Author: பதாகை

பக்கோடா

வேல்விழி மோகன்

பல்லைக் குத்திக்கொண்டிருந்த வம்சி ஆடுகளை ஒரு கவனிப்பு கவனித்தார். மலையோரம் சற்று சரிவாக அந்த ஆடுகள் புற்களை மேய்ந்துக்கொண்டிருந்தது. கீழே சற்று தள்ளி சிறிய ஓடை. தண்ணீர் குறைந்து மேலாக்க ஓடிக்கொண்டிருந்தது. வேப்ப மரத்தடியில் அருணா தனியாக கல்லாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.

இரண்டு ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டிருந்தன. சந்தைக்கு போகும் வண்டிகள் பாலத்தின் திருப்பத்தில் சத்தம் போட்டுப் போனது. ஒரு பக்கம் கனிந்து வரிசையாக இருக்கும் மாந்தோப்புகள். நடுநடுவே அகல வயல்களில் மாடுகள் தென்பட்டது… அவ்வபோது கேட்கும் மலையாடுகளின் சத்தம். வெயில் உரைத்து கன்னத்தில் சுட்டது. தலைக்கு துண்டு கட்டியிருந்தாலும் தலை வழியாக சூடு உடலில் பரவி தண்ணீர் தேவைப்பட்டுக் கொண்டேயிருந்தது.

“பாப்பா. “ என்றார். கைகளில் சொரிந்துக்கொண்டார். கொஞ்சம் ஒதுங்கி இவரைப் பார்த்த ஆட்டைப் பார்த்து. “போடா செல்லம். அந்தாப்ல போ. புல்லு மேயறதைப் பாரு. என்கிட்ட என்ன சோலி. ?”

அது அருகில் வந்துப் படுத்துக்க கொண்டது. கொஞ்சம் தடவிக் கொடுத்தார்.  “உன்னைய இந்த வாரம் வித்திருவேன். “ என்றவர் “பாப்பா” என்றார் மறுபடியும்.

;என்னத் தாத்தா. ?;” அருணா  திரும்பிப் பார்க்காமல் “தாத்தா. எங்க அந்தண்ணனைக் காணோம்.? “ என்றாள்.

“பக்கோடாவா.? வருவான். எங்கிட்டாவது தின்னுக்கிட்டிருப்பான். இல்லன்னா வேல செஞ்சுக்கிட்டிருப்பான். கொஞ்சம் தண்ணி வேணும் பாப்பா. “

“இதா வந்தர்றேன். “ அருணா தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவளுக்கு இந்தக் கல்லாட்டம் புடிக்கும். முதலில் வீட்டருகே கீதா. ராசு. தம்பிப் பய இவர்களோடு விளையாடுவாள். தாத்தா கூட வரும்போது அவரே விளையாடுவார். ஆனால் தாத்தா விளையாடுவது இவளுக்கு பிடிக்கவில்லை. “நீ எனக்கு உட்டுத்தர்றே தாத்தா. போ. இனிமே நானே விளையாடிக்கறேன். “

வெயில். மழை என்றெல்லாம் இல்லை. கல்லாட்டம். ஒன்னு. ரண்டு. மூணு. “தாத்தா. இங்கன பாரு . எல்லாக் கல்லையும் புடுச்சுட்டேன். “

தனியாக விளையாடுவது பழகிவிட்டது. ஏதாவது ஒரு மரத்தடியில் கற்களோடு பேசியபடி இரண்டு காலையும் விரித்தபடி விளையாடுவாள். அப்படியே தூங்கி விடுவாள். ஒன்பது வயதிருக்கலாம். நான்காவது படிக்கிறாள். நன்றாக வாசிப்பாள். சுலோச்சனா டீச்சரைப் பிடிக்கும். கோயிந்து பெட்டிக்கடையில் கமர்கட்டு பிடிக்கும். பெரிய வீட்டு நாய் பிடிக்கும். அப்பா அம்மாவைக் கொஞ்சினால் பிடிக்கும். பள்ளிக்கூடத்தை விட்டு முதலில் ஓடிவருவது பிடிக்கும். முக்கியமாக அந்த பக்கோடாவைப் பிடிக்கும்.

“அண்ணே. உங்கப்பேரு பக்கோடாதானா…?”

“உகும்,, கம்சன்”

“கம்சனா.?”

“ஆமா. கம்சன். எனக்கு கம்சன் கத தெரியும். ஆனா கம்சனை எனக்குப் புடிக்கும். “

“நீ ஏன் படிக்கல.?”

“எங்கப்பா சின்ன வயசுலேயே செத்துட்டார். எங்கம்மா என்னைய வேலைக்கு அனுப்புச்சுட்டாங்க. ;

“இங்கெல்லாம் எங்கப் பாத்தாலும் நீதான் இருக்க.”

“எனக்கு ஆட்டுப் பாழையெல்லாம் தெரியும். மனசுக்குள்ள என்ன நினைக்குதுன்னு தெரியும். அதை கசாப்புக்கு அனுப்பறது எனக்குப் புடிக்காது. ஆட்டுக்கு நம்மை புடிச்சுடுச்சுன்னா நம்மளோடப் பேசும். நம்ம மடியில வந்து படுத்துக்கும். “

அவன் அப்படித்தான் நடந்துக்கொள்வான். திடீரென்று கனைப்பான். ஆடு நின்று அவனைக் கவனிக்கும். அது அவளுக்குப் பிடித்திருந்தது. எங்கு மேய்க்க வேண்டும். எங்கு மேய்க்கக் கூடாது என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். முதுகில் ஒரு பையை தொங்க வைத்திருப்பான்.

“அதுல என்ன இருக்குது.?”

“தண்ணி. கம்பங்கஞ்சி. ஊறுகா. அப்புறம் சிவாஜி பாட்டுப் புத்தகம்.”

“சிவாஜியா.?”

“இல்ல பாப்பா. சிவாஜி கணேசன். எனக்கு கம்சன புடிக்குமுன்னு சொன்னேன் இல்லையா… அதே மாதிரி சிவாஜியையும் புடிக்கும். சிவாஜி பாடுன எல்லாப் பாட்டும் எனக்குப் புடிக்கும். சட்டி சுட்டதடா. கை விட்டதடா. “

கல்லாட்டம் அதன் பிறகு அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு. தாத்தாவுடன் எப்போதாவது கூட வருகிறவள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வருவாள்.

“சிவாஜி மாதிரி நடுச்சுக் காட்டுட்டா.?”

“அதெல்லாம் தெரியுமா உனக்கு.?”

“அவரு நடிகருத் திலகமில்ல. “ கொஞ்சம் தள்ளி நின்றுக்கொண்டு நடந்துக் காட்டினான். “என்ன செஞ்ச?” என்றாள்

“இப்படித்தான் நடப்பாரு சிவாஜி”

“ஏதாவது பேசிக் காட்டு”

“உகும். அதெல்லாம் தெரியாது. ஆனா நடக்கத் தெரியும். திருவிளையாடல்ல இப்படித்தான் நடப்பாரு.”

அஙளுக்கு அவன் கூட இருந்தால் நேரம் போவது தெரியாது. கல்லாட்டம் கற்றுக் கொடுத்தாள். அவனுக்கு அது பிடிபடவில்லை. “எனக்கு விளையாட்டுன்னா ஜில்லிதான் புடிக்கும் .” என்றான்.

“ஜில்லி இல்லை. கில்லி. “

“சரி வச்சுக்கோ. அப்புறம் பம்பரம். உனக்கு கோலி விளையாடத் தெரியுமா.?”

“உகும்.”

“கத்துத் தர்றேன். எங்கப்பாதான் கத்துக் கொடுத்தாரு. அவரு நல்லா வெளையாடுவாரு. தெருவுல சிரிப்பாங்க.,,. எங்கப்பா என்னைய ஈஸியா ஜெயிப்பாரு. எங்கம்மா சிரிப்பாங்க. “

வம்சி திரும்ப பேத்தியைப் பார்த்தார். அவள் சுவாரஸ்யமாக கல்லாட்டத்தில்  இருந்தாள். சிரித்தபடி எழுந்து அவளருகில் சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அருகில் மரத்தின் கிளையில் மாட்டியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கும்போது.”தாத்தா. என்னப்பா இன்னும் அண்ணனைக் காணோம்.? “ என்றாள்.

“அதான் தெரியலையேம்மா.”

“தாத்தா. அங்கப் பாரு.”

ஒரு மேட்டில் பக்கோடா தெரிந்தான். முதுகில் பையெலெலாம் இல்லை… தள்ளாடுவது தெரிந்தது. நான்கடிகள் வைத்து கொஞ்சம் சரிந்து கீழே விழுந்தான்.

0000

பக்கோடா மூக்கிலிருந்து ரத்தம். கைகளில் சிராய்ப்புகள். “அச்சுட்டாங்க. அச்சுட்டாங்க. “ என்றான். சட்டையெல்லாம் கிழிந்திருந்தது.அருணா “அண்ணா. அண்ணா. “ என்று அழுதாள்.

வம்சி கிழிந்திருந்த அவன் சட்டையை கழட்டினார். இரத்தத்தை துடைத்தார்.  கண்கள் கிறங்கி வெயிலுக்கு திறக்க முடியாமல் இறுக்கமாக மூடியபடி “அச்சுட்டாங்க. பெருசு.” என்றான்.

“நாசாமா போனவங்க. அவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க.”

பெரியவர்.”யாரு பாப்பா.?”

“அவங்கதான். இவனை அடுச்சவங்க. தாத்தா. தூக்கு. தூக்கு. மரத்துக்கிட்ட போய்டலாம். “

பக்கோடா.”பாப்பா. நான் உன்னதான் பாக்க வந்தேன். அச்சுட்டாங்க.”

அருணா அவன் கால்களை புடித்துக்கொண்டாள். வம்சி அவனை தூக்கிக்கொண்டு மரத்திடம் நகர்ந்தார்.ஒரு கருப்பாடு திரும்பிப் பார்த்து “மே. மே. “ என்றது.

“அது என்னை விசாரிக்குது.”

பெரியவர்.”சும்மா இர்றா. என்னடா ஆச்சுது.?.”

“அச்சுட்டாங்க.”

“அதான்டா. என்ன ஆச்சுது.?”

““கஞ்சித்தண்ணி இல்லன்னுட்டாங்க. ஆட்டை பத்திட்டு போமாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த தடியன் இருக்கான் பாரு . “

“யாரு. அவம் மகனா.?”

“இல்ல. எப்பப் பாரு திண்ணைல உக்காந்திட்டு தின்னுக்கிட்டு இருப்பானே. அந்த பெரிசு நாய்.”

“ஓ. துண்டுக்காரா.?”

“ஆமாமா. ஓடிவந்து என்னைய புடிச்சு கீழ தள்ளி மூக்கு மேல குத்திட்டான். என் சட்டைய கிழிச்சு  .” உதடுகளை கோணிக்கொண்டான். இன்னொரு ஆடு பக்கத்தில் வந்தது. அருணா அவன் கால்களை தடவினாள். “தாத்தா. அவனுங்கள விடாத தாத்தா. போய் சண்டப் போடு தாத்தா. “

“அப்புடி செய்ய முடியாது. “ தாத்தா அவனை கீழே கிடத்தினார். சட்டையை நனைத்து அவன் மூக்கைத் துடைத்தார். இவன் கண்களைத் திறந்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். சலிப்பாக இருந்தது. களைப்பாக இருந்தது.  “பெருசு. ஏதாவது வச்சிருக்கியா.?” என்றவன் அருகிலிருந்த ஆட்டை “ஏ. போ. “ என்றான்.

அருணா .”களியும் வெண்டக்கா கொழம்பும். தாத்தா . எடு. எடு.”

“வேணாம்  . எனக்கு கஞ்சித் தண்ணி வேணும்.”

பெருசு “கஞ்சிக்கு செத்த பயம்மா இவன்.”

“தாத்தா. எல்லாத்தையும் குச்சுட்டியா.?”

“கொஞ்சமா இருக்கும். எடும்மா அந்த பாட்டலை. “ அடியில் கொஞ்சம் கம்பங்கஞ்சி இருந்தது. சரிவாக சரிந்து உறிஞ்சுக் குடிக்கும்போது. “எங்கப்பா இருந்தா. ம். அவனுங்கள. “ என்று உறுமினான்.

அருணா அழுதாள். அவன் அவளை முழுமையாகப் பார்த்து “ஏய். அழாத. அழாத. ஆனாப் பெருசு. அங்க இருக்கனுவங்கெல்லாம் வேடிக்க பாத்தானுங்க பெருசு. எனக்கு அதெல்லாம் கூட இல்ல. எவனோ ஒருத்தன் எங்கம்மாவ தப்பாப் பேசினான் பெருசு. கத்தி எடுத்து ஒரு கீறு கீறனும்னு தோணுச்சு. “

பெரியவர்.” அடக்கி வாசி. அவனுங்கெல்லாம் சரியில்லை. நம்மள மாதிரி சொந்தமா ஆடு வளக்கறதுக்கு பாரு. “

“எங்க போறது சொந்த ஆட்டுக்கு.?”

அருணா. “தாத்தா. ரண்டு ஆட்டைக் கொடுத்துடு. “

“கொடுத்துடலாம். ஒரு குட்டிய தர்றேன். பத்திட்டு வளக்கறதுக்குப் பாரு. பொட்டக் குட்டி.வளந்து குட்டிப் போடும்போது எனக்கு ஒன்ன திருப்பித் தந்துடு.”

பக்கத்தில் ஆளரவம் கேட்டது. பக்கோடாவின் கூட்டாளி தலைக்கு உருமா கட்டிக்கொண்டு அகலக் கால் வைத்து வந்தான். முகத்தில் இறுக்கமாக கிட்ட வந்ததும் “பஞ்சாயத்துக்கு வரச்சொல்றாங்க. உங்கம்மாவை பஞ்சாயத்துல நிக்க வச்சுட்டாங்க. வாடா போலாம். “

0000

சுமார் பத்து நபர்கள் இருந்தார்கள்… இரண்டு. மூன்று பெண்கள். எதிர்க் கடையில் பத்து. பதினைந்து நபர்கள். பக்கோடாவின் அம்மா ஒரு ஓரமாக தனியாக குந்தியிருந்தாள். ஒரு மூலையிலிருந்த தென்னை மரத்திலிருந்து குயில் கத்தியது. பக்கோடா வேகவேகமாக வந்தவன் அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.

துண்டுக்காரர் “பய நம்ம புள்ளதான். இன்னிக்கு என்னவோ புத்தி சரியில்ல. “ என்று சிரித்தார்.

“தூக்கிப் போட்டு மிதிச்சா சரியாப்போடும்.” என்றான் ஒருத்தன். இரண்டுப் பெரியவர்கள் “ஏண்டா. வேல செய்யற எடத்துல இப்படியா நடந்துக்கவ.;?”

இவன் அம்மா.”எம் பையன உட்டுருங்க. அறியாத புள்ள.”

“தடிமாடு மாதிரி இருந்துக்கிட்டு.”

“இருந்துட்டுப் போகட்டும். கஞ்சிதானே கேட்டான். அதுக்கு இப்படியா.?”

“அப்படித்தான். ஏ. இங்கப்பாரு. எனக்கு இவன் இல்லன்னா வேற ஒருத்தன். எப்படி பங்கஜம்.?” என்றது துண்டு.

“உக்கும். “ என்றாள் ஒருத்தி.

ஒரு பெருசு. “ஏம்பா. நம்ம பையப்பா. அப்பா. இல்லாதவன். வுட்டுடுங்க. இனிமேல இந்த மாதிரி செய்யாத தம்பி. “

“கஞ்சியாலதானே இந்தப் பிரச்சினை. ஒரு வருஷமா இருக்கான். ஏதாவது எடக்கு மடக்கு நடந்திருக்குதா.?”

துண்டு “அட. வாரத்துக்கு ஒரு நாளு இப்புடித்தான் நடக்கும். பயபுள்ளய சமாளிச்சு அனுப்புவோம். இன்னிக்கு ஆட்டைய பத்திட்டு போகமாட்டேன்னு போயே போயிட்டான்.
“என்னடா சொல்ற.?” என்றது ஒரு பெரிசு.

வம்சி இடையில் புகுந்தார். “ஆடு பத்திட்டு போகாதது தப்புதான். அவனுக்கு கஞ்சி கொடுக்காததும் தப்புதான். இன்னிக்கு ஆயிருச்சு. நாளையிலிருந்து இந்த மாதிரி வேணாம். என்னடா சொல்ற ?”

அருணா தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த பக்கோடாவின் அம்மாவைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. மெலிந்து. கண்கள் உள்வாங்கி. ஒரு பக்கம் புடவை கிழிந்திருந்தது. தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தாள். இடுப்பில் வெத்தலைப் பை. தலைமுடி கலைந்து வெள்ளை முடிகள் காற்றில் ஆடியது. கைகளில் தளர்ச்சி தெரிந்து சுருக்கங்களை கோடுகளாக காட்டியது

டீக்கடையிலிருந்து ஒருத்தன் கத்தினான். “அவன் ஆடுங்களைப் பத்தலைன்னா அவங்கம்மா இனிமே பத்திட்டுப் போட்டும். “

துண்டு “ஆமாமா. “ என்று பல்லைக் காட்டியது.

பக்கோடா திரும்ப குரல் விட்டான்.”ஏன். உங்கம்மாவை அனுப்பு ஆடுங்களை பத்தறதுக்கு. “

“என்னடா சொன்ன. ?” கடையிலிருந்து இரண்டுப் பேர் ஓடி வந்தார்கள். வம்சி சட்டென்று எழுந்து “ஏம்பா. இருங்க. இருங்க.”

அருணா பயந்துப்போய் தாத்தாவைக் கட்டிக்கொள்ள துண்டு “என்ன தைரியம் இருந்தா அவங்கம்மாவைப் பத்திப் பேசுவ.?.”

“அப்புடின்னா உங்கம்மாவை அனுப்பு.” ஓடிவந்த இரண்டுப் பேரில் ஒருத்தன் நேராக பக்கோடா மீது விழப்போய் சரிந்து வேறுப் பக்கம் முட்டிக்கொண்டான்… பக்கோடா அம்மா.”டேய். ஓடிர்றா. ஓடிர்றா. “என்று அவனை அனைத்துக்கொள்ள அவன் திமிறி விடுபட்டு இன்னொருத்தனின் கால்களைப் பார்த்து உதைத்தான்.

துண்டுக்காரர் தன்னுடைய பெரிய மகனிடம் “போய் சாத்துடா அவன. உங்கம்மாவ பத்திப் பேசறான். வெக்கமில்லாம பாத்துக்கிட்டு.”

பக்கோடா அம்மாவைத் தள்ளிக்கொண்டு “தாத்தா. கூட்டிக்கிட்டு போங்க எங்கம்மாவ.” என்றவன் சட்டைக்குள்ளிருந்து கத்தியை உருவினான். நீளமாக கருத்துப்போய் கூர் நீட்டிக்கொண்டிருந்தது. “வாங்கடா. ஆம்பளையா இருந்தா வாங்கடா டேய்.ய்.”

அருணாவுக்கு சிரிப்பு வந்தது. கிட்டே நெருங்கியவர்கள் தயங்க. பக்கோடாவின் கூட்டாளி இன்னும் இரண்டு பேருடன் வந்தான். “கிட்ட வந்தாங்கன்னா தலய சீவிடு பக்கோடா. “

அருணா கலகலவென்று சிரித்தாள். கத்தியை ஓங்கி தனியே அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு “வாங்கடா. “ என்றவனை பார்த்து தரையில் குதித்து ஆடினாள். வம்சி அவளைத் தூக்கிக்கொண்டு “சும்மாரு. சும்மாரு. ஏம்மா. வா இப்படி.” பக்கோடாவின் அம்மாவை தள்ளிக்கொண்டு வெளியேறினார். அவள் “எம் பையன் அவங்க அப்பா மாதிரியே. ஊரே பயந்துச்சுள்ள. “

பக்கோடா கத்தியை இறக்கவில்லை. துண்டு “டேய். புடிங்கடா அவன.”

பக்கோடா சுற்றிலும் திரும்பி “வாங்கடா. வாங்கடா. “

“எம்மாந் தைரியம்.”

“வாங்கடா டேய். இன்னிக்கு வெட்டிட்டுதாண்டா போகப்போறேன்.”

அருணா திரும்பிப் பார்த்தாள். கிட்டே வந்த ஒருத்தனின் இடதுக் கையை பார்த்து பக்கோடாவின் கத்தி இறங்கியது தெரிந்தது.

0000

வெயில் நெற்றியில் வியர்வையை வரவழைத்தது. புங்க மரத்தின் இலைகள் ஆடாமல் வெறுமனே இருந்தது. நிழல் சற்றுத் தள்ளி ஒரு சரிவாக விழுந்திருக்க நான்கைந்து ஆடுகள் திடீரென்று ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டது. அந்த மலையின் சரிவில் பச்சைப்புற்களுக்கு நடுவே ஆடுகளின் தலைகள் தென்பட்டது.  ஒற்றையாக அங்கங்கே பனை மரங்கள். உச்சியில் இருந்த கோயிலின் வெளிப்புறம் ஒரு மாடு கத்தியது.  அருணா தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்டு கற்களை உருட்டிக்கொண்டிருந்தாள்.

“தாத்தா. அண்ணா எப்ப வரும்.?”

வம்சி  வெறுமையாக அருகிலிருந்த ஆட்டின் கால்களைப் பார்த்தவாறு.”வந்திடுவான். “

“மூணு நாள் ஆச்சுது தாத்தா.”

“அவன் ஒருத்தன வெட்டிட்டான் இல்லையா. போலிஸ் தேடுது. எங்கையோ ஓடிட்டான். “

“பாவம் அவன். “

“அவங்கம்மா கூடத்தான். “

“தாத்தா. அண்ணா வந்திருமா. ?”

“வருவான்.  ஆனா போலிஸ் வுடாது. அவனய பத்தி இனிமே பேசாத பாப்பா. அவன் சரியில்லை. கத்திய தூக்கிட்டான். அப்படி செஞ்சிருக்கக் கூடாது. “

அருணா சிரித்தாள். “தாத்தா. அண்ணனுக்கு தைரியம் அதிகம்,, எம்புட்டு தைரியம். கூட்டமே அப்படியே பயந்துருச்சு. ஒருத்தன் வெளிய ஓடிட்டான். பாத்தியா தாத்தா. பயம். யாரைத் தாத்தா அண்ணன் வெட்டினது.?”

“அந்த துண்டுக்காரர் பையனை. வுடமாட்டாங்க. பெரிய எடம் அது.  ஆனா காயத்தோட போயிடுச்சு. இல்லன்னா கொல கேஸாயிருக்கும். நீ எழுந்திரு. வெயில் அதிகமாயிருக்குது. தள்ளி உக்காருவோம். “

ஆடுகள் சட்டென்று ஒரு பக்கமாக தலையை திருப்பியது. இரண்டு ஆடுகள் ஒரு மாதிரி கனைத்தது. ஒரு பக்கமாக வேல மரங்கள் அடர்ந்த காட்டு வழியாக ஒன்று நடந்துப் போய் நின்று எங்கேயோ பார்த்தது. கூடவே இன்னும் இரண்டு ஆடுகள் சேர்ந்தது. வம்சி அவளை சற்று தள்ளி ஒரு கோணியின் மீது படுக்கவைத்துவிட்டு “வர்றேன். இரு. “ என்று நகர்ந்தார். வேல மரங்களை ஒட்டி ஏரி. தண்ணீர் இல்லை. ஆனால் அடர்ந்து வேல மரங்களின் இலையுதிர்வில் இடுக்குகளாக காட்சியளித்தது.  நடுநடுவே ஆங்காங்கே தென்பட்ட வெறுமையில் மாடுகள் நின்றுக்கொண்டிருந்தன. குட்டையும் நெட்டையுமான மரங்களுக்கு நடுவே ஒற்றையடிப் பாதைகள் பிரிவதும் சேர்வதுமாக இருந்தது. ஆடுகள் நிமிர்ந்துப் பார்ப்பதைத் தவிர்த்து மறுபடியும் மேய ஆரம்பித்தது. தூரத்தே கைகளில் குச்சிகளோடு ஒன்றிரண்டு நபர்கள் தெரிந்தார்கள். உச்சியில் அந்த கோவிலருகே யாறோ வந்துப் போன மாதிரி தோன்றியது. உற்றுப் பார்த்தார். அவர் பார்க்கும்போதே அவருடன் இருந்த இரண்டு ஆடுகளும் அவ்வாறேப் பார்த்தது. அங்கிருந்து சற்றுத் தள்ளி ஒன்றிரண்டு மாடுகள் இருந்தன. கோவிலின் அருகே சிறியதாக தெரிந்த வேப்பமரத்தின் உச்சியில் இலைகள் ஆடுவது தெரிந்தது.

அவர் நகர்ந்து அருணாவிடம் வந்தார். அவள் “என்னத் தாத்தா.?” என்றாள்.

அவன் இங்கதான் காட்டுக்குள்ளதான் இருக்கான் போல. எமகாதகப் பய.” என்றார்.

“அண்ணனா.?”

“ஆமா.”

“இருக்காது தாத்தா. அண்ணன் எங்கோ போய்டுச்சி. பாவம். சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்யுதோ.  “

“வூட்டுக்கு போனப் பெறகு அவங்கம்மாவ போய் பாத்துடலாம்.  கொஞ்சம் கம்பும்.சோளமும் கொடுத்துட்டு வரலாம்.. “

“சரி தாத்தா. “

“இரு. என்னவோ சத்தம் கேக்குது. “ எழுந்து சற்று நடந்து ஒரு பனைமரத்தின் பின்னாடிப் போனார். உதட்டில் ஒரு புன்னகை தோன்றியது. திரும்ப வந்து “அந்த கோணிய கொடு. அப்படியே தண்ணியும்.”

“என்னத் தாத்தா.?”

“குட்டிப் போட்டிருக்குது. ரண்டு கெண்டி. ஒன்னு பொட்ட. “

“பொட்ட குட்டியா.?”

“ஆமா. பொட்ட.”

“அய். பொட்டக்குட்டி. பொட்டக்குட்டி…அண்ணனுக்கு அது.” அருணா தாத்தாவின் கால்களை கட்டிக்கொண்டு சிரித்தாள்.   சற்று தூரத்திலிருந்து அந்த குட்டிகளின் கலவையான “மே…. மே. மே… “ சத்தம் கேட்டது.

0000

 

 

தெளி தேவதை

“நாம் எங்கே செல்கிறோம்?”

வசி கேட்டாள். அகவை பதிமூன்றை அப்போதுதான் தொட்டிருந்தாள். சிறுமியாக இருந்தவள், உடலின் மாற்றங்களால் பருவப்பெண் ஆகியிருந்தாள். பாவாடை சட்டையில் தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றிப்பொட்டுமாக அவளே ஒரு குட்டி அழகியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவள் அமர்ந்திருந்த மாட்டு வண்டி, ஜல் ஜல் என்று ஒலி எழுப்பியவாறு மலைகளுக்கிடையேயான பாதையில் சென்று கொண்டிருந்தது. கரடு முரடான பாதையின் கடுமை தெரியாமல் இருக்க மாட்டு வண்டிக்குள் வைக்கோல் அடர்த்தியாக அடுக்கப்பட்டு அதன் மீது பஞ்சுத்துணி அடுக்குகளாக அடுக்கப்பட்டிருந்தது. அதன் மீது தான் வசியும், அவளது தாய் உமாவும் அமர்ந்திருந்தார்கள். போகும் வழியில் தாகத்தைத் தணிக்க வண்டிக் கூண்டின் ஓரம் மண் பானையில், நீர் இருந்தது. ஒரு பாண்டத்தில் பழைய சோறும், மிளகாய் ஊறுகாயும் அவர்களின் பசிக்காய் சேமிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாண்டம் துணியால் சுற்றப்பட்டிருந்தது. மாடுகள் வயிறார உண்டிருந்தன. ஆதலால் தோய்வின்றி நடந்து கொண்டிருந்தன. எதிர்பார்த்த நேரத்துக்குள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்துவிடுகிற நம்பிக்கையை அளிக்கும் வண்ணம் நடந்தன.

“ஏன் பாதை வெறிச்சோடியிருக்கிறது? வழமையாக வியாபாரிகளும், நாடோடிகளும், காசிக்குச் செல்வோரும் பயன்படுத்தும் பாதை தானே இது?” என்றாள் தாய் உமா புருவச்சுருக்கங்களுடன்.

“அதுவா… வடக்கே இப்ராஹிம் லோடி சர்க்கார் வீழ்ந்ததையடுத்து புதிய அரசு உதித்திருக்கிறதாம். வழிப்போக்கர்கள் பாபர் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள். புதிய அரசின் தேவைக்கென வியாபாரிகள் அங்கே சென்றிருக்கலாம்” என்றார் விகார்.

“சொல் அம்மா, நாம் எங்கே செல்கிறோம்?” என்றாள் வசி மீண்டும்.

“தெளி தேவதையைப் பார்க்க” என்றாள் தாய், உமா.

“தேவதை என்றால்?” என்றாள் வசி.

“நம்மைப் போல் இருப்பவர்கள். நம்மை ரட்சிப்பவர்கள். ஆனால், நம்பவே முடியாத சக்தி படைத்தவர்கள் என்று அர்த்தம்?”

“தெளியிடம் என்ன சக்தி இருந்தது?”

தான் ஒரு குடும்பமாக, பிள்ளை பெற்றெடுத்து வாழ்ந்து செழிப்பது போல் தன் மகளும் வாழ்ந்து செழிக்க வேண்டும் என்று உளமாற விரும்பினாள் உமா. தன் பெற்றோர்கள் தனக்குச் செய்ததை தானும் தன் மகளுக்குச் செய்வதில் குறை ஏதும் வைக்கக்கூடாதென்று விரும்பினாள். அதன் ஒரு பகுதியாகவே அந்தப் பயணமாக இருந்தது. செல்ல இருக்கும் இடத்தின் முக்கியத்துவம் அறிந்தால், வசி, அதன் தூய்மைக்கேற்ப நடந்துகொள்வாள் என்று தோன்றியது.

“உனக்கு அரசன் பார்த்தனாஜன் கதை தெரியுமா?”

“தெரியாதே”

“சொல்கிறேன் கேள். முன்பொரு காலத்தில் பார்த்தனாகென் என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மேரி என்றொரு மனைவியும் இருந்தாள். இந்தப் பிரதேசத்தை அவர்கள் இருவரும் சிறப்பாக ஆட்சி செய்துவந்தனர். அவரது ஆட்சியில் முப்போகம் விளைந்தது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால், பார்த்தனாகென் தம்பதிக்கு வெகு காலமாகக் குழந்தையே இல்லாமல் இருந்தது”

கால்களை மடித்து அமர்ந்து, முட்டியின் மேல் கைகளை ஊன்றியபடி,

“ம்ம்ம்” என்று சொல்லி ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தாள் வசி. அப்போது மாட்டுவண்டியின் உட்புற விகாரத்திலிருந்து ஒரு பள்ளி தொப்பென்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில், துணி மீது விழுந்தது.

“வீல்ல்ல்ல்ல்” என்று பயத்தில் அலறினாள் வசி. தொடர்ந்து இன்னொரு ஆண் பல்லியும் அதனருகே விழுந்தது.

மாட்டு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த வசியின் தந்தை விகார் சட்டென வண்டியை நிறுத்திவிட்டு

“என்ன? என்னானது?” என்றார் பதட்டத்துடன்.

வசி கால்களைச் சுருக்கியபடி, பின் பக்கமாய் நகர்ந்து, மாட்டு வண்டிக் கூண்டின் சுவற்றோடு ஒண்டிக்கொண்டிருந்தாள். உமா தன் ஆள்காட்டி விரல்களால் பல்லியைச் சுட்டிக்காட்டினால். அவள் முகத்தில் அசூயை உணர்வு வியாபித்திருந்தது. தன் கைகளால் அந்த பல்லிகளை ஒரு சேரத் தட்டிவிட்டார் விகார். அந்தப் பல்லிகள் வண்டியின் வெளிப்புறம் புல்லில் விழுந்து ஓடி மறைந்தன.

“நல்ல வேளை நசுக்கவில்லை…. கர்ப்பமாக இருந்தது அந்தப் பெண் பல்லி” என்றாள் உமா

“அதனால தான் தள்ளி விட்டேன்” என்ற விகார், தொடர்ந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அமர்ந்தான்.

“ஒரு கவலம் தண்ணீர் கொடு” என்று கேட்க, மண் பானையின் மூடியைத் திறந்து கோப்பை ஒன்றில் தண்ணீர் மொண்டு எடுத்து உமா நீட்ட, அதை வாங்கி அண்ணாந்து பார்த்தபடி வாய்க்குள் கவிழ்த்து குடித்துவிட்டு கோப்பைத் திருப்பித்தந்தார் விகார். புறங்கையால் இதழோரம் வழிந்த நீரை வழித்துத் துடைத்துவிட்டு மாட்டின் பின்புறம் உதைக்க, வண்டியின் முன் கட்டப்பட்டிருந்த மாடுகள் வண்டியை இழுக்கத்துவங்கின.

உமா, வசி அமர்ந்திருந்த வைக்கோல் மீது படர வைக்கப்பட்டிருந்த இளவம் பஞ்சுத்துணியைத் தட்டி சீராக்கினாள். வண்டியின் கூண்டோடு ஒண்டிக்கொண்டிருந்த வசி, பயத்திலிருந்து மீண்டவளாய் வைக்கோல் தட்டியின் மீது மீண்டும் சரியாக அமர்ந்துகொண்டாள்.

“ஆங்க்..கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்” என்றாள்.

உமா விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதைச் சொல்லத்துவங்கினாள்.

“அரசனுக்கும் அரசிக்கும் குழந்தையே இல்லாமல் இருந்தது. ஆதலால் அவர்கள் தங்கள் மந்திரியை ஆலோசித்தார்கள். மந்திரி, அவர்களை இந்த கிராமத்துக்கு ஒரு முறை சென்று வரப்பணித்தார். இந்த கிராமத்தில் தங்கி அரசனும் அரசியும் உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த கிராமத்தில் தான் தெளி இருந்தாள். தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள். அந்தக் காலத்தில் கடவுளுக்கென நேர்ந்துவிடப்பட்டவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். யாருடனும் உறவு கொள்ளக்கூடாது என்பது விதியாக இருந்தது. அவளின் கண்ணித்தன்மை கடவுளுக்குக் காணிக்கையாக்கப்பட்டது. தெளி, குழந்தை வரம் தேடி வரும் அரசனுக்கும் அரசிக்கும் ஒரு மாத காலத்திற்கு எல்லாமுமாய் இருப்பதாய் ஒப்பந்தமாயிற்று.”

“அரசனும், அரசியும் வந்தார்கள் ஒரு வாரம் தங்கினார்கள். தெளி அவர்களுக்கு வேண்டிய உணவு, மற்றும் இதர பணிவிடைகள் செய்துகொடுத்தாள். ஒரு மாதத்தின் இறுதியில், அரசியை சோதித்த மருத்துவர்கள் அரசி கர்ப்பமடையவில்லை என்றார்கள். ஆனால், அந்த நேரம் தெளி மயங்கி விழுந்தாள். தெளியை சோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள். இது அரசருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏனெனில், அந்த ஒரு மாத காலமும் தெளி அரசர் மற்றும் அரசிக்கு அருகாமையில், அவர்களின் கண் பார்வையில் தான் இருந்தாள். அவளை அரசர் உள்பட யாரும் தீண்டவில்லை. ஆகையால், அரசிக்குள் உருவான கரு தெய்வ வசத்தால் தெளியை வந்தடைந்தது என்று எல்லோராலும் பேசப்பட்டது. கடவுள் தெளியையே தேர்வு செய்ததாக கொள்ளப்பட்டது.” என்று சொல்லி நிறுத்தினாள் உமா.

“பிறக்கென்ன ஆயிற்று?” என்றாள் வசி கதை கேட்கும் ஆர்வத்தில்.

“தெளிக்கு அது ஒரு நற்செய்தியாய் விளங்கியது. ஏனெனில், தெளி அப்போதிருந்த கிராம மக்களால் இறைப்பணிக்கென நேர்ந்துவிடப்பட்டவள். தன் வயதொத்த பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து பிள்ளை பெற்றுக்கொண்டிருக்க, ஆலயப்பணிகளுக்காய் தான் மட்டும் நேர்ந்துவிடப்பட்டதன் காரணம் தெரியாமல், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள். எப்படி தாய் தந்தையரை ஒருவர் தேர்வு செய்ய முடியாதோ அதே போலத்தான் இறைப்பணியும் என்பதாக அவளுக்குச் சொல்லப்பட்டிருந்ததை அவள் ஒரு சாபமாகவே பார்த்தாள். அப்படிப்பட்டவளுக்கு, பார்த்தனோஜன் அரசனின் வாரிசை சுமப்பது, அவள் தேடிய விடுதலையை அவளுக்கு அளிப்பதாகவே இருந்தது. அதை அவள் முழுமனதுடன் வரவேற்றாள், சுவீகரித்தாள், அதன் ஒவ்வொரு நொடியிலும் தன் பூரணத்தை உணர்ந்தாள்.”

“தெளி கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் என்பதால் அவள் பிள்ளை பெறும் முன் அரசாட்சிக்குத் திரும்புவது சரியாகப் பார்க்கப்படவில்லை. ஆதலால் அரசரும் கிராமத்திலேயே பிள்ளை பிறக்கும் வரை தங்குவது என்று முடிவாயிற்று. தெளி அரசரின் வாரிசை சுமப்பதால், அவளுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. எடுபிடி வேலைகளுக்கு வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசியும் தெளியைத் தன் சகோதரி போல் பார்த்துக்கொண்டாள். அவளது கருவின் வளர்ச்சியை ஒரு மருத்துவர் தொடர்ந்து பரிசோதித்தார். ஆனால், துவக்கத்தில் மிகவும் திடமாகக் காணப்பட்ட அவர், நாட்கள் செல்லச் செல்ல சற்றே குழப்பமாகவே காணப்பட்டார். ஒரு கட்டத்தில் தெளிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்ட அவள் இறந்து போனாள். அரசரின் வாரிசுடன் தெளி இறந்தது கண்டு அரசர் மிகவும் துயரத்துக்கு ஆளானார். மருத்துவர்கள் குழந்தையையாவது காப்பாற்றிவிடலாம் என்றெண்ணி அவளது வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர். உள்ளே ஒரு சதைப்பிண்டம் மட்டுமே காணப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சதைப்பிண்டத்தில் உயிர் இல்லாதது கண்டு உறைந்தனர். அதே நேரம் அரசி கருவுற்றிருப்பதாக அறியப்பட்டது. எந்த ஆணுடைய உதவியும் இன்றி தெளி தானாகக் கருவுற்றது பின்னாளில் எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்டது. தெளி, அரசியை அடைய இருந்த உயிரற்ற சதைப்பிண்டத்தைத் தான் ஏற்று, பதிலாக அரசிக்கு உயிருள்ள கருவைத் தந்திருக்கிறாள் என்று எல்லோராலும் ஒருமனதாக நம்பப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

கேட்டுக்கொண்டிருந்த வசி அதிர்ச்சியடைந்தாள். அவளது புருவங்கள் சுருங்கின.

“பிறகு?” என்றாள் ஆர்வமுடன்.

“அவளுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது, அரசருக்கு வாரிசே கிடைக்கக்கூடாது என்று எண்ணி யாரோ தெளிக்கு விஷம் தந்திருக்க வேண்டும் என்று அனைவராலும் ஒருமனதாக ஊகிக்கப்பட்டது. அரசருடன் வந்திருந்த மருத்துவர்கள், மந்திரிகள், பாதுகாவலர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். தெளி இந்தக் கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள். அப்படியே தெளி கடவுளாகிவிட்டாள். அதனாலேயே கன்னிப்பெண்கள் ஒரு முறையாவது இந்த கிராமத்துக்கு வந்து தெளியின் காலில் விழுந்து அவளைத் தேவதையாக வரித்து வேண்டிக் கேட்டிக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. அப்படி வேண்டிக்கொள்பவர்களுக்கு, எந்த ஆணுடைய உதவியுமின்றி தானாகவே பிண்டத்தை கருவுறும் தன்மையை அடைவதிலிருந்து தெளி விலக்கி வைக்கிறாள் என்றும் தன்னை அண்டி வந்தவர்களின் தாய்மையைத் தெளி பாதுகாக்கிறாள் என்றும் இன்றளவும் சொல்லப்படுகிறது” என்று தெளி கதையைச் சொல்லி முடித்தாள் வசி.

கேட்டுக்கொண்டிருந்த விகார்,

“பலே பலே.. இத்தனை நடந்திருக்கிறதா இந்த கிராமத்தில்? தெளி குறித்து நான் அறிந்திருந்தேன். ஆனால் இத்தனை விளக்கமாக இன்று தான் அறிய நேர்ந்தது” என்றார்.

“ஆமாம்.. எனக்கும் இதுவெல்லாம் என் பாட்டி, முப்பாட்டி சொல்லி தான் தெரியும். தலைமுறை தலைமுறை இந்த கிராமத்து மக்கள் வாய் வழிச் செய்திகளாகக் கடத்தி வரப்பட்ட கதை தான் இது. நானும் திருமணத்துக்கு முன் ஒரு முறை இங்கே வந்திருக்கிறேன்” என்றாள் உமா.

இதற்கு அந்த மாட்டு வண்டி கிராமத்தை அண்டியிருந்தது. மூவரும் மாட்டு வண்டியை விட்டிறங்கினார்கள். விகார், மாடுகளை வண்டியிலிருந்து விடுவித்து அருகாமையில் இருந்த மரத்தோடு பிணைத்துக் கயிற்றால் கட்டினார். பின், கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த ஒரு பெரிய ஒற்றைக் கல்லை அண்டினார்கள்.

“இங்கே தான் தெளி புதைக்கப்பட்டாளாம். அதன் நினைவாகவே இந்தக் கல் இங்கே ஊன்றப்பட்டிருக்கிறது” என்றாள் உமா.

மூவரும் அந்தக் கல் முன் நின்று விளக்கேற்றி வணங்கினார்கள். சற்று தள்ளி ஒரு மரத்தில் பல்லியொன்று தெரிந்தது.

அதன் உருவம் சற்று பரிச்சயமாக இருக்கவும் வசி அதனைக் கூர்ந்து பார்த்தாள். அது, விகார் தட்டிவிட்ட பல்லியைப் போலவே இருந்தது. விகார் பல்லியைத் தட்டிவிட்டு வெகு நேரம் இருக்கும். இத்தனை தூரம் ஒரு சிறு பல்லி தங்களை பின் தொடர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றி சற்று அதிர்ந்தாள் வசி. அந்தப் பல்லி அந்த மரத்தின் அருகாமையில் இருந்த ஒரு ஒற்றையடிப்பாதையில் இறங்கி சரசரவென ஓடியது

உமா பரிச்சயப்பட்ட பாதையில் நடப்பது போல அந்த ஒற்றையடிப்பாதையில் நடக்க, வசியும் விகாரும் அவளைப் பின் தொடர்ந்தனர். அந்த ஒற்றையடிப்பாதை ஒரு தடாகத்தை அடைந்தது. தடாகத்தின் ஓரம் ஏகத்துக்கும் தென்னை மரங்கள் காணப்பட்டன. தடாகத்தின் நீர் தெள்ளத்தெளிவாக இருந்தது.

“தெளி தேவதை இங்கே சமீபத்தில் வந்தது போல் தெரியவில்லை” என்றாள் உமா.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்றார் விகார்.

“வந்திருந்தால், கொட்டாங்கச்சிகளில் பெண் பல்லிகள் ஆண் துணையின்றி முட்டையிட்டிருக்கும் காட்சியை நாம் கண்டிருப்போம்.”

“ஓ.. அப்படியானால் வந்தது வீணா?”

“இல்லை.. நான் சொல்வது போல் செய்யுங்கள்” என்று சொல்லி உமா, தன் கணவன் விகாரின் செவியில் ஏதோ கிசுகிசுக்க, விகார் ஒரு தென்னை மரத்தில் ஏறி, ஒரு இள நீரைப் பறித்து கீழே வீசினார். அந்த இள நீர் வந்து விழுந்து உருண்டு மோதிய இடத்தில் கரையில் கிடந்த கொட்டாங்கச்சி உடைந்து சிதறியது.

அங்கே தடாகத்தின் முனையில் கூரான முனை கொண்ட பாறை ஒன்று தென்பட்டது. விகார், அந்தக் கூர்மையைப் பயன்படுத்தி, அந்த இள நீரிக்காயின் நார்களை உரித்து கொட்டங்கச்சியை வெளியே எடுத்தார். அதன் இரண்டு எதிரெதிர் முனைகளைத் துளையிட்டார். அங்கே உலவிக்கொண்டிருந்த பெண் பல்லி ஒன்றை எடுத்து அதனுள் இட்டு ஒரு முனையை மரக்குச்சியால் திணித்து மூடினார். அந்த இரண்டாவது துளையின் வாயிலாக, ஜீவித்திருக்கத் தேவையாக பிராண வாயுவை மட்டுமே அந்த பல்லி பெற முடியக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருந்தது அந்தத் துளை. பின் அதை வசியின் கைகளில் திணித்தார்.

“வசி, இதனை அந்தத் தடாகத்தில் விடம்மா” என்றாள் உமா.

வசி அது போலவே செய்தாள்.

“இனி கைக்கூப்பி தெளியை வேண்டிக்கொள். உனக்கு அழகழகான அறிவான பிள்ளைகள் உன் கணவனுடன் கூடிப் பிறக்கவேண்டுமென்று” என்றாள் உமா. வசி கீழே உடைந்த கொட்டங்கச்சியை ஒரு கணம் பார்த்தாள். அதனுள் ஒரு காய்ந்த பல்லியின் எலும்புகள் தென்பட்டன. அதனருகே, சிறிது சிறிதாய், பல்லி முட்டையிட்டதற்கான அடையாளங்கள் தோன்றின.

வசி கைகளைக் கூப்பினாள்.

“அவள் சின்னப்பெண். அவளுக்கென்ன தெரியும்?” என்று கடிந்தார் விகார். உடனே உமா, வசியை அண்டி ,அவள் பின்னே மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். பின் வசியைத் தன் மடியில் அமர்த்தினாள். பின் அவளின் பின் பக்கமிருந்து, தன் கைகளைச் செலுத்து, அவளது கைகளைக் கூப்பச்செய்து,

“தேவியே, உன்னைச் சரணடைகிறேன். முழுமை என்பது, இரண்டு சமமான பகுதிகளாகிறது. இரண்டும் ஒருங்கே தொடர்ந்திருத்தலே முழுமைக்கு இட்டுச்செல்வதாகிறது. பகுதிகளை உன்னிடத்திலே தேக்கிவிட்டு, முழுமையை எங்களுக்கு அருள்வதற்கு நன்றிகள் கோடி தாயே. உன்னை தொழுகிறேன். பகுதிகளை நீ எடுத்துக்கொள். எங்களுக்கு முழுமையை நல்கு. நீயே முழுமையின் திறவுகோல்” என்றாள் உமா.

வசி, கண்களை மூடிக்கொண்டு உமாவின் வார்த்தைகளை ஒரு மந்திரம் போல் ஆழ் மனதில் ஜெபித்தாள்.

“இனி சற்று காத்திருக்க வேண்டும். தெளி தேவதை இங்கே நடமாடுகிறாள் எனில், ஒரு வாரத்தில் இந்தப் பெண் பல்லி முட்டையிடும். அதை வைத்து நாம் மேற்கொண்டு முடிவு செய்யலாம். இப்போதைக்கு நாம் இங்கே தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்களும் வசியும் சுள்ளிகள் பொறுக்கி வாருங்கள். இரவுக்கு உணவு தயாரிக்கலாம். நாங்கள் பெண்கள் வண்டியிலேயே படுத்துக்கொள்கிறோம்.” என்றாள் உமா.

உமா கேட்டுக்கொண்டது போலவே அவர்கள் ஒருவாரம் அங்கே தங்கினார்கள். விகாரும், வசியும் சுள்ளிகளைப் பொறுக்க, அவ்வப்போது கிராமத்திற்கு வெளியே சென்று வந்தார்கள். உமா, கிராமத்தில் இருந்தபடி அவர்களுக்கு உணவு தயாரித்தாள். ஒரு வார காலத்தில், வசி தடாகத்தில் விட்ட கொட்டங்கச்சியில் இருந்த பல்லி முட்டையிட்டிருந்தது.

அதே நேரம், வசி உடல் நலக்குறைவாள் பாதிக்கப்பட்டாள். யாருமற்ற கிராமத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மருத்துவம் செய்ய இயலவில்லை. ஜுரமும் தலைவலியும் வயிற்றுப்போக்கும் அவளை சோர்வடையச்செய்தது. அவள் உணவு எடுத்துக்கொள்வதும் தடைபட்டது. அவளின் உடல் நலத்துக்கு என்ன குறை, என்ன தீர்வு என்று எதுவும் தெரியாமல் விகாரும், வசியும் குழம்பினார்கள். யாரை அண்டுவது, எதை அண்டுவது என தீர்மானமில்லாமல் திண்டாடினார்கள். என்ன செய்வதென திகைத்தார்கள். வசி சற்றைக்கெல்லாம் மூச்சு விடவே சிரமப்பட்டாள். இறுதியில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தாள்.

உமாவும் விகாரும் அழுது புரண்டார்கள்.

‘வசி என்னைப்போன்றே திருமணம் முடித்து, பிள்ளைப் பேறு பெற்று, வாழ்வில் சிறக்க வேண்டுமென்று தானே அவளை இங்கு அழைத்து வர எண்ணினேன். அது இப்படியா முடிய வேண்டும்? என் பிள்ளையை ஆசீர்வதிக்கத்தானே உன்னிடம் அழைத்து வந்தேன், அவளையே எடுத்துக்கொண்டு விட்டாயே’ என்று அழுது புரண்டாள் உமா.

மிகுந்த மன வருத்தத்துடன் வசியின் உடலை அங்கே குழி தோண்டி விகாரும் உமாவும் கனத்த மனதுடன் புதைத்தார்கள். அழுது அழுது வீங்கிய கன்னங்களுடன் அவர்கள் நிதானம் அடைந்தபோது, தெளியின் இறப்பைப் போன்றே வசியினுடையதும் இருந்ததை உணர்ந்துகொண்டார்கள். அது, வசியை தெளி தன்னுடன் அழைத்துக்கொண்டாள் என்று புரிந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.

சற்றைக்கெல்லாம் உமா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். விகார், தடாகத்திலிருந்து நீரள்ளி வந்து அவள் முகத்தில் தெளித்து அவளை சுய நினைவுக்கு மீட்டார். மீண்டெழுந்த உமாவின் நாடியை விகார் சோதித்துவிட்டு,

“நீ கர்ப்பமாக இருக்கிறாய். வசி தான் மீண்டும் பிறக்கிறாள்” என்றார் விகார்.

“இல்லை… வசி, இன்னொரு தெளியாகிவிட்டாள். இனி நமக்கும், நம் ரத்த பந்தத்தில் எல்லோருக்கும் வசி தான் தெளி” என்றாள் உமா, வசியின் கல்லரையை வெறித்துப் பார்த்தபடியே.

 

அன்னது ஆகலும் அறியாள்

வளவ. துரையன்

வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதம் என வகைப் படுத்தப்பட்டது. சங்கப் பாடல்களில் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வயலில் தானியங்கள் விளைந்து முற்றி இருக்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பறவைகளைப் பறைகொட்டி விரட்டுகின்றனர். அவர்களை “அரிப்பரை வினைஞர்” எனப் பாடல் காட்டுகிறது. அந்த வயலில் குருகுகள் நிறைய மேய்கின்றன. அக்குருகுகள் அவ்வயலில் இருக்கும் ஆமைகளைப் பிடித்துத் தின்கின்றன. அந்த ஆமைகளின் வெண்மையான தசையை முழுதும் உண்ணாமல் மிச்சம் வைத்துவிட்டுப் போகின்றன. பறை கொட்டுபவர்கள் அந்த மிச்சத்தைத் தங்கள் உணவாக உண்கின்றனர்.

இக்காட்சியைச் சொல்லிப் பரத்தை தலைவனின் பாங்காயினர் கேட்கக் கூறுகிறாள். “மிகுதியான அழகான மலர்களால் பொய்கை அழகு பெறும் வளங்கொண்ட நாடன் ஊரனே! நீ என்னை விரும்புகிறேன் என்று உரைக்கிறாய்; இதைக் கேட்டால் உன் மனைவி மிகவும் வருந்துவாள்”

குருகு உண்ட மிச்சத்தை உண்ணும் பறை கொட்டுபவர் போல தலைவன் தன் மனைவியை விட்டுவிட்டுப் பரத்தையிடம் வந்து இன்பம் துய்க்கிறான் என்பது உள்ளுறைப் பொருளாகும். ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணையில் புலவி விராய பத்தின் முதல் பாடலில் இதைக் காணமுடிகிறது. புலவி என்பது ஊடலைக் குறிக்கும். இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ஊடலின் பொருட்டு எழுந்தவையாகும். தலைவி, தோழி, மற்றும் பரத்தை ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் தாங்களே கண்டவற்றை உரைப்பனவாகவும், தூது வருபவர்களிடம் மறுப்புரை கூறுவதாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதி ”புலவி விராய பத்து” என்று பெயர் பெற்றுள்ளது. பாடல் இதோ:

”குருகுஉடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர்அணி வாயில் பொய்கை, ஊரநீ
என்னை ‘நயந்தனென்’ என்றிநின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே”.

தலைவி கூற்றாக வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் தலைவி தலைவனிடம் சினம் கொண்டு ஊடி உரைப்பது போல் உள்ளது. அவள் தலைவனிடம் அனைப்பற்றி நேரடியாகவே குற்றம் கூறுகிறாள். “நீ என்னை மணந்துகொண்ட கணவன்; ஆனால் நீ என்மீது அன்பு செலுத்தவில்லை” என்கிறாள். பாடலில், “மணந்தனை அருளாய் ஆயினும்” எனும் சொற்கள் இதைக் காட்டுகின்றன. மேலும் அவள் பொய்க்கோபமாக, “நீ குளிர்ச்சியாக நீர்த்துறைகள் உள்ள உன்னுடைய ஊருக்குச் செல்வாயாக. அங்கே வாழும் பரத்தையர்களிடம் சேர்ந்து அவர்களும் உன் பெண்டிரே என ஊரார் மொழியும் அளவிற்கு என்னை விட்டுப் பிரிந்து செல்வாயாக” எனக் கூறுகிறாள்.

பரத்தையர் பற்றிப் பொறாமையுடன் சினந்து கூறும்போது கூடத் தலைவி, அவர்களை, “ஒண்தொடி” என்ற சொல்லால் ஒளி பொருந்திய வளையல்களைப் பூண்டவர்கள் என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ”நீ அவர்களைச் சேர்ந்தால் மணந்த தலைவியை விட்டுவிட்டு இவர்களிடம் சேர்ந்திருக்கிறானே” என்று ஊரார் பழிப்பர் என்பதை மறைபொருளாக அவனுக்குத் தெரிவிக்கிறாள். புலவி விராய பத்தின் மூன்றாம் பாடல் இது.

”மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும்ஊர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டுஎனப் படற்கே”

இப்பத்தின் நான்காம் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்தாக வகுத்துப் பின்னி இருந்தனர் என இப்பாடலில் உள்ள ஐம்பால் மகளிர்” எனும் சொல் காட்டுகிறது.

”செவியின் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என்ஆ குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல,
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே?”

பெண்கள் தைத் திங்களில் குளிர்ச்சி பொருந்திய குளங்களில் நீராடும் வழக்கம் இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. மேலும் அக்குளமானது தலைவனின் மார்புக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. “பலர் வந்து நீராடும் குளம் போல உன் மார்பு பரத்தையர் வந்து படியும் தன்மை உடையது என ஊரார் பேசுகின்றனர். அதைக் காதால் கேட்டாலே உன் தலைவி சினம் அடைகிறாள். நீ இப்பொழுது பரத்தை இல்லில் தங்கிய குறிகளுடன் வந்திருக்கிறாய்; தலைவி இப்பொழுது உன்னைக் கண்ணால் கண்டால் என்ன ஆவளோ?” எனத் தலைவி கூறுகிறாள்.

அடுத்த பாடலில் தலைவி, தலைவனைப் பார்த்து, “ஊரனே! உன் செயல் சிறுபிள்ளைகள் செய்வதைப் போல இருக்கிறது. இதைக் கண்டு ஊர்ப்பெரியவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா?” எனக் கேட்கிறாள். மேலும் உன் ஊரில் சம்பங்கோழி அதன் பெடையோடு இணைந்து வாழ்கிறது என்று கூறி பறவையே அப்படி வாழ்கையில் அது போல நீ இருக்க வேண்டாமா எனக் குறிப்பாகக் கூறுகிறாள். கம்புள் என்பது சம்பங்கோழியைக் குறிக்கும். சம்பங்கோழியைக் கூட வெண்மையான நெற்றி உடையது எனும் பொருளில், “வெண்நுதல்” என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

இதோ ஐந்தாம் பாடல்:

”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுஇல் யாணர் மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி;
அகாரோ பெருமநின் கண்டிசி னோரே”

பரத்தை கூற்றாக புலவி விராய பத்தின் எட்டாம் பாடல் விளங்குகிறது.

”வண்துறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.”

”பரத்தையானவள் தன்னிடம் தலைவன் வந்து சேர்வதை விருப்பம் இல்லாதது போலக் காட்டுவாள்; ஆனால் அவள் விரும்பிக் கொண்டிருக்கிறாள்: அதுபோலிருக்கத் தன்னல் இயலாது” எனத் தலைவி கூறுகிறாள். அதைக் கேட்ட பரத்தை ‘ஆமாம்; நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டோம். அதற்கு உடன்படாத்து போலக் காட்டி மனத்துள் உடன்படுகின்றோம்” எனக் கூறுகிறாள்.

வண்டானது மலர்விட்டு மலர் சென்று தேன் உண்ணுதலை தலைவன் பரத்தையரிடம் சென்று இன்பம் துய்த்தலுக்கு உவமையாகப் பல பாடல்களும் இது போல் சொல்லி இருக்கின்றன. தலைவன் ஊரில் வண்டுகள் தங்கும் வளமான மலர்கள் உள்ளன என்று இங்கு குறிப்பாக மறைபொருளாகச் சொல்லப்படுகிறது. தலைவியை உறவு முறையாகப் பரத்தை தமக்கை என்றழைக்கிறாள். ’எவ்வை’ எனும் சொல் அதைக் காட்டுகிறது.

இது பத்தாம் பாடல்:

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே”

இப்பாடலில் பரத்தை ’புதல்வனின் தாய்’ எனத் தலைவியைக் காட்டுவதிலிருந்து மணமாகி சில ஆண்டுகள் தலைவியுடன் வாழ்ந்த பின் புதல்வனும் பிறந்தபின்னர் தலைவன் பரத்தை இல் சென்றுள்ளான் எனபது புலனாகிறது. இப்பாடலிலும் பல மலர்களுக்குச் சென்று வரும் வண்டு தலைவனுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து தலைவனைப் பரத்தைதான் விலக்குகின்றாள் எனத் தலைவி கூறுவதைக் கேட்ட பரத்தை கூறுவது போல் அமைந்த பாடல் இதுவாகும்.

”வண்டு பல மலர்களிடம் சென்று தேனை உண்ணல் மரபு. தலைவனும் அதே போன்று பல பரத்தையரிடம் சென்று இன்பம் துய்க்கிறான். தலைவன் குணத்தை வண்டுகள் பெற்றனவா? இல்லை வண்டின் குணத்தைத் தலைவன் பெற்றானா என்பது தெரியவில்லை; அப்படி இருக்கத் தலைவனுடன் கலந்து புதல்வனைப் பெற்ற தலைவி எம்மைக் குறை கூறுகிறாளே” என்பது பரத்தை கூற்றாகும்.

சில ஆண்டுகள் பழகியபின்னரும் தலைவனின் குணத்தைத் தலைவி அறியவில்லையே என்பதை மறைமுகமாகக் காட்டவே இந்த இடத்தில் புதல்வனைக் குறிப்பிடுகின்றாள். “அன்னது ஆகலும் அறியாள்” என்ற சொறோடர் இதைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு இயற்கைக் காட்சிகளைக் காட்டி அவற்றின் வழி தலைவன் மற்றும் பரத்தை போன்றோரின் வாழ்முறைகளையும் ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’

த. நரேஸ் நியூட்டன்

இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம்சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.

தை மாதம் 1ஆம் திகதி 1939ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தின் பெயர் பெற்ற மாவட்டமாகிய மாத்தளையில் பிறந்தார். இவர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கிறீஸ்தவ தேவாலய கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது கலைப் பயணத்தை 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை அப்பயணத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தார். இதே ஆண்டில் இவர் முதன் முதலில் எழுதிய நாடகம் ‘தீர்ப்பு’ என்பதாகும். இவர் கிறீஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி பயின்ற அவரது இளமைக்காலத்திலேயே பல நாடகங்களை எழுதி அவற்றின் பொருட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலப்பகுதியில் மலையக மக்களின் மூத்த பரம்பரையினர் அநேகமாக கல்வியறிவு கிடைக்காத தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களாக பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். கல்வியறிவு குறைவானவர்கள் என்பது மட்டுமன்றி பிராந்திய ரீதியான மற்றும் சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும் இவர்கள் பெரியளவில் முகம் கொடுத்தார்கள். தங்கள் மத்தியில் இருந்த கல்விசார் குறைபாட்டை தாங்களே நிவர்த்தி செய்ய எத்தனித்து பலர் கல்வி  பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு கல்வியறிவு பெற்றுக் கொண்டவர்களுள் அனேகமானவர்கள் தமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு வேலைவாய்ப்புக்களை தேடி இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்த சம்பவங்களும் உண்டு. இவர்களுள் சிலர் தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் மாற்றம் கருதி தாம் வாழ்ந்த பிரதேசத்திலேயே  தங்கி சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சமூக பாகுபாடுகளுக்கு முகம்கொடுத்த இவர்களுள் சிலர் அதை சவாலாக எடுத்து தாம் சார்ந்த தோட்டங்களின் பெயர்களை தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டு கம்பீரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த பல ஆளுமைகளை நாம் காணலாம். அவர்களை போன்றோர் அநேகமாக தெரிவு செய்த துறை தான் கலை இலக்கிய துறை. கலை இலக்கியத் துறையில் தமது பங்களிப்பை நிறைவாக செலுத்த முற்பட்டவர்களுக்குள் பெர்குறிப்பிடக்கூடிய ஒருவர் தான் மாத்தளை கார்த்திகேசு. இவர் தனது ஊரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்துக்கொண்டே கலையுலகில் கால்தடம் பதித்து பிரபலமானார். இதனாலேயே இவரது பெயர் மாத்தளை கார்த்திகேசு என வழங்கப்படலாயிற்று.

‘அவள் ஒரு ஜீவநதி’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 1980ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தை கலைஞர் மாத்தளை கார்த்திகேசுவே திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்காக இவர் பாடல்கள் சிலவற்றையும் எழுதியதோடு தந்தை பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அப்படியிருந்தபோதும் அவர் மனம் சோர்ந்துபோகாது தொடர்ந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் 25ற்கும் அதிகமான மேடை நாடகங்களை எழுதி அந்த நாடகங்களை தானே முன் நின்று வழிநடத்தி இயக்கி மேடையேற்றினார். இவரது நாடகங்களில் ‘களங்கம்’, ‘போராட்டம்’ மற்றும் ‘ஒரு சக்கரம் சுழல்கிறது’ போற்ற நாடகங்கள் முறையே 1974, 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேடையேற்றப்பட்டு தேசிய நாடக விழாவில் அநேகரின் பாராட்டைப் பெற்றதோடு பரிசும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபல்யப்படுத்திய நாடகமென்றால் அது மிகையாகாது. இந்த நாடகம் யாழ் நகரில் உலகத் தமிழாராட்சி மாநாடு நடைபெற்றபோது தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரினதும் மற்றும் மாநாட்டில் பங்குபற்றிய பல முக்கியமான இலங்கை மற்றும் இந்திய பிரமுகர்களினதும் முன்நிலையில் மேடையேற்றப்பட்டு அநேகரின் பாராட்டைப்பெற்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்த நாடகத்தை நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாராட்டை நேரடியாக பெற்றதோடு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பாராட்டையும் பெற்றது. இந்த நாடகம் 15 தடவைகளுக்கு மேல் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு சாதனை புரிந்தது.

திரைப்படத்துறையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் இவர் சலிப்படைந்து போகமல் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் தனது நாட்டத்தை காட்டத்தொடங்கினார். அதன் பயனாக ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் பின்னர் பெயர் மாற்றப்பட்டு ‘காலங்கள்’ என்ற பெயரில் மலைய மக்களின் வாழ்க்கை பின்புலங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டு இலங்கை தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளி பரப்பப்பட்டதோடு இலங்கையின் முதலாவது தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர் என்ற பெருமையையும் பெற்றது. இவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பொருட்டு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை மட்டுமன்றி மலையகத்தின் மிகப்பிரபலமான ‘காமன்கூத்து’ எனப்படும் மலையக மக்களின் வழக்கமான முறைமையிலமைந்த நாட்டுக்கூத்தையும் தாமே முன்வந்து தயாரித்து வழங்கினார். இவை மட்டுமன்றி ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தொலைக்காட்சி நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒளிபரப்பப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியால் நாடாத்தப்பட்ட நாடக விழா ஒன்றில் ‘காலங்கள் அழிவதில்லை’ நாடகத்தினை மேடையேற்றி சிறந்த நாடகம், சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கான பரிசையும் தனதாக்கிக்கொண்டார்.

இதைப்போலவே இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஒரு போட்டியில் இவர் எழுதிய ‘சுட்டும் சுடர்கள்’ என்ற திரைப்படக்கதை பிரதிக்கு இரண்டாவது பரிசைத் தட்டிக்கொண்டமை இவரது கலைப்பயணத்தில் இவர் தாண்டிய மற்றொரு மைல்கல்லாகும். இந்தப் போட்டியில் முதலாவது பரிசை பி. விக்கினேஸ்வரன் அவர்களும் மூன்றாவது பரிசை கே. கே. மதிவாணனும் பெற்றுக்கொண்டனர்.

கலைப்பணிக்காக பல அர்பணிப்புக்களுடன் அயராது உழைத்த இவரது உழைப்பை கவனத்தில் எடுத்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 1993ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் இவருக்கு ‘கலா ஜோதி’ என்ற விருதை வழங்கி கெரவித்தது.

இவரது படைப்பாகிய ‘வழி பிறந்தது’ என்ற நாவல் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை மலையக மக்களின் வாழ்வியல் முறைமைகள், கலாசாரம் மற்றும் பண்பாடு முதலியவற்றை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் முதல் முதலில் இந்த வெளியீட்டகத்தினால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் அவர்களது பிரச்சனைகளையும் உணர்சியோடு தீவிரமாக எடுத்துக் கூறும் படைப்பு ‘வழிபிறந்தது’ நாவல் என வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மலையகத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புகளையும் விட இது மிகவும் வித்தியாசமாக யோசித்து புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரிக்கிறார்.

மாத்தளை கார்த்திகேசு அவர்கள் இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் பற்றி ஆரம்ப காலங்களிலேயே ஆழமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அந்தக்கருத்து ஆழமானதென்பதற்கும் அப்பால் உண்மைத் தன்மைகொண்ட ஒரு தீர்க்கதரிசனம் மிகுந்த கருத்தாக தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் எமக்க புலப்படும். அதனை இங்கு காலத்தின் தேவையாகக்கருதி குறிப்பிடுகிறேன். “நம் நாட்டில் தொலைக்காட்சி நாடகங்கள் வளர வேண்டுமானால் வெளி நாட்டிலிருந்து தொலைக்காட்சி நாடகங்கள் தருவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்க ஏற்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் ஏற்படும்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இக்கருத்து எவ்வளவு தூரம் நிதர்சனமானது என்பது இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது புலப்படும். இந்நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அநேகமானவை இரவல் தாயின் பிரசவங்களாகவே இருப்பது கவலையளிப்பது மட்டுமன்றி இலங்கைக் கலைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.

இவர் மலையக எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகவும் இலங்கை கவின் கலைகள் மன்றத்தின் தலைவராகவும் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் நாடக குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை இவரது தலைமைத்துவ ஆளுமையை வெளி உலகிற்கு புடம்போட்டு காட்டுகிறது. தமிழ்க் கதைஞர் வட்டத்திலும் அங்கத்துவம் வகித்து சிறந்த கதைகளை தேர்வுசெய்வதில் தனது பூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர் கடந்த பத்து வருடங்களாக ‘தகவம்’ இலக்கிய அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மலையகத்தின் நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு மாத்தளையில் அமைந்திருந்த தனது நூலகத்தையும் அக்குழுவினருக்கு பயன்பாட்டுக்கு கொடுத்து பரிபூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அண்மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் முகப்பை இவரது புகைப்படமே அலங்கரித்திருந்ததோடு அவர் பற்றிய ஒரு கட்டுரையை திரு. மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மாத்தளையின் ஜீவநதி’ என்ற தலைப்பில் இந்த சஞ்சிகையில் விரிவாக எழுதியிருந்தார்.

இவர் கொழும்பில் ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடையில் தனது வசிப்பிடத்தைக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய படைப்புலகத்திற்கு குறிப்பாக மலையக இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆதர்சமாகவும் திகழ்ந்த ‘மாத்தளையின் ஜீவநதி’ மாத்தளை கார்த்திகேசு கடந்த ஆவணி 6ம் திகதி 2021 அன்று தனது பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார். இவர் மறைவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் ‘ஞானம்’ சஞ்சிகையில் இவரைப்பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடப்படக்கூடியது. இந்த கட்டுரையை இவர் படித்திருந்தால் இவர் ஆற்றிய கலைப்பணிக்கு கிடைத்த மிகப்பெரும் சான்றாகக் கருதி ஆத்ம திருப்தியடைந்திருப்பார் என்றால் அது மிகையாகாது.

அதுவாகும் அது

கருவை ந.ஸ்டாலின்

அவ்வப்போது
அடிக்கடி
சும்மா சும்மா
எப்படியேனும் வைத்துக்கொள்ளுங்களேன்

சொல்லிக்கொள்ளாமல்
வந்துதொலைந்துவிடுகிறது
இப்பிசாசு

வழக்கமாய்
நீங்கள் வகுத்துவைத்த
எச்சூத்திரமுமின்றி
நான் நினைக்கும்
அதுவாகிறது
அது,

கோமகன் காது கழுதைக்காது
தொட்டு
பஷீரின் பால்யகாலசகி வரை
ஒன்றையும்
விட்டுவைக்காத நவீனக் கோணங்கி

எப்படியோ
தொற்றிக்கொண்டது
தோளில்

முழுவதும் கொறித்து முடிப்பதற்குள்
நின்று நிதானித்து
என்னவென்று கேட்டுவிடுங்கள்
ஒவ்வொருவருக்குமான
ஒன்றை,

அவ்வப்போது
அடிக்கடி
சும்மா சும்மா வருவது
இதோ
இப்போது
இக்கணத்தில் – அது
இறுதியாய் கூட
இருக்கலாம்.