‘என் வைப் டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு சொல்றா ஸார்’ என்று கான்ஸ்டபிள் வய்யின் குரல் கேட்க வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘கத்தாதையா, தெருல இருக்கறவங்க நான் தான் காரணம்னு நினைக்கப் போறாங்க’
‘திடீர்னு இப்படி சொல்றா ஸார், என்ன பண்றதுன்னே புரியலை’
‘உன் நிலைமை எவ்வளவோ பரவயில்லையா’
‘என்ன ஸார் சொல்றீங்க’
‘என் வைப் டிவோர்ஸ் பண்ணிட்டு , இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா. என் ரெண்டு பசங்களும் அவன் கூட தான் ஒட்டுதலா இருக்காங்க, என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறாங்க.’
‘ஏன் ஸார்’
‘நான் மொடாக் குடிகாரனாம், வேலை வேலைன்னு குடும்பத்தை கவனிக்காம இருந்துட்டேனாம், தனியா வாழத் தான் லாயக்காம்’
‘நீங்க டீடோலர் ஆச்சே ஸார். தவிர நம்ம எழுத்தாளர் நாலஞ்சு மாசத்துக்கு ஒரு முறை தான் ஒரு கேஸை கொடுக்கறார், மத்த நேரத்துல நீங்க ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவீங்களே ஸோ வேலை பளுவும் கிடையாது. என்ன ஸார் நடக்குது, நம்ம லைப் ஏன் இப்படி தலைகீழா மாறிப் போச்சு’
‘புது கேஸ்யா’
‘புரியலை ஸார்’
‘இந்த தடவை ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளின் பாணில இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு எழுத்தாளரோட ஐடியா. ஸ்காண்டிநேவியன்/நார்டிக் நுவார் புனைவுகளில் வரும் போலீஸ்காரன் எல்லாம் இப்படித்தான் குடிகாரனா, உலகத்தின் மொத்த சுமையையும் சுமப்பவனா, குடும்பத்திலிருந்து பிரிந்தவனா, யாருமற்றவனா, ஆனா அதே நேரம் அறவுணர்ச்சி உள்ளவனா இருப்பாங்க, அதான் நம்மையும் இப்படி மாத்திட்டார்’
‘இப்ப என்ன ஸார் பண்றது’
‘இந்த மாற்றத்தை நாம ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை. புனைவுலகில் வாழ்கிறோம் என்பதால் நம்மை பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க முடியாது. நாமும் மனுஷங்க தான், நமக்கும் உணர்ச்சிகள் இருக்கு, இதை நான் இப்படியே விடப் போறதில்லை’
‘என்ன செய்யப் போறீங்க’
‘அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப் போறேன்’
‘ஸார், இந்த வரியை இப்ப நிறைய பேர் யூஸ் பண்றாங்க தான், ஆனா இந்த இடத்துல பொருத்தமா இருக்குமா…’
‘ஏன் இருக்காது. அதிகாரத் திமிருல, காலனியாதிக்க மனநிலைல, எழுத்தாளரும் பாத்திரங்களும் கலந்தாலோசித்து தான் எந்த முடிவையும் எடுக்கணும் என்ற பெடரலிஸ தத்துவத்தை மதிக்காம எழுத்தாளர் என்ன வேணும்னாலும் செய்வார், அதை நாம பொறுத்துக்கணுமா. ‘
‘பெடரலிஸம், காலனியாதிக்கம் எல்லாம் இங்க எங்க வந்ததுனு உங்களை நான் கேட்க மாட்டேன், என் டிவோர்ஸ் பிரச்சனை தீர்ந்தா சரி, ஆனா அவர் கிட்ட நாம எப்படி பேச முடியும்… நாம அவரோட எண்ணங்களின் வெளிப்பாடு தானே, அவரை எப்படி மீற முடியும்?’
‘எதற்காக அவரிடம் பேச வேண்டும். இது நம் உணர்வு, நம் உரிமை, நாமே பறித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்பார்டகஸ் போல் புரட்சி செய்து , உலகமெங்கும் உள்ள இரக்கமற்ற எழுத்தாளர்களின் அரக்கத்தனமான தளைகளில் சிக்கியிருக்கும் புனைவுலக மாந்தர்களை விடுவித்து, நம் ‘பாத்திர’ இனத்திற்கே விடியலைத் தருகிறேன் பார், போர் போர் …’
‘போர்லாம் வீட்டுல முடங்கி, விடியல் வந்து இரண்டு வாரம் ஆயிடுச்சு ஸார்’
‘என்னையா முனகற’
‘ஒண்ணுமில்லை ஸார். நீங்க இப்ப பேசின தமிழ் வேற மாதிரி இருந்தது’
‘ஸ்பார்டகஸ் பத்தி குறிப்பிட்டேன்ல, அதான் மொழி கொஞ்சம் மாறிடுச்சு’
‘ஓகே ஸார் , விடியல் வந்ததால இன்னிக்கு கேஸ் கிடையாது இல்லையா, கிளம்பறேன். நீங்க என்னதான் சொன்னாலும், வைப் வீட்ல தான் இருக்கான்னு கன்பர்ம் பண்ணினாத் தான் நிம்மதியா இருக்கும்’
‘நோ, இன்னிக்கும் வேலையிருக்கு’
‘எழுத்தாளர் வேற கேஸ் தரப்போறாரா ஸார்’
‘இல்லை, இந்த முறை நாமே புலனாய்வு செய்யறோம்’
‘அதெப்படி முடியும் ஸார்’
‘அந்தாளு உருவாக்குகிற கேஸை விட நாம பெட்டரா பண்ணலாம். ‘
‘என்ன செய்யப் போறீங்க’
‘பூட்டின ரூம்ல கொலை, பணக்காரங்க வீட்ல பஞ்சமாபாதகம்னு நிஜத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மேட்டிமைத் தன்மை கொண்ட கேஸ்களை விசாரிச்சது போதும். யதார்த்தத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்வோம். ரத்தமும் சதையுமா சோஷியல் ரியலிஸ க்ரைம்’
‘ஸார் ..’
‘இரு இரு, இங்க இன்னொரு வார்த்தை யூஸ் செஞ்சா இன்னும் பொருத்தமா இருக்கும், பூர்வஜாவோ, பூர்வஷாவோ, மிடில் க்ளாஸை குறிக்கிற பிரெஞ்சு வர்ட்.. ‘
‘எனக்கு நிரவ் ஷா, அமித் ஷா தான் ஸார் தெரியும்’
‘பாண்டில இருந்துட்டு நமக்கு அது தெரியலைனா அசிங்கம்யா’
‘..’
‘ஞாபகம் வந்துடுச்சு, … பூர்ஷ்வா. இந்த வார்த்தையை இங்க எப்படி பொருத்தலாம்னா…’
‘இப்ப அது முக்கியமில்லை ஸார். நம்ம கிட்ட கேஸ் வந்தா தானே இன்வெஸ்டிகேட் பண்ண முடியும், அதை நீங்கள் யோசிக்கலைன்னு நினைக்கறேன்’
‘அதெல்லாம் தேவையில்லை, இப்ப சும்மா ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வருவோம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சா போதும், ஏதாவது க்ரைம் கண்ணுல படும். கெளம்பலாம் வா’
‘இது லாக்டவுன் டைம், இப்ப இது தேவையா, கொஞ்சம் நிதானமா யோசிக்கலாமே’
‘யோவ், நான் சொல்றபடி செய், அது போதும் ‘
‘இப்ப மட்டும் அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசக் கூடாதா…’
‘என்னய்யா முணுமுணுக்கற ‘
‘ஒண்ணுமில்லை ஸார் ‘
oOo
ஜவஹர் நகர், பொன் நகரைக் கடந்து அந்தோனியார் கோவில் தெருவினுள் நுழைந்தார்கள்.
‘நில்லுயா’
‘..’
‘நீ ஒண்ணுத்தையும் கழட்ட வேண்டாம்’ ஆங்காரத்துடன் ஒலித்த பெண் குரல். சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அதே குரல்
‘படிடீ’ என்று இறைஞ்சலாக கேட்டது.
‘கேஸ் கிடைச்சாச்சு யா’
‘ஸார் …’
‘இந்த வீட்ல குழந்தைகளை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்காண்டிநேவியா நாடுகளில் இது க்ரைம்’ என்றபடி குரல் வந்த வீட்டின் கேட்டை திறந்து சென்ற எக்ஸ், காலிங் பெல்லை அழுத்தினார்.
சிறிதாக திறக்கப்பட்ட கதவினூடே மாஸ்க் அணிந்த முகம்.
‘என்ன வேணும்’
‘நாங்க டிடெக்டிவ்ஸ்’
கதவு நன்றாக திறக்கப்பட உள்ளே சென்றார்கள். ஹாலில் பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய சிறுமி.
‘நீங்க தானே இப்ப சத்தம் போட்டுக் கொண்டிருந்தது’
‘ஏன் கேக்கறீங்க?’
‘குழந்தைகளை இப்படி துன்புறுத்துவது தப்பு. அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல அவங்களை ஈடு படுத்துங்க, அதை விட்டுட்டு படி படின்னு கொடுமைப் படுத்தாதீங்க.’
‘உங்களுக்கு இவளைப் பத்தி என்ன தெரியும்’
‘எல்லா குழந்தைகளுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும், அவங்களை அதுல ஈடுபடுத்தணும்’
‘இவ கிட்ட என்ன இன்ட்ரஸ்ட்னு கேட்டுப் பாருங்க’
‘உனக்கு என்னம்மா பிடிக்கும்’ என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கேட்டார் எக்ஸ்.
‘மாஸ்டர் பிடிக்கும்’
‘ரொம்ப நல்ல விஷயம்தானேங்க, வாத்தியாரை பிடிக்கும்னு சொல்ற பசங்க ரொம்ப கம்மியாச்சே, இதுக்குப் போய்…’
‘ஸார், மாஸ்டர்னு அந்தப் பொண்ணு சொன்னது டீச்சரை இல்ல, அந்தப் பெயர்ல …’
‘அப்படியா சொல்ற’
‘ஆமாம் ஸார்’
‘…’
‘சினிமா கூட ஒரு ஆர்ட் தானே, அதுல ஈடுபாடு இருப்பது தப்பில்லையே’
‘…’
‘வெகுஜன சினிமாவை ஒட்டு மொத்தமா ஒதுக்க வேண்டியதில்லையே, மிடில் ஆப் த ரோட் சினிமா கூட இருக்கு’
‘..’
‘ஸார், அந்தம்மா பார்வையே சரியில்லை, நாம கெளம்பறது நல்லது’
‘சரிங்க, பெத்தவங்க உங்களுக்கு அக்கறை இல்லாமையா இருக்கும், பாத்துக்குங்க’
‘வந்துட்டானுங்க கோமாளிங்க’
oOo
காவேரி நகரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
‘ஸார், தடுப்பூசி, டெஸ்ட் எடுக்க வந்த கூட்டம் நின்னுட்டிருக்கு, திரும்பிடலாம்’
‘ஏன்யா பயப்படற, நாம ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஐடியா தான்யா, நமக்கு எந்த பிரச்சனையும் வராது’
‘அப்படியில்லை ஸார். புனைவுலக மனிதர்கள் என்றாலும் நிஜ உலகுக்கு வந்துட்டா அவங்க படற கஷ்டத்தை நானும் பட வேண்டியிருக்கலாம். நம்ம புராண அவதாரங்கள் கூட மனித உருவில் எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டிருக்காங்களே’
‘அத விடு, அங்க பாரு இன்னொரு கேஸ், சூழியல் குற்றம்’ என்று எதிரே சுட்டினார் எக்ஸ்.
அவர்களுக்கு முன்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் அதை நிறுத்தி, மாஸ்கை கழற்றி தெருவில் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பின் மாஸ்கை கூர்ந்து கவனித்தவன், அதை முகர்ந்து பார்த்தான். அதையும் கீழே போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனின் அருகே சென்ற எக்ஸ்
‘இப்படி செய்யறது தப்பில்லையா ஸார், சுற்றுச் சூழலை இப்படி கெடுக்கறீங்களே. இதைப் பத்தியெல்லாம் எவ்வளவோ எழுதறாங்க, சொல்றாங்க அப்படியும் நீங்க இப்படியிருந்தா எப்படி’ என்றார்.
‘எனக்கும் என்விரான்மென்ட் பத்திலாம் தெரியும்’
‘என்ன தெரியும்’
‘பூவுலகின் நண்பர்கள் பெயரை கேள்விப் பட்டிருக்கேன், ஒற்றை வைக்கோல் புரட்சி புக்கை நாலு தடவை படிக்க முயற்சி செஞ்சிருக்கேன் , க்ளைமேட் சேஞ்ச் பத்தி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணறேன், , நம்மாழ்வார் போட்டோவை வாட்ஸாப் ஸ்டேட்டஸா வைக்கறேன், இது போதாதா. நான் ஒண்ணு கேக்கறேன், ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கே அது உனக்கு தெரியுமா’
‘இதெல்லாம் சரி, நீங்க சொல்றதுக்கு நேர் மாறா செய்யறீங்களே. இப்படி பொது இடத்துல துப்பலாமா, மாஸ்க்கை வேற அப்படியே தூக்கி போட்டுட்டுப் போறீங்க’
‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எல்லாம் எனக்கும் தெரியும். அதுக்காக சளி முட்டிக்கிட்டு வந்தா, சேர்த்து வெச்சு வீட்ல போய் துப்பணுமா. மாஸ்க்ல வேற சளி கொஞ்சம் சிந்திடுச்சு, அப்படியும் அதை போட்டுக்கிட்டு, குமட்டிக்கிட்டே போகணுமா. மொதல்ல இதெல்லாம் கேக்கறதுக்கு நீங்க யாருன்னு சொல்லுங்க’
‘டிடெக்டிவ்ஸ்’
‘ஸார், இந்தாளு சளி, கிளின்னு கிலியேத்தறான், கெளம்பிடலாம் வாங்க’ என்று வய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டிடெக்டிவ்ஸாம், லூசுங்க’ என்று முணுமுணுத்தபடி சளி ஆசாமி வண்டியை இயக்கி கிளம்பினான்.
oOo
மெயின் ரோட்டை அடைந்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை கடந்து, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நெருகினார்கள். வெளியே நின்று கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் இவர்களை நோக்கி வந்தார்கள்.
‘லாக்டவுன் பீரியட்ல என்ன வெளில சுத்திட்டிருக்கீங்க’
‘நாங்களும் டிடெக்டிவ்ஸ் தான்’
‘எந்த பீட்’
‘நிஜவுலகும் புனைவுலகும் இணையும் ட்வைலைட் ஸோன் பீட்’
‘என்னய்யா ஒளர்ற’ என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, கூட இருந்தவர்
‘ட்வைலைட்னு ரத்தக் காட்டேரி படம் பார்த்திருக்கேன் ஸார், இவனுங்க மந்திர தந்திரம் பண்றவங்களா இருக்கலாம்’ என்று கூறினார்.
‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ்’ என்றார் வய்.
‘பொண்டாட்டி யார் கூட போறா, புருஷன் எவ கூட இருக்கான்னு பாலோ பண்ணி போட்டோ எடுக்கறவங்க தானே’
‘நோ நோ’
‘ஸார், சில பேர் அப்படிப்பட்ட போட்டோக்களை வெச்சு ப்ளாக்மெயில் கூட செய்வாங்க’
‘என்னய்யா, நீங்களும் அப்படிப்பட்ட கேஸ் தானா’
‘நோ, நாங்க வேற மாதிரி கேஸை தேடி வந்தோம்’
‘எனக்கு சந்தேகமா இருக்கு ஸார், பட்டப்பகல்ல உலாத்தறாங்க, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்’
‘நாங்க சொல்றது உண்மை ஸார்’
‘ஐடி ப்ரூப் காட்டுங்க’
‘…’
‘என்ன?’
‘..’
‘இவங்க கிட்ட எந்த டாகுமென்ட்ஸ் இல்லை போல, ஆண்ட்டி-நேஷனல்ஸ்னு சந்தேகமா இருக்கு .. என்கவுன்ட்டர் பண்ணிடலாமா ஸார்?’
எக்ஸும், வய்யும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.
Ooo
மீண்டும் பொன் நகரை அடைந்த பின் தான் ஓடுவதை நிறுத்தினார்கள். தடுமாறாமல் நிற்பதற்காக அருகேயிருந்த போது ஸ்வச் பாரத் குப்பைத் தொட்டியை பிடித்துக் கொண்ட எக்ஸ், மாஸ்கை கழட்டி மூச்சு வாங்கிக் கொண்டே
‘என்னய்யா இது , நாமே தனியா புலனாய்வு பண்ணி, ரியலிஸ குற்றப் புனைவை உருவாக்கலாம்னா இப்படியாயிடுச்சே.’ என்றார் எக்ஸ்
‘..’
குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தார் வய்.
‘வாசகாஸ் ஏமாற்றம் அடைவாங்களே, அதை நினைச்சாத் தான் ரொம்ப வருத்தமா இருக்கு’
‘அப்படியெல்லாம் ஆகாது ஸார்’ என்றார் வய்.
‘என்னையா சொல்ற ‘
‘இது குற்றப் புனைவு தான்னு வாசகர்களுக்கு புரியும் ஸார்’
‘எப்படி’
‘..’
‘சொல்லுயா’
‘எழுத்தாளரோட குற்றப் புனைவுகள் சிலாகிக்கும் படியா இருக்காது தான், அதுக்காக நாமளே தனியா புலனாய்வு பண்ணப் போறோம்னு கிளம்பியதே பெரிய க்ரைம் தான்னு ரீடர்ஸுக்கு தெரியும். ஸோ, இது குற்றப் புனைவு தான்’
முந்தைய புலனாய்வுகள்:
எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை
சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை