணி, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் அழகேசன் கடை பேப்பரை நான் படித்திருக்க கூடாது. ‘அடையாளம் தெரியாத வாலிபர் நாகர்கோவில் பூங்காவில் விஷம் அருந்தி தற்கொலை’ கூடவே இருந்த புகைப்படம் எங்கள் கடுக்கரையின், ராஜுவின் முகம். வெறும் முகமல்ல நியாபகங்கள்.