Author: பதாகை

துணையிழந்த கிழத்தியொருத்தி

பூவன்னா சந்திரசேகர்

துணையிழந்த கிழத்தியொருத்தி
இழுத்துப் போட்ட சுருட்டின்
பொறியெடுத்து கனல் கூட்டி
குளிர் காய்கிறான்
பருவம் ஏய்த்து உடைந்தொழுகும்
வானின் துளைகளையெல்லாம்
சாரம் கிழித்து திரையாக்கி
வேடு கட்டுகிறான்
நிரைத்தது போக
மீந்தவை யாவும்
எதுக்களித்து நிற்கும்
சுனை சுற்றி சுருண்டு கிடந்து
அணைக் கட்டுகிறான்
சேரேறி கரையான அவனுக்கு
கிடாயும் பொங்கலும்
எப்போதேனும் கிட்டும்
குறுகிக் கிடந்த உடல் நோக
நேர் நிமிந்தவன்
நெட்டியுடைக்கும் நாளில்
ஊரழியும்.

அந்தியில் கரையும்

புஷ்பால ஜெயக்குமார்

அந்தியில் கரையும்
காகத்தின் ஓசை
சொல்லமுடியாத தூரத்தில்
முன் எப்போதோ கேட்டது
தற்போது ஒருவன்
நடித்து முடித்த
கதைகளின் நிகழ்வுகளை
படித்த புத்தகத்தின்
பக்கங்கள் போல்
கூறாக நின்றது காகிதங்கள்
மறதியில் நினைவுறும்
அதிசயத்தின் சல்லடையில்
சலித்த அனுபவங்கள்
சிக்கியது விடாப்பிடியாக
சுமக்கும் ஞாபகங்கள்
பகடையை உருட்டும்
இச்சைக்குப் பேர் போன
முடிவினை நோக்கி
கையின் விசை கூட
நிலப்பரப்பில் நின்றபடி
கல்லை வீசியவனின்
உள்ளுணர்வின் புரியாமையினால்
கேட்டது கிடைக்கும்

நீரற்ற மணல்வெளி

ம இராமச்சந்திரன்

மணல்நீரால் நிரம்பி வழிகிறது அது
ஒற்றை மனிதாய் நடுவில்

நீர் சூழ்ந்தாலும் மண்ணால் சூழப்பட்டாலும்
முகிழ்த்தெழும் அச்சத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

சுட்டெரிக்கும் வெயில் பொழுதில்
மூலநதித் தேடி
வழித்துணை கம்புடன் பயணம்

காட்டின் மெல்லோசை அசைவுகளின் சரசரப்பு
உயிர்ப் பயத்தை உச்சப்படுத்தியது

அருவி ஓசையில் அகமகிழ்ந்து
மனித நடமாட்டத்தால் உயிர்ப்புற்றேன்

வாகன வரிசை மனித கும்மாளம்
காட்டை நிறைத்தன
வழக்கம் போல
குரங்குகளின் காத்திருப்பும் ஏமாற்றமும்

தனித்திருத்தலின் பொருளற்ற சந்தம்
கூட்டிணைவின் உள் மகிழ் அமைதி
நதிமூலத்தை உணர்த்திவிட்டன

பொழுதடங்கி ஈரக்காற்றின் வருகை
வந்த வழி நோக்கி கால்களின் எத்தனிப்பு

கைகாட்டியும் நம்பிக்கையற்று கடந்துசெல்லும்
வாகனங்களின் மனப் பயத்தையும் பாதுகாப்பையும்
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

மணல்வெளியின் நடுவில் மரணப் பயத்தோடு
வாழ்வுத் தேடும் கால்களின் வேகத்தில்
உயிர்த்திருக்கும் உயிர்ச்சாரம்

ஆசுவாசப் பெருமூச்சில் ஆதி மனிதன்
காடலைந்த வலியும் வன்மமும்
என்னோடு பயணிக்கின்றன

கூட்டத்தோடு கூடியிருந்தாலும் வந்து
காதலித்துக் கொள்ளும் அந்தத் தனிமை

கனக்கும் மாலை

ர ரத்தீஷ்

அமைதியற்ற வெளியில்
தலை தட்டி பிணமாய் நீண்ட சுருளை
கந்தக சுவைகள் மென்று பிரகாசிக்க

அமிழ்த்தப்படும் மூச்சிக்கு கால்கள் ஏதுவாய் சென்று
புகை விசாரித்து புரண்ட ஒலியோடு
அசைவுகள் அதட்டி
அசதியாய் உதிர்ந்தன
தங்கச் சூரியன்
சாம்பல் மாலைகளாய்

பசி

பா சிவகுமார் 

தீநுண்மியின்
தாக்கம் அதிகரிப்பு
பொதுமுடக்கமென
அரசு அறிவிப்பு
வெறிச்சோடியிருக்கிறது
நகரம்
வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்
மக்கள்
முடங்காமல் நேரத்திற்கு
வந்து விடுகிறது பசி

பஞ்சடைத்த செவிகள்;
ஒளியிழந்த விழிகள்;
வறட்சியான வார்த்தைகளென
காய்ந்த அகவயிற்றினழகு
முகத்தில் தெரிய
பொருளீட்ட வழியின்றி
உடல்மனம் சோர்ந்து
பசி மயக்கத்தில்
சாலையோர குடிசையில்
சுருண்டுக் கிடக்கின்றனர்
அன்றாடங்காய்ச்சிகள்

வறண்டு வறட்சியாக
கிடக்கின்றன
சமையலறையும்
பலரின் வயிறுகளும்
உழைப்பு; ஊதியம்;
உணவு; பசி; வறுமையென
சில சொற்களின் நேரடிப் பொருள்
இப்பொழுது
வயிற்றிற்கும்
தெரிய வருகிறது
பசித்தீயை நீருற்றி
தற்காலிகமாக
அணைக்கின்றனர்

நிவாரணத் தொகை
விரைவில் வழங்கப்படும்
என்ற செய்தி
எங்கோ காற்றில்
மிதந்து வருகிறது
வயிற்றிற்கு உணவில்லாதபோது
செவிக்கு அங்கே ஈயப்படுகிறது

அம்…மா…. என கத்தியவாறு
ஓடி வரும் சிறுமியின் கையில்
யாரோ அளித்த
உணவுப் பொட்டலங்கள்
பசியாறுகிறது குடும்பம்
வாழ்வின் மீதான நம்பிக்கையை
யாரோ வழியெங்கும்
விதைத்துச் செல்கிறார்கள்
நாளை விடிந்துவிடும் என்ற
நம்பிக்கையில் பசியாறி
உழைக்கத் தயாராகின்றனர்
குடிசைவாழ் மக்கள்
இரண்டு வேளை
உணவென்பதே
இவர்களின்
இப்போதைய இலக்கு