ஒன் மொமெண்ட் ப்ளீஸ் – விஜயகுமார்

விஜயகுமார்

எங்கள் வாசற்படியில் அனாமத்தாக ஒரு ஆணுறை கிடந்தது. புதிய பிரிக்கப்படாத ஆணுறை. இந்த நாளின் அந்தி இப்படியாக கழியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல் தான். படிக்கட்டு ஏறி வலம் திரும்பினால் நான் இருக்கும் வீடு. இடம் திரும்பினால் இன்னொரு வீடு. ஊரிலிருந்து அமெரிக்கா கிளம்பும் போது கவனமாக இரு கவனமாக இரு என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தார்கள். நான் துளைக்கும் துப்பாக்கி, குத்திக் கிழிக்கும் கத்தி, உடைந்து விழும் விமானம், அந்தரத்தில் தூக்கும் சூறாவளி என்று எதிர்பார்த்தால். இப்படி ஒரு சோதனை. நான் எப்படி இதற்கு எதிர்வினை செய்வது. யாராவது என்னை பார்க்கிறார்களா? இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். என்னை யாரோ பார்க்கிறார்கள் என்றே எடுத்துக்கொண்டு குனிந்து கைக்குட்டையால் அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் எரிக்கா என்று பேனாவால் எழுதி இருந்தது. அதை அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தேன். எங்கள் இரட்டை வீடு போலவே அந்த தெரு முழுதும் உள்ள இரட்டை வீடுகளில் யாரும் வெளியே காணவில்லை. திரும்பி எங்கள் வீட்டைப் பார்த்தேன். அதில் மற்றொரு வீட்டின் பெரிய ஜன்னலின் திரைக்கு பின்னால் ஒரு அசைவு. எனக்கு தெரியும் என்னை யாரோ பார்க்கிறார்கள் என்று. நல்ல வேலை அதற்கு தக்கவாறு நடந்து கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ப்ரெசென்ட்டேஷன் தயார் செய்து கொண்டிருந்தேன். திங்களன்று அலுவலகத்தில் நான் ஒரு பெரிய பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலதரப்பட்டவர்கள். என்னுடைய மேலாளர் வேலையிலிருந்து நின்று விட்டார். ஆகையால் அவருடைய மேலாளர் என்னை நியமித்திருந்தார். எனக்கு இது நல்வாய்ப்பு. களைப்பாக உள்ளது என்று ஒரு சிகரெட் பற்ற வைக்க வெளியே வந்தேன். அங்கு ஒரு பெண் அறக்கப் பறக்க எதையோ வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் சடசடவென்று அள்ளியதை அனைத்தும் ஒரு பையில் போட்டுக்கொண்டு குனிந்தவாறே என்னைக் கடந்து வாசற்படிகளில் ஏறி இடப்பக்கம் திரும்பி உள்ளே சென்று விட்டாள். என் எதிர் வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். உணர்ந்த உடனேயே இன்னொன்றையும் சேர்த்து உணர்ந்தேன். அதை உறுதி செய்துகொள்ள வாசல் முழுவதும் கண்களை அலைய விட்டேன். தடயம் ஏதும் கிடைக்கவில்லை. திரும்பி அந்த ஜன்னலைப் பார்த்தேன். அதன் திரை அசைந்து கொண்டிருந்தது.

நான் எடுக்க வேண்டிய பயிற்சி வகுப்பு அன்று பெரிய சொதப்பல் இல்லாமல் சென்றது. எழுதிவைத்து மனனம் செய்ததை ஒரு ராகம் போல் பாடிவிட்டு வந்தேன். அன்றைய வகுப்பிற்கு சொற்பமானவர்களே வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் வயோதிக வாடிக்கையாளர்கள். எல்லோரும் தூங்கி வழிந்தனர். எனக்கு இது வசதியாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் லட்டினோ அரேபியர் ஆசியர் கிழக்காசியர் என்று வண்ணக் கோலப்பொடி போல இருந்தார்கள். வீடு வரும் வழி நெடுகிலும் மனம் எதிலும் லயிக்காமல் இருந்தது. ஏதேதோ சிந்தனை. தூரத்திலிருந்து வரும்போதே அவளை கண்டுகொண்டேன். மீண்டும் வாசலில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக சென்று அவள் அருகில் கிடந்ததை எடுத்துப் பார்த்தேன். அதில் ‘எரிக்கா, யு ஆர் ஏ ஃபைன் ஃபக்’ என்று எழுதி இருந்தது. அதை வெடுக்கென்று அவள் பிடுங்கினாள். அரைக்கணம் என் கண்களை சந்தித்தாள். சஞ்சலம் ஏதும் இல்லாத முகம் என்றாலும் அதன் கண்கள் நீர்மை கோர்த்திருந்தது. பிடுங்கியதை பையில் போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் உள்ளே விறுவிறுவென்று சென்றாள்.

அன்று முன்னிரவு மனம் அலைக்கழிப்பாகவே இருந்தது. அலுவலகத்தில் என்னை நிரூபித்துக்கொள்ள வேண்டும். அதன் படபடப்புடன் இவளின் உரசல் வேறு. அவளது வட்ட முகம். வெண்ணிற தோல், மூக்கின் கீழ் உள்ள மென்மயிர், பரட்டைக் கூந்தல். முதல்தர அழகி இல்லை. என்றபோதும் என் மனம் அலுவலக சோர்வைத்தாண்டி அவளை ஏந்திக் கொண்டிருந்தது. அன்றிரவு என் அந்தரங்க ஆசுவாசத்திற்கு அவள் பிம்பம் உதவியது. இதுநாள் வரையில் லட்சிய அழகிகளே என் கற்பனையில் அரங்கேறி இருக்கிறார்கள். அன்றிரவு அவள் விதிவிலக்கு. முடிந்தபின் ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். உண்மையை சொன்னால் எனக்கு ஒரே எதிர்வீடு; அதில் ஒரே ஆள்; அது ஒரு பெண். அவ்வளவே. மேலும் காரணம் கேட்டால் அவளது கண்களில் தேங்கி நின்ற நீர். அந்த மெல்லிய படலம். அந்த நீர் பரப்பு. அதில் தென்படுவது ஒரு பலகீனம். என்னை கட்டுக்குள் கொண்டுவர முடியும்; ஆக்கிரமிக்க முடியும் என்ற பதாகை. மிரட்டினால் மிரண்டுவிடுவேன்; அடித்தால் அழுதுவிடுவேன் என்ற கூற்று. வன்முறையின் சாத்தியத்தை அஞ்சும் கண்கள். அதுவே என்னை வீறுகொள்ளச் செய்தது. அவளது பெயர் எரிக்கா வாக இருக்கக்கூடும்.

அலுவலக நண்பரிடம் ஆணுறையை ஒருவருடைய பெயர் எழுதி அவரது வீட்டின் முன் போடும் சடங்கின் காரணம் பற்றி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “இந்த நாடு ஒரு கலவையான நாடு. அதுல பல கூறுகள் வந்து சேரும். அப்படி எங்கிருந்தோ புதுசா வந்து சேர்ந்த ஒரு கீழ்மையான பழக்கம் இது. ஒரு பெண்ணை அவமானம் செய்யுற நோக்கத்தோடு செய்யறது. உன்ன எப்போ வேணும்னாலும் கெடுத்துப்போடலாம். நீ என்னோட லிஸ்டில் இருக்க. என்னிக்கு இருந்தாலும் நீ மாட்டுவ. அப்படீன்னு சொல்றது.” என்றார்.

“என்ன கிறுக்குத்தனம்….”

“நம்ம ஊரிலேயே கிறுக்கனுங்க இருக்கானுங்க. இந்த ஊருக்கு என்ன வந்தது. இங்கயும் நிறைய இருக்கானுங்க. இன்னும் சொன்னா ஒருவர் வீட்டுக்கு முன்னாடி வந்து மலம் அள்ளி வெச்சுட்டு போவானுங்க. நாம காசு வெட்டிப் போடுறோம் இல்ல. அந்த மாதிரின்னு வெச்சுக்கோ.”

அடுத்தநாள் அவள் வீட்டை விட்டு வெளியே வரும்வரை நோட்டம் பார்த்து தற்செயல் போல் நானும் வெளியே வந்தேன். அவள் வீட்டை பூட்டிக் கொண்டிருக்கும் போது நானும் பூட்டுவது போல் திரும்பிக்கொண்டு மெலிதாக, “ஐ நோ வாட் யு ஆர் கோயிங் த்ரூ” என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். நானும் திரும்பினேன். “ஒஹ் ரியலி?” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு உடையை நேர் செய்தவாறு வெளியே சென்றாள். அவள் சென்ற பின் “எஸ் ரியலி….” என்றுகொண்டேன். கனவில் வந்து கட்டளைக்கு காத்துக்கிடக்க எவ்வளவோ அழகிகள். இவள் வந்தாள் இப்போது சென்றுவிட்டாள். அடுத்த வேலையைப் பார்ப்போம்.

அன்று பயிற்சிக்கு புதிய வாடிக்கையாளர்கள் அரங்கு நிரப்பிக் கொண்டனர். எனது மாமூல் மனப்பாட வித்தை அன்று என்னை கைவிட்டது. குரல் நடுங்க உடல் வியர்க்க கால்கள் உதற அன்றைய கப்பலை கரை ஏற்றினேன். என் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்னிடம் வந்து ஆறுதலாக அடுத்தமுறை நன்றாக செய் என்று சொல்லி இருக்காவிட்டால் நானும் அவள் போல அழுதிருக்க தேவையில்லை. நல்லவேளை அவர் மட்டும் தான் என் கண்களின் நீர் படலத்தை பார்த்தார். அடிபட்ட சோகத்துடன் வீடு திரும்பும்போது எரிக்கா வாசலில் நின்றாள். அவளை சட்டை செய்யும் அளவிற்கு அன்றைய நாள் உற்சாகமாக இருக்கவில்லை. நான் ஒதுங்கிப் போக எத்தனிக்கும் போது, “நான் நம்புகிறேன், நான் உங்களிடம் ஒரு மன்னிப்பை சமர்ப்பிக்க கடன்பட்டிருக்கிறேன் என்று.” என்றாள். மூளையின் கட்டளையின்றி நான், “ஒஹ் உண்மையாகவா….” என்றுவிட்டு உள்ளே சென்றேன்.

என் கண்கள் நீர் படலம் கோர்த்த அந்த தருணத்தையே நான் எண்ணிக் கொண்டிருந்தேன். கும்பலின் முன்னால் ஒடுங்கி இருக்கும் நான். எரிக்கா என்னவாக இருந்திருப்பாள் அப்போது. அப்போது தோன்றும் எண்ணமெல்லாம் செயலெல்லாம் தப்பி ஓடுவது, பொந்துக்குள் புகுந்து கொள்வது. நான் அதைத்தான் யோசித்தேன். எரிக்கா அதைத்தான் செய்தாள். உரசலுக்கு பின்பும் அவள் இன்று அணுக்கமாக தோன்றினாள்.

அடுத்து வந்த நாட்களில் நாங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டோம் முகமன் சொல்லிக்கொண்டோம். அதற்கிடையில் எனக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் வேறு ஒரு லட்சிய அழகி என் கனவை அக்கிரமித்திருந்தாள். எரிக்கா எதிர் வீட்டுப் பெண்ணாக மட்டுமே ஆகிப்போனாள். அந்த அங்காடிக்கு அடிக்கடி செல்வேன். அந்த லட்சிய அழகி அங்கே விற்பனை பிரிவில் நின்றிருப்பாள். சிகாகோவில் கணிசமானோர் லட்டினோ இன மக்கள். அவர்களுக்கு இந்திய உடற்கட்டும் ஜப்பானிய தோல் நிறமும் இருக்கும். அவர்களுக்கு என்று பிரத்தியேக சந்தை உருவாகி வந்திருந்தது. அவர்களுள் சிலருக்கு ஆங்கிலம் தெரியாது ஸ்பானிய மொழி மட்டும்தான். என்னுடைய லட்சிய அழகிக்கு ஸ்பானிய மொழி மட்டும் தான் தெரியும் போல. அவளிடம் ஆங்கிலத்தில் எது கேட்டாலும் “ஒன் மொமெண்ட் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து விடுவாள்.அவளை நோட்டம் விடுவேன். அவளும் என்னை நோட்டம் வீட்டுக் கொண்டிருந்தாள். நான் எது கேட்டாலும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான். அவள் என்னை பார்க்கிறாள் என்பதற்காகவே தினமும் செல்வேன். தினமும் எனக்கு ஒரு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ கிடைக்கும். அவள் அன்று என்ன ஒப்பனை செய்திருக்கிறாள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள் என்ன சடைப் பின்னல் இட்டிருக்கிறாள் என்பதை பார்க்க விருப்பம். அவள் எனக்கு தோதான உயரம், என் உள்ளங்கையிற்குள் அவள் உள்ளங்கை அடங்கிவிடும், அவள் அங்கங்கள் அனைத்தும் எனக்கான பிடிமானம். அலுவலக திறன் இயலாமைக்கும் அதன் விளைவாக உள்ள ஆற்றாமைக்கும் அவளைப் பார்க்க செல்வது ஒரு நல்ல வடிகால். அவளது ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ என் உள்ளத்தில் எப்போதுமே இசைந்து கொண்டிருக்கும். நான் தினமும் அந்த அங்காடி செல்வதை எரிக்கா கவனித்திருக்க வேண்டும். நான் எப்போதும் நடந்துதான் செல்வேன். என்னிடம் கார் கிடையாது.

அன்று அவள் வெளியே வந்து “நீங்கள் அங்காடிக்கு செல்கிறீர்களா?” என்று கேட்டாள். நான் ஆமாம் உங்களுக்கு ஏதேனும் வாங்கி வர வேண்டுமா? என்று பவ்யமாக கேட்டேன்.

“நானும் அங்கேதான் செல்கிறேன். நானும் உங்களுடன் வரலாமா?”

“நான் நடந்து செல்வேன். தாமதமாகி விடும்”

“இல்லை, உங்களுடன் வந்தால் சிறிது பாதுகாப்பாக உணர்வேன்”

எனக்கு அந்த சொற்கள் கிரீடம் வைத்தது போல் இருந்தது. பண்பானவன் என்ற அங்கீகாரம் போல். இன்னும் பணிவு கூடி வந்தது. “வாருங்கள் நான் துணைக்கு வருகிறேன்” என்றேன்.

ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நடந்தேன். கண்டிப்பாக அவள் கண்களை மட்டும்தான் பார்த்துப் பேசவேண்டும் என்ற அவசரகால சங்கற்பம் எடுத்துக் கொண்டேன்.

செல்லும் வழியில் அமைதியாகவே சென்றோம். கண்டிப்பாக நான் எந்த பேச்சும் ஆரம்பிக்க கூடாது. அவளுக்கு வாய் கொஞ்சம் கோணல். சிரித்தால் ஒருபக்கம் இழுக்கும். லட்டினோக்களைப் போல் நீவிய கேசம் இல்லை. நெளிந்து நெளிந்து போகும் கொண்டை இடப்படும் சிதறல் முடி. இறுகிய புஜங்கள். அவள் நடை கொஞ்சம் ஆண் தன்மை கொண்டிருக்கும். நன்றாக கவனித்தால் அன்றைய நடப்ப வழக்கிலிருந்து அவள் விலகியே இருப்பது தெரியும். அவளுடன் நடந்து வருகிறேன் என்ற முழுப் பிரக்ஞையுடன் இருந்தேன். அதனால் என்னவோ எனக்கே அந்நியமான ஒரு உடல் மொழி என்னிடம் தென்பட்டது. அந்த உடல் மொழி வசதியாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. அதையே ஏற்று நடித்துக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர் பார்க்காமல் எனது நிறுவன இயக்குநர் எங்கள் எதிரில் நடை பயிற்சி வந்தார். என்னைப் பார்த்து நிற்காமல் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி சமிக்ஞை செய்தார். நான் என் பாவனையை சடுதியில் கைவிட்டு அவரை நோக்கி மேல் உடலை மட்டும் கொஞ்சமாக வளைத்து அரை வணக்கம் போல் என் வலது கையை நெஞ்சுவரை ஏற்றி இறக்கினேன். அவர் கடந்துவிட, நான் மீண்டும் தன்னிலை மீண்டு மீண்டும் புதிய உடல் மொழிக்கு திரும்பினேன். அவள் அதை கவனித்தாள்.

“நீங்கள் இந்தியர் தானே?”

“என்னுடைய வணக்கம் உங்களுக்கு காட்டிக்கொடுத்து விட்டதா?”

“நீங்கள் தென் அமெரிக்கர் என்றுதான் முதலில் நினைத்தேன்.”

“நீங்கள்?”

“ஆஃப்கன்..” என்று விட்டு அவள் மேல் உடலை வளைத்து அரை சலாம் செய்து காண்பித்தாள்.

நான் சிரிக்க அவளும் சேர்ந்து சிரித்தாள். “இங்கே நம்மை போன்றோர் அரை மக்கள்தான். அரை ஜீவனம்தான். அரை உரிமைதான். அரை வணக்கம் தான்.” என்றாள்.

அவள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே சென்றாள். ஆஃப்கன் மக்கள் இங்கே இன்னும் இறுகிய சமூகமாகவே இருப்பதை; லட்டினோ மக்கள் தங்களுக்கான ஒரு கலாச்சாரத்தை சமைப்பதை; அரசியல், கலை, மக்கள், பிரதேசம் என்று என்னென்னவோ. நான் ஈடு கொடுத்துக்கொண்டு வந்தேன். பெரும்பாலும் கேட்டுக்கொண்டு. அவளை ஆச்சரியத்தில் உள்ளாக்க; நின்று கவனிக்க வைக்க; என்னிடம் பகிர்ந்துகொள்ள எந்த சரக்கும் அப்போதைக்கு இல்லை. நாங்கள் அங்காடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் இருக்கும் அங்காடிக்கு.

ஒன்றாகவே சென்று சிறிய சிறிய பொருட்களை வாங்கினோம். அவள் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் அரபியும் அச்சிடப்பட்டிருந்தது. நான் எடுத்த பொருட்களில் ஆங்கிலமும் சில இந்திய மொழிகளும். “அதை சுட்டிக்காட்டி நாம் நம் சென்ற காலத்தை இன்னும் பொறுக்கித் திரிகிறோம்” என்றாள். அவள் பட்டியலில் மீண்டும் ஒரு புள்ளி. நான் பின்தங்கி அதலபாதாளத்தில்.

எரிக்காவிற்கு தெரியாமல் நான் என் லட்சிய அழகியை பார்த்து பார்த்து மீண்டேன். எரிக்கா என்னிடம் வந்து “அந்த பெண் உன்னை பார்க்கிறாள்” என்றாள்.

என் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் “தெரியும்” என்றேன்.

“தெரியுமா?. அப்படியானால் அவள்…”

“இல்லை… அவளுக்கு ஆங்கிலம் தெரியாது…”

“இதற்கு எதற்கு ஆங்கிலம். போய் பேசிப் பார்.”

“நான் பல முறை பேசி இருக்கிறேன். அவளுடைய ஒரே பதில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான்.”

எதற்கு ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’? என்றாள்.

“நீயே கேட்டுப்பார்.” என்றவுடன் எரிக்கா சிறிதும் தயங்காமல் அவளிடம் சென்றாள். நான் தூர நின்று பார்த்தும் பார்க்காமலும் கவனித்தேன்.

எரிக்கா அவளிடம் என்னை நோக்கி ஏதோ காண்பித்து பேசினாள். என் அடிவயிறு சப்தமிட்டது. வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். எரிக்கா கிண்டலாக சிரித்துக் கொண்டு திரும்பி வந்தாள்.

“பைத்தியம், அவளிடம் என்ன சொன்னாய்?”

“கண்டிப்பாக சொல்லவேண்டுமா?”

“சொல். என்னை காண்பித்து என்ன சொன்னாய். உனக்கு ஸ்பானிய மொழி தெரியுமா? அவள் என்ன சொன்னாள். என்னை காக்க வைக்காதே”

எரிக்கா சிரிப்பை அடக்க முடியாமல், “எனக்கும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ தான் சொன்னாள்”.

எனக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரிக்க அவளை பார்த்து நான் சிரிக்க அவள் மேலும் என்னை பார்த்து சிரித்தாள். நாங்கள் வெளியே ஓடிவந்து சிரித்தோம். விலா எலும்பு வலிக்கும் வரை சேர்ந்து சிரித்தோம். கண்களில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது சிரிப்பு புன்னகையாக மாறியிருந்தது.

“ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்படி சிரித்து.” என்றாள்.

நாங்கள் வீடு திரும்பினோம். வரும் வழியில் என் உடல் மொழியை பாவனையை கைவிட்டு இயல்பாக இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக நடந்தோம். அவள் எங்கிருந்தோ ஆரம்பித்தாள். “யோசித்துப் பார்த்தால் நம்மால் சில இடங்களில் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல முடிவதில்லை. சொன்னாலும் நமக்கு அந்த ஒன் மொமெண்ட் கிடைப்பதில்லை.” என்றாள்.

“ம்ம்ம்….”

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா. நான் ஆஃகானில் சொன்ன ஒன் மொமெண்ட் ப்ளீஸ் -ன் விளைவுதான் இப்படி இங்கே இருக்கிறேன். இப்போது இங்கேயும் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பார்த்தாயா என் வீட்டின் எதிரில் ஆணுறையில் என் பெயர் எழுதி வீசுகிறார்கள். நான் அவர்களுக்கு அரை சலாம் போடுகிறேன். அவர்களிடம் ‘ஒன் மொமெண்ட் ப்ளீஸ்’ சொல்ல விழைகிறேன்.

“யார் அப்படி எழுதி வீசுவது?”

“என் மாணவர்கள்.”

“எதற்காக அப்படி செய்கிறார்கள்?”

“என்னை மிரட்டுவதற்கு. நான் பலகீனமானவள் என்பதை மோப்பம் பிடித்து விட்டார்கள். அது கும்பல் மனநிலை. ஒரு சிலர் அதை ஆரம்பித்து வைப்பார்கள். அதற்கு தயங்கியவர்கள் சேர்ந்து கொள்வார்கள். மீதி சிலர் தனித்துப் போகக்கூடாது என்று சேர்ந்து கொள்வார்கள். அனைவருக்கும் ஒரே நோக்கம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் என்னை காதலிக்கவும் கூடும். நான் ஆஃப்கானிஸ்தானில் பிணைக் கைதியாக இருக்கும்போது என்னை இரண்டாவதாக கபளீகரம் செய்தது என் சொந்தக்காரன் தான். பின்பு அவன் தான் என்னை காப்பாற்றி இங்கு கொண்டுவந்து சேர்த்தான். இப்போது யாரும் கபளீகரம் செய்யவும் வேண்டாம் காப்பாற்றவும் வேண்டாம். நான் வேலையை விட்டு விட்டேன். அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு நீங்குகிறேன். வேறு இடம் செல்கிறேன். ஒன் மொமெண்ட் ப்ளீஸ் சொல்லப்போகிறேன்.”

நான் எங்கு செல்கிறாய் என்று கேட்கவில்லை.

அவள் அதை உணர்ந்தாற்போல் சிரித்தாள்.

வீடு வந்தது. அவள் கையை நீட்டி “நான் எரிக்கா..”என்றாள். அவள் கையை குலுக்கி “நான் மோகன்..” என்றேன்.

“மன்னிக்கவும் ஒரு உணர்ச்சி வேகத்தில் என் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்லி உங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டேன்.”

“அதை கருத்தில் கொள்ளாதே..”

அவரவர் வீடு புகுந்தோம்.

அந்த நாள் முழுவதும் வானில் பறப்பது போல் இருந்தது. அவள் என்னை நம்புகிறாள். ஓர் பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவன் நான். நம்பி அவள் அந்தரங்கத்தை பட்டியலிடுகிறாள். பந்தி விரிக்கிறாள். மீதம் உள்ள நாட்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவள் கவுருவத்தை காபந்து செய்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நினைப்பிலேயே தூங்கிப் போனேன்.

அடுத்தநாள் நேற்றைய சமாதானம் கலைந்திருந்தது. அலுவலகத்தில் அன்று புலி போல இருந்தேன். பயிற்சி வகுப்பு என் கட்டுக்குள் இருந்தது. அனைவரையும் அவர்களின் உச்ச விசையில் வைத்திருந்தேன். அரங்கத்தை முழு நிர்மாணம் செய்திருந்தேன். எனக்கு அன்றைய நாள் மிகப்பெரிய வெற்றி.

அவள் என்னை என்ன செய்கிறாள் என்று இப்போது புரிந்தது. ஆபத்தை கண்கொண்டு நேர்நோக்கினால், அது மட்டுப்படும். பிறகு அந்த ஆபத்தை சவாரி செய்யலாம். அவள் என்னை ஆபத்தாகத்தான் உணர்கிறாள். ஆபத்தாகிய என்னிடம் ஒரு பிரத்யேக உறவு வைத்திருந்தால் நான் அவளை ஒன்றும் செய்ய முடியாது அல்லவா. அவளை பாதுகாப்பேன் அல்லவா. எனது பொறுப்பு வலயத்திற்குள் வந்துவிட்டால் அப்புறம் என்ன கவலை. பாதுகாப்பற்ற சிறுமி ஒரு தட்டான் ஆணிடம் அடைக்கலம் சேர்வது போல. தட்டான் ஆண் பிற சில்லறை ஆண்களிடம் இருந்து அவளை காபந்து செய்வான். ஜார்ஜ் வாஸிஷிங்டன் தன் எதிரியிடம் நல்லுறவு வைத்திருந்தார். எதிரியின் வீட்டிற்கு சென்று வருவார். புத்தகம் கடன் வாங்குவார். சட்ட ஆலோசனை கேட்ப்பார். எதிரியை தன்னுடைய செயலில் வெற்றியில் பங்குதாரர் ஆக்குவார் . ஜார்ஜ் வாஸிஷிங்டன் இறுதியில் வெற்றி பெறுவார். அவ்வளவே. நானே அவளுக்கு ஆபத்து அதனால் நானே இப்போது பாதுகாப்பு. ச்சே…

இத்தனைக்கு பின்பும் அடுத்தநாள் அவளுடன் அங்காடிக்கு சென்று வந்தேன். இம்முறை அவளிடம் எந்த பாவனையையும் நான் கைக்கொள்ளவில்லை. விலக்கமும் அணுக்கமும் ஒரு சேர்ந்தாற்போல் உணர்ந்தேன்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அங்காடி சென்றோம். அங்கே தவறாமல் என் லட்சிய அழகியை இருவரும் பார்ப்போம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிறு சிறு குட்டி பொருட்களை எடுப்பாள். ஏதாவது ஒரு பொருளைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ப்பாள். கூஜா, டீ போத்தல், வாசனை திரவியம் என்று ஏதேதோ. நானும் ஏதாவது சொல்லி வைப்பேன். நான் சொல்வதை உன்னிப்பாய் கவனிப்பாள். வீட்டிற்கு திரும்பும்போது ஒவ்வொரு முறையும் எரிக்கா ஒரு கதை சொல்வாள். நான் அதை உன்னிப்பாக கவனிப்பது போல் பாவலா செய்வேன். ஒரு சில அஹமதிய பெண்கள் சந்தையில் விலை போவதைத் தான் விரும்புவாள் என்பாள். சக்கரி மினாரெட் ஸ்தூபியை இடித்ததும் பாமியான் புத்தரை இடித்ததும் வேறுவேறு சித்தாந்தம் என்பாள். வீடு வந்து அவள் சொன்னதை அலசிப் பார்ப்பேன். அதில் கண்டிப்பாக கள்ளத்தனமான ஒரு உறவும் ஒரு தூரமும் இருக்கும். தன்னை கபளீகரம் செய்தவனையே ஆயுதமாக வைத்து தப்பித்தவள் அல்லவா. அதுகூட உண்மை என்று யாருக்கு தெரியும். நான் ஒருபோதும் எல்லை மீறாமல் எனக்கு இடப்பட்ட பாதையில் நடந்தேன். அது ஒரு பொருட்டே இல்லாததுபோல். இந்த விளையாட்டில் என் வெற்றி என்பது கம்பீரமான விலக்கம்தான். அதை அவள் உணர்ந்தே ஆகவேண்டும். அவள் என்னை என்ன செய்கிறாள் என்பதை நான் உணர்ந்தேன் என்று அவள் உணர வேண்டும். இருந்தும்கூட நான் கனிவாக பண்பாக இருக்கிறேன் என்று காண்பிக்க வேண்டும். அதுவே என் வெற்றி.

இன்னும் இரு தினங்கள்தான் இருக்கிறது. என் கதவை அவள் தட்டினாள். இது நடக்கும் என்று எனக்கு தெரியும். வழமைக்கு மாறாக வீட்டை சுத்தமாக வைத்திருந்தேன். கதவை திறந்த நான் மெல்லிய ஆச்சரிய உணர்வை நடித்துக் காண்பித்தேன்.

“உள்ளே வரலாமா?”

“நிச்சயமாக… வாருங்கள். அமருங்கள்.. காஃபி அருந்துகிறீர்களா?”

“இல்லை வேண்டாம்.. நான் கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். என்னிடம் சில வீட்டு பொருட்கள் இருக்கின்றன. அதை எனக்கு விற்க எண்ணமில்லை. கொண்டு செல்லவும் முடியாது. நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால், நான் உங்களுக்கு அவைகளை பரிசாக தர விருப்பப்படுகிறேன்.”

“உண்மையாகவா? நான் அதற்கான பணம் தந்து விடுகிறேன்.”

“இல்லை இல்லை.. வேண்டாம். ஆனால் நீங்கள் என்னிடம் அவைகளை வாங்கிக்கொள்ளவேண்டும். வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அப்போது தான் எனக்கு மகிழ்ச்சி” என்று இறைஞ்சுவது போல் கேட்டாள்.

நான் சிரித்துக் கொண்டே சரி என்றேன்.

தொலைக்காட்சி, சில நாற்காலிகள், பெரிய மேசை, கடிகாரம், வீட்டு மளிகை பொருட்கள், சில புத்தகங்கள், அலங்கார ஆஃப்கன் தரை விரிப்பு, இன்னும் சில சுவாரஸ்யமான பொருட்கள் வீடு மாறின. ஒரே நாளில் என் வீடு ஆஃப்கானிய வீடுபோல் ஆகிவிட்டது. இதை அனைத்தும் அவள் மாறாத புன்னகையுடன் செய்தாள். இன்னும் எனக்கு குழப்பம். இது அவள் ஏற்றிருக்கும் பாவனையா அல்லது இதுதான் அவளின் இயல்பா என்று. இந்த ஆட்டத்தில் அவளுக்குத்தான் இறுதி வெற்றி போல.

மறுநாள் அதிகாலையிலேயே அவள் சென்றிருந்தாள். நான் வெளியே வரவில்லை. அவள் சொல்லிக்கொள்ளாமலேயே போகட்டும். ஒருவேளை என்னுடைய கடைசி ஆட்டம் அதுவாகத்தான் இருக்கும். அவள் சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்தேன். இருப்பினும் போதுமான அவகாசம் விட்டு வெளியே வந்து பார்த்தேன். அவள் வீடு பூட்டியிருந்தது. என் கதவின் ஓரமாக ஒரு அலங்காரத் தட்டு. அதில் அவள் சமீபமாக வாங்கிய மற்றும் உபயோகித்து மிச்சம் வைத்த சில பொதுவான பொருட்கள். அவற்றுள் சில எனக்கு அடையாளம் தெரிந்தது. அவற்றை உள்ளே எடுத்து வந்தேன். வேலைப்பாடு உள்ள கூஜா, உயர் ரக டீ போத்தல், வித்தியாசமான குடுவையில் வாசனை திரவியம், கரும் நிறத்தில் உள்ள பேரீச்சை, வாசனையான புது சோப்புக் கட்டி, பேனா, சிறிய கடிகாரம் என்று இன்னும் என்னென்னவோ. கடைசியாக எல்லா பொருட்களுக்கும் அடியில் மறைத்து வைத்தாற்போல் ஒரு ஆணுறை. அதை எடுத்து திருப்பிப் பார்த்தேன். அதில் மோகன் என்று எழுதியிருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.