அஜய். ஆர்

ஆயிரம் ஏக்கராக்கள்

– அஜய் ஆர். – 

ஒரு முதியவர் தன் சொத்துக்களை தன் மூன்று பெண்களுக்கிடையே பிரித்துத் தர முடிவு செய்ய, மூத்த இரு பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள, கடைசி மகள் அவ்வாறு செய்வதில்லை. அந்தப் பெண்ணை அவர் விலக்கி வைக்கிறார். ஷேக்ஸ்பியரை முழுமையான/ சுருக்க (abridged/original) பதிப்பில் படித்திருந்தவர்கள் இந்தச் சூழலை ‘King Lear’ கதையோடு இணைக்கலாம். ஆம், தன் நாட்டை இரு நன்றிகெட்ட பெண்களுக்கு கொடுத்து துன்பப்பட்ட லியரின் கதையை , ஸ்மைலி லியரின் இரு மூத்த பெண்களின் கோணத்தில் ‘A Thousand Acres’ நாவலில் எழுதியுள்ளார்.

லியராக இதில் லாரி குக். அவர் அரசரல்ல, அதற்கு மாறாக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரியவர். அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஜின்னியும் அடுத்த பெண் ரோசும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் அப்பாவுக்கு ஒத்தாசையாக பண்ணையில் வசிக்கிறார்கள்,. கடைசி பெண் கரோலின் ஒரு வக்கீல். அப்பாவைவிட்டுப் பிரிந்து வேறொரு ஊரில் இருக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் ஒரு நாளில் தன் நிலபுலன்களைப் பெண்களுக்குப் பங்கு பிரிப்பதாக லாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். ஜின்னியும் ரோசும் இதற்குச் சம்மதிக்கின்றனர். ஆனால் கரோலின் அதற்கு எதிராகக் குரலெழுப்புகிறாள். இதனால் லாரி தன் சொத்தில் கரோலினுக்கு உரிமையில்லை என்று அறிவிக்கிறார். இதையடுத்து தொடரும் நிகழ்வுகள் அனைவரின் வாழ்வையும் துயர் தோய்ந்ததாக மாற்றுகின்றன. நெருங்கிய உறவுகள் கடும் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு , குடும்பத்தினர் அனைவருமே வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுகின்றனர். (more…)

அதிகாரத்தின் ஆடுகளமாகும் உறவுகள்

– அஜய் ஆர். – 

அதிகாரம் என்பது நாட்டின் தலைவராகவோ, அல்லது வேறு உயர் பதவியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்கையை மாற்றும் சக்தியோடு இருப்பதோ, ஒரு இனக் குழு மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ மட்டும்தான் என்றில்லை. ‘சாதாரண மனிதர்களான’ நாம், நம் அன்றாட வாழ்க்கையில், நம்மையறியாமலேயே சக மனிதர் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம். பிள்ளைகளின் நன்மைக்காக என்று சொல்லி, படிப்பு முதல் திருமணம் வரை தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர், மனைவியின் உடை, பேச்சு, வேலைக்கு செல்லும் அவள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் கணவன், தன் உயரதிகாரியின் அதிகாரத்திற்கு கூழை கும்பிடு போட்டு, அந்தக் கோபத்தை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது காட்டுபவர் என அதிகாரம் எல்லா உறவுகளிலும் பரவி உள்ளது. (more…)

ரகசிய வரலாறு – டானா டார்ட்

– அஜய் ஆர். – 

tartt

டானா டார்ட்டின் முதல் நாவலான “ரகசிய வரலாறு” (The Secret History) தலைப்பை பார்த்தோ, பின்னட்டை ‘டயோனிசியச் சடங்குகள்’ (‘Dionysian rites’) என்று குறிப்பிடுவதைப் பார்த்து மர்மக்கதை என்றோ த்ரில்லர் என்றோ எண்ணினால் அது தவறாகும்.

ஆம், இந்த நாவலின் துவக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதைத் தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிவிட்ட, அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது, என்பதால் இந்த நாவலை ‘bildungsroman’ நாவல் என்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவதால், ‘Campus Novel’ என்றும் குறிப்பிடலாம். குற்றம், அதற்கான காரணம், அந்த குற்றம் எப்படி குற்றம் செய்தவர்களையே பாதிக்கிறது என்று பேசுவதால் உளவியலைப் பற்றிய நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் மட்டுமே பொருத்தப்படக் கூடிய நாவல் அல்ல இது. மர்மக் கதையை எதிர்பார்த்து இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாற்றமளிக்கும். (more…)

அதிநாயகர்களின் அந்திப்பொழுது – டெபோரா ஐஸன்பெர்க்

– அஜய் ஆர். – 

டெபோரா ஐஸன்பெர்க் கதைகள் சிறுகதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், அவை கால/ பக்க அளவில் நெடுங்கதைகளே. 30-50 பக்கங்கள் நீளும் கதைகள் என்பதால், ஓர் புள்ளியில் இருந்து ஆரம்பித்து நேர்கோட்டில் சென்று கச்சிதமாக முடியும் கதைகள் அல்ல இவை. ஒரு கதையில் பல இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். (more…)

உச்சத்தில் ஒரு கதவு: லோரி மோரின் A Gate at the Stairs

– அஜய் ஆர். – 

லோரி மோர் (Lorrie Moore) எழுதிய ‘A Gate at the Stairs’ நாவலின் ஆரம்ப பகுதியில், நாவலின் கதைசொல்லி டாஸி (Tassie), தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் தன் தம்பி ராபர்ட்டுடனான தன் உறவைப் பற்றி சொல்லும்போது, “in fact when I thought back to our many years together, he was, essentially, always nice to me,.. ” என்று முடிக்கிறார். ‘essentially’ , ‘nice’ என்ற இரு வார்த்தைகள்தான் இந்த வரியில் முக்கியம், பல ஆண்டு உறவின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் தந்து விடுகிறார். ஒருவருக்கொருவர் அதீத அன்போ, வெறுப்போ, போட்டி பொறமையோ (sibling rivalry) கொண்டுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லாமல், யதார்த்த அக்கா/ தம்பி உறவைச் சுட்டி செல்கிறார். முகத்திலறையும் சொற்விளையாட்டோ, புத்திசாலித்தனமோ இல்லாமல், வாசகனின் கவனத்திற்கு வர முனையாத உரைநடை நாவலின் முக்கிய அம்சம். பேச்சொலியில் வரும் ஏற்ற இறக்கங்கள், உரையாடலின் இடையே வரும் தயக்கங்கள், மௌனங்கள் மூலம் வாசகனுக்கு தெரிவிக்க வேண்டியதை நுட்பமாக சொல்லிச் செல்வது மோரின் பாணி. (more…)