‘பதாகை’ இணையதளம் புனைவிலக்கியத்துக்கான தளமாக ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கதைகள், விமர்சன கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள் என புனைதலை மையமிட்டே இயங்கி வருகிறது. ‘பதாகை’யின் நோக்கம் பல்வகைப்பட்ட வாழ்வுப் புலங்களில் உருவாகும் தனிப்பார்வை, தனிக்குரல், தனியனுபவம் வெளிப்பட மைய இலக்கியப் போக்குக்கு வெளியே ஒரு தளம் அமைத்து கொடுத்தல் என்பதே. அவ்வகையில் கதைகளை வெறுமே வெளியிடாமல் அதன் உருவாக்கத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகிறது. வாராவாரம், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என வெவ்வேறு மாதிரி இயங்கி வந்தாலும் எப்படியோ தொடர்ந்து இயங்கி வருகிறது. வெ.கணேஷ், மு.வெங்கடேஷ், விஷால் ராஜா, சுனில் கிருஷ்ணன், அரிசங்கர் என பலரும் தங்கள் சிறுகதை தொகுப்புகள் பதிப்பிக்கப்படுவதற்கு முன் பதாகையில் எழுதியவர்கள்.
இந்நிலையில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே பதிப்பகம் துவங்கலாம் என்றொரு பேச்சு நிகழ்ந்தது. ஆனால் இதை யார் பொறுப்புடன் எடுத்து செய்வது என்பதில் குழப்பமும் தயக்கமும் இருந்ததால் இது தள்ளிச் சென்றது. மலேசிய இதழான வல்லினம் ‘யாவரும்’ பதிப்பகத்துடன் இணைந்து செயல்பட்ட விதம் ஒரு முன்மாதிரி. மேலும் நூல் தயாரிப்பில் நல்ல கவனம் அளித்து வளர்ந்து வரும் பதிப்பகமான ‘யாவரும்’ உடன் இணைந்து செயல்படுவதாக முடிவுக்கு வந்தோம். அவ்வகையில் இந்த ஆண்டு முதற்கட்டமாக மூன்று நூல்களை வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியிடவுள்ளோம்- எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’ (சிறுகதைகள்), சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘வெளிச்சமும் வெயிலும்’ (சிறுகதைகள்), சுனில் கிருஷ்ணனின் ‘வளரொளி’ (பதாகை இணையதளத்தில் ‘புதிய குரல்கள்’ பகுதியில் வெளிவந்த நேர்காணல்கள் மற்றும் மதிப்புரைகள்). ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று புத்தகங்களாவது கொண்டு வருவதே திட்டம். எழுத்தாளர் சிறப்பிதழ்களை இன்னும் சற்று விரிவாக்கி செம்மை செய்து கொண்டு வருவதும் ஒரு திட்டம்தான்.
‘பதாகை’க்கு தங்கள் படைப்புகளை தொடர்ந்து அளித்து இதை நடத்திய ஒவ்வொரு படைப்பாளிக்கும் இத்தருணத்தில் நன்றிகள். ‘பதாகை’ எழுத்தாளர்களின் படைப்புகள் நூல் வடிவிலும் கவனம் பெறும் என நம்புகிறோம். இந்த பயணத்தில் உடனிருக்கும் படைப்பாளிகள் மற்றும் வாசக நண்பர்களுக்கு நன்றிகள்.