Author: atomhouse

தூரத்து அருகாமை 

ஸிந்துஜா

  ஜானகி பதினெட்டாம் கிராஸ் பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது வழக்கம் போல் கூட்டம் முட்டிக் கொண்டு நின்றது. அத்தனை கூட்டமும் அவள் போகும் வண்டிக்கு அல்ல. அவள் கன்னிங்காம் ரோடு போக வேண்டும். ஆனால் அந்த நிறுத்தத்துக்கு வரும் வண்டிகள் மெஜஸ்டிக், மார்கெட், ஜெயநகர், ஜே.பி. நகர், ஹொசஹள்ளி என்று திசைக்கொரு பக்கம் செல்வனவாக இருந்தன. ஜானகி தான் செல்ல வேண்டிய வண்டியின் எண்ணைக் குறிப்பிட்டு அது வந்து விட்டுப் போய் விட்டதா என்று பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் கேட்டாள். அந்தப் பெண் அவளை ஏற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு இன்னும் இல்லை என்று சொன்னாள். அவள் அம்மாதிரி தன்னைப் பார்த்தது ஜானகிக்கு உறுத்தவில்லை. ‘இப்பிடி இல்லே இருக்கணும்!’ என்று சொல்லத்  தூண்டும் அழகு தன்னிடம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ‘இதென்ன இப்பிடி’ என்று அவளைப் பார்த்த பெரும்பாலான கண்கள் தெரிவித்ததை அவள் பல வருடங்களுக்கு முன்பே அறிந்து விட்டாள்.

அன்று காலை கிளம்புவதற்கு முன்னால் அவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்ட போதும் அது பொய் சொல்லாமல் அவளைக் காட்டியது. அவள் முழு உயரத்தையும் காட்ட முடியாத (ஐந்தடி ஒன்பது அங்குலம்) கண்ணாடியில் முகமும் மார்பும் இடையும் பாதிக் கால்களும் தெரிந்தன. மேட்டு நெற்றியும்,  நீள  நாசியும் சதைப்பிடிப்பு இல்லாத கன்னங்களும் தாடையும் தெரிந்தன. மார்பகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரு புள்ளிகள் காணப்பட்டன. உடலில் சதைப்பற்றுக் காண்பிக்காத இயற்கை அவளுக்குத் தேவைக்கும் மீறிய செழிப்பைத் தலை மயிரில் கொடுத்திருந்தது. திரும்பி பக்கவாட்டில் அவள் தன்னைப் பார்த்துக் கொண்ட போது பின்புறம் பிருஷ்டத்துக்கும் கீழே நீளக் கூந்தல் தொங்கிற்று.

 

இன்று திங்கட் கிழமையாதலால் அவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று ஜானகி நினைத்தாள். நேற்று ஒய்வு தினம். வாரத்தில் மற்ற நாள்களில் காலை ஐந்தரைக்கே ஆரம்பித்து விடும் தினங்களிலிருந்து விடுதலை தரும் நாள் என்று ஞாயிற்றுக் கிழமையை அவள் மிகவும் விரும்புவாள், அன்று எட்டு எட்டரைக்கே முழிப்பு வந்தாலும் ஒன்பதுக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டாள். அப்படி சீக்கிரம் எழுந்து காப்பி போட்டுக் காலை உணவு சமைத்துப் பரிமாற ஒரு குழந்தையோ குட்டியோ கணவனோ அவள் கூட இல்லை. நிதானமாக எழுந்து வாசல் கதவைத் திறந்து வெளியே பையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வருவாள். ஐந்தரை மணியிலிருந்து ஒன்பது மணி வரை அடிக்கும் இளம் வெய்யிலில் அது தன்னுடன் கொண்டு வரும் ஜில்லிப்பை இழந்திருக்கும், அவளுக்குக் காலை உணவு என்பது காப்பியும், அய்யங்கார் பேக்கரியிலிருந்து வாங்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளில் நாலைந்தும்தான். நிதானமாகப் பதினொன்றரை பனிரெண்டு மணிக்கு மத்தியானத்துக்கு வேண்டிய உணவை சமைத்துக் கொள்வாள்.

அவளைத் தேடி ஞாயிறு அன்று யாரும் வரமாட்டார்கள். அவளும் யாரைத் தேடியும் செல்ல மாட்டாள். அவளுடைய அம்மாவைத் தவிர. அம்மா குவீன்ஸ் ரோடில் இருக்கிறாள். அவள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில்  குடியிருப்பும் கொடுத்திருந்தார்கள். பத்து வருஷமாக – அவள் கணவனை விட்டுப் பிரிந்த பிறகு – அவள் அங்கேதான் இருக்கிறாள். அவளுக்கோ ஜானகிக்கோ அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதில் எந்த ஒரு துக்கமும் இல்லை. ஏனென்றால் அதற்கு முன்பு அனுபவிக்க வேண்டிய துக்கம் எல்லாவற்றையும் அவன் மூலம் அவர்கள் அடைந்திருந்தார்கள். அவர்கள் வருத்தப்பட்டதெல்லாம் இன்னொரு பெண் அவர்கள் நிலைக்கு வந்து விட்டாளே என்றுதான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அம்மாவிடம் சென்று விடுவாள். அவளுக்கும் ஞாயிறு அன்றுதான் விடுமுறை நாள். இவள் தன் கல்லூரியில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையும் அம்மா அவளுடையதையும் சொல்லிப் பகிர்ந்து கொள்வார்கள். ஜானகி தன் வகுப்பு மாணவிகளில் சிலரின் கெட்டிக்காரத்தனத்தையும் பெரும்பாலான மற்றவர்களின் பொல்லாத்தனத்தையும் விஷமத்தையும் சொல்லிச் சிரிப்பாள். அம்மாவுக்கு ஆஸ்பத்திரியில் நேரும் அனுபவங்களில் சந்தோஷம் எப்போதாவதுதான் வரும். ‘நோயாளிகளுக்கு ஆறுதலா நீ இருக்கியே’ என்று ஜானகி அம்மாவிடம் ஆறுதலாகச் சொல்லுவாள்.

ஜானகியின் எட்டு ஐம்பது பஸ் வந்து விட்டது. முன் வழியாக ஏறுவதில் வழக்கமாகப் பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. ஆனால் இன்று வழக்கத்துக்கு விரோதமாக வண்டியின் ஸ்டியரிங் வரை பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜானகி ஒருவழியாகப் பஸ் உள்ளே நுழைந்து விட்டாள். பின் பக்க வழியில் படிக்கட்டு வரை ஆண்கள் நிரம்பி வழிந்தார்கள்.அவர்களில் சிலர் வேலைக்காகத் தாங்கள் உயிரை விடத் தயாராக உள்ள ஜனம் என்று உலகத்துக்குத் தெரிவிக்கும் வண்ணம் படிக்கட்டில் ஒரு காலும் அதற்கு வெளியே காற்றில் தொங்கிக் கொண்டிருந்த இன்னொரு காலுமாக நின்றார்கள். தனக்கும் கூட வாழ்க்கையில் முக்கியமானது வேலை என்றுதான் ஜானகி நினைத்தாள். யாருடைய கவனமும் மரியாதையும் கிடைக்காத இந்த வாழ்க்கையில் வேலை ஒன்றுதான் அவள் உயிரைப் பிடித்து நிறுத்தியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

பஸ் போய்க் கொண்டிருக்கும் போது மணி என்ன என்று அவள் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது ஐந்து. இன்னும் நாலைந்து நிமிஷங்களில் அவள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விடும். அது அவளது கல்லூரிக்கு எதிரே இருக்கிறது. அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் அவள் அலுவலகத்துக்குள் நுழைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விடலாம்.  வகுப்புகள் ஒன்பதரை மணிக்குத்தான் ஆரம்பிக்கின்றன. ஆகவே அவள் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆசிரியைகளுக்கான அறைக்குச் சென்று உட்கார வேண்டும். வரவேற்பைச் சற்றும் காட்டாத முகங்களை அவள் பார்க்க விரும்பவில்லை. அழகு, பணம், அறிவு ஆகிய வார்த்தைகளின் உண்மையான ரூபங்களை அறியாத ஒரு கூட்டம் காண்பிக்கும் அன்னியத்தில் துவளும் மனமே பின்னர் அது பொருட்படுத்தப்பட வேண்டிய கூட்டம் அல்ல என்று தீர்மானம் கொண்டு விடுகிறது.

இம்மாதிரி நாள்களில் அவள் தான் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முந்திய ஸ்டாப்பிலேயே இறங்கி விடுவாள். இன்றும்  அதையே செய்தாள். அழகு, அழகின்மை என்று வித்தியாசம் பார்க்காமல் டிசம்பர்க் குளிருடன் வந்த காற்று அவளைத் தொட்டுவிட்டுச் சென்றது. ஜானகி மெதுவாக நடந்தாள். அந்த வேகத்துக்கு அவள் கல்லூரியை அடையும் போது வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நேராக வகுப்புக்குச் செல்ல சரியாக இருக்கும். அவளுக்கு நேர் எதிரேயும் எதிர்ப்புறத்தில் இருந்த பிளாட்ஃபார்மிலும் அவள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் சிலர் அவர்களின் ஜோடியுடன் எதிர்ப்பட்டனர். இன்று அவர்கள் தம் வகுப்புகளுக்குச் செல்வது நடக்காத காரியம்தான். அவளைப்  பார்க்க எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ள விடாமல் கூடவே வந்த இளைஞர்களின் சேஷ்டைகளில் அவர்கள் மகிழ்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண்களின் பெற்றோர்கள் பாவம் என்று நினைப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை தன் இயலாமையும், லேசான பொறாமையும் தன்னைச் சற்று உயர்நிலை மனோபாவத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனவோ என்று அவள் தன்னையே கடிந்து கொண்டாள்.

அவள் பள்ளியில் படிக்கும் போது ஒரேயொரு ஜோடி இம்மாதிரி அலைந்ததைப் பார்த்திருக்கிறாள். சினிமாவில் வரும் கதாநாயக, நாயகி அந்தஸ்து கொஞ்ச காலம் அவர்களுக்குக் கிட்டியிருந்தது என்னவோ வாஸ்தவம்தான். வகுப்பறைகளில் கிடைத்த கிண்டலான வார்த்தைப் பரிமாறல்களில் அவர்களிருவரும் சிரித்துக் கொண்டோ முறைத்துக் கொண்டோ போனார்கள். ஆனால் ஒரு நாள் அந்தப் பெண் பள்ளிக்கு வரவில்லை. அதற்குப் பிறகு அவள் என்றுமே வரவில்லை. அவள் படித்த கல்லூரியில் பெண்கள் மட்டும் படிக்க வந்தார்கள். பஸ் ஸ்டாப்பில் சில  சமயம் நடக்கும் கலாட்டாக்களைப் பற்றிச் சில பெண்கள் பேசுவார்கள். அங்கே எல்லாவற்றையும் ரசித்து விட்டு வரும் அவர்களே வகுப்புக்கு வந்து சிநேகிதிகளிடம் அந்தப் பையன்கள் ‘வழிவது’ பற்றி எகத்தாளத்தையும் அலட்சியத்தையும் கொண்டுள்ள குரலில் எப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஜானகி கல்லூரிக்குள் நுழையும் போது மணி ஒன்பது இருபத்தி ஐந்து ஆகியிருந்தது. அலுவலகத்தை நோக்கி அவள் நடந்து சென்றாள்.

அவளுக்கு முன்னால்  நடந்து சென்ற ஒருத்தி எதற்கோ பின்னே திரும்பிப் பார்த்தாள். வத்சலா கோசாம்பி. சரித்திரப்  பேராசிரியை. அவள் பார்வை ஜானகியைத் தாண்டி நூறு கஜம் சென்று விட்டுப் பிறகு தான் நடந்து போகும் வழிக்குத் திரும்பிற்று. தன் மீது பார்வை விழும் போது மட்டும் அவள் குருடாகி விடும் வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறாள் என்று ஜானகிக்குத் தோன்றியது. அவளைப் போலவே  ஆங்கிலத் துறைத் தலைவி எலிசபெத் சாமுவேல்,  ஹிந்தி ஆசிரியை லீனா ஷிவ்சாகர், ஃபிரென்ச் ஆசிரியை கல்பனா மாணிக்கவாசகம், வணிகவியல் புரஃபஸர் நஞ்சப்பா (ஒரே ஒரு ஆண் ஆசிரியர்) என்று கல்லூரிக்கு ஒன்பது மணிக்கே வந்து வம்படிக்கக் கூடியிருக்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கும் கடவுள் அந்த வரத்தை அளித்து விட்டார். ஜானகியைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் அவர்கள்  பார்த்தும் பாராதது போலிருக்கும் ஓர் உன்னதப் பயிற்சியில் தேர்வடைந்தது போன்று இருப்பார்கள்.  அவர்கள் ஓவ்வொருவரைப் பொறுத்த வரையும் அவளிடம் ஒரு அனுபவம் இருந்தது.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அவள் கல்லூரி முதல்வரைப் பார்க்கச் சென்றாள். அவளுக்கு வணக்கம் செலுத்தி விட்டு அன்றிலிருந்து தான் வேலையில் சேர்ந்து விட்டதைத் தெரிவித்தாள். அப்போது அறைக்குள் வந்த பெண்மணி ஒரு வாசனை திரவிய நிலையத்தையே அணிந்து கொண்டு வந்திருந்தவள்  போலிருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள்  இருக்கலாம். ஆனால் உடை அணிந்த முறை மூலம் அவள் காலத்துக்குச் சவால் விட முயன்று அதில்  தோற்றிருந்தாள்.

முதல்வர் ” ஜானகி! இவங்கதான் புரஃபசர் எலிசபெத் சாமுவேல், இங்கிலிஷ் டிபார்ட்மென்ட், எலிசபெத்! இவங்க  ஜானகி இன்னிக்கி ஜாயின் பண்ணறாங்க. சயன்ஸ் லெக்சரர்” என்று அறிமுகம் செய்வித்தாள். எலிசபெத் ஜானகியை ஏற இறங்கப் பார்த்தாள். குரலிலோ முகத்திலோ சந்தோஷம் எதுவும் காண்பிக்காமல் அவள் ஜானகியிடம் “கிளாட் டு மீட் யூ” என்றாள். ஜானகி நன்றி தெரிவித்துச் சொல்லிய சொல்லைக் காற்று ஏற்றுக் கொள்ளட்டும் என்பது போல முதல்வருடன் பேசத்  தொடங்கி விட்டாள். ஜானகி கிளம்ப முயற்சி செய்த போது முதல்வர் அவளிடம் சற்று இருக்கச் சொல்லி எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினாள். எலிசபெத் பேசி முடித்ததும் வெளியே சென்றாள்

“அவள் சீனியர் ஃ பேகல்ட்டி. ஆனால் அவள் நடந்து கொண்ட முறை எனக்கு வருத்தத்தைத் தருகிறது. நீங்கள் வருத்தப்படக் கூடாது” என்றாள் முதல்வர்.

“மிதிச்ச இடத்துப் புல் சாகாது” என்றாள் ஜானகி. முதல்வர் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.  அன்று அவள் சந்தித்த லீனா, கல்பனா, புவனா ரெட்டி ஆகிய ஆசிரியைகளும் எலிசபெத்தின் சிஷ்யைகள் போலவே இருந்தார்கள்.

அவள் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமிருக்கும். அன்று மாலையில் அவள் வீடு திரும்ப பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது அங்குலீனா கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

அவளும்மல்லேஸ்வரத்தில் தான் குடியிருந்தாள். ஏற்கனவே தான் வருவதைப் பார்த்து விட்டு அவள் புத்தகத்தில் அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும் என்று ஜானகிக்குத் தோன்றியது.

அப்போது அங்கு வந்து நின்ற காரிலிருந்து “லீனா!” என்ற குரல் கேட்டது. லீனா ஏறெடுத்துப் பார்த்து விட்டுக் கையை அசைத்தவாறே புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றாள். ஜானகி பார்த்த போது காருக்குள் எலிசபெத் இருந்தாள். அவளும் லீனாவும் தன்னைப் பார்ப்பதை ஜானகியும் பார்த்தாள். கார் கிளம்பிச் சென்றது.

அவர்கள் அவளை ஒதுக்குவதற்கும், அவள் மீது ஆத்திரப்படுவதற்கும் தேவையான காரணங்கள் இருந்தன என்று ஜானகி நம்பினாள். அவர்களிடம் இருந்த அழகு – பூச்சுக்களால் ஆனது- பணம், கார் வீடு போன்ற வசதிகள் அவர்கள் அவள் மீது செலுத்திய  கீழ்ப்பார்வைகளை நியாயப்படுத்துவனவாக இருந்தன. ஆனால் ஆத்திரம்? அவளிடம் சயன்ஸ் படித்த வெவ்வேறு வகுப்புகளில் இருந்த எல்லா மாணவிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் ஒவ்வொரு சயன்ஸ் தேர்விலும் தேர்ச்சியடைந்து வந்தார்கள். தோல்வியடைந்தவள் என்று ஒரு பெண்ணும் அவள் காலை வாரி விடவில்லை. இதற்கு முன்னால் இருந்த சயன்ஸ் ஆசிரியை சரியாகப் பாடம் சொல்லித் தராமல் கல்லூரிக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தாள் என்று ஜானகியைப் பாராட்டி  ஆசிரியைகள் கூட்டத்தில் முதல்வர் வெளிப்படையாகக் கூறியதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகி விட்டது. போதாதற்கு அந்த ஆசிரியையும் கல்லூரியில் இருந்த வரை அவர்கள் கூட்டத்தின் தலைவியாக வேறு இருந்தாள். பழைய சயன்ஸ் ஆசிரியைக்கு முதல்வரிடம்  கிட்டிய மரியாதை ஜானகியால் தங்களுக்கும் வந்து விடுமோ என்று அதிக அளவில் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கொண்டிருந்தவர்கள் உள்ளூரப் பயந்தார்கள்.

அன்று ஜானகிக்குக் காலையில் இரண்டு வகுப்புகள்தாம் இருந்தன. பனிரெண்டு மணிக்கு மேல் அவளுக்கு வேலை இல்லை. இம்மாதிரி நாள்களில் அவள் லைப்ரரியில் போய் உட்கார்ந்து விடுவாள். ஜேன் ஆஸ்டனிலிருந்து சால் பெல்லோ வரை அங்கு நடமாடிக் கொண்டிருந்தது அவளுக்கு சௌகரியமாக இருந்தது. அவள் தன் இரண்டாவது வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த போது  வலது பக்கமிருந்த ஆர்ட்ஸ் பிளாக் மாடியிலிருந்து கல்பனா இறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஜானகி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் சரிந்து விழுந்தாள். விழுந்தவள் படிகளில் உருண்டு கீழே வருவதைப் பார்த்து ஜானகி வேகமாக அவளை நோக்கி ஓடினாள். நாலைந்து படிகளில் உருண்டு கீழே விழுந்தவள் அப்படியே படியில் படுத்துக் கிடந்தாள். அவளை நெருங்கியதும் ஜானகி அருகில் யாராவது தென்படுகின்றார்களா என்று பதற்றத்துடன் பார்த்தாள். யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை.

அப்போது ஒரு ஆட்டோ அலுவலகக் கட்டிடம் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து சந்தியப்பா இறங்குவதைப் பார்த்தாள். காண்டீனில் வேலை பார்க்கும் உதவியாள். இறங்கி ஆட்டோவிலிருந்து ஒரு மூட்டையை இறக்கிக் கொண்டிருந்தான். ஜானகி அவனைப் பார்த்து “சந்தியப்பா!” என்று கத்தினாள். அவன் அவளையும் படியில் கிடக்கும் உருவத்தையும் பார்த்து ஓடி வந்தான். ஆட்டோ டிரைவரும் இறங்கி அவர்களைப் பார்த்து ஓடி வந்தார் . மூவருமாகக் கல்பனாவைத் தூக்கினார்கள். “ஆட்டோலேயே  ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிடலாம்” என்றாள் ஜானகி. கல்பனாவின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கையிலும் சிராய்ப்பு காணப்பட்டது.

அவள் முதலில் உள்ளே உட்கார்ந்து கொள்ள அவள் மடியில் கல்பனாவின் தலையை மற்ற இருவரும் கிடத்தினார்கள். ஜானகி ஆட்டோக்காரரிடம் “தண்ணி இருக்கா?” என்று கேட்டாள். ஆட்டோ டிரைவர் வண்டியின் உள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜானகியிடம் கொடுத்தார். அவள் தன் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து நெற்றி, முகம் கழுத்து எல்லாவற்றிலும் சிதறியிருந்த ரத்தத்தைத் துடைத்தாள். கல்பனா அரை மயக்கத்தில் வலி பொறுக்க முடியாமல் அழுதாள். ஜானகி அவள் வாயில் சிறிதளவு நீர் ஊற்றியபடி சந்தியப்பாவிடம் “நான் இவங்களை மகாராணி ஆஸ்பிடலுக்குக் கொண்டு போறேன். நீங்க கொஞ்சம் பிரின்சி கிட்டே சொல்லிடறீங்களா? நான் ஆஸ்பிடல்லேர்ந்து அப்புறமா போன்பண்ணி அவங்க கிட்டே  பேசறேன்” என்று சொல்லிவிட்டு  சந்தியப்பாவிடம் “அங்க படிலே கெடக்கற இவங்க ஹேண்ட் பேக்கையும் புஸ்தகத்தையும் எடுத்துக் குடுங்க”  என்றாள். அவற்றை  வாங்கிக் கொண்டு  ஆட்டோக்காரரிடம் ” குவீன்ஸ் ரோடு” என்றாள்.

ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது அவள் தன் அம்மாவை அழைத்தாள். நல்ல வேளை, அவள் அப்போது டூட்டி முடிந்து சாப்பிடப் போய்க் கொண்டிருந்தாள். ஜானகி எமர்ஜென்சி என்றதும் அவள் போர்ட்டிகோவில் ஸ்ட்ரெச்சருடன் நிற்பதாகத் தெரிவித்தாள். ஜானகி  கல்லூரியிலிருந்து ஆஸ்பத்திரியை ஏழெட்டு நிமிடத்தில் அடைந்து விட்டாள். அவள் அம்மாவுடன் இருந்த இரண்டு சிப்பந்திகள் ஸ்ட்ரெச்சரில் கல்பனாவை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள். அவர்களுடன் ஜானகியின் அம்மாவும் சென்றாள் , ஜானகியை ரிசப்ஷனில் உட்கார்ந்திருக்குமாறு சொல்லி விட்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள் ஜானகி. பெரும்பாலும் கவலை ஏறிய முகங்கள். அவர்களின் உள்ளங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும். நோவு பற்றி, உயிரைப் பற்றி, பணத்தைப் பற்றி என்று எல்லாப் பக்கமும் நெளியும் பாம்புகளே அடங்கிய பரமபத விளையாட்டு. இதை அறிந்தும் அறியாத மாதிரி, தெரிந்தும் தெரியாத மாதிரி ஓடுகிறார்கள் – அழகா, அழகில்லையா, பணக்காரியா பிச்சைக்காரியா கெட்டிக்காரியா முட்டாளா என்ற  விவாதத்தின் பின்னால் வெறியுடன். கல்பனாவுக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்திருந்தால் கல்பனாவோ அவளது கூட்டத்தில் இருக்கும் எவரோ தான் நடந்து கொண்ட மாதிரி இயங்கியிருப்பார்களா என்று சட்டென ஓர் எண்ணம் அவளுள் மின்னி மறைந்தது. உடனடியாகவே அவள் மனதில் பதிலும் வந்து ஓடி விட்டது.

கல்பனாவுக்கு எப்படி இருக்கிறதோ என்று அவள் கவலையுடன் நினைத்தாள். மற்றவர்களைப் போலக் கல்பனாவும் ஜானகியிடம் ஒதுங்கி நிற்பவள்தான். அவள் வீடு எங்கே இருக்கிறது? வீட்டில் யார் இருக்கிறார்கள்? இந்த விபத்து பற்றியும் ஆஸ்பத்திரியில் இருப்பது பற்றியும் யாரிடம் தெரிவிப்பது? அவள் கணவன் எங்கே இருக்கிறான்?

இந்த  ஊரில்தானா? அல்லது வெளியூரிலா? வெளிநாட்டிலா?

அவள் கல்பனாவின் கைப்பையைத் திறந்து பார்த்தாள். அதில் ஒரு பர்சும் கைபேசியும் பேனாவும் ஒரு கைக் குட்டையும் இருந்தன. கைபேசியை எடுத்துப் பிரித்த போது அவள் கடைசியாகக் கூப்பிட்டிருந்த பெயர் டார்லிங் என்றிருந்தது.அவளது கணவனின் நம்பராக இருக்க வேண்டும். அம்மாவிடமிருந்து நிலைமை என்னவென்று தெரிந்தபின் கல்பனாவின்கணவனையும் பிரின்சியையும்  கூப்பிட்டுச் சொல்லி விடலாமென்று நினைத்தாள். பத்து நிமிஷம் கழிந்திருக்கும். அப்போது அவள் அம்மா வருவதைப் பார்த்தாள். அவளருகே வந்தவள் “ஜானு, கவலைப்பட ஒண்ணும் இல்லே. படியிலே மோதி உருண்டு விழுந்ததிலே நெத்திலேயும் அதுக்கு மேலே தலை ஆரம்பத்திலேயும் காயம் பட்டு அங்கேர்ந்துதான் ரத்தம் வந்திருக்கு. அதனாலே மைல்டா  அனஸ்தேஷியா கொடுத்து தையல் போட்ருக்கா. அவ எழுந்திருக்கக் கொஞ்சம் டைம் ஆகும். நீயும் என் கூட சாப்பிட வா. எவ்வளவு வருஷமாதான் நான் மாத்திரம் ஒண்டியா எங்க கான்டீன் சாப்பாடை சாப்பிட்டுண்டு இருக்கறது?” என்று சிரித்தாள்.

“அம்மா. ஒரு நிமிஷம். போன் பண்ணி முடிச்சுடறேன்” என்று பிரின்சியை முதலில் கூப்பிட்டாள். அம்மா சொன்னதை அவளிடம் சொல்லி விட்டுக் கவலைப்பட ஒன்றுமில்லை என்றாள்.

“இப்போவே டிஸ்சார்ஜ் பண்ணறாங்களா ஜானகி?” என்று பிரின்சி கேட்டாள் .

“இல்லே மேடம். இன்னும் நேரமாகும். நான் கூட இருந்து கல்பனாவை அவங்க வீட்டுலே விட்டுட்டுப் போறேன்” என்றாள் ஜானகி.

“நான் காலேஜ் வேனை அனுப்புறேன்” என்றாள் பிரின்சி.

“இல்லை மேடம், வேண்டாம். எப்போ இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு தெரியலே. உங்களுக்குத்தான் தெரியுமே இங்கே என் அம்மா வேலையிலே இருக்காங்கன்னு. அதனாலே நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றாள் ஜானகி.

பிரின்சி விடாமல் அவளுக்கு மூன்று நான்கு நிமிஷம் நன்றி தெரிவித்து விட்டுத்தான் போனைக் கீழே வைத்தாள்.

ஜானகி  கல்பனாவின் கணவனுக்குப் போன் செய்தாள் . அவன் எடுத்ததும் எங்கேயாவது “டார்லிங்” என்று கூப்பிட ஆரம்பித்து விட்டால்  என்ற பயத்தில் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டவுடனே ஜானகி “”சார், மிஸ்டர் மாணிக்கவாசகமா?” என்று கேட்டாள்.

மறுமுனையிலிருந்து பதில் வர சில வினாடிகள் பிடித்தன. பிறகு “ஆமா நான் மாணிக்கவாசகம்தான் பேசறேன். இது என் ஒய்ஃப் நம்பர்ல? யார்பேசுறது?” என்று குரல் கேட்டது.

“சார், என் பேர் ஜானகி. நான் கல்பனாவோட வேலை பாக்கறேன். நீங்க கவலைப்பட வேணாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே  கல்பனாவுக்குக் காலேஜிலே ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகி விட்டது.படியிலேந்து இறங்கறப்போ ஸ்லிப்பாயி  நெத்திகிட்டே கொஞ்சம் காயம்  நான் அவங்களை இங்கே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு வந்தேன்.”

” ஐயோ, நான் இப்போ ஊர்லே இல்லையே!  அவளோட  பேசமுடியுமா?”

“சார், நான் வெளியே இருந்து பேசறேன். ஓ பி டி லேந்து என்னைக் கூப்பிடுவாங்க. அப்ப  உங்க கிட்டே போனைக் கொடுக்கிறேன். எனக்கு உங்க வீட்டு அட்ரெஸ்ஸை மெஸேஜ் பண்ணுங்க. டிஸ்சார்ஜ் ஆனதும் நான் நேரே வீட்டிலே கொண்டு போய் விட்டுடறேன். நீங்க இப்போ எங்கே இருக்கிங்க?” என்று கேட்டாள் ஜானகி.

“நான் வேலை விஷயமா டூர்லே வந்தேன். ஹூப்ளிலே இருக்கேன். இப்ப மணி என்ன ஒண்ணா? கார்லேதான் இங்கே வந்தேன். இப்பக் கிளம்பினாக் கூட அங்க வந்து சேர்றதுக்கு ஏழு ஏழரை ஆயிரும்…” என்று அவன் தயங்கிப் பேசுவது அவளுக்குத் தெரிந்தது.

“நீங்க கிளம்பி வாங்க. நீங்க வர்ற வரைக்கும் நான் கல்பனாவோட உங்க வீட்டிலே வெயிட் பண்ணறேன்.”

“ஓ மேடம்! தேங்க்ஸ் எ லாட். ஸ்கூலுக்குப் போயிருக்கற ரெண்டு பசங்களும் நாலு மணிக்கு வந்துடுவாங்க.'”

“டோன்ட் ஒரி சார். நான் அதையெல்லாம் பாத்துக்கறேன்” என்று ஜானகி சிரித்தாள்.

“ஏதோ கடவுள் அனுப்பிச்ச மாதிரி வந்து உதவி செய்யறீங்க. எனக்கு வேறே என்ன சொல்லறதுன்னு தெரியலே.”

“பெரிய வார்த்தையெல்லாம் எதுக்கு? மனுஷாளுக்கு மனுஷா உதவி செய்யறது எல்லா இடத்திலேயும் நடக்கிறதுதானே. நீங்க பதட்டப்படாம நிதானமா வாங்க. நீங்க வந்ததுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குக் கிளம்பிப் போறேன். சரியா?” என்று போனை அணைத்தாள்.

ஜானகியும் அம்மாவும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியதும் ஓ பி டிக்கு ஜானகியும் அவள் அம்மாவுடன் சென்றாள் . கல்பனா விழித்திருந்தபடி படுக்கையில் படுத்திருந்தாள். ஜானகியைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒளி தோன்றியது. ஜானகி அவளருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டு “எப்படி இருக்கீங்க? வலி ஜாஸ்தியிருக்கா?” என்று கேட்டாள். தன் அம்மாவை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“விட்டு விட்டு வலிக்குது” என்றாள் கல்பனா. அடிபட்ட அதிர்ச்சியில் அவள் முகம் வாடியிருந்தது.

“கவலைப்படறதுக்கு ஒண்ணும் இல்லேம்மா!” என்று ஜானகியின் அம்மா பரிவுடன் கல்பனாவைத் தடவிக் கொடுத்தாள். “இன்னிக்கி ராத்திரி வரைக்கும் வலி இருக்கத்தான் செய்யும்.  மருந்து எழுதிக் கொடுக்கிறோம். ஒரு ரெண்டு நாள் வேலை கீலைன்னு அலட்டிக்காம நீ கம்ப்ளீட் ரெஸ்டுலே இருந்தா சரியாயிடும்.”

அவள் அவர்கள் இருவரையும்பார்த்து ” ரொம்ப நன்றிம்மா, ரொம்ப நன்றி ஜானகி” என்றாள்.

“இன்னிக்கு ராத்திரி வரைக்கும் நான் உங்களோட இருப்பேன்கல்பனா. நான் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியத்துக்கும் நீங்க நன்றின்னு சொல்ல ஆரமிச்சா ரொம்ப டயர்டாயிருவீங்க. அதனால நான் கிளம்பிப் போறப்போ ஒரு நன்றியைக் குடுங்க. வாங்கிண்டுபோறேன்” என்று சிரித்தாள் ஜானகி.

ஜானகி அவளிடம் அவள் கணவனோடு பேசியதையும் அவன் உடனே காரில் புறப்பட்டு பெங்களூர் வருவதையும் பற்றிச் சொன்னாள். அடுத்த அரை மணியில் கல்பனாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஜானகியின் அம்மாவுக்குத் தெரிந்த கேஸ் என்பதால் ஆஸ்பத்திரிக்குத் தர வேண்டிய பணத்தை இரண்டு மூன்று நாள்களுக்குள் கொண்டு வந்து கட்டினால் போதும் என்று ஆஸ்பத்திரியில் சொன்னார்கள்.

ஜானகி ஊபருக்குப் போன் செய்து ஒரு காரை வரவழைத்து அவளும் கல்பனாவும் கல்பனாவின் வீட்டை அடையும் போது இரண்டரை ஆகி விட்டது. குமாரா பார்க்கில் இருந்த ஒரு பலமாடிக் கட்டிடத்தில் கல்பனாவின் வீடு இருந்தது. வாசலில் செழித்திருந்த செடிகளும் அவற்றின் மீது மலர்ந்து ஆடிக் கொண்டிருந்த பூக்களும் தேக்கு மர வாசற் கதவுகளின் பளபளப்பும் கண்ணை உறுத்தாத வண்ணத்தில் தீட்டப்பட்டிருந்த சுவர்களும் கட்டிடத்தின் உள்ளே நடமாடிய செல்வத்தைச் சுட்டிக் காட்டுவனவாக இருந்தன. கல்பனாவின் வீடு மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய ஃபிளாட்.  நீள அகல வீச்சும், அலங்காரப்  பொருள்களின் அணிவகுப்புமாக அந்த வீட்டில் பணம் மண்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ஜானகி தரையைப் பார்த்த போது தூசி கூடப் பளபளப்பாக மின்னியது போலிருந்தது.

ஜானகி கல்பனாவை அவளது படுக்கையறையில் கொண்டு போய் விட்டாள்.

“ஜானகி, உங்களுக்கு நான் ரொம்பத் தொந்திரவு கொடுத்துட்டேன்” என்றாள் கல்பனா.

“இப்படி நீங்கள் சொல்றதுதான் தொந்திரவு” என்றாள் ஜானகி. கல்பனா ஜானகியை ஆச்சரியத்துடன் பார்த்தாள்

“நான் என் ஹஸ்பண்டோட பேசிடறேன். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாரு” என்று கல்பனா போனை எடுத்தாள்.

“பேசிட்டு நல்லாப் படுத்துத் தூங்குங்க. உங்க குழந்தைகள் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அவங்களை நான் பாத்துக்கிறேன். அவங்க குடிக்கிறதுக்கு போர்ன்விட்டாவா, டீயா இல்லே வேறே எதானுமா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்?ஒரு நா அவங்க பால் குடிக்காட்டா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது” என்றாள் கல்பனா.

“என் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க” என்று சிரித்தாள் ஜானகி.

“ஜானகி, உங்களைப் பேச்சுலே ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டம்.”

ஜானகி பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியே சென்றாள்.

நாலரை மணிக்குக் குழந்தைகள் வந்து விட்டன. கதவைத் திறந்த புது முகத்தைப் பார்த்து இரண்டும் திகைத்து நின்றன. ஒன்றுக்கு ஐந்து வயது இருக்கலாம் இன்னொன்றுக்கு ஏழு அல்லது எட்டு. ஜானகி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்று கல்பனாவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றியும் இப்போது அவள் படுக்கையறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருப்பது பற்றியும் சொன்னாள் . இரண்டும் சத்தமில்லாமல் நடந்து கல்பனாவின் அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பின.

அவர்கள் இருவருக்கும் தட்டுகளில் சோன்பப்டியும் சமோசாவும் வைத்துக் கொடுத்தாள். கன்னங்களில் குழி விழ  இரண்டும் சிரித்து வாங்கிக் கொண்டன. “ஆன்ட்டி , இது யார் கொண்டு வந்தாங்க?” என்று பெரியவள் கேட்டாள்.

“ஸோமட்டோ!” என்று சிரித்தாள் ஜானகி. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல்லேர்ந்து வரப்போ உங்களுக்கு பசிக்கும்னுதான்.”

“தாங்க்ஸ் ஆன்ட்டி.!” ஜானகி அவர்கள் இருவரும் குடிக்க பால் நிரம்பிய தம்ளர்களை அவர்களிடம் கொடுத்தாள்.

“ராத்திரி நீங்க என்ன சாப்பிடுவீங்க? சாப்பாடா, இல்லே டிபனா?” என்று கேட்டாள் ஜானகி.

“”டிபன்தான். ஆனா அம்மாக்கு உடம்பு சரியில்லையே!”

“அதுக்காக நீங்க பட்டினி கிடப்பீங்களா?” என்று கேட்டாள் ஜானகி.

“இல்லே, அப்பா ஓட்டல்லேர்ந்து வாங்கிட்டு வருவாங்க” என்றாள் பெரியவள்.

“சரி, இன்னிக்கி ஒட்டல்லேர்ந்து வேணாம். உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டிபன் எது ?”

இருவரும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் ஒரே குரலில் “பூரி” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

“சரி, இன்னிக்கிப் பூரி பண்ணித் தரேன். நீங்க ரெண்டு பேரும் வெளுத்துக் கட்டுங்க” என்றாள் ஜானகி.

அப்போது கல்பனாவின் படுக்கையறையிலிருந்து அவள் அழைக்கும் சப்தம் கேட்டது. ஜானகியுடன் குழந்தைகளும் ஓடி வந்தார்கள்.

“எப்படி இருக்கு இப்போ?” என்று கேட்டாள் ஜானகி.

“ரெண்டு மணி நேரம் அடிச்சுப் போட்டாப்பிலே தூங்கினது நல்லதாப் போச்சு. வலியும் இப்ப அவ்வளவா இல்லே.”

“இன்னும் ஒரு நா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும். கனகதாசா ஜெயந்தின்னு நாளைக்குக் காலேஜும் லீவுதானே” என்றாள் ஜானகி

சிறியவள் கல்பனாவிடம் “அம்மா எங்களுக்கு ஆன்ட்டி ஸ்வீட்டும் சமோசாவும் கொடுத்தாங்க!” என்றாள் சந்தோஷம் கொப்புளிக்க.

கல்பனா “எதுக்கு ஜானகி இதெல்லாம்?” என்று கோபித்துக் கொள்கிற மாதிரி சொன்னாள்.

“சாப்பிடறதுக்குத்தான்” என்றாள் ஜானகி. குழந்தைகள் இருவரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள். கல்பனாவின் முகத்திலும் சிரிப்புண்டாயிற்று.

“அம்மா, இன்னிக்கி நைட் டிபன் பூரி” என்றாள் பெரியவள்.

“என்னது?”

“ஆமா, ஆன்ட்டி இன்னிக்கிப் பண்ணித் தரேன்னு சொன்னாங்க” என்று கபடமற்றுச் சொல்லிற்று குழந்தை.

கல்பனா நெகிழ்ச்சியுடன் ஜானகியைப் பார்த்தாள்.

“எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லே கல்பனா. உங்க வீட்டுக்காரர் வர்ற வரைக்கும் நான் இங்க இருந்து உங்களைப் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கேன். அவர் வரதுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் ஆகுமில்லையா? நான் சும்மா உக்காந்திருக்கிறதுக்குப் பதிலா வேலை செய்யறேன். குழந்தைகளும் சாப்பிடறதுக்குக் கஷ்டப்பட வேண்டாம். இல்லையா?” என்றாள் ஜானகி.

“சரி, கிச்சன்லே சாமான்லாம் எங்க இருக்குன்னு நான் காமிக்கிறேன்” என்று எழ முயன்றாள் கல்பனா.

“நீங்க ஒண்ணும் எழுந்திருக்க வேண்டாம். நான் என்ன கல்யாணத்துக்கா சமைக்கப் போறேன்? நானே பாத்து எடுத்துக்கறேன்” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

“ஜானகி, அப்ப நீங்களும் இங்கியே சாப்பிட்டுருங்க” என்று கல்பனாவின் குரல் அவளை விரட்டிக் கொண்டு வந்தது, குழந்தைகள் ஹோம் ஒர்க் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டன.

ஜானகி சமையல் வேலையை முடித்து கால் மணி ஆகியிருக்கும். மாணிக்கவாசகம் வீட்டுக்குள் வந்து குழந்தைகளிடம் விசாரித்து நேராக அவளைப் பார்க்க அவன் வந்து விட்டான்.

“என்ன மேடம் நீங்க கல்பனாவுக்கு இன்னிக்கு முழுக்க செஞ்ச உதவியெல்லாம் போறாதுன்னு இப்பிடி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிட்டு? நாம வெளிலே ஆர்டர் பண்ணியிருக்கலாம்!” என்று பதறினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. பாருங்க, நீங்க வரதுக்குள்ளே சமையல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு. குழந்தைகளுக்கும் பசிக்கும் போது சாப்பிட டிபன் ரெடி ஆயிருச்சு. எனக்கு என்ன இதிலே பெரிய கஷ்டம்? நீங்க போய்க் கல்பனாவைப் பாருங்க. நான் கிளம்பறேன்” என்றாள்.

“அதெல்லாம் இல்லை. நீங்க இங்கே சாப்பிட்டு விட்டுதான் போகணும். நீங்களும் வாங்க. கல்பனாவைப் பார்க்கலாம்” என்று அவன் கல்பனா இருக்கும் அறையை நோக்கி நடந்தான். அவளும் உடன் சென்றாள்.

ஜானகி கல்பனாவிடம் சிறிது நேரம் பேசி விட்டு ” சரி.நான் கிளம்பட்டா? நாளைக்கு சாயந்திரம் வந்து பாக்கறேன். கம்ளீட் ரெஸ்ட்லே இருங்க” என்றாள்.

“ஓகே. மறக்காம வந்துடுங்க. நாளைக்கு டின்னர் உங்களுக்குஇங்கதான்” என்று விடை கொடுத்தாள்.

ஜானகி சிரித்தபடி நகராமல் அங்கேயே நின்றாள். கல்பனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் ஆச்சரியத்துடன் ஜானகியைப் பார்த்தாள்.

“தாங்ஸ்ஸை எடுத்துக் கொடுங்க. மறந்துட்டீங்களா?” என்று சிரிக்காமல் சொன்னாள்.

“அடேயப்பா!” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துத் தன் கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டாள்.

மாணிக்கவாசகத்தின் டிரைவர் ஜானகியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான்.

ஜானகி மறுதினம் மாலையில் கல்பனாவைப் பார்க்கச் சென்றாள். அவள் வலி குறைந்து தெளிவாகக் காணப்பட்டாள். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவள் கணவன் கப்பன் பார்க்குக்குச் சென்றிருப்பதாகக் கூறினாள்.

“காலேல டீச்சர்ஸ்லாம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துகிட்டே இருந்தாங்க. நீங்க நேத்திக்கிப் பண்ணின உதவியெல்லாம் நானும் ஏழெட்டு தடவை சொல்லியிருப்பேன். நீங்க என்னை ஆஸ்பத்திரிக்கு வேகமா எடுத்துகிட்டுப் போனது, அங்கே  உங்கம்மா ஆஸ்பத்திரியில் என்னைப் பாத்துக்கிட்டது, நீங்க என் ஹஸ்பண்ட் கிட்டே பேசி கவலைப்பட வேண்டாம்னு ஆறுதலா சொன்னது, அவரு ஊர்லேந்து வர்ற வரைக்கும் எங்க கூட இருந்தது, குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ், நைட் டின்னர்னு எல்லாத்தையும் இழுத்துப்  போட்டுக்கிட்டு செஞ்சதுன்னு நான் சொல்லச் சொல்ல அவங்களுக்கு அப்பிடி ஒரு ஆச்சரியம். ஏன் கேக்குறீங்க? அவங்க மூஞ்சியை எல்லாம் பாக்கணுமே!” என்று சிரித்தாள் கல்பனா. “கேட்டு எல்லோரும் மாஞ்சு போயிட்டாங்க. உங்களோட பேசி ஜெயிக்க என்னால் முடியலேன்னு நான் சொன்னப்போ எலிசபெத் ‘நம்பவே முடியலையே? நிஜமாவா சொல்றீங்க, நம்ப காத்தா அப்பிடிப்  பேசினா?’ன்னு…” சட்டென்று கல்பனா பேசுவதை நிறுத்தி விட்டாள். அவள் முகத்தில் குழப்பமும் கலவரமும் அசட்டுத்தனமும் பரவியதை ஜானகி பார்த்தாள்

“என்னது காத்தா?”

“ஐ’ம் ஸோ ஸாரி. ஸோ ஸாரி” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“எதுக்கு?”

“என்னமோ உளறிட்டேன்” என்றாள் கல்பனா. அவள் முகத்தில் இன்னும் கலவரம் இருந்தது. “லெட்ஸ் லீவ் இட், ப்ளீஸ்.”

ஜானகி மேலே எதுவும் பேசாமல் கல்பனாவின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“சரி சொல்லிடறேன். நீங்க இவ்வளவு ஸ்லிம்மா இருக்கறதுனால காத்து கொஞ்சம் பலமா வீசினா அது உங்களைத் தூக்கிட்டுப் போயிடும்னு….”

சில வினாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள் ஜானகி.

கல்பனா அவளை உற்றுப் பார்த்தாள்.

“காத்து! நைஸ் ஜோக் !!’ என்று மறுபடியும் சிரித்தாள். கல்பனாவைப் பார்த்து “நான் ஸ்லிம்மா? நோஞ்சான். ஓல்லிப்பிச்சான்! காத்து! கல்பனா, ஐ லவ் யூ ஆல்.”

ஜானகி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருந்ததைப் பார்த்துக் கல்பனாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது.

 

புதன் கிழமையன்று காலையில் அவள் வழக்கம் போல எட்டு ஐம்பது பஸ்ஸைப் பிடித்து கல்லூரி வாசலுக்கு எதிரே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது பத்து. ஐந்து நிமிட நடையில் அவள் கல்லூரி அலுவலகத்தை அடைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டாள். பிறகு நேராக ஆசிரியைகளுக்கான

அறைக்குச் சென்று காலியாய் இருந்த ஆசனமொன்றில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு எதிர்ப்புறத்தில் அறைக்குள் நுழையும் வாசல் இருந்தது. அவள் கழுத்தைத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். ஜன்னல் வழியே சுமார் நூறு கஜ தூரத்துக்கு மரங்களும் செடிகளும் நிரம்பிய கல்லூரியின் தோட்டம் தெரிந்தது.

அப்போது அறைக்குள் யாரோ நுழையும் சத்தம் கேட்டது. வத்சலா கோசாம்பி. உள்ளே நுழைந்த அவள் ஒரு கணம் திடுக்கிட்ட மாதிரி இருந்தது. அவளுடைய சாப்பாட்டுப் பையை ஆசிரியைகளுக்காக ஒதுக்கியிருந்த பீரோவில் வைத்துக் கொண்டே அவள் “குட்  மார்னிங் ஜானகி” என்றாள்.

“குட்மார்னிங் காத்துன்னே சொல்லுங்க. பரவாயில்லே” என்றாள் ஜானகி.

வத்சலா திரும்பி ஜானகியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள். அப்போது ஜானகிக்குத் தனக்குப் பின்னே ஜன்னல் வழியாக நூறு கஜ தூரத்துக்குக் கல்லூரியின் தோட்டம் இருப்பது நினைவுக்கு வந்தது..