ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு

வான்மதி செந்தில்வாணன்

தங்களது எழுத்துகளில் மேலோட்டமான கிளர்ச்சியினை கதை முழுக்க பரவலாக்கி வாசகர்களைத் தெளிவற்றதொரு மயக்கநிலையில் ஆழ்த்தும் படைப்பாளிகளுக்கு மத்தியில் பொதுப்பார்வையில் மிகவும் “கீழ்த்தரம்” என எண்ணக்கூடிய ஒரு சமூகத்தைத் தனது கதைக்கென தெரிவு செய்ததோடு ஒப்பனையற்ற எழுத்தினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பாளிகளுள் முதன்மையான ஆளுமையாக திகழ்கிறார் ஜி. நாகராஜன். இவர் ஒரு வழமையான எழுத்தாளர் அல்லர். இவருடைய கதாபாத்திரங்களும் வழமையானவை அல்ல. பெரும்பாலானோரால் ஒதுக்கப்பட்ட, பெரும்பாலானோர் எழுதத் தயங்கிய அல்லது எழுத மறுத்த ஒரு களத்தெரிவில்தான் வாசகர்களின் தரமான அபிமானத்தைச் சம்பாதித்துள்ளார். தனது தெரிவுக்களத்தில் வாழ்வியல் குறியீடுகளையும், யதார்த்த தத்துவங்களையும், செறிவான உள்ளடக்கங்களையும், தனித்தன்மையான வடிவமைப்பையும் தனக்கென சிறப்பான, ஆனால் எளிய, சத்தான, மொழியினைக் கையாண்டு திட்டமிட்ட எழுத்தினைச் செதுக்கியதன் மூலம் இலக்கியத்தில் வலுவான காலடித்தடம் பதித்துள்ளார்.

“நாளை மற்றுமொரு நாளே” நாவல் ஒரு மனிதனின் ஒரு நாளுடைய வாழ்வின் நினைவுகூர்தலின் அடிப்படையில் கதையாக்கம் பெற்றுள்ளது. நமக்கென அடுத்த நாளின் எந்த ஒரு காட்சியும் நாவலில் கிடையாது. ஆக, நமக்கான சிந்தனை, விரிவான, கட்டற்ற இயக்கம் கொண்டிருப்பினும் இருப்பதை மட்டுமே நாம் பேச அனுமதிக்கப்படுகிறோம். இந்நாவலில் தனித்தனி அத்தியாய பிரிவுகள் ஏதுமின்றி பற்பல கதைகள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு இறந்த மற்றும் நிகழ்கால நிகழ்வுகளென ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாய்க் கோர்க்கப்பட்டுள்ளன. வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒருவித வியப்பளிக்கும் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“குறத்தி முடுக்கு” க்ளாசிக் குறுநாவலாகட்டும், இந்நாவலாகட்டும், நீள் பக்கங்களுடையவை எனச் சொல்வதற்கு வாய்ப்பின்றி வாசிக்க வாசிக்க விரைவில் கரைந்துபோகும் பக்கங்களையே கொண்டுள்ளன.மேலும், எண்ணற்ற பல சிறப்பான சிறுகதைகளையும், ஒரு நல்ல நாவலையும் ஒருசேர வாசித்தது போலான திருப்தியுணர்வு மனதிற்குக் கிட்டுகிறது. ஒரு சுருள் நுனியில் தொங்கவிடப்பட்டிருக்கும் குரங்கு பொம்மையானது பேருந்தின் நகர்விற்கேற்ப அசைவுறுவதுபோல தமது கதையமைப்பின் மூலம் வாசகர் மனதைத் திடமாகப் பற்றியபடி உலுக்கிவிடுகிறார். பேருந்து நின்றபிறகும்கூட, பொம்மையிடம் சன்னமான அசைவு இருப்பதைப்போல வாசித்து முடித்த பிறகான மனம் கதையின் கூறுகளை அசை போடுவதிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

நேர்மறையும் எதிர்மறையும் கலந்து இயங்குவதான இச்சமூக வாழ்வியலில் எதிர்மறையினை மட்டுமே தெரிவுசெய்து தனது கதையினை மிகவும் திறமையாக நகர்த்திச் செல்கிறார். முந்தைய நாளில் கோவில் வாசலில் மீனாவைக் கண்ட கந்தன் அவளைப் பின்தொடர்ந்து சென்று, “வேசி” எனத் தெரிந்தபிறகும் அவளது சம்பாத்தியத்தை வாழ்நாள் முழுக்கச் சுரண்டி, உடல் உழைப்பற்ற சொகுசான வாழ்வினை அனுபவிக்கத் திட்டமிடுகிறான். எண்ணியபடியே அடுத்த நாள் அவளை விலைக்கு வாங்கிவிடுகிறான். ஆக, மீனா கந்தனுக்குக் கிடைத்துவிடுகிறாள். கந்தனின் நண்பனான “முத்துச்சாமியின்” ஆசைப்படி “கைம்பெண்” அவனிடம் அடைக்கலமாகிறாள். காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி “சுப்பையா செட்டியார்” நினைத்ததுபோலவே ஆங்கிலோ இண்டியப் பெண்ணான “ஐரீன்” அவருக்குக் கிடைத்துவிடுகிறாள். தன் மீது துளியும் விருப்பமற்ற, மீன் விற்கும் பெண்ணான “ஆயிசா பீபி” க்கு பல இடையூறுகளை விளைவித்ததன் மூலம் அவ்வூரின் செல்வாக்குமிக்க முத்துக்கோனாரிடம் அவள் அடிபணிகிறாள். இவர்களில் மீனா மட்டுமே கந்தனுக்கு மனைவி எனும் உரிமையினைப் பெறுகிறாள். மற்ற அனைவருமே ஆசைக்கிணங்கும் தற்காலிக உறவுகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும், தான் நினைத்தது போலவே கந்தன், லாட்ஜில் இருப்பவரிடம் திட்டம் போட்டு பணம் பறிக்கிறான். அதுமட்டுமன்றி வீட்டை விட்டுக் கிளம்புகையில் எந்த நோக்கத்துடன் கத்தியை எடுத்து உறையினுள் திணித்தானோ இறுதியில் யதார்த்தமாக அதைச் செயல்படுத்தியும் முடிக்கிறான். இப்படியாக, அனைத்து நிகழ்வுகளும் எதிர்மறையாக இருப்பினும் அவரவர் விருப்பப்படி அவை நியாயமாக நடந்தேறிவிடுகின்றன.

இவரின் கதாபாத்திரங்களுக்கு எவ்வித கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறையோ, ஒளிவுமறைவோ, ஒப்பனைகளோ கிடையாது. விசித்திரமான இவரின் கதாபாத்திரங்கள் கதைதோறும் அழுகையை மௌனமாய்ச் சுமந்து திரிகின்றன. கதாபாத்திரங்களும், கதையின் பற்பல நிகழ்வுகளும் நமது மனவோட்டங்களை வெவ்வேறு சூழல்களில் கேள்விக்குட்படுத்துகின்றன. அவ்வாறு, மனமானது கேள்வி எழுப்பத் துணிகையில் “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள் “, என்று வாசிக்கும் யாதொருவரையும் மிரளச் செய்கிற தொனியில் தனது கருத்தை முன்வைக்கிறார் கதாசிரியர். நமது மனம் தயங்கித் தயங்கி ஏற்க மறுப்பினும் உண்மை அதுவாகத்தான் இருக்கிறது என அடித்துச் சொல்லும்படி அமைந்துள்ளது அவரின் கருத்து. இவரது கதாப்பாத்திரங்களின் இயல்புகளை வாதத்திற்கு வேண்டுமானால் நாம் எடுத்துக் கொள்ளலாமேயொழிய அக்கதாபாத்திரங்களில் நமது தலையீடு எதுவும் செல்லுபடியாகாது. கதையைப் பொறுத்தவரை இது சரி, இது தவறு எனப் பிரித்தறிய வாய்ப்பின்றி போவதுடன் தனிநபரின் புரிதலுக்கு சில சம்பவங்கள் தவறெனப் பதிந்தாலும் கதையைப் பொறுத்தவரை அவை மிகச்சரியே.

மனிதனிடம் நிலவும் இல்லாமையும், இயலாமையுமே அவனது பிரத்தியேகப் பிரச்சினைகளாக அமைந்துவிடுகின்றன. வாழ்வின் பெரும் பிரதானமான பணத்தின் பின்னே நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும் அதை மீறிய ஒரு அத்தியாவசியத் தேவை மனித சமூகத்திற்கு மிகவும் அவசியமாகிறது. பொருளாதார விளிம்புநிலையில் வாழும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து இவ்வுலகம் முழுமைக்கும் “பாலுணர்வு” என்பது மிகவும் அவசியமான ஒன்று. இவ்வுணர்வை மையமாய்க் கொண்டுதான் வாழ்க்கைச் சக்கரம் விடாப்பிடியாய் சுழன்று வருகிறது. எனவே இதனை வாழ்க்கைச் சக்கரத்தின் “அச்சாணி” எனவும் குறிப்பிடலாம். உடல் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது அதுவே தனித்த உளவியல் ரீதியான பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது. பெரும்பாலும் மனிதன் அகச்சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பாலுறவை நாடுகிறான். மற்ற உயிர்களுக்கு இவ்வுணர்வு இயல்பாகவே அமையப்பெற்றுள்ளது. பொதுவாகவே, நமது கலாச்சாரம் பாலியலை வெளிப்படையாகப் பேச அனுமதி மறுப்பதுதான் பாலுணர்வைத் தூண்டவும், அதுசார்ந்த இன்னபிற தொடர்ச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது. ஒரு சமூகம் தனக்குரிய ஒழுக்கப்பாதையில் பயணிக்க “பாலியல் நுண்ணறிவு” அவசியமாகிறது.

ஒரு மனிதனின் தேவையை நிர்ணயிப்பதில் அதிகபட்ச உரிமைக்கு உரித்தானவன் அவன் மட்டுமே. தவிர, தனது தேவையை அடுத்தவர் மீது திணிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. ஆனால் திருமண பந்தத்தில் இணையும்போது அங்கு ஒருவரின் தேவையை எவ்வித குறைவுமில்லாமல் மற்றவர் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உருவாகிறது. ஏன்…, கட்டாயம் என்றே சொல்லலாம். அங்கு “போதாமை” என்ற ஒன்று ஏற்படுமானால் மெதுமெதுவாக ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடப்பரப்பு அதிகமாகும்போதுதான் சிக்கல் ஆரம்பமாகிறது. இதுவே சமூக ஒழுக்கச் சீர்கேட்டிற்கு அடித்தளமாக அமைகிறது. இந்நாவலில் மூக்கனின் மனைவியான “ராக்காயி” என்கிற “மோகனா” தன் கணவனுடன் இல்லற வாழ்வில் இணைந்திருக்கும்போதே இந்த வெற்றிடம் காரணமாக விபச்சார வாழ்வில் ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.

ஒழுங்கற்ற ஒரு சமூகச் சூழலின் பாலியல் சித்தரிப்புகள் நாவல் முழுமைக்குமே படர்ந்திருக்கின்றன. இந்நாவலைப் பொருத்தமட்டில் ஜி. நாகராஜனின் பாலியல் எழுத்து பாலுணர்வைத் தூண்டுவதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் ஒரு புணர்வுச்சூழலின் மிதப்புநிலை போட்டுடைக்கப்பட்டதன் காரணமாக பல நுட்பமான உணர்வுகளும், வாதங்களும் வாசகர் மனதை ஆட்கொள்கின்றன. மீனாவுடன் புணர்விலிருக்கும்படியான ஒரு சூழலில், மற்ற ஆண்களுடனான அனுபவங்களைக் கந்தன் அவளிடம் கேட்டறியும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு கதை நிகழ்வில் அவனது காத்திரமான ஒரு மனோபாவமும், ஆணாதிக்கமும் தெள்ளத்தெளிவாக புலனாகிறது. மீனா அதற்கு நாசூக்காக பதிலளிப்பினும் அவளது மனவலியை வாசகர்கள் தொட்டுணர முடிகிறது. இதுபோலவே தி. ஜானகிராமனின் “மரப்பசு” நாவலில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் “அம்மணி” வீடு திரும்பியதும் தனது புணர்வு அனுபவங்களை “கோபாலி”யிடம் பகிர்வதுபோலான ஒரு சித்தரிப்புக் காட்சி இடம் பெற்றுள்ளது.

கதை முழுக்க பெண் மற்றும் பண வேட்டைகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. ஆணாதிக்கம் மிக்கச் சமூகம் இயங்குகிறது. மேலும், ஆண் மையநோக்கில் கதை நகர்வு அமைந்துள்ளது எனவும் குறிப்பிடலாம். மனித வாழ்விற்கான இன்றியமையா தேவை பணம். பணத்திற்கென செய்யும் எந்தவொரு காரியமும் தவறல்ல எனும் உத்தி நாவல் முழுக்க பரவலாகக் கையாளப்பட்டுள்ளது. இந்நாவலைப் பொருத்தமட்டில் பணம் என்பது ஒருவனைப் பாலியல் தொழிலாளியாக்குகிறது, பொய் பேச வைக்கிறது, ஏமாற்று வித்தையைக் கற்றுத் தருகிறது, இறுதியில் கொலைகாரனாக்குகிறது. கதையின் ஒரு நிகழ்வான செய்தித்தாள் கொலை வழக்கும்கூட பணத்தை பிரதானமாகக் கொண்டதுதான்.

“பணம் ஒரு மானங்கெட்ட விஷயம்”, எனும் தத்துவத்தை அந்தோணி கதாபாத்திரத்தின் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர். தன் பால்ய காலத்து நிர்வாண ஓட்டத்தினை அந்தோணி நினைவுகூர்வதின் முலம் இக்கூற்று ஆணித்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித வாழ்வின் பொக்கிஷமாகத் திகழும் பணத்தை மானங்கெட்ட விஷயம் எனத் தயக்கமின்றி போட்டுடைக்கிறார். மேலும், பணம்_ மானங்கெட்ட விஷயம் என்பது “ஞானம்” என தத்துவார்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு முரண்களின் கலப்பே வாழ்வாகிறது.

தன் வாழ்வில் எவர் மீதும் நம்பிக்கையற்று, எச்செய்கைக்கும் வருத்தமற்று பணத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு பயணிக்கும் கந்தன், சலூன் கடையில் அமர்ந்திருக்கையில் அங்கு வரும் இளைஞனிடம் ராசிபலன் வாசிக்கச் சொல்லும் நிகழ்வு மட்டுமே அவனுக்கு வாழ்வின் மீது பலம் பொருந்திய ஒரு பிடிப்பினை ஏற்படுத்துவதாகப் படுகிறது. ஒருமுறை கந்தனின் நண்பன் முத்துச்சாமி, “நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கனும்னு திட்டம் போட்டிருக்கீங்க?” என்று கந்தனிடம் எழுப்பும் வினாவிற்குச் சிரித்துக்கொண்டே “எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறந்தேன்?” எனக் கூறும் பதில் சிலிர்ப்பை ஏற்படுத்துவதோடு சற்று நேரம் அவ்விடத்தே நம் எண்ணத்தை உறையவைக்கிறது.

ஆன்மீகம் தொடர்பாக, கோவில் எனும் சொல் பெயரளவில் இருக்கிறதே தவிர வழிபாடு என்பது எவ்விடத்திலும் இல்லை. மேலும் சொல்லளவில் “சாமியார்”, “டிரம் சாமியார்”, எனும் பெயர்களை மட்டுமே ஆசிரியர் உலவவிட்டுள்ளார். வீடென்றால் கடவுள் படங்கள் நிச்சயம் இருக்கும். இக்கதையினை “கடவுள் படமற்ற வீடு” எனக் கூறலாம்.

ஒரு சமூகம் முழுமைக்கும் பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பட்சத்தில் அதை நோக்கிய பயணமே பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. பணமானது ஒவ்வொருவரிடமும் இருப்பளவில் மாறுபடுகிறது. பணத்தைப் பொறுத்தவரை ஈட்டல் மற்றும் இழத்தல் எனும் இரு செயல்கள் சமூக நிலைப்பாடுகளாக அமைந்துள்ளன. நமது சமூகம் மேல்தட்டு, நடுத்தரம் மற்றும் அடித்தட்டு மக்களைப் பிணைத்தவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையினரின் ஈட்டல் அளவுகள் வேலையின் தன்மைக்கேற்பவும் இழத்தல் அளவானது செலவினம் பொறுத்தும் அமைகிறது. பெரும்பாலும், ஈட்டலில் அதிக பணத்தை இருப்பாகக் கொண்டிருப்பவர்கள் முதலாளிகளாகவும், மற்றவர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.

பொதுவாக ஒருவரிடம் எவ்வளவு இருப்பு இருப்பினும் மற்றவரிடம் சுரண்டும் நிலைப்பாடு சமூகத்தில் பரவலாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. இத்தகைய சுரண்டலைத் தடுப்பதற்கென பல்வேறு புரட்சிகள், பல்வேறு நாடுகளில், பல்வேறு காலகட்டங்களில் வெடித்தன. அவற்றுள் முதலாளித்துவமற்ற நோக்கினை அடிப்படையாய்க் கொண்டு தொழிலாளர் நலன்கருதி சுரண்டலை ஒழிப்பதற்கென கொண்டுவரப்பட்ட பொதுவுடைமைத் தத்துவமான “கம்யூனிசம்” பற்றிய மேலோட்டமான உரையாடல் நாவலில் இடம்பெற்றுள்ளது. ஒரு சமூகம் மாற வேண்டுமானால் தனித்த சமூகவாசிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் அவசியம். தனி மனிதன் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள முன்வர இயலாத நிலையில் ஒரு சமூக மாற்றத்தை எவ்வாறு கொண்டுவர இயலும்? எத்தனை புரட்சி தோன்றி என்ன செய்ய? சுரண்டல் எப்படி, எப்போது தடைபடும்? இப்படியான வினாக்களை எழுப்பி கதாபாத்திரங்கள் வாயிலாக நமது கவனத்திற்கு கொண்டுவருகிறார் கதாசிரியர்.

பணம், பாலியல் மற்றும் இவை சார்ந்து இயங்கும் சமூகம் இம்மூன்றையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, திரைத்துறையில் தரமான இலக்கியப் படைப்பை மையமாய் வைத்தோ அல்லது தழுவியோ எடுக்கப்படும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாகவே அமைகின்றன. தமிழில் வெளியான “சதுரங்க வேட்டை” திரைப்படம் முழுக்க முழுக்க இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நாவலில் இடம்பெற்றுள்ள “முள்ளங்கில நெறய பாதரசமிருக்கு, கோசுல சுண்ணாம்பிருக்கு, காலிபிளவர்ல தங்கம் தட்டுப்பட ஆரம்பிச்சிருக்கு”, எனும் பொய்ப்பிரசங்கமானது “பிதாமகன்” மற்றும் “சதுரங்க வேட்டை” திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. இந்நாவலை வாசித்து முடித்ததும் சதுரங்க வேட்டை திரைப்படத்தைக் கண்டுகளிப்பதென்பது சாரயக்கடையில் அமர்ந்திருக்கும் ஒருவன் இரத்தப்பொரியலுக்கு பச்சை மிளகாயைக் கடித்துக் கொள்வதுபோல் அப்படியொரு சுவை.

இவரது படைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதென்பது சாமான்ய காரியமல்ல. குறிப்பெடுக்க காகிதமும் பென்சிலும் கையுமாக அமர்ந்தால் புத்தகம் முழுமைக்குமே கரிக்கோடுகளும், அடைப்புக்குறிகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அதி தீவிரமாக நேசிக்கப்பட வேண்டிய இலக்கியப் படைப்புகள் இவருடையவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் இவரை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும். கொண்டாட்டமென்பது இவரது படைப்புகளை ஒன்றுவிடாது வாசிப்பதே.

ஜி.நாகராஜனின் ஓரிரு படைப்புகளை வாசிப்பதன் மூலம் மட்டுமே இவரது புனைவுலகம் பற்றிய சரியான புரிதல் வாசகருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இவரது படைப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் இவரின் எண்ண ஓட்டங்களில் வாசகர்கள் தம் மனதை செலுத்தி உள்ளீடுகளின் சாராம்சங்களை தெளிவாகக் கண்டடையலாம். இத்தகையதொரு இலக்கியப் படைப்பினை வாசிக்காது தவறவிடுவதோ அல்லது வாசிக்காது கடந்து செல்வதோ நம் வாழ்வின் ஈடுகட்ட இயலாத ஒரு பேரிழப்பாக அமையும்.

_

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.