பதாகை 26.01.2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜனவரி 2019 இல் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. பதாகை பல புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுவதோடு பல புதிய வகை சோதனை முயற்சிகளுக்கும் களம் அமைத்துத் தந்திருக்கிறது. இதை சந்தோஷத்தோடு நினைக்கும் நேரத்தில் எங்கள் பயணத்தின் செல்திசையிலும் உத்வேகத்திலும் கலைத்தரத்திலும் நிறைவடைந்திருக்கிறோமா எனும் சுய ஆய்வையும் செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். கண்டிப்பாக வாசிக்கும் சிலருக்கேனும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்யும்.
ஐந்தாண்டுகளாகக் கவிதைகளும், கதைகளும் வெளியிட்டு வருவதினால் எங்கள் தேர்வு அளவுகோள்களிலும், எழுதுபவர்களின் எழுத்துத் தரத்திலும், உங்கள் வாசிக்கும் பாங்கிலும் எவ்விதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன? எங்களைப் பொருத்தவரை எது கவிதை எனும் அழகியல் கேள்வியில் நாங்கள் குழப்பமான இடத்திலேயே இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. போலவே, ஒரு சில அபாரமான படைப்புகளைத் தவிர்த்தால், புனைவு எழுத்திலும் பதாகைக்கு வருபவற்றின் தரம் பெரிய அளவில் மாறியதாகத் தெரியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும் நாங்கள் யோசித்தவரை இங்கு ஒரு விமரிசனச் சூழல் இல்லாதது ஒரு முக்கியமான காரணம் எனத் தோன்றியது.
விமரிசனம் என்பது எழுதுபவரின் எழுத்துத் தரத்தை மட்டும் பேசுவதாக இல்லாமல், வாசகரின் ரசனை அளவுகோலையும், ஆசிரியர்களின் தேர்வுத்தரத்தையும் மெருகேற்றும் விதமாக இருப்பது. இதைச் செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு படைப்பின் அருகிலும் அப்படைப்பு பற்றிய விமர்சனக் கருத்தை பதாகை மின்புத்தகத்தில் பதிய நினைக்கிறோம். ஆசிரியர் குழுவினர் மட்டும் இதை எழுதுவார்கள் என்பதில்லை, நண்பர்கள் நீங்களும் எழுதலாம். நிறைகுறைகளைத் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டலாம். “இவரெல்லாம் ஏன் எழுத வேண்டும்?”, “இதெல்லாம் ஒரு கதையா?” என்றெல்லாம் எழுதுபவரையோ, எழுத்தின் கருத்து நிலையையோ தனிப்பட்ட முறையில் வசையாடாமல் இருக்கும்வரை எல்லா வாசிப்பும் இலக்கியத்தை மேம்படுத்தக்கூடியதே என்பது எங்கள் அபிப்ராயம். அதனால் அவையெல்லாம் அவசியமும்கூட. பெரும்பாலும் நண்பர்களின் படைப்புகளே விமரிசிக்கப்படும் என்பதால் அனைத்தும் பெயரில்லாமல் வெளியிடப்படும், எழுதியவர் பெயர் விபரம் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது.
பதாகையில் தேர்வாகும் படைப்புகள் இனி ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கி அடுத்த மாதத்தின் 10ம் தேதி வரை அவ்வப்போது இடுகையிடப்படும். பின்னர் பத்து நாட்கள் சென்றபின் விமரிசனக் குறிப்புடன் 20ம் தேதி மின்புத்தக வடிவில் தொகுக்கப்படும்.
பதாகை டிசம்பர் 2018 மின்னூல் தரவிறக்கம் செய்ய: