தேவை என்றழைத்ததற்காக, தன்னிகழ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி அழைத்தது தவறென்றால், தேவையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியே, தயவு செய்து நான் உன்னை உரிமை கொண்டாடுவதற்கு கோபித்துக் கொள்ளாதே.
மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். (more…)
Author: natarajanv
கவிப்பித்து
– எஸ். சுரேஷ் –
வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மேக கூந்தலா,
பாம்பைப் போல் உள்ளதா?
உயரே தகிக்கும் சூரியன்
யாருடைய சுட்டும் சுடர் விழி?
அதோ நடந்து செல்லும் மங்கை
கொடியிடையாளா,
இடையே இல்லாதவளா?
அங்கே மேலிருந்து விழும் பறவையின்
சிறகு காற்றில் என்ன எழுதுகிறது?
பறவை பறந்து போன பின் மனம்
அந்தக் கிளை போல் அசைகிறதா?
வருடிச் செல்லும் காற்று பெண்ணின் ஸ்பரிசமா
சாயங்காலம் யாரது வானத்தில் கோலம் இடுவது?
குளத்துக்குள் தவளை ஒன்று குதிக்கிறது
பளுக் என்ற சப்தம் கேட்கிறதா?
எங்கள் கூட்டம்
விசாரம்
கொண்டேயிருக்கின்றன
கேள்விகள்
மெளனம் நிலைத்துவிடக் கூடாதென்ற
அதீத சிரத்தையுடன்
இடைவெளியின்றி
ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று
எந்த பதிலையும் எதிர்பாராது
எந்த சமாதானத்தையும்
லட்சியம் செய்யாது
தேய்ந்து போன குழாயிலிருந்து
சொட்டிக் கொண்டேயிருக்கும்
நீரைப் போல்
ஆதியில்லை
அந்தம் இல்லை
இலக்குகளும் இல்லை
நீர் வற்றிய குழாய்களுக்கு
என்ன மிச்சமிருக்கும்?
– அதிகாரநந்தி
நாள்
பகல் முடிகிறது
இரவு கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வருகிறது
பகலில் நகரெங்கும்
அலைந்து திரிந்த பேருந்து
தான் சேகரித்த
வெப்பத்தை
தன் பயணிகள் மீது கொட்டுகிறது
பள்ளியில் நடந்த கதைகளைச்
சொல்வதற்காக குட்டிக் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றன
அலுவலகத்தில் தொடங்கிய கணக்குகள்
கர்த்தாவின் மீது நம்பிக்கையிழந்து
தங்களைத் தீர்க்க சுயமாக
முயன்றுகொண்டிருக்கின்றன
எத்தனை விரட்டினாலும் பின்னாலேயே
வந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்
கோவில் பிச்சைக்காரியைப் போல
நாள் நம்மை
துரத்திக் கொண்டேயிருக்கிறது.