இவள் பிச்சியைப்போல் அலறிச் சிரித்தாள். அடுத்த அறையிலிருந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு தந்த வலியில் இவளும் சிரித்தாள். இந்த இடங்களிலெல்லாம் அவள்களின் சிரிப்புதான்; வெறியாய், அழுகையாய், வலியின் உச்சமாய், உல்லாசமாய், உண்மையாய், பிச்சியாய் சிரிப்பதெல்லாம் அவர்கள் தான்.
நான்கு திசைகளிலும் தீ எரிந்து கொண்டிருந்தது; தலைக்கு மேலும் ஓர் அக்னி. ஊசிமுனையில், இந்த ஐந்து பெரும் வெப்ப வீச்சின் நடுவே அன்னை காமாட்சி தவம் செய்யும் கோலம். துவராடை அணிந்த திரு மேனி, எங்கும் ஆபரணம் பூணாத தவக் கடுமை. அந்தப் பொன் உடலில், தீயின் ஜ்வாலைகளின் நிழல் நின்று ஆடிய மாயத்தில் வார்க்கப்பட்ட சிலை. அம்மையை இப்படிச் செய்த அந்த சிற்பியை யார் அறிவார்? எப்போதும் போலவே அன்றும் சுகுணா கண்களில் நீர் திரள அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பொறுமையிழந்து ராதா ‘வாக்கா, போலாம், பசிக்குது’ என்று கையைப் பற்றி இழுத்தாள். என்றுமே இல்லாத அதிசயமாக அப்பா தன் பெண்கள் மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். தானும் சேர்ந்து சாப்பிட்டார். இவர்களின் அம்மா உயிரோடிருக்கையில் தன் மாமியார் வீட்டில் சாப்பிட்ட நிலாச் சாப்பாடு- ‘கேளு, சுகு, ஒரே ஒரு வெள்ளி போசி. அதுல நெய்யா மினுக்குது, முந்திரியும், திராட்சையும் முழிச்சுப் பாக்குது; கை கையா சக்கரப் பொங்கலு. என்னா ருசி,என்னா ருசி.’ அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; இறுக்கமற்ற அப்பா, சற்று உரக்கச் சிரித்தால், கைகளில் வளையல் சப்தமிட்டால், முகத்தில் பூச்சு அதிகமிருந்தால், கத்துபவர்; அவர் இருந்தால் வீடே மயான அமைதியாகிவிடும். படிப்பிலோ, சித்திரம் வரைவதிலோ, பேச்சுப் போட்டியிலோ, விளையாட்டுகளிலோ, எதில், அவர்கள் எந்தப் பரிசு வாங்கியிருந்தாலும், பாராட்ட மாட்டார், அந்தச் சான்றிதழ்களைக் கண்களால் கூட பார்க்க மாட்டார். அத்தகைய அப்பா, எப்படி இன்று இப்படி?
மறு நாள் காலை எழுந்திருக்கும் போதே பார்த்தாள் சுகுணா அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதை. இந்த வேளையில் எங்கு போயிருக்கப் போகிறார் என்ற எண்ணம் வந்தாலும் ஏதோ ஒன்று நெருடியது. தங்கைகளை எழுப்பி பள்ளிக்குத் தயார்படுத்தி, சமைத்து, இவளும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்தாள். மனம் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது. அவர் மறு நாளும் வரவில்லை என்றதும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார்கள். அவரது அலுவலகம் சென்று கேட்ட போது அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து கி மீ நடந்தே வருவது கூட அறியாமல் நடக்கத் தொடங்கினாள். இந்த இருப்புப் பாதை, இணையாகச் செல்பவை, எங்கேதான் போகும்? இரும்புப் பாம்பின் மேல் பட்டுத் தெறித்து கண்களைக் கூச வைக்கும் சூரியன் குருடாக்கப் பார்த்தான். இலையுதிர்த்து நின்ற மரங்கள், உனக்கு இனி நிழலில்லை என்றன. சருகுகள் கிடந்த நிலத்தில் பச்சைத் தளிர்களைப் பிய்த்துப் போட்டது யார்? இவளுக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.
இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி இறுதியாண்டில் இவள்; அடுத்த தங்கைக்கு 16 வயது; கடைசிப் பெண்ணிற்கு 9 வயது. அம்மா மூன்றாவது பெண்ணைப் பெற்ற ஓராண்டில் இறந்து விட்டார். அப்பா எங்கு போயிருப்பார்? ஏன் விருப்ப ஓய்வைப் பற்றிச் சொல்லவில்லை? அப்படியே வேலையை விட்டாலும் வீட்டை விட்டு ஏன் போக வேண்டும்? ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? மூவரும் பெண் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு தகப்பனா? இல்லை அவர் அப்படிப்பட்டவரில்லை-ஏதோ தோன்றி எங்கோ போயிருக்கிறார்-வந்துவிடுவார் சீக்கிரம்.
இவளைக் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்தில் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. யாருக்கு என்று குறிப்பிடாத கடிதம்-அன்போ, ஆசிகளோ சொல்லப்படாத ஒன்று. “நான் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்தப் பணத்தில் பாதியை சுகுணாவின் கணக்கில் போட்டுள்ளேன். அவளுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அம்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை. மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் இரண்டாம் மனையாக வர யாரும் சம்மதிக்கவில்லை. என் இச்சைகள் என்னை வரம்பு மீற வைத்துவிடும் என பயப்படுகிறேன்-என் பெண்களையே நான்….ஐயோ… நான் போய்விடுகிறேன், நீலாவோடு.”
இவள் புரைக்கேறச் சிரித்தாள். அவள் சிணுங்கிச் சிரிப்பது போலிருந்தது.
காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெறச் சென்றபோது சரவணன் பரிவுடன் பார்த்தான்; உதவுவதாகச் சொன்னான். உயிரான உறவு என்று நினைத்த அப்பனே ஓடிப் போய் விட்டான், இவன் நண்பனுமில்லை, உறவுமில்லை. என்ன உதவி கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதிலும் சிறு வயதிலிருந்தே போலீஸ் என்றாலே பயம்.அம்மா இறந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அவள் பக்கத்து உறவுடன் இவர்களுக்குப் பழக்கம் விட்டுப் போயிற்று. அத்தை மட்டும்தான் தந்தை வழியில். “உங்கப்பன் எப்பவுமே சொய நலம் புடிச்சவன். உங்க மாமன் ரிடயர் ஆகியாச்சு. வட்டியில கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குனு கடக்கோம். நீ கெட்டிக்காரி, சுகு. வெவரமா பொழச்சுக்க.” அத்தையை விட, அப்பனை விட தான் எப்படி கெட்டிக்காரியென இவளுக்குப் புரியவில்லை.
மூவரின் படிப்பும் குடும்பச் செலவுகளும் இவளை பயமுறுத்தின. வாடகை அதிகம் எனத் தோன்றி இடத்தை மாற்றினாள்; ஏதேதோ சொல்லி அட்வான்ஸை வீட்டுக்காரர் தர மறுத்தார். சரவணனிடம் போகலாமா என்று நினைத்தவள் தயங்கி விட்டுவிட்டாள்.
புது வீடு, கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம்; காற்று, வெளிச்சம் போன்றவை தவறியும் வராத இடம். ஆறு வீடுகளுக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை. எதிலும் தண்ணீர்க் குழாய் கிடையாது. கைபம்ப்பில் அடித்து எடுத்துச் செல்ல வேண்டும். சின்னவள் கௌரி கூடப் பரவாயில்லை, ராதாவைத்தான் சமாளிக்கவே முடியவில்லை. இளமையின் தலை வாசலில் நிற்பவள், அவள் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டாள், பறக்கத் துடித்தாள்.
‘நீ மட்டும் புதுப் புடவை கட்டிப்பியா? எங்களுக்கு யூனிஃபார்ம் தான் வாங்கித் தருவியா?’ என்று ஆங்காரப்பட்டாள்.
“காலேஜுக்கு நல்ல புடவ இல்லடி; உங்களுக்கும் புதுசுதான வாங்கிருக்கேன்.”
‘அப்பா பணத்த உனக்கு மட்டும்னு நெனைக்காத.’
அவளைத் திட்டுவதற்கு எழுந்த நாவை அடக்கிக்கொண்டாள்-நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு அழுகையும், பூசலும்?
இந்தத் தீ எப்போது பொசுக்குமோ, யாரறிவார்?
‘நா பௌடர் டப்பா வாங்கினப்போ கத்தினியே, இப்பக் கொழச்சுக் கொழச்சுப் பூசிக்கற.’ என்றாள் ராதா.
“இன்டர்வ்யூவுக்குப் போறேண்டி, நல்ல வேல இது, கடச்சா நம்ம ப்ராப்ளமெல்லாம் தீந்துடும்.”
நிரந்தரப் பணியில்லை அது. ஆனாலும், ஆறு மாதங்கள் அவளுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. அங்கே சங்கர் அறிமுகமானான். அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முக்கிய இயந்திரப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு தொழிற்கூடம் அவனுடையது.
இன்வாய்ஸ், டெபிட் நோட், பேமென்ட் சம்பந்தமாக அவளைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். தன் கடந்த காலத்தை அறியாத, தன்னைப்போலவே அதிகம் பேசாத, சுமாரான தோற்றமுள்ள அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அவளை விரும்புவதாகச் சொன்ன போது வானத்தில் பறந்தாள்; பதில் சொல்லவில்லை. அடுத்த முறை சந்திக்கையில் தன் கதையைச் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால், அவன் தன் அக்காவுடன் வீடு தேடி வருவானென சுகுணா எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராதா, கௌரி, அவள் என மூவரும் வீட்டிலிருந்த ஞாயிறு மதியம்; அவர்களைப் பார்த்த போதே ராதா முகம் சுளித்தாள்.
‘வீட்ல சுகு பெரியவ; எங்கள விட்டு ஓடிப் போன அப்பா மாரி இவள விட்டுட முடியாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? எங்களயும் சேத்து நீங்க பாத்துக்கணும், வேறென்ன பண்றது?’ சங்கரின் அக்கா அரண்டு போய் விட்டாள். இந்த அதிரடியை அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும், சிரித்துக்கொண்டே விடை பெற்றுச் சென்று விட்டார்கள். மறு மாதத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை இவளால் அடக்க முடியவில்லை; அது கண்ணீராகிக் கரைந்தது.
தான் ஏன் சங்கரைக் கல்யாணம் செய்து கொண்டு இவர்களைத் தவிக்க விட்டு விட்டுப் போக்க்கூடாது என்று குரூரமாக நினைத்தாள். அந்த எண்ணத்தின் சூடு அவளாலேயே பொறுக்க முடியவில்லை
இவள் தினமும் பார்க்கும் ஒரு குட்டையில் ஆகாயத்தாமரையாக மண்டியிருக்கும்; பாசியும் கரும்பச்சையெனத் திரண்டிருக்கும். இதென்ன பாழானகுளம் குட்டையாகிவிட்டதா? இதில் மீன்களாவது இருக்குமா? இப்போது இவள் வேலை பார்க்கும் சிறு அலுவலகம் செல்ல இந்தக் குட்டையை ஒட்டித்தான் செல்ல வேண்டும். அதில் அடுமனை, சுடுமனையில் பதார்த்தங்கள் செய்து சுற்று வட்டாரத்தில் கொடுத்து வந்தார்கள். சில்லறை வியாபாரிகள் அங்கே கொள்முதல் செய்ய வருவார்கள். தனியாட்களுக்கு நேர் விற்பனையில்லை. பூமியில் பதித்த அடுப்பில் அங்கே அள்ளி அள்ளிக் கரியைக் கொட்டுவார்கள். கணகணவென்று கனலும், தகிக்கும், ஆனால் தீ அணையக்கூடாது. நெருப்பில் வாட்டும் பண்டம்; தீயில் வேகும் பாண்டம். அலுவலகம் கூட அந்தக் குட்டையைப் போல இருப்பதாக நினைத்தாள் இவள். உயிர்ப்பே இல்லாத இடம்; சின்னஞ்சிறு செய்திகளை ஊதிப் பெரிதாக்கி ஆபாசமாகப் பேசி மகிழும் மனிதர்களுடன் இவள் வேலை செய்தாள். எல்லாவற்றிலும் வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள் இவளைப் பயமுறுத்தின; கூடிய விரைவில் இந்த வேலையை விட்டு விட வேண்டும். கண்களை மிதித்து, கண்களைத் தவிர்த்து, ஊரும் கண்களை உதறி, தன் கண்களால் எரித்து, ஒரு தீயைச் சூடிக் கொண்டாள். கண்களை மீறி கைகள் வர முயன்றன; தவிர்த்துக் கொண்டே தவித்தாள்.
‘ஒரு முப்பதாயிரம் வேணும். நா படிச்சிண்டே ப்யூட்டி பார்லர் வக்கப் போறேன்.’ என்று புது பிரச்சனையைக் கொண்டு வந்தாள் ராதா. எத்தனை சொல்லியும் கேட்காதப் பிடிவாதம்; அழுகை, சாப்பிடாமல் வீம்பு, இத்தனைப் பணத்திற்கு எங்கே போவாளிவள்? ஆனாலும், ஒரு நப்பாசை-ஒருக்கால், ராதா செட்டில் ஆகிவிட்டால் இவள் சங்கரை எப்படியாவது தேடிப் போவாள். அந்த எண்ணமே உற்சாகமாக இருந்தது. அந்தக் கம்பெனி முதலாளியிடம் கேட்டாள். ஒரு சூட்டின் தழும்பு ஆறும் முன்னே மற்றொன்று கோலை நீட்டுகிறது. பணத்தை தந்த முதலாளி பின்னர் உடலைக் கேட்டான்; உடல் அடகில் வைக்கப்பட்டது. புழுவெனத் துடிக்க வேண்டியிருந்தது, செவிடென நடிக்கப் பழகிக் கொண்டாள்.
ராதாவின் பார்லரில் ஓரினப் பாலியல் சேர்க்கை கட்டாயப் படுத்தி நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவளே சம்பளத் தகராறினால் கிளப்பிவிட, அவளைச் சேர்ந்தவர்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். ராதாவை போலீஸ் அரெஸ்ட் செய்தது.
முன்னர் அப்பாவிற்காக, இப்போது தங்கைக்காக மீண்டும் காவல் நிலையம். முன்னரே சூட்டில் வெந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நெருப்பு குளிர்ச்சியாக இல்லையே! இப்போது சரவணன் பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் ஏதோ தேடுவது இவளுக்குப் புரிந்தாலும், இனி என்ன செய்வது? தனிமையில் வெறி பிடித்துச் சிரித்துக் கரைந்து அழுதாள். நெருப்பில் வேகு முன், உயிரோடு எரிப்பது என்பது இதுதானோ, என்னவோ?
அந்தக் கடையும் கைமாறவே வேலை போய்விட்டது. ராதா வீட்டிற்குள்ளே முடங்கிப் போனாள். படிப்பும் பாதியில் நின்றது. அப்போதுதான் மின்னலெனத் தோன்றியது இவளுக்கு. முப்பதாயிரம் சம்பாதிக்கும் திறன் இவளிடம் இருக்கிறது. முயன்றால் இன்னமும் கூட சம்பாதிக்கலாம். இரவு நேர பேக் ஆஃபீஸ் வேலை என்று சொன்னாள். முதலில் 30% கமிஷனுக்கு ஒத்துக்கொண்டாள். அவன் பிறரிடம் 10% தான் வாங்குகிறான் எனத் தெரிய வந்த போது தன் அத்தனைத் தோல்விகளுக்கும் மொத்தமாக அவனைச் செருப்பால் அடித்தாள், ஆங்காரக் குரலெடுத்துக் கத்தினாள்.
“பொணந் தின்னிக் கழுகே, ஆரைடா ஏமாத்ற? வலியாப் போச்சுது பொழப்பு, சொரணயத்தும் நிக்குது. நாத்தமா வரானுங்க, இம்சிக்கிறானுங்க, காக்க கொத்தற மாரி கொல்றானுங்க. செத்துச் செத்து பொழக்கறேன் நானு. எம் உடம்பு நோக நீ கொள்ள அடிப்பியா? கொட்றா எம் பணத்த, புழுத்த நாயீ என்னைய இன்னான்னு எட போட்ட; காளிடா நானு, வைசூரிடா” கத்திக்கொண்டே அடித்தாள் அவனை. அப்பனையும், ராதாவையும், அந்தக் கம்பெனிக்காரனையும் நினைத்துக் கொண்டு அடித்துத் துவைத்தாள்.
‘தே… நாயே, உன்னயப் பொரட்டி அடிப்பேன்டி; கைமா பண்ணிடுவேன் கைமா; யார்ட்ட ஆட்ற? ஒரு ஆளு உனக்கு இனி வர மாட்டான் பாருடி, சிறுக்கி. எத்தினி பேருக்கு நா கொடுக்கணும் தெர்தா வுனக்கு? மேனி மினுக்கிகினு நீ பூடுவ. எங்கொத்தா தாலி நா அறுக்கணும்டி. என்னயவா அடிச்ச, பாத்துகினே இரு உன்னயப் பலி போட்டு உங்கிட்டயே மொத்த பணம் அட்ச்சுடுவேன். வும் மவுரறத்து வீசலேன்னா நா என்ன ஆம்பள? ஓங்கி அவளைச் சுவற்றில் அடித்து விட்டு அவன் போய்விட்டான். தலை புடைத்து வீங்கி வலித்தது. கௌரி மட்டும் அழுதது. இரயில் நிலையத்தில் எஃகுத் தூணில் மோதிக்கொண்டதாகச் சொன்னாள். இரு நாட்கள் கழித்து தொழிலுக்கு வந்தாள்
சும்மாதான் சொல்கிறான் என்று நினைத்தாள்; நாளைக்கு வந்தால் நைச்சியம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டாள்.
ஒரு வாரமாகத் தொழிலில்லை. அவனையும் காண முடியவில்லை. வாரம் மாதமாயிற்று. சரவணனிடம் சொல்லி காட்டிக் கொடுத்துவிடலாம் என்று கிறுக்குத்தனமாகத் திட்டமிட்டாள். மூவரும் விஷம் சாப்பிடலாமென நினைத்தாள். தங்கைகளை விட்டுவிட்டு தான் எங்காவது போய்விட்டாலென்ன என நினைத்தாள். ஓடிப்போன அப்பாவைப் பழித்த தான் மட்டும் இப்போ ஓடலாமா, அப்படியுமே எங்கே போக முடியும்? சங்கரோடு ஓடிப் போயிருக்க வேண்டும். இப்பவும் சிரித்தாள். சரவணனை நினைக்காமல் சங்கரை ஏன் விரும்பினாள் இவள்? அவன் நம்பிக்கையாகத்தானே தெரிந்தான். மனம் அவளைச் சுழற்றி அடித்தது; “இந்தச் சேற்றிலேயே உழல உனக்கு உள்ளூரக் க்ரூர ஆசை; குடும்பத்துக்காக உழைக்கறவன்னு ஊரு உன்னைக் கொண்டாடனும்; அப்பன் விட்டதைச் செஞ்சவன்னு உன் அத்த சொல்லணும்; உன் நிலை தெரிஞ்சா சங்கர் விட்டுப்போய்டுவான்னு கணக்குப் போட்டிருக்க நீ; ஆனா, சரவணன் சமாளிச்சிருப்பானோன்னு உதறின அவன. உனக்கு சில வைப்பாங்கன்னு மிதப்பு.”
இவள் பார்த்திருந்த காமாட்சி கோயிலில் ஒரு ஹோமம் செய்தார்கள் ஐந்து குண்டங்களில் தீ வளர்ந்தது; நெய்யும்,மலருமாகச் சொரிந்தார்கள்; விறகுச் சுள்ளிகள், விராட்டிகள் படபடவென்று வெடித்தன. புடவை, பூ மாலை, மங்கலப் பொருட்களை அக்னியில் வார்த்து பூரணாஹூதி நடந்தது. தீ குண்டத்திலிருந்து குதித்து எழுந்தது. காற்றில் நடனமாடியது. செந்தளிர் நாக்குகளால் உண்டு சிரித்தது. கங்கின் உஷ்ணம் அரங்கில் நிரவிப் பரவியது. இவளே அத்தனைத் தீயாகவும், அது உண்ணும் பொருளாகவுமான மாயமென்ன?
அன்றும் இவள் மனம் தளராமல் தொழிலுக்குக் கிளம்பினாள். அவனை அங்கே பார்த்ததும் பேச விரைந்தாள். ஒரு பெண்ணை முகத்தை மறைத்து அழைத்து வந்த அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் பக்கத்து அறையில் நுழைந்தான். முகம் தெரியாமல் ஆடை மட்டும் தெரிந்தது- அந்தக் கத்திரிப்பூ பாட்டமும், பிங்க் நிற டாப்ஸ்ஸும் இவள் அறிந்த வாசம்.
அதிர அதிரச் சிரித்தாள். எதிர் வரிசையில் பெரும் மர வரிசை மறைவில் நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து சரவணன் இறங்குவதைப் பார்த்தாள். பிச்சியைப் போல் இவள் சிரிக்க அவளும், அவள்களும் சிரித்தார்கள்.