தொகுப்பு _ சாராயக்கடை
ஆசிரியர் _ ரமேஷ் பிரேதன்
வெளியீடு _ உயிர்மை
மரக்கிளையில் தானாகக் கனிந்த கனியின் சுவையானது அவற்றைப் பதப்படுத்திக் கனியச்செய்வதைக் காட்டிலும் அலாதியானது. அதுபோல ஒரு படைப்பானது தன்னைத்தானே படைத்துக்கொள்வதென்பது தனிச்சிறப்பு. அத்தகைய தனித்துவம் ததும்பும் படைப்புகள் மட்டுமே கலை இலக்கிய உலகில் வெற்றிவாகை சூடுகின்றன.
கவிஞன் ரமேஷ் பிரேதனின் “சாராயக் கடை” கவிதைத் தொகுப்பானது டிசம்பர் 2008 ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கையில் சாராயக்கடை என்ற பெயர்ப்பலகை மாட்டப்பட்ட கூடத்திற்குள் நுழைவதைப் போலிருந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த புதுச்சேரி நிலத்தில் அயோக்கியன், காமுகன், பயங்கரவாதி எனப் பெயர் பெற்ற ஒருவனுக்குள்ளிருந்து எழும் கூக்குரல்களும், கூச்சல்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு வாய்த்த சூழியல் அனுபவங்களின் கருத்து சாரங்கள் மற்றும் தனது கற்பனை வளம் ஆகியவற்றைக் கொண்டு உருவமைக்கப்பட்ட இத்தொகுப்பானது வாசகருக்கு வேண்டுமட்டும் நனையக் கிடைத்த சாராயச் சாரலென திருப்தி கொள்ளலாம்.
சாராய வாசனை பிடிக்காதவர்களுக்கு அதை நெடியாகத்தான் நுகர இயலும். மாறாக, பருகிப் பழக்கப்பட்டவருக்கோ அது அமிர்தம். ஒரு படைப்பு எவ்வாறு தன்னைத்தானே படைத்துக்கொள்கிறதோ அதுபோல் இத்தொகுப்பில் பாரபட்சம் எதுவுமின்றி சாராயம் தன்னைத்தானே எதார்த்தமாக எழுதிக் கொண்டுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஒவ்வொரு கவிதையாய் உள்வாங்குகையில் மனம் ஒருவித உச்சகட்டத் தாக்கத்திற்கு உள்ளாகிறது. கவிஞர், சிந்தனையை அதன் போக்கில் ஓடவிட்டு தன் சார்ந்த அவலங்களையும், ஓலங்களையும், வலிகளையும் எவ்வித நெருடலுமின்றி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். தனது தவிர்க்க இயலாத அனுபவங்களைத் திரட்டி ஒரு நிதானப்பட்ட எழுத்தினை வாசகர்களுக்கு வாசிக்கத் தந்துள்ளார்.
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிக்கனத்துடன் ஒருவித அழகியலோடும், பொருட்செறிவோடும் புனைவு பெற்றிருப்பதாலும், எளிமையான மொழி மற்றும் சொற்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாலும் கவிதைக் களத்தில் சஞ்சரிக்கும் உத்தியானது இங்கு பாந்தமாகக் கையாளப்பட்டிருப்பதாகக் குறிப்பிடலாம். இவரது கவிதைகளில் எதார்த்தங்களும், எதார்த்தத்தை மீறிய அணுகுமுறைகளும், எதார்த்தத் தத்துவங்களும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.
oOo
ஒரு பிரெஞ்சு ஆதிக்கச் சமூகத்தில் பாலின வேறுபாடு எதுவுமின்றி அதிகப்படியான வயது வித்தியாசத்துடன் கூடிய பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு நிர்பந்திக்கப்படுகிற ஒரு பதின்வயதுப் பாலகனின் உளக்குமுறல்களின் பிரதிபலிப்போடு துவங்குகிறது தொகுப்பின் முதற்கவிதையான “சாக்லேட் நகரம்”.
“………………….
எனக்குப் பன்னிரண்டு வயது
என் அம்மா வீட்டுவேலை செய்துவரும்
வெள்ளைக்காரப் பெண்மணிக்கோ
நாற்பது வயது
விதவையா விவாகரத்து ஆனவரா
ஞாபகமில்லை
இரவில் என்னை வீட்டோடு வைத்துக்கொள்வார்
…………………………………
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
ஒரு வெள்ளைக்காரக் கிழவனால் புணரப்பட்டேன்
ஒரு வாரத்திற்கும் மேல்
பின்புறத்தில் வலியிருந்தது
பெரிய பிரெஞ்சு சாக்லேட்டைக் கொடுத்தார்
எனது பதின் பருவத்தில் என்னை
பிரான்சுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி
அறுபது வயது மதிக்கத்தக்க
வெள்ளைக்காரக் கிழவி
படாதபாடுபடுத்தினார்
எனது முகத்தில் அவரின்
மூத்திரவாடை எந்நேரமும் கமழும்
…………………………………………”
அனைத்து சீவராசிகளும் இயல்பூக்கத்தின் காரணமாகவோ அல்லது தீவிர மன அழுத்தத்தின் தாக்குதலிலிருந்து கூடுமானவரை விரைந்து விடுபடவோ அவ்வப்போது புணர்வில் ஐக்கியமாவது அவசியமாகிறது. ஒரு மனிதன் தன் வயிற்றுப் பசிக்கென புணர்ச்சி கொள்வதென்பது தவிர்க்க இயலாத நிகழ்வாகிவிடுகையில் அவன் தன் மனதை அதற்கென வலிந்து பழக்கிக்கொள்ளத் துணிந்துவிடுகிறான்.
மேலும் தன் பதின் வயதைப் பசியின்றி கடத்துவதற்கு இடப்புறம் மட்டும் வளரும் மார்பும், அச்சிறு வயதிலேயே அளவுமீறிய வளர்ச்சியுடைய அவனது குறியுமே காரணமாக அமைவதென்பது எவ்வளவு பரிதாபத்திற்குரியது! அத்தகையதொரு வாழ்வை ஏற்றுக்கொண்டு தனது நாட்களைக் கடத்தும் அவனது மனநிலையின் ஸ்பரிசங்களை கவிதை வரிகள் நம்முள் இயல்பாக கடத்துகின்றன. தனது வாழ்வின் அடிமைத்தனத்தையும், தான் நேசிக்கும் வெள்ளைப் பெண் தனது காதலை நிராகரிக்க அவனது கறுப்புநிறமே காரணமெனும் உளப்பிரேமையினையும் பெருவலியுடனும், பேரேக்கத்துடனும் எடுத்தியம்புவதாக வரிகள் அமையப்பெற்றுள்ளன. கவிதையில் காமத்தினூடே மென்மையான காதல் ஒருவித குமுறலோடு இழையோடுகிறது. இக்கவிதை முழுக்க அநேகக் காட்சிகள் நிர்வாண அடுக்கமைவு கொண்டவையாகவும், வக்கிரம் ததும்பும் ஆதிக்க மக்களின் பெருங்கூச்சல்களோடும் விரிகின்றன.
oOo
நினைவுகளை அசைபோடுவதென்பது மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இதுநாளதுவரை தொடர்கிறது. நமக்கு விருப்பமான சில நினைவுகளை அசைபோடுகையில் உடன் நமது கற்பனைகளும் சேர்ந்து அந்த இனிமையான நிமிடங்களை மேலும் களைகட்டச் செய்கின்றன. நமக்கு விருப்பமான நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே காலம் கடத்துகையில் வாழ்நாட்கள் வெகுவிரைவாகத் தீர்ந்துபோகின்றன அல்லது உற்சாகமாகக் கரைந்துவிடுகின்றன. மாறாக, நாம் வெறுக்கும் அல்லது ஒதுக்கும் நினைவுகள் அவ்வப்போது மேலெழும்புகையில் அவைகளின் தலைதட்டி அப்போதைக்கு மனக்குழியின் ஆழத்திற்குள் தள்ளும் உத்தியை நாம் திறம்பட தெரிந்துவைத்திருக்கிறோம் ஒருநாள் அவை விஸ்வரூபமெடுக்குமென அறிந்திருப்பினும்கூட. அப்படியானஅனுபவம் வாய்ந்த ஒரு இறந்தகால சிலிர்ப்பூட்டும் நிகழ்வுதான் இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது.
“வாழ்ந்த நினைவுகளை
அசைபோட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கிறான்
குறுக்காக ஒரு வெள்ளைப் பசு
சாலையைக் கடக்கிறது
உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க
சைக்கிள் கேரியரில்
வைக்கோல் திணித்த கன்றோடு
அவன்
வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி
வாழ்ந்துகொண்டிருக்கிறான்
சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்
பசுவைப் பின்தொடர்ந்து”
முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு வரியாய் வாசித்துக்கொண்டே வருகையில் ‘மடி கனக்கிறது’ என்ற வரியில் நமது மொத்த அசைவும் நின்றுபோகிறது. உண்மையில் உணர்வானது மனம் முழுக்க சுரந்து வழிகிறது. கன்றினை இழப்பது அல்லது பறிகொடுப்பதென்பது கிட்டத்தட்ட மடி அறுந்து விழுவது போலத்தான். ஒரு கன்றானது பிறப்பின்போதோ அல்லது பிறந்த சில தினங்களிலோ உயிர்துறக்க நேரும்போது அதனது தோல்களை உலரச்செய்து பதப்படுத்தி பின்பு அதனுள் வைக்கோல் திணிக்கப்பட்டு கிட்டத்தட்ட கன்றைப்போலவே ஒரு பொதி உருவாக்கப்பட்டு பால் கறக்கவென உபயோகப்படுத்தப்படும். பசுவின் தாகமும் சரி உரிமையாளரின் தாகமும் சரி இவ்வாறுதான் தீர்க்கப்படுகிறது. இவ்வாறான நினைவு நிச்சயம் வலிகூட்டக்கூடியதுதான். கடைசி இரு வரிகளில், நினைவுகளின் பின்னே அவன் ஓடும் நிகழ்வில் அவ்வளவு அழகாய்ப் பிறக்கிறது இக்கவிதை. நல்லதொரு உளவியற்பாங்குடனும் அளவான சொற்பிரயோகத்துடனும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள வரிகள் இவை. நமது வாழ்வில் மிகத் தரமான அழுத்தப்பொதிகளை அவ்வப்போது எண்ணிப்பார்க்கையில் இப்படியொரு சிறப்பில் யதார்த்த அடித்தளத்துடன் கூடிய நற்பாங்கான கவிதை அமையப்பெறுவது சாத்தியமாகிறது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கும்போதெல்லாம் முதலில் இக்கவிதையினை வாசித்தபிறகே மற்ற கவிதைகளில் கவனத்தினை அனுமதிக்கிறது மனம்.
oOo
“தாமரைப் பூக்குளம் அழகு
அழுகி அமிழும் பூவின்
மரணம் குறித்து யாருக்கும்
கவனமில்லை
புதிய பூ மறுநாள் காலை
குளம் தேடுகிறது
நேற்று செத்த மகளை”
ஒரு தாய் தன் குழந்தையைத் தொலைக்கவோ அல்லது பறிகொடுக்கவோ நேர்கையில் அவளது உள்ளத்தின் பதைபதைப்புகள் தாங்கவொண்ணாத மனவேதனையினை அவளது எஞ்சிய வாழ்நாள்களுக்கு அனிச்சையாய்க் கடத்தி விடுகிறது. கவிஞரது இக்கவிதையில் , அனுதினமும் காலையில் மலரும் தன் மகளைப் பறிகொடுத்தபடி தவிக்கும் குளமானது நிதானமாக ஒரு தாய் ஸ்தானத்தில் இருத்தப்படுகிறது. ஆக, குளத்தில் இருப்பது வெறும் தண்ணீரல்ல, முழுக்க முழுக்க கண்ணீர் என்று கதறும்படியான எண்ண அலைகள் மனதினுள் சுழன்றடிக்கின்றன. உண்மையில் வாடிய மலர்கள் பற்றி யாருக்கு என்ன கவலை? ஒருவேளை அம்மரமும், மலரும் வேண்டுமானால் வருத்தப்படலாம்.
பொதுவாக நமது எண்ணங்களிலும் , செயல்களிலும் வாடிய மலர் என்பது குப்பையாகவோ அல்லது கழிவாகவோ ஒருவித எதார்த்தத்துடன் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கவிஞர் அம்மலரை ‘செத்த மகள்’ எனக் குறிப்பிடுகையில் அவை மட்டுமே நமது சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்து அதன்பின் பலவித கிளை ஓட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.
முதல் நான்கு வரிகள் மிகச் சாதாரணமாக இருப்பினும் தொடர்ந்து வரும் மூன்று வரிகள் வாசகரிடையே அசாதாரண கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. இக்கவிதையைப் பொறுத்தமட்டில் முதல் நான்கு வரிகள் கழிவு பெற்றிருப்பினும் கூட அடுத்ததான வரிகளில் தெளிவான மற்றும் ஆழமான புரிதலை உள்வாங்கியிருக்க இயலும். இறுதி மூன்று வரிகள் ஹைகூ வடிவில் தோற்றம் பெற்றிருப்பினும் ஹைகூவாகக் கருத இயலாது. இம்மூன்று வரிகளை எண்ணிக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறைந்துபோய் உட்கார்ந்திருக்கலாம். அது ஒரு வாசகனுக்குக் கிடைக்கும் பொன்னான நேரத்தைச் சார்ந்தது மட்டுமன்றி கவிதையினூடாகப் பயணிக்கவென அவனுக்கு வாய்க்கும் மனநிலையையும் பொறுத்தமைகிறது.
oOo
சர்வமும் சாராயமென்கிறார் கவிஞர்.
“மாமது போற்றுதும்” எனும் கவிதையின் இறுதியில், ஒரு தாய் தன் மகனிடம் கூறுவதாக, “அப்பாவைக் கலக்காமலேயே சாராயத்தால் உன்னைக் கருத்தரித்தேன்” எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இது சாராயத்தின் மீது தீராக்காதல் கொண்ட கவிதை என்று எண்ணத் தோன்றுகின்றதே தவிர இந்நிகழ்வு எப்படி சாத்தியம் என்றெல்லாம் ஆராயத் தோன்றவில்லை. இப்படியான சில புலகாங்கிதங்களை உள்வாங்க முடிகிறதே ஒழிய உணர்வுகளை முழுக்க முழுக்க வார்த்தைகளால் எடுத்தியம்ப இயலவில்லை.
“சாத்தானும் கந்தசாமியும்” எனத் தலைப்பிட்ட கவிதையானது புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எனும் சுவராஸ்யம் ததும்பும் சிறுகதையினை நினைவூட்டுகிறது. கதையில், குழந்தை கதாபாத்திரமான வள்ளி கடவுளைப் பார்த்து “ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?” என்று எழுப்பிய வினாவிற்கு ஆட்டவிதிகளைப் பற்றிய வர்ணனைகளை இக்கவிதை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் சாராயம் குடிப்பதற்கான ஆட்டநெறி.
ஆண்டானுக்கும், அடிமைக்குமிடையே அறம் ஒரு ஊறுகாய் மட்டையெனில் தோல்வியுற்ற நபருக்கென கடவுள் சாராயக்கடையில் ஊறுகாயோடு காத்திருப்பதெனும் கூற்றானது அறத்தோடு காத்திருப்பது என்றாகிறது. ஆனால்,ஒரு ஆட்டம் வெற்றியில் முடிந்தாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ பாடுபொருளான சாராயமே அறம் என்கிறது இத்தத்துவார்த்தக் கவிதை. இப்படியாக இவரின் பெரும்பான்மையான கவிதைகள் அயோக்கியனாக வாழத்தெரிந்த யோக்கியதை மட்டுமே பழகிக்கொண்டுள்ள ஒரு யோக்கியனின் கூற்றுகளாக ஒலிக்கின்றன. மேலும் எவ்வித போலித்தனமுமற்ற சுய பிதற்றல் இவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது.
இன்னும் இத்தொகுப்பில் ‘போகமார்க்கம்’, ‘பீர்பாட்டில்’, ‘சூன்யபோகம்’, ‘எலி’, ‘புறவழிச்சாலை’, ‘சிதை’ போன்றதலைப்புகளில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது.
’நத்தையின் வரலாறு’ எனும் தலைப்பிலமைந்த கவிதை தவிர்த்து பிரேதன், யவனிகா ஸ்ரீராம் , கரிகாலன், இத்தியாதி, இத்தியாதி பெயர்களை இடையீடாகக் கொண்டமைந்த கவிதைகள் வாசிப்பில் சற்று அயற்சியை ஏற்படுத்துகின்றன. புத்தக வாசிப்பென்பது இன்றியமையாத இக்காலகட்டத்தில் “நகர்வு” என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகவேதான் ஒரு வாசகன் , சமகால வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக எல்லா படைப்பாளிகளையும் வாசகர்களென்றோ, எல்லா வாசகர்களையும் படைப்பாளிகளென்றோ கூறிவிட இயலாது. ஒரு தரமான படைப்பாளி என்பவன் ஒரு தரமான வாசகனென்று உறுதியாகக் கருதலாம்.
ஒரு படைப்பாளியின் தனியொரு படைப்பை வாசிப்பதன் மூலம் அவரது எண்ண ஓட்டங்களின் மொத்த பரிமாணங்களையும் அளவீடு செய்வதென்பது இயலாத காரியம். அவரது மொத்த படைப்புகளின் ஆழங்களுக்குள் ஊடுருவுகையில் வாசகருக்கு ஒரு நூலளவு பிடிப்பு கிடைக்கப்பெறலாம். இருப்பினும் , நாம் வாசிக்கும் சில நூல்கள் நம் மனதின் உள்ளடுக்கில் தாக்கத்தினை உண்டுசெய்வதால் அவை பற்றி எழுதும் உந்துதல்கள் நம்முள் எழுவது இப்படியாக சாத்தியமாகிறது.