Author: பதாகை

தாத்தாவின் டைரி

கோவை ஆனந்தன் 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலிருக்கும் தனது கிராமத்திலிருந்த வானம் பார்த்தபூமி இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனைவியின் நகைநட்டையெல்லாம் அடமானம் வைத்து ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது ஆயிரம் அடி ஆழமாகியும் நீர் கிடைக்காமல் வரப்புகையாகவே போய்விட போட்ட பணத்தை நினைத்து இடிந்து உட்கார்ந்த முருகேசனிடம் “ஏங்க போனது போகட்டும் இதையே நினைச்சுட்டு இருக்காம என் அண்ணன் பொண்ணு பவித்ராவை நம்ம பையன் கோபிக்கு பொண்ணு கேட்காலாமானு இருக்கேங்க” என்றாள் மனைவி பார்வதி

“கையில காசுபணம் இல்லாதவங்க குடும்பத்துக்கு உங்க அண்ணன் எப்படி பொண்ணை தருவார்” என்ற கணவன் முருகேசனிடம் “அதைபத்தி நீங்க ஏன் கவலைபடுறீங்க எல்லாம் நான் பாத்துக்குறேன் கையில காசு பணமில்லாட்டியென்ன பையனைத்தான் நல்லா படிக்க வச்சுருக்கோமல்ல கூடிய சீக்கிரத்துல அவனுக்கு அரசாங்க வாத்தியார் உத்தியோகம் கிடைக்கபோகுது இதெல்லாம் தெரிஞ்சுருக்கற அவங்களுக்கென்ன கசக்கவா போகுது” என்றாள்

வறண்டுகிடந்த பூமியை விற்று கிடைத்த பணத்தில் திருமணமும் நல்லபடியாக முடிந்தது, மீதமிருந்த பணத்தில் இதுவரை தனியார் பள்ளியில் பணிபுரிந்த மகன் கோபிக்கு முக்கிய பிரமுகர் ஒருவரின் சிபாரிசால் கிணத்துக்கடவு அருகிலுள்ள குமாரபாளையம் கிராமத்தில் அரசுப்பள்ளியில் உத்தியோகம் கிடைக்க புதுமணத்தம்பதிகள் இருவரும் தருமபுரியிலிருந்து குடிபெயர்ந்தார்கள், இரண்டு வருடங்களில் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது, திருவிழா பண்டிகையென விசேஷங்களுக்கு மட்டும் குழந்தையுடன் ஊருக்கு போய்வருவார்கள் இந்நிலையில் திடீரென ஒருநாள் வந்த போனில் கோபியின் அம்மா இறந்துவிட்டதாக தகவல்வர எல்லோரும் போய் இறுதி காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு ஊர் திரும்பினர்.

அப்போது ஒரே பள்ளியில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியிலிருப்பதாக இடமாற்றம் செய்யப்பட்ட கடிதம் தயாராக இருந்தது, நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடிக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்ததால் அங்குநிலவும் சீதோஷ்ண நிலை குழந்தைக்கும் மனைவிக்கும் ஒத்துவராதென எண்ணி சொந்த ஊரில் அப்பாவுடன் இருக்கும்படி மனைவியையும் குழந்தையையும் விட்டுச்சென்றான் கோபி.

ஆரம்பத்தில் ஆறேழு மாதங்கள் நல்லமுறையில் ஒருதகப்பனை கவனித்துக்கொள்வது போல் சிறப்பாக கவனித்த மருமகள் பவித்ராவுக்கு அக்கம் பக்கத்திலிருக்கும் பெண்களின் நட்பு கிடைத்தபிறகு அவர்களோடு பேசும்போதெல்லாம் “என்ன பவித்ரா உன் மாமனாரை இப்படி விழுந்து விழுந்து கவனிச்சு பணிவடை செய்யுற, எதுக்கும் பார்த்துடி ஏன்னா எல்லாமுக்குமே ஒரு லிமிட்னு ஒன்னு இருக்கு, ஒருமருமகளா நீ அவரோட துணிகளையெல்லாம் துவைக்கிறது நல்லாவா இருக்கு, பெருசு அதோடதை அதே துவைக்காதா என்னோட மாமனாரு மாமியாருனு யாரோட துணியும் நான் துவைக்கறதில்லை” என்றாள் பக்கத்துவீட்டு கல்பனா

அதன்பிறகுதான் பிரச்சினையெல்லாம் தொடங்கியது.

வீட்ல சும்மாதானே இருக்கீங்க கடைக்குப்போயி அதை இதையென ஏதாவதொன்றை வாங்கிட்டு வரச்சொல்வதும் அதில் ஏதாவது குறை சொல்வதுமாயிருந்தவள், மாமனாரென இல்லை வயதில் மூத்தவரெனக்கூட நினைக்காமல் கால்மேல் கால்போட்டு வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து கொண்டு அவ அம்மாவோடும் கணவனுடனும் செல்போனில் பேசுவதும் சிரிப்பதுமே வாடிக்கையானது, அடிக்கடி ஏதாவது ஒருபொருளை மறந்துவிட்டதாகவும் திரும்பபோய் வாங்கி வருமாறு சொல்லி அடிக்கடி வெயிலிலும் இருட்டிலும் கடைக்கு அனுப்புவதாகவே இருந்தாள், இதை விரும்பாத முருகேசன் ஊர்மத்தியிலிருக்கும் வேப்பமரநிழலில் மற்ற பெருசுகளுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பார், பிறகு பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் பேரன் தர்சனை வீட்டுக்கு அழைத்துச்செல்வதும் அவனுடன் சிறிது நேரம் விளையாடி பொழுதை கழிப்பதே தினசரியானது.

தினமும் இரவு உணவுக்குபின் அந்தக்கால எஸ் எஸ் எல் சி முடித்தவரென்பதால் உள்ளூர் நூலகத்திலிருந்து எடுத்து வந்திருக்கும் ஏதாவதொரு நாவலை வாசிக்கும் பழக்கத்தோடு டைரிஎழுதும் பழக்கமும் இருந்தது. முன்னொரு நாள் மாமனார் இல்லாத வேளையில் டைரியை கையிலெடுத்தவள் பிறருடைய தனிப்பட்ட விடயங்களை படிப்பது அநாகரீகமென கருதி எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள், அப்பொழுது மாமனாரும் வந்துவிட அறையை சுத்தம் செய்பவளைப்போல வெளியே வந்துவிட்டாள் அதன்பிறகும் அந்த டைரி அதே இடத்தில்தான் இருந்தது,

சேவல்கள் கூவும் அதிகாலைப்பொழுதில் முத்தண்ணன் தேநீர் கடைமுன் முதல் ஆளாய்சென்று “முத்து” என லேசாக குரலெழுப்பியதும் தூக்கக்கலக்கத்தில் கண்களை கசக்கிக்கொண்டு நடைதிறந்த முத்துவிடம் கேட்காமலேயே தேநீர் கொண்டுவந்து தருவார், அப்பொழுது ஊருக்குள்ளிருக்கும் எல்லா நரை நட்புகளும் அந்த தேநீர்கடை கூரையின்கீழ் கூடிவிடுகிறது. செய்திதாள்கள் வருமுன்னே உள்ளூர் செய்திகளத்தனையும் கரகரத்த குரலில் நெஞ்சிலிருந்து குத்திகிளறி வெளிவரும் வறட்டு இருமலோடு பக்கத்து நாற்காலியிலமர்ந்து பேசிக் கொண்டிருப்பார் மாரிமுத்து, காதில் விழும் எதையும் உன்னிப்பாக கவனிக்காமல் செய்திதாள்களிலேயே மூழ்கிகிடப்பார் முருகேசன்.

டி வியில் திரும்பதிரும்ப வந்து மறையும் விளம்பரங்களைபோல பத்துப்பிறைகள் கண்டு பெற்ற ஆண்பிள்ளைகளின் இயலாமையால் பலவீடுகளில் பெற்றோர்களின் சுதந்திரமும் புன்னகையும் பறிபோனது மருமகள்களின் சர்வாதிகாரங்களால்தான் என சாவை எதிர்பார்த்துக்கிடக்கும் கிழடுகளெல்லாம் தங்களுக்கேற்படும் அவமானங்களையும், தலைவிரித்தாடும் கொடுமைகளையும்பேசி புலம்பும்போது தன்கவலைகள் எதையும் யாரிடமும் சொல்லாமல் இன்னொரு குவளை தேநீரை பருகி அங்கிருந்து வெளியேறுகிறார்.

பேரப்பிள்ளையை பள்ளிப்பேருந்திலேற்றி வழியனுப்பி திரும்பும்வரை குழந்தையாகவே குதூகலித்த முருகேசனின் மனம் வீட்டுவாசல்படிகளை மிதிக்கும்போதெல்லாம் சற்றுமுன்னிருந்த சிலநிமிட குதூகலங்களோடு தொலைந்து போகிறது. கூண்டில் அடைத்துவைத்துள்ள ஜெர்மன்செப்பேடு நாயிற்கு வைத்திருக்கும் செல்லப்பெயரில் அதை அழைத்து ராஜஉபசரிப்பில் காலை உணவினை வைக்கும் மருமகளின் கைகளால்தான் நுரைக்குமிழ்கள் மிதக்கும் பழையசோற்றினை ஒடுங்கிய தட்டில் போட்டு திண்ணையின் ஓரத்தில் வைத்துவிட்டு எதுவும்பேசாமல் உள்ளே சென்றுவிடுகிறாள், வேறுவழியின்றி அதையெடுத்து தயக்கங்களோடு மறைவிடத்தில் நின்று உண்ணும் முருகேசனை யாரும் பார்த்திருக்க வாய்ப்பிவில்லை।

சுடான சாதம்கேட்டால் உலையிலிருக்கும் நீரைவிட வசவுகளால் கொதிப்பாளென கொல்லைப்புறத்திலுள்ள செடிகளின் மறைவில் பச்சைத்தண்ணியை மட்டும் சிலநாட்கள் குடித்து திரிவதை அடையாளப்படுத்துகிறது முருகேசனின் ஒட்டியவயிறும், தட்டிலிடும் அரிசிசோற்றில் சூடுபறக்கும் ஆவிகள் முன்கூட்டியே அவள்தரும் வேலைகளின் தந்திரத்தினை இரகசியமாய் சொல்லிவிடுகின்றன.

இந்நிலையில்தான் ஒருநாள் நூலகம் சென்றுவிட்டு வீடுதிரும்பிய போது, “என்னங்க உங்கப்பா தினமும் காலையில சாப்பிட்டதுமே அவருவயசுல இருக்குற பெருசுங்ககூட சேர்ந்துட்டு மரத்தடியிலியே போயி உட்கார்ந்திட்டு ஊர்கதை பேசிட்டு இருக்கார், வீட்டுல இருக்குற சின்னச்சின்ன வேலைகளைக்கூட எதுவுமே செய்யறதில்லை எல்லாமே நான் ஒருத்தியாவே செய்யவேண்டியதா இருக்கு பையனை ஸ்கூல் பஸ்ல ஏத்திவிடறுது வரைக்கும் நானேதான் செய்றேனென” பேசிக்கொண்டிருக்கும் போது வாசலில் மாமனார் நடந்து வரும் செருப்புசத்தத்தை கேட்டதும் பேச்சை மாற்றிக்கொண்டாள்

போன்காலினை துண்டித்துவிட்டு “இந்தாங்க ரேசன்ல சர்க்கரை பருப்பு போடுறாங்களாம் போயி வாங்கிட்டு வாங்க” என அட்டையும் வாங்கும் பொருளைபோட பையும் கொண்டுவந்து தந்தாள் மருமகள்பவித்ரா. உச்சிவெயிலில் நடந்துபோய் ரேசன்கடைவரிசையில் வியர்வைகள் வழிந்தோட சட்டைத்துணியும் நனைந்து தள்ளுமுள்ளில் சிக்கி மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கி இருமணிநேரங்கள் கடந்து விரல்ரேகைகள் பதியும் எந்திரத்தின் அருகில்போய் நிற்கும்போது ஒவ்வொரு முறையும் தோல்வியுறுகிறது முருகேசனின் விரல் பதிவுகள் மட்டும். பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவனைப்போலவே பயத்தோடு வாசல்படிகளுக்குள் கால்வைத்ததும் சர்க்கரை வாங்கிடபோய் திரும்பியவர் காதுகளில் “ஊருல எல்லோருக்கும் விரல்ரேகை பதிவாகறப்ப உங்களுக்கு மட்டும் பதிவாகாதோ”என அச்சில்காணமுடியாத வார்த்தைகளால் செய்த அர்ச்சனையில் வாழும் வாழ்க்கையே கசந்தது

மருமகளின் முன் அழுதால் அவமானமாகிவிடுமென விழிகளில் குளமான கண்ணீரையும் கொல்லைப்புறத்திற்கே கொண்டுபோய் சேர்த்த முருகேசன் சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த மனைவி பார்வதியின் புகைப்படத்தை கையிலெடுத்து செடிகளின் நிழலில்நின்று “என்னை இப்படிதனியாக விட்டுட்டுப் போக உனக்கெப்படி மனசுவந்ததென” அழுதவர்வழக்கம்போல பேரனை பள்ளியிலிருந்து அழைத்துவந்து வீட்டில்விட்டதும் தனது அறைக்குள்போய் சிறிது நேரத்திற்குபின் வெளியேவந்தவர் பேரன் தர்சனிடம், “கடைக்குப்போயிட்டு வர்ரேன்டா தர்சன்” எனக்கூறிக்கொண்டு கிளம்பி வெளியேபோனார்.

இரவு ஒன்பது மணியாகியும் வெளியில் கிளம்பிப்போன மாமனாரைக் காணாததால் பதற்றமானாள் பவித்ரா, இதைக்கண்ட குழந்தை தர்சன் பயத்தில் அழுதான், உடனே அருகிலிருந்த போனை எடுத்து கணவனை தொடர்புகொண்டு “என்னங்க சாயங்காலம் வெளியிலபோன மாமா எங்கபோனாருனு தெரியலை இன்னும் வீட்டுக்கு வரல” என்றாள்

“அவரு வழக்கமா போற டீக்கடைல கேட்டயா” என்றான் கோபி

“அவருகூட சுத்தற மாரிமுத்து மாமாகிட்ட கேட்டேன் அங்க வர்லைனு சொல்லிட்டார்” என்றாள்

“அவருகூட நீ ஏதாவது சண்டைபோட்டயா”

“இல்லை நானெதுக்குங்க அவருகூட சண்டைபோடுறேன்” என்றாள்

“அப்படியே லைன்லயே இருந்துட்டு ரூம்ல போய்ப்பாரு ஏதாவது எடுத்துட்டு போயிருக்காரானு”

“என்னங்க மாமாவோட பீரோவெல்லாம் திறந்துகிடக்குது அவரோட துணிகளும் கொஞ்சம் காணோம்” என்றாள்

“அம்மா தாத்தா கடைக்கு போறபோது கையில ஒரு பேக் எடுத்துட்டுப்போனாரு”னு தர்சன் சொல்ல

ஓவென அழுதாள்

“அதுக்குத்தான் அவருக்குனு ஒருபோன் வாங்கி தர்றேனு சொன்னேன் அதெல்லாம் வேண்டாம் அவரு யாருகூட பேசப்போறாருனு சொல்லிட்ட,இப்ப பார்த்தியா போனிருந்திருந்தாலாவது கால் பண்ணி கேட்டிருக்கலாம்” என்ற கோபி “பவி நீ அழாம போய் கதவை தாள்பாலிட்டுட்டு படு அவரு திரும்பிவந்து கதவைத்தட்டுனா கதவைத்திற இந்த ராத்திரி வேளையில நானும் இங்க இருந்து வரமுடியாது மழையும் விடாம பெய்யுது என்னசெய்யறது எதுவாயிருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்”னு சொல்லிட்டு போனை துண்டித்தான்.

மாமனார் காணாமல்போனதால் தூக்கம் வராமல் மறுநாள் காலையில சீக்கிரமே எழுந்த பவித்ராவுடன் தர்சனும் எழுந்துவிட இருவரும் அக்கம் பக்கமென சுற்றிலும் தேடினார்கள். வீட்டிற்கு பின்புறமிருந்த தோட்டத்திலிருந்து தாத்தாவின் டைரியை எடுத்துக்கொண்டு ஓடிவந்த தர்சன் “அம்மா இது தாத்தாவோட டைரி சப்போட்டா மரத்தடியில இருக்குற கல்லுமேல வெச்சுருந்தாரு” என்றான்

படபடப்புடன் டைரியை வாங்கி அதன் கடைசிநாளில் எழுதப்பட்டிருந்த பக்கத்தை தேடியெடுத்து படித்தாள்.

“அன்புள்ள மருமகளுக்கு,

இன்று ரேசன்கடையின் கூட்டத்தில் மணிக்கணக்கில் நின்று தாகத்தில் வாயெல்லாம் வறண்டு திரும்பியவனைப்பார்த்து நீ பேசியதில் மனமுடைந்துதான் இதைஎழுதுகிறேன், நான் இந்த டைரியில் எழுதுவது இதுவே கடைசிநாளாக இருக்குமென நினைக்கிறேன்,இதுவரை தெரிந்தோ தெரியாமலோ உனக்கும் குடும்பத்துக்கும் பாரமாக இருந்துவிட்டேன்,நீ ஆரம்பகாலங்களில் நடந்துகொண்ட விதத்திற்கும் தற்பொழுதிற்கும் நிறைய மாற்றங்களை உணரமுடிகிறது இதெல்லாம் “பாலில்கலந்த ஒருதுளி நச்சாய்” யாரோ உன்மனதில் விசமத்தைத்தூவி பரப்பியிருக்கிறார்கள் அதை காலப்போக்கில் நீயும் அறிவாயென நினைக்கிறேன், எனது இந்தடைரியில் தினமும் நானடைந்த வேதனைகளையும் அவமானங்களையும் முதலில் எழுதியிருப்பேன் அந்த பக்கங்களை கொஞ்சம் பின்னோக்கி திருப்பிபார்த்தால் உனக்கும் புரியும்,உனக்கு மனமென்று ஒன்றிருந்து நீ ஏற்கனவே இதையெடுத்து வாசித்திருந்தால் மாறியிருப்பாய் இல்லை இனியாவது மாறுவாய் என நினைத்து எழுதாமலே பல பக்கங்களை விட்டுவிட்டேன், காலப்போக்கில் நீ மாறிவிடுவாயென இருந்து நானும் ஏமாந்துவிட்டேன்,எனது மனைவியை இழந்தபின் தனிஆளாய் நான்வாழ்ந்து எதை சாதிக்கப் போகிறேன், இதுவரை எல்லா சங்டங்களையும் பொருத்துக்கொண்டு உங்களோடு இருந்தது தர்சனுக்காகத்தான்,இனியும் இதுபோன்ற நிலையில் கூனிக்குறுகி வாழ மனம் இடம்தராததால் இங்கிருந்து வெளியேறுகிறேன்,இதை படித்தபிறகு டைரியை என்மகன் (உன் கணவன்) கையில் கிடைக்காமல் அடுப்பில்போட்டு எரித்துவிடு உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வேண்டாம் இனி என்னைத்தேடவும் வேண்டாம்.

இப்படிக்கு

முருகேசன்”

என எழுதியிருந்தது

கண்ணில் பனித்த ஈரத்துடன் கணவனுக்கு போன்செய்து அழைத்தாள், மறுநாளே வீட்டிற்கு வந்தவனிடம் டைரியைகாட்டி”நான் மிகப்பெரிய தப்புசெஞ்சுட்டேன் என்னை மன்னிச்சுக்குங்க பக்கத்துவீட்டு கல்பனா நான் மாமாவுக்கு செய்யற வேலைகள பார்த்துட்டு அவளும் அவ மாமனாருக்கு இதே மாதிரிசெய்யனுமுனு நினைச்சு எங்கிட்ட தப்பாச்சொல்லி மனசை கலைச்சுட்டா, காலத்துக்கும் யாரும் என்னை மன்னிக்கமுடியாத தப்பைப்பண்ணிட்டேன்” என அழுதாள்,

“இப்ப அழுதென்ன பிரயோஜனம் எல்லாமே கைமீறி போயிடுச்சு நானும் உன்னோட மட்டுமே போன்ல பேசிட்டு எங்கப்பாகிட்ட அதிகமா பேசாததும் பெரிய தப்புதான்” எனசொல்லிட்டு போலீசில் தேடச்சொல்லி கம்பளைண்ட் கொடுக்க கிளம்பினர்

போலீசும் இவர்களிடம் விசாரணையெல்லாம் செய்து முடித்து தேடிக் கொண்டிருந்தனர் எந்த தகவலும் கிடைக்காமல் ஒருவாரத்திற்கு மேலாக தேடியும் ஆள்கிடைக்காமல் நாட்களும் கடந்துவிட்டது

காலைநேரம் மீண்டும் மசினக்குடிக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த கோபியின் செல்போன் மணியடித்தது

“ஹலோ”

“ஹலோ கோபி நான் உன் அப்பா பேசறேன்டா” என எதிர்முனையில் சொன்னதும் சந்தோசத்தில் ஸ்பீக்கரில் போட்டான்

“அப்பா எங்க இருக்கீங்க என்னப்பா இப்படி பண்ணிட்டு போயிட்டீங்களே ”

“என்னை விடுடா கோபி, நீ எப்படியிருக்குற அப்புறம் தர்சன், பவித்ரா எல்லாம் நல்லாயிருக்காங்களா, என்ன சொல்லாம வந்ததால கோபாமா இருப்பானு நினைக்கிறேன், சொன்னா விடமாட்டீங்களேனுதான் எதுவும்சொல்லாம கோயில் குளமுனு போகலாமுனுதான் கிளம்பி காசிக்கே வந்துட்டேன் அவ்வளவுதான்” என்றார் முருகேசன்

“எப்பப்பா வர்றீங்க”னு கேட்ட கோபியிடம், “பார்க்கலாம் எல்லாம் அவன் செயல்” னு மனசுக்குள் நிழலாடும் பேரனின் நினைவுகளை மறைத்துக்கொண்டு பேச அருகில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பவித்ரா கண்ணீருடன் வீட்டினுள்ளே ஓடினாள்.

 

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ் 

நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் ராஜ்மோகனை தொலைபபேசியில் அழைத்து “இந்த எழுத்தாளரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இந்திய எழுத்தாளர்களைப்  பற்றி விக்கிபீடியாவுக்கு தெரிந்ததை விட ராஜ்மோகனுக்கு அதிகம் தெரியும். “அவர் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். பஞ்சாபின் முக்கிய எழுத்தாளர். தச்சர் குலத்தை சேர்ந்தவர். தலித் சர்தார்ஜிகளை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.”

என்னை இரண்டு விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின. ஒன்று, எனக்கு இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை பற்றி தெரியாமல் இருந்தது. இரண்டாவது, சீக் சமூகத்திலும் ஜாதி பேதங்கள் இருப்பது. அந்த சமூகத்திலும் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்த்தேன்.

‘பர்ஸா’ என்ற அந்த நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுதே குர்தயால் சிங்கின் ஆளுமையை அறிய முடிந்தது. அந்த நாவலில் ஒரு சமூகத்தின் மொத்த உருவத்தையும் நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராணா நய்யர் என்பவர் குர்தயால் சிங்கின் பர்ஸாவை ஆக சிறந்த பூஞ்சாபி நாவலாக ஒரு கருத்தரங்கில் சொன்னார். அதற்கு பின் என்னுடன் பேசிய அவர், “பர்ஸா பஞ்சாபின் கலாசாரத்தை அற்புதமாக முன்னெடுத்து வைக்கிறது. இந்த நாவலை படித்தால் எப்படி சீக் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரமும் இணைந்து இருந்தன என்று நமக்கு தெரிய வருகிறது. ஒரு கலாசாரம் என்பது எப்படி மற்ற கலாசாரங்களுடன் உரையாடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.” குர்தயால் சிங் தலித்களை பற்றி அதிகம் எழுதியிருப்பதை பற்றி நான் சொன்னபொழுது, “ஆனால் அவர் எல்லோரை பற்றியும் எழுதியிருக்கிறார்.  பர்ஸா என்பவர் ஒரு ஜாட் பிராமின். மற்ற நாவல்களில் அவருடைய தச்சர் ஜாதி மக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்”.

பர்ஸாவுக்கு அடுத்ததாக நான் குர்தயால் சிங்கின் முதல் நாவலான ‘மர்ஹி தே தீவா’ என்னும் நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். (ஆங்கிலத்தில் இதற்கு ‘லாஸ்ட் ஃப்ளிக்கர்’ (Last Flicker) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது). ஒரு தலித் சர்தார்ஜி இளைஞன் தன் நண்பனின் புதிய மனைவி மேல் மோகம் கொள்கிறான். அதன் விளைவுகளை இந்த நூல் விவரிக்கிறது. இது மனதை நெகிழவைக்கும் காதல் கதையாக இருக்கும்பொழுதும், அந்த காதல் கதை நடக்கும் களத்தை நம் கண்முன் குர்தயால் சிங்அற்புதமாக கொண்டுவருகிறார். நமக்கு அந்த காதல் மட்டுமல்ல, அந்த சமூகத்தை பற்றியும் நல்ல ஒரு புரிதல் கிடைக்கிறது.

குர்தயால் சிங்கின் எல்லா நாவல்களிலும் தனி மனிதர்கள் சமூகத்தின் ஒரு சிறிய அங்கமாகதான் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் தொடர்ந்து மோதுகிறார்கள். அப்படி மோதும் ஒரு தச்சன் கதைதான் ‘அன்ஹோயீ’. சாலை விரிவுப்படுத்தவேண்டி அரசு அவனுடைய வீட்டை பலிகொள்ள முடிவெடுக்கிறது. தன் வீட்டை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்து, அரசுடன் மோதி, போலீசுடன் மோதி, தன் தம்பியுடன் மோதி, எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் எளிய மனிதனின் கதை இது.

அரசு, போலீஸ், சமூகத்தின் பெரிய புள்ளிகள் என்று எல்லோரும் சுரண்டும் எளியவரின் வாழ்கையை தான் குர்தயால் சிங் தன் நாவல்களில் எழுதினார். ‘அந்தே கொடே த தான்’ என்னும் நாவலில் மாறும் காலம் எப்படி ஏழைகளை தாக்குகிறது என்பதை மிகவும் கரிசனத்துடன் சித்தரித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தங்கள் எப்படி பணபலத்துடன் மீறப்படுகின்றன என்பதையும், அவைகள் மீறப்படும்பொழுது அரசு எளியவர்களுக்கு எதிராகவே நிற்பதையும் குர்தயால் சிங் தெளிவுப்படுத்துகிறார்.

குர்தயால் சிங் குடும்ப காரணங்களால் பன்னிரெண்டு வயதிலேயே தச்சு வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவர் மனது முழுவதும் படிப்பதில் இருந்தது. பல வேலைகளை செய்து கொண்டே அவர் படிப்பை தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அவருடைய நாவல் சாகித்ய அகாடெமி விருது  பெற்றிருக்கிறது. அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கியது. ஞானபீடம் விருதும் அளிக்கப்பட்டது. 1933 இல் பிறந்த அவர் 2016 வருடம் மறைந்தார்.

அவருடைய ‘பர்ஸா’,‘Last Flicker’ மற்றும் ‘Handful of Sand’ என்று மூன்று புத்தகங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட்டில் கிடைக்கின்றன. ‘அந்தே கோடே த தான்’ ‘In the name of blind horse’ என்ற பெயரில் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டு அமேஜானில் கிடைக்கிறது. ‘அன்ஹோயி’ மற்றும் ‘அத் சாந்த்நி ராத்’ என்னும் நாவல்கள் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இப்பொழுது கிடைப்பதில்லை. யாரும் அவற்றை மறுபிரசுரம் செய்யவில்லை.

ஏழை எளியவர்களை பற்றியும், அவர்களுக்கும் அரசுக்குமான உறவை பற்றியும் அதே சமயம் தனி மனித உணர்வுகளை பற்றியும், குடும்ப சிக்கல்களை பற்றியும் எழுதி ஒட்டுமொத்த பார்வையை அளித்த குர்தயால் சிங் நம் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எனக்கு எந்த  சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நிகழ்கிறது- அவரைப் பற்றி பஞ்சாபுக்கு வெளியே அதிகம் நபர்களுக்கு தெரிவதில்லை. நல்ல இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குர்தயால் சிங்கை படித்திருக்காமல் இருக்கக் கூடாது.

 

 

மனிதம்

ஷ்யாமளா கோபு

முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன் ராமலிங்கம். இன்று நேற்றா? கடந்த இரு வருடங்களாகவே.

அடுப்பு மேடையின் மீதிருந்த அலுமினிய வாளியை எடுத்து கூடைக்குள் வைத்தவாறே கணவனிடம் சொன்னாள் மனுஷி. “இங்கே பாரு. இதோ உனக்கு சாப்பாடு, பிளாஸ்கில் சுடு தண்ணி வெச்சிருக்கேன். அடுப்பில டீத்தண்ணி கிடக்கு. கங்கை அணைக்கலை. அதனால் சூடாகவே இருக்கும். எடுத்து குடிச்சிக்க. சாயங்காலம் பிள்ளைங்க வந்ததும் அதுகளுக்கும் ஆளுக்கு ஒரு கிளாஸ் டீத்தண்ணி குடு. நான் வெள்ளனே வந்துடறேன்”

“முதலாளிக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டியா?”

“அதான் நித்தியப்படி ஆச்சே”

“உனக்கு?”

“எடுத்துக்கிட்டாச்சு. மாத்திரை மருந்தை பக்கத்துல டப்பால வெச்சிருக்கேன் பாரு. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போட்டுக்க மறந்துடாதே”

“இது ஒரு கருமம்’

“ஏன்யா சலிச்சிக்கிறே?”

“பின்னே என்ன? இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த கட்டையை வெச்சிக்கிட்டு கிடக்குனுமோ”
“ஏன் நான் பூவும் பொட்டுமா இருக்கறது உன் கண்ணை உறுத்துதா?”

“அந்த ஒரு காரணத்துக்குத்தான் உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது

.கையில் இருந்த தூக்குசட்டியை அடுப்படி மேடையின் மீது வைத்து விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் “ஏன்யா இப்படி பேசறே?” என்றாள் அன்புடன்.

“பிரவோசனம் இல்லாமல் போயிட்டேனே?” விசும்பினான்.

“பிரவோசனமா இருந்தவன்தானே நீ” என்று அவன் தலையை தன் மார்போடு அணைத்து முகத்தை வருடிக் கொடுத்தவள் “இந்த ஊரே மெச்சும்படி என்னைக் கல்யாணம் கட்டி ஆசை ஆசையாய் ரெண்டு பிள்ளையைப் பெத்து கவுரவமாத் தானே எங்களைக் காப்பாத்தினே”

‘இந்த ரெண்டு வருஷமா நீ என்னென்ன கஷ்டப்பட்டு நாலு ஜீவனுக்கும் கஞ்சி ஊத்தறே”

“அதுக்கு என்னய்யா பண்றது? உன்னாலே முடிஞ்ச போது நீ செஞ்சே. இப்போ உனக்கு முடியாம போகவும் நான் செய்யறேன். குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும்”

“ம்”

“அதை விட உன் அன்பு பெருசுய்யா” என்று அவன் முகத்தை வருடி திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள். அது படக்படக்கென முறிந்தது. ”பாரு. எம்புட்டு திருஷ்டி உனக்கு” என்று மெல்ல அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“இன்னைக்கு ராவுக்கு முதலாளி வருவாரா?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், “வூட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே. அதான் கேட்டேன்” என்றான்.

“ரெண்டு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு”

“என்னவாம்?” என்றான் உண்மையான அக்கறை குரலில் தென்பட.

“நாக்குக்கு ஒன்னும் பிடிக்கலை. சரியா சாப்பிட முடியலைன்னு சொன்னாரு”

“அவருக்கு உனக்கையா சமைச்சிக் கொடு தங்கம்”

“உக்கும். அவருக்கு உனக்கையா சமைச்சிப் போட நான் என்ன அவரு பொண்டாட்டியா?”

“எனக்கு விபத்து ஏற்பட்டு இப்படி ஆன நாளில் இருந்து அந்த மனுஷனாலத் தான் நாம கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம்” என்றான் நன்றியுடன்

மண்டித் தெருவில் மூட்டைத் தூக்கும் தொழிலாளியான ராமலிங்கம், முதுகில் மூட்டை விழுந்து, முதுகெலும்பு முறிந்து, படுத்த படுக்கையான பின்,  அதே தெருவில் நாலைந்து கடைகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறாள் இந்திரா. அதனால் இந்த நான்கு ஜீவன்களும் ஒரு வாய் உணவையேனும் உண்ண முடிந்தது. ஆனாலும் கணவனுக்கு போதிய வைத்தியமும் அதற்கேற்றாற்போல சத்தான ஆகாரமும் கொடுக்க இயலவில்லை அவளால். வளர்ந்து வரும் இரு பிள்ளைகளுக்கும் வயிறார உணவிட முடியாமல், உழைத்து களைக்கும் தன் பசி போக்கும் வகை தெரியாமல். அந்த பிள்ளைகள் பசியால் இழுத்துப் பிடிக்கும் வயிற்றை தடவியவாறு தூக்கம் வராமல் கிடக்கையில் அதைக் கண்டு எத்தனயோ இரவுகள் அழுகையில் கரைந்திருக்கிறாள் அவள்.  இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு பிழைத்து விட்டால் மகன் வேலைக்கு போய் விடுவான். குடும்ப பாரத்தை சுமக்க தன்னோடு ஒரு தோள் கொடுப்பான். அதுவரை கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் வாழத் தான் வேண்டும்.

மண்டித்தெருவில் முதலாளி ராஜேந்திரனுக்கு சிறு அரிசி கடை இருந்தது. முதலில் இவளுக்கு கடனுக்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்தவர் ஒருநாள் தனக்கு சோறு ஆக்கித் தர முடியுமா என்று கேட்கவும், அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதில் சோறு ஆக்கித் தர சம்மதித்தாள். இநத முதலாளியின் தயவால் இவர்கள் குடும்பம் வயிறார பசியாற முடிகிறது. சமயத்தில் வைத்திய செலவும், அவளுக்கு கிழிசல் இல்லாத நல்ல புடவைகளும் கூடத் தான்.

ஒருநாள் காயலாய் கிடந்த முதலாளியை மகனின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டி விட்டு தங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டார்கள் அவர்கள். பத்திய சாப்பாடும் விருந்தோம்பிய பண்பும் அவரை நெஞ்சை நெகிழ்த்தவே, தனிமை சலிப்பைத் தரும் பொழுதுகளில் இரவு  கடை மூடிய பின் இங்கே வந்து பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்தது. அலுத்துக் களைத்து வருபவருக்கு சுடச்சுட வெந்நீர் குளியலும் சூடான உணவும் அதுவும் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்புகளும் உண்டு.

ஓரத்தநாட்டுப் பக்கம்  களக்காடு கிராமம் முதலாளிக்கு. தாய் தகப்பனற்று, தாய்மாமன் வீட்டில் எடுபிடியாக வளர்ந்தவருக்கு, காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப் போய் ஏமாந்து திரும்பி வந்த தன் மகளை மணமுடித்து கொடுத்தார் மாமன். தென்னை மரம் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்ததில் ஆண்மையற்றுப் போனவனை, வேலைக்கு ஆகாதவன் என்று வெறுத்த மனைவி. வீட்டை விட்டு இவரை துரத்திய மாமன் மனைவி, மகளுக்கு வேறு ஒருவனை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்ட மாமன் என வாழ்க்கையே துரோகமாகவும் அவமானமாகவும் வேதனையாகவும்  முடிய இங்கே வந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஆனாலும் இந்த முதலாளி நம்ம வீட்டுக்கு வராம இருந்தா தேவலை. இது மாதிர் வீண் பேச்சை கேக்க வேண்டியிருக்காது” என்று குறைப்பட்டுக் கொள்வாள் இந்திரா.

“நீ இல்லாத சமயங்களிலும் நம் வீட்டுக்கு வந்து என்னிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பார். என்றோ இறந்து போன பெத்தவங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். உன்னைப் பார்க்கையில் அவர்  அம்மா மாதிரி இருக்கவே உன்னிடம் ஒரு மரியாதை இருப்பதாக சொல்வார்”

“உண்மை தான். என்னை ரொம்பவே மரியாதையாகத் தான் நடத்துவார் இங்கேயும் சரி. கடையிலும் சரி. மற்றவர்கள் எதிரிலும் சரி. மரியாதை தான். தாயி என்று தான் அழைப்பார்” என்றாள் அவளும் ஆத்மார்த்தமான நெகிழ்வுடன்.

ஒருநாள் முதலாளிக்கு காய்ச்சல் வந்தது. மருத்துவமனையில் சேர்த்ததில் அவருக்கு உயர் ரத்தக் கொதிப்பு என்றனர். கட்டுக்கடங்காத ரத்தக் கொதிப்பு கைகால்களை முடக்கிப் போட்டு விட்டது. இப்போது இவரை யார் பார்த்துக் கொள்வது என்று ஒரு கணமும் தயங்கி நிற்காமல் ராமலிங்கம் தன் கட்டிலை விட்டு இறங்கி அங்கே முதலாளியை படுக்க வைத்தான்.  இந்திரா தான் முதலாளிக்கும் பாடு பார்க்கிறாள். கணவன் கூடமாட உதவி செய்கிறான். இதற்கு பேர் என்ன சொல்வது?

இந்த உலகம் அவளை சோரம் போனவள் என்றாலும் சரி.  வீரபாகு அக்காவை கொடுத்து பேக்கரி வாங்கியதைப் போல ராமலிங்கம் பொண்டாட்டிய அனுப்பி அரிசி கடையை வாங்கிட்டான் என்று மற்றவர்கள் கேலி செய்தாலும் சரி. இது அவர்கள் வாழ்க்கை. அவர்கள் உலகம். அவர்கள் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்?

ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி

‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர்.

நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி நூல்கட்டை பிடித்து கையில் எடுத்துக் கொண்டேன். மொத்த வகுப்பறையின் கண்களும் என்னையே வெறித்தன.

மூன்று மாதங்கள் முன்னால் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கென்று டெய்ஸி டீச்சர் மனதில் ஒரு நல்ல மரியாதையான இடம் கூட இருந்திருக்கலாமென்று நினைக்கிறேன். உறுதியாக சொல்ல தெரியவில்லை.

 

நான் காய்ச்சல் விடுமுறை முடித்து வந்திருந்த அந்த காலை முதல் வகுப்பில், டெய்ஸி டீச்சர் தாவரவியலை தள்ளி வைத்து விட்டு வகுப்பின் நடுவே இருந்த மேசையோடு சாய்ந்து நின்று அறிவுரைகளை எங்கள் முன்னால் குவித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

‘படிப்பில போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. ‘

‘என்ன கேல்ஸ், புரிஞ்சதா? ‘

‘யேஸ் மிஸ்’ அங்குமிங்குமாக சில குரல்கள் ஒரே சீராக எழுந்து அடங்கியது.

எவ்வளவு உன்னதமான வரிகள். நான் சிலாகித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

‘நான் இப்ப என்ன சொன்னேன்னு சொல்லு. ‘ டீச்சர் எழுப்பி நிறுத்தியிருந்தது என்னை.

‘படிப்பில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது. ‘  மனதில் வாங்கியிருந்ததை வார்த்தை மாறாமல் ஒப்பித்தேன்.

‘உனக்கு தான் இத சொன்னேன். இனிமே யாரையும் பார்த்து பொறாமை படாத. உட்காரு.’ இப்பொழுது வகுப்பின் மொத்தக் கண்களும் என்மீது.

‘நான் யாரை பார்த்து பொறாமை பட்டேன். ‘ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை.

மணிச்சத்தம் அமைதியை கலைத்தது.

‘பிரேக்ல ஸ்டாப் ரூம் வா’ டீச்சர் வாசலுக்கு போகும்பொழுது திரும்பி பார்த்து   முதல் பெஞ்சில் இருந்த என்னிடம் சொல்லிவிட்டு போனாள். என் கன்னங்களில் நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த வகுப்பில் நடத்தப்பட்ட கணிதச் சமன்பாடுகள் எதுவும் என் காதில் விழவில்லை. மனம் தேம்பிக் கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டான்ஸி மெல்ல முழங்கையில் விரலால் சீண்டினாள்.

‘ தாமரை, மிஸ் ஏன் அப்படி சொன்னாங்கன்னு எனக்கு தெரியும். ‘

ஆச்சரியத்தில் விரிந்திருந்த கண்களோடு ஸ்டான்ஸி பக்கம் திரும்பினேன்.

‘ரேவதி தான் ஏதோ மிஸ்கிட்ட போட்டு கொடுத்திருக்கா. நேத்து ஸ்வாலஜி ரெக்கார்ட் வைக்க ஸ்டாஃவ் ரூம் போனப்ப அவ டெய்ஸி மிஸ்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருந்தா. என்ன சொல்லிட்டு இருந்தான்னு எனக்கு கேட்கல. ஆனா மிஸ் ரொம்ப ஸீரியஸா கேட்டுகிட்டு இருந்தாங்க. ‘

ரேவதி கடந்த சில நாட்களாகவே என்னிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள். எனது அப்பாவும் ரேவதியின் அப்பாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்கள். பதவியில் ரேவதியின் அப்பா சற்று உயர்வான இடத்தில் இருப்பவர். எனது பரீட்சை மதிப்பெண்களை எனது அப்பாவின் வாயிலிருந்து பிடுங்கி அதை ஒப்பீடு செய்து ரேவதியை திட்டுவது அவளது அப்பாவின் வழக்கம். நாளடைவில் ரேவதிக்கு இது பெருங்கோபமாக என்மீது திரும்பியிருந்தது.அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஏதோ நடத்தியிருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது.

ஸ்டாவ் ரூமில் டெய்ஸி டீச்சர் முன்னால் நின்று கொண்டிருந்தேன். சிறிய புஷ்பம் டீச்சர் உடன் இருந்தாள்.

‘ஆர்த்திய விட ஒரு மார்க்காச்சு பைனல் எக்ஸாம்ல கூடுதலா வாங்கி காட்டுவேன்னு ரேவதிகிட்ட சொன்னியாம்மே. அவ பர்ஸ்ட் வரவே கூடாது சொன்னியாமே. இந்த வயசில அப்படியென்ன  பொறாமை உனக்கு. ‘

ஆர்த்தி எல்லா ஆசிரியைகளுக்கும் கூடுதல் பிடித்தமான மாணவி. மூன்று காரணங்கள். முதலாவது ஆர்த்தியின் அப்பா வழி பாட்டி ராணி இதே பள்ளியில் முன்னால் ஆசிரியை.  பள்ளி நிர்வாக போர்டில் இருக்கும் மதர்களின் நடுவே இன்றும் அவளுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இரண்டாவது, ஆர்த்தியின் அம்மா நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது புற்றுநோயில் தவறி போயிருந்தாள். மூன்றாவது தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்த்தியின் அப்பா அலெக்ஸ்.

இந்த வருடம் பண்ணிரெண்டாம் வகுப்பின் முதல் மாணவியாக ஆர்த்தி தான் வரவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு வகுப்பு நடத்தும் எல்லா ஆசிரியைகளுக்கும் உள்ளூர இருந்தது. தலைமையாசிரியை வரையிலும் கூட. டெய்ஸி டீச்சருக்கும், சிறிய புஷ்பம் டீச்சருக்கும் கொஞ்சம் கூடுதலாகவே அந்த எதிர்பார்ப்பு ஒரு நோயைப் போல உடல் முழுவதும் பரவியிருந்தது.

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும், டெய்ஸி டீச்சர் என்னை நம்புவதற்கு  துளியளவேனும் தயாராக இல்லை. கொலை குற்றம் செய்ததை மாதிரி அவள் கண்கள் அன்றிலிருந்து என்னை துரத்த ஆரம்பித்திருந்தது. கூடவே சிறிய புஷ்பம் டீச்சரும் கைகோர்த்திருந்தாள். கணக்கு வகுப்புகளில் நான் தவறான விடையை சொல்லும் வரையிலும் வரிசையாக என்னிடம் சூத்திரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விக்கு தாக்குபிடிக்க முடியாமல் நான் தவறான விடையை சொல்லும் அந்த நிமிடத்தில் டீச்சரின் முகத்தில் பிரகாசம் துளிர்க்கும். நான் வகுப்பின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுவேன். சில நேரங்களில் எனது வெற்றியை ஏற்று கொள்ள முடியாமல், அன்றைய மொத்த வகுப்பு நேரத்தையும் என்னிடம் சூத்திரங்கள் கேட்கவே செலவிட்டு  இருண்ட முகத்தோடு டீச்சர் வெளியேறிய நாட்களும் உண்டு. தாவரவியல் வகுப்பிலும் பெரும்பாலான கேள்விகள் என்மீதே வீசப்பட்டன. தாக்குதல் கேள்விகளாக இருக்கும் வரை தாக்குபிடிக்க தெம்பிருந்த எனக்கு, தாக்குதல் மதிப்பெண் குறைப்பீடாக மாறி இரண்டாம் ரேங்கில் இருந்து பண்ணிரெண்டாம் ரேங்கிற்கு தள்ளபட்டபோது தாக்குபிடிக்கத் தெம்பில்லாமல் போய்விட்டது.

 

அப்பாவின் முன்  உடைந்து அழுது கொண்டு நின்றேன்.

‘எதுக்கு இப்ப இவ்வளவு அழுக. ‘

‘வேணும்னே மார்க் குறைச்சிட்டாங்க. சத்தியமா நான் நல்லா தான் எழுதினேன். ‘

‘அதான் நான் உன்ன நம்புறேன் சொல்லிடன்ல. கண்ண தொட. ‘

‘… .. .. ‘ என் அழுகை இன்னும் கூடியது.

‘அழுகைய நிறுத்து. ‘

நான் நிறுத்துவதாக இல்லை.

‘நிறுத்துங்கம்லா.’ அப்பாவின் அதட்டலில் வீடே அதிர்ந்தது.

நான் உறைந்து நின்றேன்.

‘போய் ரஃப் நோட்டும் பென்னும் எடுத்துட்டு வா. ‘ அதட்டலாக கட்டளை வந்தது.

அடுத்த நிமிடம் பேனாவும் ரஃப் நோட்டும் ஏந்தி அப்பா முன்னால் நின்று கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

‘உட்காரு’

‘ நான் சொல்லுகத போல செய். பரீட்சை பேப்பர்ல இருக்க ஒவ்வொரு விடையையும் நீயே திருத்தி  ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மார்க் வரும்ன்னு  நோட்ல எழுது. தப்ப பொறுத்து அரை மார்க்ல இருந்து குறைக்கணும். நிறைய தப்பு இருந்தா மார்க்கே போடாத அந்த விடைக்கு.’

அப்பா தொடர்ந்தார், ‘ ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மார்க் வரும்ண்ணு எழுதிட்டு கடைசியா மொத்தமா கூட்டு. சரியா மனசாட்சிபடி திருத்தி எழுதணும். கூடுதலா போட கூடாது. அப்பாக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா அப்பாவே திருத்தி தந்திருப்பேன். ‘

‘… .. ‘ நான் குனிந்து முதல் கேள்வியை திருத்த ஆரம்பித்திருந்தேன்.

நாளடைவில் திட்டமிட்ட மதிப்பெண் குறைப்பீடுகள் என்னை அச்சறுத்துவது மொத்தமாக நின்று போயிருந்தது.

காலாண்டு, அரையாண்டு போன்ற பரீட்சை மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் தான் வரவேண்டும் என்கிற விதி பள்ளியில் இருந்தது.

அப்பா பள்ளிக்கு வந்திருந்தார்.

‘அரையாண்டு வந்தாச்சு, இப்படி மோசமா மார்க்க வாங்கியிருக்கா. ஜஸ்ட் பாஸ்தான். வர வர படிப்புல கவனமேயில்ல. ஒரு பேப்பர் போனாலும் போனதுதான. கண்டிச்சு வைங்க. ‘

அப்பா பதில் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினார். நீட்டிய விடைத்தாளை கையில் வாங்கி கொண்டார். உதட்டின் ஓரம் லேசான சிரிப்பு இருந்தது.

அப்பாவின் சிரிப்பில் இருந்த உண்மையின் அனல் தாங்க முடியாமல் டெய்ஸி டீச்சர் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

படிப்பில் எனது வேகம் அதிகரித்திருந்தது. எந்த சீண்டல்களாலும் என்னை அசைத்து பார்க்க முடியவில்லை

முழு பரீட்சை எழுத போகும் நாட்களில் டெய்ஸி டீச்சர் எதேச்சையாக எதிரில் வந்தால் முறைத்துக் கொண்டே கடந்து போனாள். நான் சாதாரணமாக கடந்து போனேன். நான் நினைத்தபடி நல்ல முறையில் பரீட்சைகளை எழுதி முடித்திருந்தேன்.

வகுப்பு ஆசிரியை என்கின்ற முறையில் டெய்ஸி டீச்சர் தான் எங்கள் வகுப்பின் மாணவிகளுக்கு மதிப்பீட்டு தாளை வழங்கி கொண்டிருந்தாள். மொத்த மதிப்பெண்ணில் நான் ஆர்த்தியை விட ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தேன். அந்த ஒரு மதிப்பெண்ணை கூட்டி தந்திருந்தது தாவரவியல்.ரேவதியின் மதிப்பெண் எங்கோ அதல பாதளத்தில் விழுந்திருந்தது.

டெய்ஸி டீச்சர் கண்களை வேறெங்கோ அலையவிட்டபடியே மதிப்பீட்டு தாளை என்னிடம் நீட்டினாள். முழு பரீட்சை விடைத்தாளை தன்னால் திருத்த முடியாது போயிருந்ததில் டெய்ஸி டீச்சருக்கு பெரும் வருத்தம் இருந்திருக்கக் கூடும்.

‘தேங்க்யூ மிஸ். ‘ புன்னகை மாறாமல் சொல்லிக்கொண்டே மதிப்பீட்டு தாளை கையில் வாங்கி கொண்டேன்.

பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தபொழுது அப்பா வண்டியை முறுக்கி தாயாராக வைத்திருந்தார்.

‘போலாமா?’

நான் தலையாட்டினேன்.

இன்று வரை ரஃப் நோட்டும் பேனாவும் என்னோடு பயணித்துக்  கொண்டிருக்கின்றன.

 

 

 

கோல்டு செயின்

கோவை ஆனந்தன் 

காலை 7:55 மணிக்கு தொழிற்சாலை மணி ஒலித்தது நந்தன் சீருடையுடன் பணிக்கு உள்ளே சென்றான் எட்டு மணிக்கு இரண்டாவது முறையாக மணி ஒலித்தது தனக்குண்டான இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தான் ஒரு மணி நேரமான பின்பும் நந்தனின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் ஓயவில்லை இந்த வாரத்தின் முதலில் தனது மைத்துனர் திருமணத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டு நேற்றுதான் வேலைக்கு வந்திருக்கிறான் மதியத்திற்கு பிறகு அரைநாள் லீவு கேட்டால் மேனேஜர் தருவாரா மாட்டாரா என்ற குழப்பத்திலேயே இருந்தான் நாம் லீவு கேட்கும் இச்சமயம் வரை எந்தவொரு அவசர வேலையும் வராமல் இருந்தால் நல்லது என மனதுக்குள் சொல்லிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான்

என்ன நந்தன் உங்க மைத்துனர் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா நான் நேத்தே கேட்கணும்னு நினைச்சேன் கொஞ்சம் ஒர்க் பிஸியில ஃபேக்டரிக்குள்ளயே நேத்து வர முடியல என்றார் மேனேஜர்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுங்க சார்

ஓகே வெரி குட் நீங்க ஒர்க்க கன்டினியூ பண்ணுங்க

எக்ஸ்கியூஸ் மீ சார்

சொல்லுங்க நந்தன்

இன்னிக்கி ஆப் டே லீவ் வேணுமுங்க சார்

இப்பதான் கல்யாணத்துக்கு 3 டேஸ் லீவ் எடுத்தீங்க வந்து ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள எப்படி இப்ப இருக்கிற ஒர்க் ஷெட்யூல்ல லீவ் எப்படி தர முடியும்

சார் தயவு செய்து எனக்கு இன்று ஒரு நாள் மட்டும் லீவு கொடுங்க ஸ்கூல்ல ரொம்ப முக்கியமான வேலைங்க சார் நான்போயே ஆகணும்

அப்படி என்ன ரொம்ப முக்கியமான வேலை ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங்கா ஏன் உங்க வீட்ல மிஸ்ஸஸ் போக மாட்டாங்களா

இல்லைங்க சார் நான்தான் போகணும்

வேற ஏதாவது காரணமா இருந்தா நான் லீவு தர மாட்டேன் ஸ்கூல்ல படிக்கிற குழந்தைக்கு வேண்டி போவதா சொல்றீங்க அதனால நான் லீவு தரேன் இந்த மாதத்திலேயே நீங்கதான் அதிகமா லீவு எடுத்து இருக்கீங்க இப்படி எல்லோரும் லீவு எடுத்தா கம்பெனி நடத்துறது ரொம்ப சிரமம் அதனால இனிவரும் காலங்களில் லீவை குறைச்சுக்குங்க நான் அவ்வளவு தான் சொல்ல முடியும் உங்களுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்குது அந்த பொறுப்பை நீங்கதான் காப்பாத்திக்கணும்

ஓகே சார் ரொம்ப நன்றிங்க

இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது மதிய சாப்பாடு இடைவேளைக்கு சரி நம்ம வேலையை பார்ப்போம் என தனது வேலையை தொடர்ந்தான்

காலையிலிருந்து மனதிற்குள் வாட்டி வதைத்து கொண்டிருந்தவை மீண்டும் கண் முன்னே வந்து போனது

முந்தைய நாள் மாலை 6:00 மணிக்கு மோட்டார் சைக்கிள் சத்தத்தை கேட்டதும் மனைவி கேட்டை திறந்தாள்

என்னங்க இன்னைக்கு நேரத்திலேயே வந்துட்டீங்க

இல்லம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததால கொஞ்சம் டயர்டா இருக்கு அதனால இன்னைக்கு ஓவர் டைம் பார்க்கல சரி அனன்யா என்ன பண்றா

அதை ஏன் கேக்குறீங்க நீங்களே போய் பாருங்க எனக் கோபத்துடன் பேசினாள் மலர்

ஏன் என்னாச்சு என கேட்டுக்கொண்டே குழாயில் நீரைப் பிடித்து காலை கழுவிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான் நந்தன் அனன்யா என்ன பண்ற என வீட்டின் வரவேற்பறையில் தேடினான் காணோம் பிறகு படுக்கை அறைக்குள் சென்று மெத்தையில் படுத்திருந்த அனன்யாவை அனன்யா குட்டிக்கு என்னாச்சு ஏன் இந்நேரம் படுத்திருக்க என போர்த்தியிருந்த போர்வையை விலக்கினான். கண்கள் சிவந்திருந்தது கையில் வேறு யாரோ அடித்ததின் விரல்களின் தழும்புகள் பதிந்திருந்தது என்னாச்சுடா யார் உன்னை அடிச்சது மிஸ்ஸா என்றான் நந்தன்

ஓவென கண்களை கசக்கியபடி அம்மாவை கையை காட்டி அழுதாள்

என்னமா எதனால புள்ளைய அடிச்ச

அம்மாவை கை காட்ட தெரியுதல்ல என்ன நடந்ததுன்னு உங்க அப்பாகிட்ட சொல்லு இல்ல மறுபடியும் அரை வாங்குவ

மறுபடியும் அழுதாள் அனன்யா

புள்ளதான் அழுதுட்டு சொல்லாம இருக்கானா நீயாவது சொல்ல வேண்டியதுதானே

உங்க மகளுக்கு நீங்க வாங்கி கொடுத்த செயினை இன்னைக்கு தொலைச்சிட்டு வந்திருக்கா கழுத்திலிருந்து கழன்று விழுந்தது கூட தெரியாம வீட்டுக்கு வந்திருக்கா எங்க எப்படி விழுந்ததுன்னு கேட்டா திருத்திருன்னு முழிக்கிறா இவகிட்ட இருந்து கழன்று விழுந்ததா இல்ல யாராவது பிடிங்கிட்டாங்களானு எது கேட்டாலும் பேசவே மாட்டேங்குறா அதான் ஒரு அரை விட்டேன்

கழுத்திலிருந்து கழன்று விழுவது தெரிவதற்கு என்ன பெரியவங்களா அது சின்ன குழந்தை அது விளையாடுற மும்முரத்தில் எங்கு தொலைச்சதோ தொலைஞ்ச இடம் தெரிந்திருந்தால் அவளே எடுத்துட்டு வந்து இருக்க மாட்டாளா நான் காலையிலேயே படிச்சு படிச்சு சொன்னேன் ஸ்கூலுக்கு போற குழந்தை கழுத்துல எதுக்கு போட்டு விடுற பவுன் விக்கிற விலைக்கு குழந்தைகளை நம்பி போட்டுவிட வேண்டாமுனு சொன்னா நீ கேட்கிறியா

அதுக்காக கொண்டு போய் தொலைச்சுட்டு வரவா நான் சொன்னேன்

சரி சும்மா நடந்ததையே பேசிட்டு இருக்காம அடுத்தது என்னன்னு யோசிக்கலாம் என சொல்லிக்கொண்டு அனன்யா இங்க வா இன்னைக்கு காலையிலிருந்து ஸ்கூல்ல நீ எங்கெல்லாம் போனாய்னு நிதானமா பொறுமையா யோசிச்சு சொல்லு

ஆமா உங்க அப்பாகிட்ட சொல்லு துப்பறிஞ்சு கண்டுபிடிப்பார்

நீ கொஞ்சம் பேசாம வெளியே போறயா

நான் ஏதாவது சொன்னால் என் வாயை அடக்குங்க புள்ளைக்கு நீங்க கொடுக்கிற செல்லம்தான் இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறா என்னமோ செய்யுங்க ஆனா ஒன்னு நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போது செயினோடதான் வரணும் இல்லன நான் ஸ்கூலுக்கு வருவேன்

பெத்தவங்க செய்யற தவறுக்கு புள்ளைங்க என்ன செய்யும் என சொல்லிக்கொண்டு மலரை நந்தன் முறைத்துப் பார்க்க எதுவும் பேசாமல் ரூமில் இருந்து வெளியேறினாள்

அப்பாவிடம் அருகில் வந்த அனன்யா அப்பா காலையிலிருந்து மத்தியான லஞ்ச் வரைக்கும் கிளாஸில் தான் இருந்தேன் சாப்பிட்டதுக்கு அப்புறமாதான் கிரவுண்டுக்கு போனோம் ஸ்போர்ட்ஸ் பீரியட் முடிஞ்சதுக்கு பிறகு மறுபடியும் கிளாஸ் ரூமுக்கே வந்துட்டோம் எங்க கழண்டு விழுந்ததுனு எனக்கு எதுவுமே தெரியாது பா என்றாள்

சரி உங்க மிஸ்ஸோட நம்பர் உங்ககிட்ட இருக்கா

இருந்துச்சுன்னா அவங்க நம்பர் கொடு

இதுதானுங்க அப்பா அவங்க நம்பர் என கையில் இருந்த டைரியை நீட்டினாள் டைரியில் குறித்திருந்த எண்ணிற்கு டயல் செய்தான் நந்தன் எதிர் முனையில் போன் ரிங் ஆனது ஆனால் மிஸ் எடுக்கவில்லை மீண்டும் பல யோசனைகளில் ஆழ்ந்தான் நந்தன்

அரை மணி நேரத்துக்குப் பிறகு மிஸ் லைனில் வந்தார்

ஹலோ யார் பேசறது

மேடம் நான் அனன்யாவோட அப்பா பேசுறேன்

சொல்லுங்க சார்

மேம் இன்னிக்கு காலைல அனன்யா கழுத்துல ஒரு கோல்டு செயின் போட்டுட்டு வந்திருந்தா ஸ்கூல் முடிஞ்சு ஈவினிங் வீட்டுக்கு வந்தபோது செயின் மிஸ் ஆயிடுச்சுன்னு சொல்றா அதுதான் உங்கள கேட்டா தெரியும்னு கால் பண்ணினேன்

என்ன சார் இது படிக்கிற குழந்தைங்க காஸ்ட்லியான எதையும் போட்டுட்டு வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல ரூல்ஸ் இருக்கும்போது எப்படி அதை போட்டுவிட்டீங்க

இல்ல மேம் அது இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதால வீட்ல என்னோட மனைவி கழற்ற வேண்டாம்னு சொல்லிட்டாங்க அதனாலதான் அப்படியே அனுப்பிச்சுட்டோம்

சரிங்க சார் இந்நேரம் எதுவுமே செய்ய முடியாதே

ஒரு பவுனுங்க மேம் அதான்

ஏனுங்க சார் ஒரு பவுன் செயினை யாராவது மூன்றாம் வகுப்பு படிக்கிற குழந்தை கழுத்துல போட்டு விடுவார்களா நகைக்கு ஆசைப்பட்டு பெரியவங்க கழுத்துலயே கைவைக்கிற காலமுங்க எதுவா இருந்தாலும் எனக்கும் கேட்கவே கஷ்டமாத்தான் இருக்கு இன்னைக்கு நான் லீவுங்க சார் அதனால நாளைக்கு காலைல ஸ்கூலுக்கு போனதும் அங்கே யாராவது கைக்கு கிடைச்சதானு ஆபீஸ்ல விசாரிக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு போனை துண்டித்தார் மிஸ்

நேற்று நடந்த நிகழ்வுகளில் இருந்து திரும்பினான் மதிய சாப்பாடு இடைவேளைக்காக தொழிற்சாலை மணி ஒலித்தது நேராக ஸ்கூலுக்குச் செல்ல வேண்டியதுதான் என கைகளை கழுவிவிட்டு தனது ஆயில் கறை படிந்த யூனிபார்மை கழற்றி ஓய்வறையில் இருந்த ஆணியில் தொங்கவிட்டுக் கொண்டு மாற்று ஆடையணிந்து புறப்பட்டான், தனது இருசக்கர வாகனத்தில் 45 நிமிட பயண நேரத்திற்கு பிறகு மகள் படிக்கும் பள்ளியை வந்தடைந்தான் மெயின்கேட்டில் ஒரு காவலாளி மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்

ஐயா நான் என் மகளை பார்க்கணும்

நீங்க யாரு உங்க மகள் என்ன கிளாஸ்

என் பெயர் நந்தனுங்க என் மகள் அனன்யா மூன்றாம் வகுப்பு படிக்கிறா

இப்பவெல்லாம் பார்க்க முடியாதுங்க சார் இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஸ்கூல் முடிஞ்சுடும் போயிட்டு பிறகு வாங்க

இல்லைங்க என் பொண்ண பாக்குறதுக்கு மட்டும் நான் வரல இன்னைக்கு நானே கூட்டிட்டு போலாம்னு வந்திருக்கிறேன்

அப்படின்னா நீங்க மூணு மணிக்கு மேல வாங்க ஆபீஸ்ல கேட்பாஸ் தருவாங்க அதுல நீங்க சைன் பண்ணி என்கிட்ட கொடுத்தாதான் நான் உங்க கூட அனுப்ப முடியும் என கண்டிப்பாக கூறினார்

சரி இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருக்கிறது என அருகில் இருந்த தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்த தினசரி நாளிதழில் மூழ்கினான் நாளிதழில் பெண்ணிடம் நகை வழிப்பறி வீடு புகுந்து திருட்டு என்ற செய்திகளே பெரும்பாலும் இருந்தன அதைப் படிக்கும் போது தொலைந்த ஒரு பவுன் எப்படியும் நமக்கு கிடைக்கப் போவதில்லை என மனதிற்குள் உறுதிப்படுத்திக் கொண்டான் யார் கையில் கிடைத்தாலும் கிடைத்தது லாபம் என எடுத்துக்கொண்டு போவோர்தானே இன்றைய காலத்தில் அதிகம் இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு கடிகாரத்தை சிறிது நேரத்திற்கு ஒரு தடவை பார்த்தான் கடிகாரத்தின் முள்கள் மெதுவாகவே வட்டமிட்டன

கடிகார முள்களின் சில வட்டங்களுக்குப் பிறகு பள்ளியின் முன்போய் நின்றான்

சார் இந்தாங்க இந்த ஸ்லீப்ல உங்க விவரங்களை கம்ப்ளீட் பண்ணிக்கொண்டு போயி உங்க பொண்ணு படிக்கிற கிளாஸ் டீச்சர்கிட்ட சைன் வாங்கிட்டு வாங்க பொண்ண உங்க கூட அனுப்பி வைக்கிறேன்

அந்த கேட்பாசை வாங்கிக் கொண்டு மூன்றாம் வகுப்புக்கு சென்றான்

வாங்க சார் என்றார் அனன்யாவின் டீச்சர்

உங்க குட் லக் செயின் கிடைச்சிடுச்சு

நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன் அனன்யா அப்பா வேலைக்கு போயிட்டுதா சொன்னா

எப்படிங்க மேம் என ஆச்சரியத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் கேட்டான்

அப்போது ஸ்கூல் மணி ஒலித்தது எல்லா வகுப்புகளிலிருந்தும் குழந்தைகள் வெளியே வந்து பள்ளி பேருந்துகளில் ஏறிக் கொண்டிருந்தனர்

அது ஒன்னுமில்லைங்க சார் ஸ்கூல் பஸ்லதான் செயின் மிஸ்சாயிருக்குது பஸ்ஸில் கூட வர்ற குழந்தைங்க அதை எடுத்துக் கொண்டு வந்து ஸ்கூல் ஆபீஸ்ல கொடுத்திருக்காங்க நான் காலையிலேயே ஆபீஸ்ல சொல்லி இருந்தேன் அதனால என்கிட்ட கொடுத்தாங்க இந்தாங்க

ரொம்ப நன்றிங்க மிஸ்

எனக்கு எதுக்குங்க சார் நன்றி சொல்றீங்க நன்றிய அனன்யா தினமும் வர்ற நாலாம் நம்பர் பஸ்ல உட்கார்ந்து இருக்கற அந்தகுழந்தைகளுக்கு சொல்லுங்க இதுல இன்னொரு சிறப்பென்னனா இந்த செயினை நேற்று ஈவ்னிங்கே குழந்தைங்க கையில கிடைச்சுருக்கு அதைக் கொண்டுபோய் அவங்க பேரண்ட்ஸ்கிட்ட காட்டியிருக்காங்க அப்ப அவங்க நல்லவேளை செஞ்சுருக்கீங்க ஆனா இதை யாருகிட்டயும் கொடுக்காம நாளைக்கு காலைல ஸ்கூலுக்கு போனதும் முதல்வேளையா ஆபிஸ்ல கொண்டுபோய் கொடுத்திடனமுனு சொல்லியிருக்காங்க அது மட்டுமில்லாமல் அவங்களே நேர்ல வந்து ஆபீஸ்ல கொடுத்துட்டு போயிருக்காங்க இதே மாதிரி எல்லா பேரன்ட்ஸும் இருந்துட்டா குழந்தைங்க எந்தத் தவறும் செய்ய மாட்டாங்க அது போல பிறரோட பொருளுக்கு ஆசைப்படவும் மாட்டாங்க இது எல்லோருக்குமே ஒரு முன்னுதாரணமாகவும் பாடமாகவும் இருக்குது என நடந்ததை சொல்லி முடித்தார் மிஸ்

நகரும் நாலாம் நம்பர் பஸ்ஸின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அந்தக் குழந்தைகள் அனன்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே கையசைத்தன

பஸ்ஸில் செல்லும் அந்த குழந்தைகளை பார்த்து இரு கைகளால் கும்பிட்டான் நந்தன் அப்போது அவனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கீழே நின்றிருந்த அனன்யாவின் கைகளின் மேல் விழுந்தது.