எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை தியாகு புத்தக நிலைய நண்பர்கள் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இதழுக்காக ஒரு பேட்டி எடுத்தோம். அப்போதே, அவரது ‘மனைமாட்சி,’ நாவல் மிக விரைவில் வெளிவரும் என்ற தகவலும், அது பற்றிய ஒரு சிறு குறிப்பும் அதில் இடம்பெற்றன. ஆனால், ‘மனைமாட்சி,’ அதற்குப்பின் மிகவும் காலம் தாழ்த்தி, இந்த ஜூலை மாதத்தில்தான் வெளியாகி இருக்கிறது. ஆசிரியரின் பணிச்சுமை, இடமாற்றம், போன்றவை காரணமாக இவ்வளவு காலதாமதமாகி விட்டது என்று அறிந்தேன். நாவல் வெளிவரத் தாமதமாகும் காரணத்தாலேயே அதன் மீதான எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே வந்தது. கோபாலகிருஷ்ணன், தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவரது இரு நாவல்களான, ‘அம்மன் நெசவு’ம் ‘மணல் கடிகை’யும் விமர்சகர்களால் தமிழின் முக்கிய படைப்புகள் என்று அடையாளம் காட்டப்படுபவை. அவரது சிறுகதைகளும் சோடை போனதில்லை. தவிர, மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். ஆனாலும், அவர் இன்னமும் அதிகம் எழுதியிருக்க வேண்டியவர் என்பதே இலக்கிய வாசகர்களின் எதிர்பார்ப்பு. இவையெல்லாம் சேர்ந்து இந்த நாவலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது. அவ்வளவு ஆவல், எதிர்பார்ப்புகளுக்கிடையில் அவரது இந்த ‘மனைமாட்சி’ நாவலை வாசித்து முடித்தேன்.
இது நிறைய கேள்விகளை மனதில் எழுப்பும் புத்தகம். முதல் கேள்வி, ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று நாவல்களை ஒரே புத்தகமாக போட்டிருக்கிறார்கள் என்பது. எல்லாமே இல்லறம், அதாவது மனைமாட்சி சம்பந்தப்பட்டதாக இருப்பதால் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும்,இந்த ஒவ்வொரு நாவலிலுமே இரண்டு கதைகள் உள்ளன. அதுவும் ஏன் என்று கேள்வி வந்தது. அவற்றை ஏதோ ஒரு சின்ன நூலிலாவது கட்டி ஆசிரியர் தொடர்பு ஏற்படுத்திவிடுகிறார். அதனால் அவை ஒரே நாவலாக முன்வைக்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு வியப்பூட்டும் அம்சமாக, இந்த நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது மனதில் உடனடியாக தோன்றுவது, திஜா.வின் ‘அன்பே ஆரமுதே’, லக்ஷ்மியின் ‘தேடிக் கொண்டே இருப்பேன்’, சிவசங்கரியின் ‘அடிமைகள்’, போன்ற நாவல்கள் மற்றும் மணிரத்னத்தின் ‘மௌன ராகம்’, பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’, போன்ற திரைப்படங்கள். இன்னும் நிறைய வணிக நாவல்களின், தொலைக்காட்சி கேளிக்கை நெடுந்தொடர்களின் தருணங்களும் ‘மனைமாட்சி’ நாவலை வாசிக்கும்போது ஆங்காங்கே நிழலாடுகின்றன.
முதல் நாவல் ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்குத் தோதான நாவல். இதில் இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன- ஒன்று, மகா பொறுமைக்கார தியாகு, மகா கொடுமைக்கார சாந்தி இவர்களின் புயலடிக்கும் குடும்பக் கதை. இன்னொன்று, வைத்யநாதன் என்ற மராத்திய (சவுராஷ்டிர?) பிராமணர் இளவயதில் திருமணம் ஆகி, அந்தப் பெண்ணுக்கு (ராஜம் பாய்) தொழுநோயோ என்று பயந்து அவளைக் கைவிட்டு (குடும்பத்தினரின் வற்புறுத்தலால்) இன்னொரு திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்கையில், முதல் மனைவி நன்றாக இருப்பதைக் கேள்விப்பட்டும் அவளாகவே தொடர்பும் கொண்டதாலும், கும்பகோணம் சென்று அவருடன் மீண்டும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் கதை. இந்த இரண்டு கதைகளுக்கும் என்ன சம்பந்தம், ஏன் அவை ஒரே கதையாக சொல்லப்படுகின்றன என்றால், வைத்யநாதனின் மகள் ரம்யா தியாகுவின் முன்னாள் காதலி, தியாகுவின் இளம்பருவத்து தோழனும் இப்போது அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி புரிபவனுமான செந்திலின் மனைவி.
ரம்யா -தியாகு காதல் செந்திலுக்குத் தெரியும், தியாகு இடையில் டிராக் மாறி, சாந்தியை கல்யாணம் செய்து கொண்டதும் தெரியும். இவர்களின் இன்னொரு நண்பன் குமரேசன், ரம்யாவின் அண்ணன் வைத்யநாதனின் மகன். செந்திலுக்கும் ரம்யாவுக்கு நடந்தது, காதல் திருமணமா அல்லது பிராமணர் அல்லாத செந்திலுக்கு ரம்யாவை மணம் செய்து வைக்கும் அளவுக்கு வைத்யநாதன் குடும்பத்தினர் அவ்வளவு புரட்சி மனப்பான்மை கொண்டவர்களா? இரண்டு பெண்களுக்கு ரம்யா, காயத்ரி, என்று பெயர் வைத்திருக்கும் ஒரு மராத்தி அல்லது சவுராஷ்டிர பிராமணர் குடும்பத்தில் மகனுக்கு குமரேசன் என்று பெயர் வைப்பார்களா? தியாகு என்ன சாதி என்று சொல்லும் கதாசிரியர், செந்தில், சாந்தி எல்லாம் என்ன சாதி என்று ஏன் சொல்வதில்லை போன்ற கேள்விகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கதைக்குள் போனால், கீழே உள்ளவற்றை மேலும் கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டியிருக்கிறது.
வேலையே கதி என்றும் வீட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாத அடிமையான தியாகு, திடீரென்று எல்லாம் அறிந்த சாந்திக்குத் தெரியாமல் மகள்களுக்கு கோவை ஸ்கூலிலிருந்து டி.சி. வாங்குவது, ஐதராபாத் பள்ளியில் அட்மிஷன் வாங்குவது, தாங்கள் ஊருக்கு கிளம்பும்போது, பாலில் தூக்க மாத்திரை கலந்து சாந்திக்குக் கொடுப்பது, பின் விழித்து எழும் சாந்தி, தான் கைவிடப்பட்டதை அறிந்து தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரை சாப்பிட்டதும், பொறுப்பாக, கரெக்ட்டாக, அவள் அம்மாவுக்கு போன் செய்வது, அவர்கள் ‘வசந்த மாளிகை’ க்ளைமாக்ஸ் காட்சி போல சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுவது (ஆம், இங்கேயும், அந்தக் காட்சியில் மழை உண்டு, நிச்சயமாக); பின் இவர்களின் இளைய மகள் மீனா ஐதராபாத்தில், திடீரென்று, “அம்மா எப்பப்பா வருவாங்க?” என்று கேட்பது, பக்கத்து வீட்டுப் பெண் வயதுக்கு வந்தவுடன், தன் பெண் வயதுக்கு வரும்போது என்ன செய்வோம் என்று தியாகு கலங்குவது எல்லாவற்றையும் எந்தக் கேள்வியும் இல்லாமல் படித்து முடித்துவிட்டால், தியாகுவுக்கும் சாந்திக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் வைத்தியநாதனுக்கும் அவரது முதல் மனைவி ராஜம் பாய்க்கும் கண்ணீர்விட்டு துக்கப்படலாம். இடையில், கால் ஊனமான, பலவீனமான, ரம்யா, தன் கணவன் தியாகுவின் கைகால்களையே அவ்வப்போது உடைத்துப்போட்டு உட்கார வைக்கும் பலம் வாய்ந்த சாந்தியின் வீட்டுக்கு வந்து அவளுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவளையே வீழ்த்தும் ஒரு சண்டைக்காட்சியும், பின், சாந்தி மொத்த ஆடைகளையும் அவிழ்த்துவிட்டு தெருவில் ஓடி விடுவேன் என்று பாதி ஆடையை அவிழ்த்துக் கொண்டு தியாகுவை மிரட்டும் (ஏற்கனவே சாந்தி சிறு வயதில் அப்படி செய்திருக்கிறாள்) திகில் காட்சிகளும் உண்டு.
இரண்டாவது நாவல், என்ன வகை என்றே தெரியாமல், வாயடைக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் படைப்பு. என்னால் அதை வகைப்படுத்தவே முடியவில்லை. சற்றும் ஒட்டவுமில்லை. இதிலும், சற்று ‘மௌன ராக’த்தின் சாயல் உண்டு என்றாலும், இடம்பெறும் மனிதர்கள், நடக்கும் சம்பவங்கள்- எல்லாம் எங்கோ நம்பகத்தன்மைக்கு அப்பால் தலைக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிறார்கள்/ இருக்கின்றன. எனவே, இதைப் பற்றி ஒன்றும் சொல்லவே தோன்றவில்லை எனக்கு.
மூன்றாவது நாவல், கல்யாணம் முடிந்த மறுநாளே, கணவனிடம் விவாகரத்து கேட்கும் துவக்கத்தில், ‘மௌனராகம்’ வகை, முடியும்போது, “சாரே, எண்ட காதலி நிங்ஙள் பெண்டாட்டி ஆகலாம், பட்ச்சே, நிங்ங்கள் பெண்டாட்டி, ஒரு போதும் எண்ட காதலி ஆகிட்டில்லா,” என்று சம்பந்தப்பட்ட காரெக்டர் சொல்லாவிட்டாலும், ஆசிரியர் சொல்லிவிடும்,‘அந்த ஏழு நாட்கள்’ வகை. இடையில் வழக்கம் போல வரும் இரண்டாம் கதையில் ஒரு (கல்யாணமான) குட்டியை ஏகப்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள், குட்டி யாருக்கு என்று ஒருபோதும் ஊகிக்க முடியாமல் கதையை முடிப்பதில் மன்னன்கள் என்று ஜேஜே சொல்லும் வகை. இந்த ஏகப்பட்ட கூட்டங்களில், முதல் கதையின் நாயகனும் உண்டு என்பதுதான் இரண்டு கதைகளுக்கும் உள்ள சம்பந்தம்.
முதல் கதை தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை இந்நாள் கணவனா அல்லது முன்னாள் காதலனா, என்று அந்தப் பெண்ணுக்கே பெண்ணே தெரியாமல் மலைக்கும் புரட்சி வகையும்கூட. இரண்டு ஆண்கள் ஒரு ஓரு பெண்ணை மணந்து கொண்டு குடும்பம் நடத்தி பின் விலக்கம் ஏற்படும் பா. ராகவனின் ‘ரெண்டு’ நாவலில்கூட, அந்தப் பெண்ணுக்கு தனது குழந்தையின் தகப்பன் யாரென்று தெரிகிறது. இது அதையும் தாண்டிய புரட்சி. இதிலும் சில பாத்திரங்களின் மொழி சாதி போன்றவை தெளிவாக சொல்லப்படுகின்றன, சில பாத்திரங்களது சொல்லப்படவில்லை. சொல்லப்படுவதால் என்ன தெரிகிறது, சொல்லப்படாததால் என்ன மறைக்கப்படுகிறது, அதில் என்ன லாஜிக் என்றும் எனக்குப் புரியவில்லை.
இக்கதைகளை ஏன் தீவிர இலக்கிய வகையில் வைத்துப் பேச வேண்டி இருக்கிறது, மாத இதழ்களில் வரும் நாவல் என்று ஏன் சொல்லக் கூடாது என்று இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான பதில்களில் முதன்மையானது, இந்நாவலாசிரியரின் முந்தைய நாவல்களின் தரம். நான் யோசித்ததில் இரண்டாவதாக எனக்குத் தோன்றிய காரணம், அவற்றில் இடம் பெறாத சில அம்சங்கள் இதில் இருப்பது. உதாரணமாக, உரையாடல் முடியும்போது பக்கத்தில் இருந்த மைனா பறந்தது, எதிர்வீட்டுச் சிறுவன் சிரித்தபோது அவன் முன்பற்களைக் காணவில்லை, அந்தச் செடி அப்படி வளைந்து நின்றது, என்றெல்லாம் விவரிக்கும் வரிகளும், கதைமாந்தர்கள் குடிபுகும் அடுக்கக வீடுகள் அதற்கு முன்பு என்னவாக இருந்தன, கோவை அன்னபூர்ணா காபியின் சுவை, மாதிரியான அசலான தகவல்கள் கொட்டிக் கிடப்பதும் பெண் பாத்திரங்களின் உடல் மணம், கூந்தல் மணம், அவர்கள் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ எல்லாம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் ஓடும் ஆண் பாத்திரங்களின் மனவோட்டங்களும்தான் என்று தோன்றுகிறது. இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு புகழ் பெற்ற பதிப்பகம் மூலமாக பிரசுரித்தால் அது முக்கியமான தீவிர இலக்கிய புத்தகம் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. இதில் புத்தகத்தை வெளியிடும்போதே படித்துவிட்டு யாரும் எந்தக் கருத்தும் சொல்வதற்கு முன்னமே அந்த பதிப்பகம் அதை CLASSIC என்று அட்டையில் போட வேண்டியதும் மிக முக்கியமானது. போலிருக்கிறது. இன்று ஒரு படைப்பின் உள்ளடக்கத்தைவிட, அதை யார் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்தே அது தீவிர இலக்கிய வகையா அல்லது வெகுஜன எழுத்தா என்று தீர்மானிக்கப்படும் ஒரு நிலை வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அண்மைக்காலமாக வெளிவரும் பல படைப்புகளும் அதிகம் காட்சி ஊடகங்களால் பாதிக்கப்பட்டவை போலவே தோன்றுகின்றன. ஒரு வகையில், நம் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே சின்னத் திரை அல்லது பெரிய திரையில் பிரகாசிப்பதற்கான ஆர்வம் அதிகமாகியிருப்பதால், எழுத்தும் சுலபமாக ஒரு வணிக நெடுந்தொடர் அல்லது கேளிக்கைத் திரைப்படம் எடுக்கத் தோதாக மாறி வருகிறதோ என்றும் தோன்றுகிறது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், இன்று வாரப் பத்திரிக்கைகளில் தொடர்கதை எனும் வெகுஜன எழுத்துவகை முற்றிலும் அழிந்துவிட்ட சூழலில், அவற்றுக்கும், தீவிர இலக்கிய படைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடும் அழிந்து கொண்டே வருகிறதோ என்று நினைக்க வைக்கிறது. உதாரணமாக, ஒரு மகரிஷிக்கும் அசோகமித்திரனுக்கும், ஒரு தாமரை மணாளனுக்கும் வண்ண நிலவனுக்குமான வித்தியாசத்தை, பேரைக் கொண்டல்லாது எழுத்தைக் கொண்டே கண்டுபிடிக்கும் நிலையில் இன்றைய இளம் வாசகர்கள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இந்த நாவல்கள், முன்பு ஓரளவு வெற்றிகரமாக எழுதிக்கொண்டிருந்த எஸ். பாலசுப்பிரமணியம் என்பவரின் எழுத்தை எனக்கு நினைவுபடுத்தியது. கோபாலகிருஷ்ணன், இதைவிட இன்னும் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். அவர் இடையில் சற்று நீண்ட இடைவெளி விட்டுவிட்டதால், இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்திலேயேகூட அவரது சில சிறுகதைகளின் தரத்தைக் கொண்டு நோக்குகையில், மீண்டும் அந்த பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.
இறுதியாக, இங்கு நம்பகத்தன்மை என்னும் ஒரு விஷயத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ, ஏன் இது போன்ற சம்பவங்கள் நடக்காதோ என்று கேட்பவர்களுக்கு, மார்க் ட்வெயினின் இந்த வரிகளைத் தருகிறேன்: “The only difference between reality and fiction is that fiction needs to be credible.” ஆம், நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதன் புனைவடிவம் ஒரு கலைப் படைப்பாக மாற வேண்டுமென்றால் நிஜமாக நடந்ததென வாசகனை நம்ப வைப்பதில் அது வெற்றி காண வேண்டும்.