“நைட் பூரா இருக்கணுமா”
“..”
“பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா”
“..”
அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது கையில் குடை. மழையால்தான் இவன் வர தாமதமாகிறது என்று எண்ணியிருந்தாள். ஏழேகாலுக்கு மேல் அவனுக்குத் தாமதாமாவதில்லை, அதிகபட்சம் எட்டரை, ஒன்பது, அதையும் முன்கூட்டியே சொல்லிவிடுவான். இப்போது போன் செய்து இரவு முழுதும் வர முடியாது என்கிறான்.
அறையை விட்டு வெளியே வந்தவள் அர்ஜுனை சாப்பிட அழைத்தாள். “அப்பா என்னமா இன்னும் வரலை,” என்று கேட்டவனிடம், “வர மாட்டா,” என்றாள். “அஸ்த்து மாதிரி பேசாதடி,” என்பாள் பாட்டி. “இன்னிக்கு நைட் வர மாட்டா, ஆபிஸ்ல வேலை இருக்காம்”. சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னறைக்குச் சென்றான் அர்ஜுன். அடுத்த வருடம் பத்தாவது, ட்யூஷனுக்குச் செல்ல ஆரம்பித்து விடுவான். வீடு அவன் உண்ணும், உறங்கும் இடமாக மாறி விடும்.
வெளிக்கதவைப் பூட்டியபின் ஜன்னல்கள் சரியாக சாத்தப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்தாள். அபார்ட்மென்ட்டிற்கு செக்யுரிட்டி உண்டு, ஆனால் கிட்டத்தட்ட அறுபது வயது மதிக்கத்தக்க ஆசாமி. கடைசியாக இந்த வீட்டில் எப்போது தனியாகத் தூங்கினோம், சமையலறை விளக்கை அணைத்தாள். ஆயிரத்தி முன்னூற்றி ஐம்பது சதுர அடி, மூன்று படுக்கையறை -அதில் மிகச் சிறியது அர்ஜுனுக்கு. ஒன்றை உபயோகிக்க யாரும் இல்லை. ஹால், சமையலறை. அர்ஜுன் பிறந்த மறுவருடம் வாங்கிய வீடு, அப்போது பேறு கால விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். தன் சேமிப்பிலிருந்து ஏழு லட்சம் கொடுத்தாள். ஏழா, ஐந்தா? அவனும் தன் பங்கிற்கு ஒரு தொகையை தந்தான். ஈ.எம்.ஐயை அவன்தான் இத்தனை வருடங்களாக கட்டி வருகிறான். இன்னும் எத்தனை வருடங்கள் லோன் கட்ட வேண்டும் என்பது அவனுக்குத்தான் தெரியும். இரண்டு வருடம் முன்பு நான்கு லட்சம் பார்ட் பேமெண்ட் செய்யப் போவதாகச் சொன்னவன் செய்தானா?
அறைக்கு வந்தவள் விளக்கைப் போடாமல் படுக்கையின் மீதமர்ந்து அவனுக்கு இரு முறை அழைப்பு விடுத்தாள், பின் சாப்பிட்டாயிற்றா என்று வாட்ஸாப் செய்தி. அதற்கும் பதில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து பார்த்தாள், மெசேஜை அவன் இன்னும் பார்க்கவேயில்லை. ஒன்பதரை மணி, இப்போதும் அவன் பார்க்கவில்லை. ஜன்னலருகே சென்றாள். தெருவில் இன்னும் நடமாட்டமிருந்தது, ஜன்னல் திரைச் சீலையை போடாமல் திரும்பி வந்து படுத்தவள், தெருவில் செல்லும் வண்டிகளின் ஹெட்லைட் ஒளி அறையின் சுவற்றில் பட்டு, அந்த ஒளியில் தெரிந்த மின்விசிறியின் ஏழெட்டு கைகளை பார்த்தபடி உறங்கிப் போனாள்.
oOo
காலை ஐந்தரை மணிக்கு அவள் விடுத்த அழைப்புக்கும், அனுப்பிய வாட்ஸாப் கேள்விகளுக்கும் பதில் இல்லை, நேற்று அனுப்பிய செய்திகளையே அவன் இன்னும் பார்க்கவில்லை. ஏழு மணிக்கு திரும்பியவனிடம் “என்னாச்சு நேத்து?” என்று அவள் கேட்க, “வேல இருந்தது,” என்று மட்டும் கூறினான். இட்லி குக்கரை ஏற்றிவிட்டு அறைக்குள் வந்தவள் குளித்து முடித்து உடலைத் துவட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்து, “ஆபிஸா போறீங்க?” என்றாள்.
“வேறெங்க”
“இப்பத் தான வந்தீங்க”
“திருப்பி எட்டு, எட்டரைக்காவது கெளம்பனும்”
“நேத்து, இன்னிக்கும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணேன், மெசேஜ் அனுப்பினேன்”
உள்ளாடையை அணிந்து, முதலில் இடுப்புப் பகுதியின் இலாஸ்டிக்கை விரித்து நீவி விட்டுக் கொண்ட பின், விதைப் பகுதியை சரி செய்து கொண்டான். தொடையுடன் பிருஷ்டம் இணையும் இடம் மட்டும் அவனுடையை மாநிறத்தை விட சற்று கருப்பாக இருந்தது. திருமணமான முதல் ஓரிரு வாரத்திற்கு இருவருமே மற்றவர் முன் உடை மாற்ற கூச்சப்பட்டார்கள் .இவளுக்குதான் முதலில் அவன் முன் அரை, முழு நிர்வாணம் பழக்கமானது.
“சாப்டுட்டுதான கெளம்புவீங்க”
தலையசைத்தான்.
எட்டு மணிக்கு அர்ஜுனுடன் அவனும் கிளம்பியபின் வெளியே சாலையைப் பார்த்தபடி சாப்பிட்டு முடித்தாள். ஒன்பது மணிக்கு தூங்கச் சென்ற தெரு இனி மூன்றரை, நாலு மணிக்கு பள்ளி விட்டு குழந்தைகள் திரும்பும்போதுதான் விழிக்கும். ஆபிஸ் சென்று விட்டானா என்று கேட்க அலைபேசியை எடுத்தவள் அதை படுக்கையின் மீது வைத்தாள். ஐடியில் வேலை பார்ப்பவர்கள்தான் நாள் முழுவதும் வேலை பார்ப்பார்கள். இவனுக்கு இரவு முழுதும் அலுவலகத்தில் தங்கும்படி என்ன வேலை வந்திருக்கும்? தன்னிடம் சொல்லியிருக்கலாம், நிறைய விஷயங்களை அவன் பகிர்ந்து கொள்வதில்லை. என்ன சம்பளம் என்று தெரியாது, திருமணத்தின்போது நாற்பதாயிரம் என்று அவன் வீட்டில் சொன்னார்கள், இப்போது எவ்வளவு வாங்குகிறானோ? நேற்று ஏன் அலுவலகத்திலேயே தங்க வேண்டி வந்தது என்று என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.
மாலை எப்போதும் போல் ஏழு மணிக்கே திரும்பினான். கதவைத் திறந்தவள் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குச் சென்றாள். உடை மாற்றிக் கொண்டு வந்தவன் “என்ன டின்னர்” என்று கேட்டதற்கு திரும்பாமல் பதில் சொன்னாள். சில கணங்கள் நின்றிருந்தவன், ஈயச் சொம்பின் மீதிருந்த தட்டை எடுத்து ரசத்தை முகர்ந்தபின் “நல்ல வாசனை, என்ன ஒடம்பு சரியில்லையா” என்று அவள் பின்னால் அருகில் நின்று கேட்டான். இல்லையென்று தலையசைத்தவளிடம் “வந்தவுடன கிச்சனுக்கு வந்துட்ட” என்றான். “பாதில விட்டுட்டா வர முடியும்”.
சாப்பிட்டபின் மூவரும் அன்றைய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்க, அவன் எப்போதும் போல் அவற்றைக் குறித்த விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தான். விளையாட்டுச் செய்திகள் ஆரம்பித்தபோது உள்ளறைக்குச் சென்றாள். ஒரு விஷயத்தைப் பற்றி தனக்கு எந்தளவுக்கு தெரியும் என்ற பிரக்ஞை கொஞ்சம்கூட இல்லாமல் எல்லாவற்றைப் பற்றியும் தீர்ப்பு சொல்லிவிட வேண்டியது. அவை முட்டாள்தனமானவை என்று தெரிந்திருந்தும் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கிறேன் இத்தனை காலமாக. அதனால்தான் அவன் இப்போது அடல்ட்ரி குறித்த தீர்ப்பைப் பற்றிய தன்னுடைய அறிவிலி கருத்தை, எந்த சங்கோஜமும் இல்லாமல் முன்வைக்கிறான். அவன் குரலைக் கேட்டபடி அங்கு அமர்ந்திருப்பதற்கு இப்படி இருளில் தெருவில் செல்லும் வாகனங்களின் ஒலி எவ்வளவோ மேல்.
இவளுக்கு சமகால நிகழ்வுகளில் எப்போதுமே அக்கறை இருந்ததில்லை, நான் ஏதாவது சொன்னால் அதை நேர்மாறாக புரிந்து கொள்வாள் அல்லது எதுவும் பேசாமல் இருப்பாள். சென்ஸ் ஆப் ஹுமர் கிடையாது, எதையும் மேலோட்டமாக புரிந்து கொண்டு அதிலேயே பிடி கொடுக்காமல் இருப்பது.
ஸ்டெப்பியை விட செரீனா சிறந்த வீராங்கனை என்று இவன் சொல்வது உள்ளார்ந்த கருத்து என்றாலாவது அதைப் பற்றி உரையாடலாம். இவன் செலஸ் ரசிகன், என்னமோ ஸ்டெபி ஆள் வைத்து செலஸை தோளில் கத்தியால் குத்தியது போல் பேசுவான், இப்போது ஸ்டெபியை கீழ் இறக்க செரீனா ஒரு கருவி.
oOo
“என்னடி பண்ணிட்டிருக்க?” அலைபேசியில் அழைத்த மேரி கேட்டாள்.
“நானா, ஒன்னப் பத்தியே தாண்டி நெனச்சிக்கிட்டிருக்கேன்”
“அப்படியாடி”
வேலைக்கு முதன் முதலில் சேர்ந்தபோது கிடைத்த முதல் தோழி மேரி. அடுத்தடுத்த இருக்கைகளில் பணி. ஷிப்ட் முறை வந்தபோது ஒரே நேரத்தை இருவரும் கேட்டு ஒன்றாகச் சென்று வந்தார்கள்.
“இப்பவும் சிவா ஆபிஸ்லதான்டி வேல பார்க்கறேன்”. இவள் வேலையை விட்ட சில வருடங்களுக்குப் பின் மேரி ப்ரீலான்சிங் முறைக்கு மாறும்போது “டிவோர்ஸின்னா ஒரு நக்கல், வழிசல் இருக்குடி, ப்ரீலான்சிங்தான் போலான்னு இருக்கேன்” என்று புதுச்சேரியின் இரு பெருநிறுவனங்களில் வேலையை விட்டபின் கூறினாள்.
“அப்பறம் பேசறேண்டி”. போனைக் கட் செய்தாள் மேரி. வேலையை விட்டபோது வாங்கிக்கொண்டிருந்த இருபத்தி ரெண்டாயிரம் ரூபாய் இப்போது இருமடங்காயிருக்கக் கூடும். மகன் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் வேலையிலிருந்து நின்று விடுவதாகக் கூறியதற்கு அவன் தடையேதும் சொல்லாததை என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பதாக எண்ணியிருந்தது தவறு. ஏன் இந்த மாதம் அதிகப் பணம் தேவைப்படுகிறது, இது வீண் விரயம் என்று அவன் சொல்வதில்லை என்றாலும், இன்று தினசரி செலவுகளுக்குக்கூட அவனை எதிர்ப்பார்த்திருக்கும் சூழலை அப்போதே அவன் யூகித்திருக்கக்கூடும்.
“சண்டே ஷாப்பிங் போலாம்,” என்று அவன் கூறியதற்கு, “எனக்கெதுக்கு வீட்லதான் இருக்கேன், போன தீபாவளிக்கு வாங்கினதையே நாலஞ்சு வாட்டிக்கு மேல போட்டுக்கல” என்றாள்.
“வெளில போகாமையேவா இருக்க, நாம எப்பவும் வாங்கறதுதானே”.
“இந்த வருஷம் என்னமோ வேணாம்னு தோணுது, நீங்களும் அவனும் வாங்கிக்குங்க”
இப்போதிருக்கும் உடைகளை இன்னும் எத்தனை மாதங்களுக்கு இவள் உபயோகப்படுத்த முடியும், இறுதியில் என்னிடம்தான் வர வேண்டும்.
அவன் உடலசைகிறது. அடுத்து மூச்சுக் காற்று கழுத்தில் படும், பாதி விரைத்த குறியின் அழுத்தம் பின்தொடையிலோ, புட்டத்திலோ அழுத்தும். தூங்குவது போல் இருந்து விடலாம் அல்லது விருப்பமில்லை என்று சொல்லலாம். முட்டை வெடிக்கும் தினம் என்று சொன்னால் கடைசியாக பீரியட்ஸ் வந்த தேதியை வைத்து நான் சொல்வது பொய் என்று புரிந்து கொள்வானா? தயங்குகிறான், இன்னும் சில நொடிகள் இப்படியே இருந்தால் திரும்பிப் படுத்துக் கொள்வான். சற்று அசைந்து உடலில் கீழ் பகுதியை மட்டும் நகர்த்தியவளின், தோளை அவன் தொட, திரும்பினாள்.
உறங்கிவிட்டான். கல்லூரியில் படிக்கும்போது நாலைந்து தோழிகளுடன் காயத்ரியின் வீட்டிற்குச் சென்றபோது சில பார்ன் இதழ்களை காட்டினாள். கட்டுமஸ்தான உடல்கள், நீண்ட, தடிமனான குறிகள். தன் இடுப்பை இரு தொடைகளாலும் இறுக்கியிருந்த பெண்ணின் மீது முழுதும் படர்ந்திருந்த ஆணின் புட்டத்தை தொட்டு “என்னடி பன் மாதிரி இருக்கு,” என்று கேட்ட வெண்ணிலா, “ஒத்தனுக்கும் மீசை இல்ல, மழுமழுன்னு இருக்கானுங்க,” என்று சலித்துக் கொண்ட ஜெரால்டின். வெள்ளையினப் பெண்களுடன் கலவியில் ஈடுபடும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் புகைப்படங்கள்தான் இவளை அதிகம் ஈர்த்தன. திரும்பி அவனை எழுப்பலாம், இரவில் இரண்டு மூன்று முறை கலவியில் ஈடுபட்டிருக்கிறார்கள், இப்போதெல்லாம் மாதம் நாலைந்து முறை கலவி நிகழக்கூடும், கணக்கு வைத்துக்கொள்வதில்லை.
அன்று புகைப்படங்களில் பார்த்தவர்களைப் போல் கட்டுடல் இல்லையென்றாலும் தொப்பை விழவில்லை. அவர்களைவிட நீளத்தில் சிறிய, உள்ளங்கையை நிரப்பும் தடிமனுள்ள குறி. முயக்கத்தில் தேர்ந்தவன். ஆனால் வேறொரு ஆணுடன் கலவி கொண்டிராதபோது எப்படி சொல்ல முடியும்? அன்று பார்த்த ஒரு போட்டோவில் பெண்ணை தூக்கி நின்றபடி புணர்ந்து கொண்டிருந்தவன் போல் இவனால் இயங்க முடியாது. கால்களை உடலுடன் குறுக்கிக் கொண்டாள். அன்றுதான் காயத்ரி அனைவருக்கும் ஒரு சிப் வைன் கொடுத்தாள், கசப்பாக, குமட்டிக் கொண்டு வந்தது. “வீட்ல யாரும் இல்லைன்னு ரொம்ப ஆடாதடி,” என்றாள் அவள் தங்கை. இது பற்றி சொன்னால் என்ன செய்வான்?
சமையலறை விளக்கை அணைத்துவிட்டு படுக்கையறைக்குச் சென்று விட்டாள். டிவியை அணைத்துவிட்டு பெட்ரூம் கதவு வரை சென்றவன் திரும்பி ஹாலுக்கு வந்து, தொலைகாட்சியின் திரையில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான். நேற்று அவளருகே சென்றது மிகப் பெரிய கேவலம், பழகிய செய்கைகளை அறியாதவள் போல் படுத்திருந்து பின்பு திரும்புகிறாள். செக்ஸ் மூலம் என்னை வீழ்த்த நினைக்கிறாள். எவனுக்கு வேண்டும், எல்லா பெண்களிடம் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கிறது. அவள் முயங்கியதில் ஒரு அலட்சியம் இருந்ததோ? இனி அவளாக அழைத்தால் கூட கலவியில் ஈடுபடக் கூடாது. இன்னொரு படுக்கையறையை உபயோகிக்கலாம் என்றால், அர்ஜுனுக்கு விவரம் புரியும் வயது வந்து விட்டது. மொபைலில் நேரத்தை பார்த்தான், அவள் உள்ளே சென்று அரை மணி நேரமிருக்கும், தூங்கியிருப்பாள். எழுந்தான். அவன் கதவைத் திறக்கும் சத்தத்தை கேட்டவள், அருகில் அவன் உடல் படுக்க கர்லான் பெட் எழும்பி அமிழ்வதையும் உணர்ந்தாள். கண்களை மூடியபடி இருவரும் விழித்திருந்தார்கள்.
oOo
கடற்கரைக்கு அருகாமையில் உள்ள பார்க்கின் முன்பு பைக்கை நிறுத்தினான். எப்போதும் போல்தான் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தவன் இந்நேரம் இந்திரா காந்தி சிக்னலை அடைந்திருக்க வேண்டும். வண்டியை மீண்டும் இயக்கி முன்னும் பின்னுமாக நகர்த்தியபின் முடிவெடுத்து பார்க் செய்தவன் கடற்கரையை நோக்கி நடந்தான். பல ஆண்டுகளாக உள்ளே சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்திருக்கும் சட்டசபை வளாகம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதிகள். அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று முன்பு ஆசைப்பட்டிருக்கிறான். காந்தி சிலை வரை நடந்தவன் பீச்சிற்கு வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
“பெஹேன்சோத்” என்று அந்த வடக்கத்திய பெண் முணுமுணுப்பாக திட்டும் ஆண் அவன் கணவனாக இருக்க வேண்டும். அவன் இவள் பக்கம் திரும்பவும், அருகிலிருக்கும் சிறுமியிடம் ஏதோ பேச ஆரம்பிக்கிறாள். முதல் முறை பெண் பார்க்கச் சென்றவளுக்கும் வடக்கதியவளைப் போல பருத்த மார்பகங்கள்தான். ஜாதகமும் பொருந்தி, அவளுடனான பத்து நிமிட தனிப் பேச்சும் பிசிறில்லாமல் சென்ற பின்பும், அந்த இடம் தகையவில்லை. கை புணர்ச்சியின்போது அந்த பெண்ணை தன்னுள் தோற்றுவித்துக் கொண்டிருந்தவன் திருமணம் முடித்து, கலவி சுரப்புக்களின் மணமும், இவனுடையை எச்சில் வாசமும் ஊறியிருக்கும் மனைவியின் சராசரி அளவிலான மார்பகங்களை உதடுகளால் வருடும்போது அவை அப்பெண்ணினுடையவையாக மாறி மீண்டும் முயங்க அழைக்கும். பெயர் மறந்து போய்விட்டவளின் துணைதான் இனி… ஆனால் திடீரென்று பாத்ரூமில் அதிக நேரம் செலவிட்டால் இவளுக்கு சந்தேகம் வரலாம், பதினான்கு வயதான மகனுடைய தந்தை செய்யக்கூடியதா இது? சக பணியாளர் சிலாகித்து தந்த நூலில் ‘நாற்பது வயதிலும் மாஸ்ட்ருபேட்டிங் பாஸ்டர்ட்ஸ்’ என்று படித்தது என்னளவில் உண்மையாகி விடும். வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டிருந்தவனிடம் “சாப்பாடு எடுத்து வெக்கட்டா?” என்றாள். “நீங்க?”’, “நாங்க சாப்டாச்சு”, “நா வெளிலயே சாப்டுட்டேன்”.
“நான் லஞ்ச் வெளிலையே பார்த்துக்கறேன்,” என்று கூறிவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பினான். பீச்சில் காலை நடை செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன், ஐநூறு ரூபாய்க்கு என்ன சுவையென்றே பிடிபடாத உணவை உண்டபின் அலுவலகம் சென்றான். மாலை கடற்கரையில் சுயமைதுனத்தின் சாத்தியக் கூறுகள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எந்த விடையும் கிட்டவில்லை. “சாப்பாடு வெக்கட்டுமா?” என்று கேட்டவளைப் பார்த்து தலையாட்டியவன், அவள் முகத்தை கவனித்தான். எப்போதும் போல்தான் இருக்கிறாள். இல்லை, இது நடிப்பு, உள்ளூர நான் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் வெளியே சாப்பிட பொருளாதாரமும், உடலும் ஒத்துழைக்காது என்பது அவளுக்கும் தெரியுமென்பதால் எழும் ஏளனம். ஒரு முறை மட்டும் சோற்றைப் போட்டு சாப்பிட்டபின் எழுந்து கொண்டவனிடம் எதுவும் கேட்காதவள், அவன் கையலம்பிக் கொண்டிருந்தபோது “நா மாடிக்கு போறேன், கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்,” என்றாள். அடுத்த நாள் இரவு வீட்டிற்குத் திரும்பியவன், “நானே போட்டு சாப்டுக்கறேன்,” என்றான். மறுநாள் அலுவலகம் முடித்து அவன் வந்தபோது அவள் மாடிக்குச் சென்று விட்டிருந்தாள்.
மாடியிலிருந்து முன்பு தெளிவாக காண முடிந்த ஆலமரம், அதனையொட்டிய ரெயில்வே ட்ராக், அதன் மறுபுறமுள்ள – மார்கழி பனியில் அசைவின்றி ஓவியம் போல் தெரியும் – தென்னை மர வரிசை எல்லாம் இப்போது வீடுகளால் மறைக்கப்பட்டு ஆலமரத்தின் உச்சியை மட்டும் காண முடிகிறது. குடி வந்த புதிதில் பம்பாய்க்கு போகும் ரெயில் ஏழு மணிக்கு இந்த இடத்தை கடக்கும்போது எழுப்பும் ஒலியால் விழித்த, எந்த அவசரமும் இன்றி மெதுவாக முயங்கிய ஞாயிறு காலைகள், அர்ஜுன் பிறப்பதற்கு பின் நிறைய முறை வந்தன. இப்போது இந்தப் பகுதி மொத்தமும் மின்சார இணைப்பு துண்டிக்கபட்டால் மட்டுமே ரயில் செல்லுமொலி கேட்கிறது.
மேரியை அழைத்தாள். “ரொம்ப வருஷம் ஆயிடுச்சேடி, நெறய புது ப்ராசஸ் வந்திருக்கு,” என்ற மேரியிடம், “ப்ரூப் ரீடிங்கூட ஓகேதாண்டி எனக்கு, அதுல என்ன சேஞ் இருக்கப் போகுது,” என்றாள்.
“அது என்ட்ரி லெவல் ஜாப்டி, நீ டீம் லீடா இருந்திருக்க, செட் ஆகாது”.
“அதெல்லாம் பிரச்சனையில்ல, ஒரு பேஜுக்கு என்ன தராங்க இப்ப”.
“பார்டி, பிப்டி இருக்கும், கண்டு பிடிக்கிற எர்ரர்ஸ பொறுத்து தான”
“அது போதுமடி”
“கேட்டுப்பாக்கறேன், ப்ரீலான்சிங் ஜாப் வாங்கி பண்ணலாம், ப்ரூப் ரீடிங் நீ வீட்லயே பண்ணலாம்”
“ஆபிஸ்கே வரேண்டி”
“ஏண்டி… எதாவது பிரச்சனையா”
“அதெல்லாம் இல்ல, வீட்லயே இருந்து இருந்து போர் அடிக்குது”
மேரி ஏதாவது ஏற்பாடு செய்வாள், அவள் இப்போது வேலை செய்யும் இடத்திலேயே கிடைத்தால் நல்லது. ஒவ்வொரு சிக்னலிலும் பச்சை விழுந்தபின் நின்றுகொண்டிருக்கும் வண்டிகளிலிருந்து எழும் நாராசமான ஒலிகூட வீட்டிலுள்ள மௌனத்தைவிட மென்மையானது. ஒரு நாள் இரவு முழுவதும் அலுவலகத்தில் சும்மாவேனும் தங்கிவிட்டு வர வேண்டும். இவனிடம் காரணம் சொல்லக் கூடாது. அன்றிரவு எதற்காக தங்கினான் என்று சொல்லத் தோன்றாதவனுக்கு என்னை கேட்க என்ன உரிமை? என்னிடம் மறைக்குமளவிற்கான விஷயம் எதுவும் இருக்க முடியாது.
மேரியுடன்தான் கேண்டீனுக்கு எப்போதும் செல்வாள். அங்கும் தன்னிடம் பேசிச் செல்பவர்களை கவனித்தபடி, “என்ட்டையா பேச வராங்க, ஒன்ன லுக் வுடனும் அதான்,” என்பாள் மேரி. பிறந்த நாளுக்கு அலுவலக காவலாளியிடம் பொம்மை கொடுத்தவன் யார் என்று இறுதி வரை இவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை “தெரியாது மேடம், இங்க இருந்தது,” என்று செக்யுரிட்டி மீண்டும் மீண்டும் சொன்னார். இவன்தான் சைட் அடித்ததைப் பற்றி சொல்லியிருக்கிறான். அதுதான் செய்ய இயலும், காதலிக்கிறேன் என்று ஒரு பெண்ணிடம் அப்போது சொல்லியிருக்கவோ, அடல்டரி தீர்ப்பைப் பற்றி கிண்டலடித்தாலும் இப்போது மணவுறவை தாண்டிய பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ, தைரியம் கிடையாது.
oOo
“ப்பா, பேப்பர்காரர் வந்திருக்கார்.” என்று மகன் சொன்னான். சென்ற மாதத்திற்கான பேப்பர் பணம் தந்த, பத்து பதினைந்து நிமிடங்களில் “ப்பா பால்காரர்”, அதன் பின் அபார்ட்மென்ட் மெயின்டெனன்ஸுக்காக முதல் தளத்தில் வசிக்கும் யுவராஜ். எப்போதும் முதல் அல்லது இரண்டாம் தேதி மாத செலவுக்கான பணத்தை கொடுத்து விடுபவன் இந்த மாதம் ஐந்தாம் தேதி வரை தரவில்லை. என்னிடம் கேட்பதற்கு பதில், அவர்களை ஞாயிறன்று வரச் சொல்லியிருக்கிறாள். திமிர் பிடித்த நாய், இத்தனை வருடம் என் பணத்தில் வாழ்ந்து விட்டு இப்போது ரோஷம் வருகிறது. மளிகை பொருட்கள் வாங்க என்னிடம்தான் எப்படியும் வர வேண்டும்,
புதன் காலை மலம் கழித்து விட்டு ப்ளஷ் செய்யும் போதுதான் கவனித்தான். வெஸ்டர்ன் டாய்லெட்டின் அடி விளிம்பில் மஞ்சள் நிறக் கோடுகள், மேற்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிகப்பு நிற மலத் துகள்கள். ஞாயிறன்று டாய்லெட்டை சுத்தம் செய்பவள் ஸ்ட்ரைக் செய்வதாக நினைக்கிறாள் போல். இவள் கருவுற்றிருந்தபோதும், குழந்தை பிறந்த ஒரு வருடம் வரைக்கும்கூட நான்தான் இதை செய்து வந்தேன். ஹார்ப்பிக்கை டாய்லெட்டினுள் ஊற்றியவன் பிரஷ்ஷை எடுத்தான்.
இப்படி அரைகுறையாக சுத்தம் செய்வதற்கு பாதி ஹார்பிக்கை வீணடித்திருப்பான். துணிகளை அடுக்கி வைத்தால் ஒரு வாரத்திற்கு மேல் நிலைப்பதில்லை, சட்டைகளுக்கு நடுவே ஜட்டி, பெர்முடாக்களுக்குள் சாக்ஸ் என்று எல்லாவற்றையும் மீண்டும் முறையாக அடுக்கி வைக்க மணி நேரம் ஆகிறது. அர்ஜுன் பாத்ரூமையும் சுத்தம் செய்வானா என்று அவனிடம் கேட்க வேண்டும்.
உடையணிந்து தயாராகிக் கொண்டிருந்தவனிடம், “ப்ரோவிஷன்ஸ் இன்னும் நாலஞ்சு நாள் தான் வரும்,” என்றாள். என்னாயிற்று இவளுடைய சுயமரியாதை, உடை வேண்டாமென்றவள் இதை மட்டும் கேட்கிறாள். ஷர்ட்டை டக் செய்து பெல்ட் போட்டுக்கொள்ளும் வரை எதுவும் சொல்லாதிருந்தவன், “நானே வாங்கிடட்டுமா” என்றபடி பர்ஸை பேண்டினுள் திணித்தபடி, அறையை விட்டு வெளியேற ஆரம்பிக்க, “உங்கிஷ்டம்”, என்றவள் சொன்னவுடன் திரும்பினான். என்னால் வாங்கி வர முடியாதென்று எண்ணும் அவளுடைய ஏளனப் பார்வை. தண்டச் சோறு உண்ணும்போதே இவ்வளவு அகங்காரம். “ஈவினிங் சொல்றேன்”
இடது காலில் சாக்ஸ் அணிந்த பின், ஷூவை எடுத்தான். திமிர் வழியும் இவள் முகத்தை சுவற்றில் வைத்துத் தேய்த்து, ஷூவினால் அடித்து வீட்டை விட்டு துரத்த வேண்டும். குக்கரிலிருந்து சோற்றை எடுத்து மேடையின் மீது வைத்தாள். அவ்வப்போது காய்கறி வாங்கி வருவதைத் தவிர என்ன தெரியும் இவனுக்கு. மாலை சொல்கிறானாம், எப்படியும் என்னிடம்தான் பணம் தருவான். அப்படியே இவன் மளிகைப் பொருட்கள் வாங்கினால் அன்றுடன் உலகம் அழிந்து விடும்.
டைனிங் டேபிள் மின்விசிறியின் கீழ் ஆற வைக்க, இடுக்கியில் சோற்றுப் பாத்திரத்தை பிடித்தபடி சமையலறையிலிருந்து வெளியே வரும்போது, ஒரு கையில் ஷூவும் மற்றொன்றில் சாக்ஸுமாக எதிரே இருந்த சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு நின்றாள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் சாக்ஸை மாற்றுவான், அவற்றை தோய்ப்பதற்காக எடுக்கும்போது குமட்டும். பெர்ஸனல் ஹைஜீன் என்பதே கிடையாது. இங்கிருந்தே அவன் மீது ஏனத்தை வீசலாம், அருகே சென்று சுடு சோற்றை கவிழ்த்தால் தரையில் கொஞ்சமும் சிந்தாது. இடுக்கியிலிருந்து நழுவிய பாத்திரத்தை இறுக்கிப் பிடித்தவள் நடக்க ஆரம்பித்தாள்.
மிக நுட்பமான சிறுகதை.படித்ததிலிருந்து மனதில் அசைப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.
அஜய் தொடந்து எழுதவேண்டும்.
அன்பும் வாழ்த்துகளும்.