எஸ். சுரேஷ்

ஒவ்வொரு நீதிக்கதை

எஸ். சுரேஷ்

 

ராஜா வந்தார் ராஜா வந்தார் டும் டும் டும்
வந்தார் ராஜா வந்தார் ராஜா டும் டும் டும்
கையில் வாளெடுத்து வந்தார் ராஜா டும் டும் டும்
வாளெடுத்து வந்தார் ராஜா டும் டும் டும்
குதிரை மேலே ராஜா வந்தார் டும் டும் டும்
ராஜா வந்தார் குதிரை மேலே டும் டும் டும்
குதிரை இருந்தது ராஜா கீழே டும் டும் டும்
டும் டும் டும், ஆமாம் டும் டும் டும்

ராஜா கையில் வாள்
குதிரைக்குப் பின்னால் வால்
வாள் வாள் வாள்
வால் வால் வால்
டும் டும் டும், அட டும் டும் டும்

குதிரை மேலே காட்டுக்குள்ளே ராஜா போனார்
காட்டுக்குள்ளே குதிரை மேலே ராஜா போனார்
காட்டுக்குள்ளே குழியிருந்தது டும் டும் டும்
குழியிருந்தது காட்டுக்குள்ளே டும் டும் டும்
குழியிருந்தால் குதிரை விழும் டும் டும் டும்
குழிக்குள்ளே குதிரை விழும் டும் டும் டும்

குதிரை இப்போ ராஜா மேல டும் டும் டும்
ராஜா மேல குதிரை இப்போ டும் டும் டும்
வால் இப்போ மேலே இருக்கு டும் டும் டும்
வாள் இப்போ கீழே இருக்கு டும் டும் டும்

ராஜாவைப் பார்த்த மந்திரி சிரித்துப் பார்த்தார்
பார்த்தார் சிரித்தார் சிரிப்பாய்ச் சிரித்தார்
ஹ ஹ ஹ ஹ ஹ் ஹ ஹ ஹ ஹ ஹ
ஹஹஹஹஹஹஹஹா மந்திரி சிரித்தார்
வயிறு குலுங்க காடு குலுங்க மந்திரி சிரித்தார்
ஹ் அஹ அஹ அஹ அஹ ஹ ஹ மந்திரி சிரித்தார்

குழியை விட்டு ராஜா வந்தார் டும் டும் டும்
வாள் எடுத்து வேகமா வீசினார் டும் டும் டும்
தனியாய்ப் பறந்தது தலை டும் டும் டும்
பத்தடி பறந்து விழுந்தது தலை டும் டும் டும்
டும் டும் டும் வெட்டு டும் டும் டும்
டும் டும் டும் ஒரே வெட்டு டும் டும் டும்

ஒரு பக்கம் வெள்ளை, ஒரு பக்கம் சேறு
குதிரையைப் பார்த்து சிரித்தான் ராஜா
ஹ ஹ ஹ ஹ ஹ் ஹ ஹ ஹ ஹ ஹ
ஹஹஹஹஹஹஹஹா ராஜா சிரித்தான் பாரு
காடு குலுங்க வயிறு குலுங்க ராஜா சிரித்தான் பாரு
ஹ் அஹ அஹ அஹ அஹ ஹ ஹ ராஜா சிரித்தான் பாரு

பின்னங்காலால் உதைத்தது குதிரை டும் டும் டும்
பத்தடி பறந்து விழுந்தான் ராஜா டும் டும் டும்
மரத்துல முட்டிச்சு ராஜாவோட மண்டை
அவன் இனி போட முடியாது கொண்டை

காட்டுக்குள்ள ராஜா செத்தான் டும் டும் டும்
ராஜா செத்தான் காட்டுக்குள்ள டும் டும் டும்
காட்டுக்குள்ள குதிரை இருக்கு டும் டும் டும்
அந்த காட்டுக்குள்ள புலி இருக்கு டும் டும் டும்
புலி இருக்கும் காட்டுக்குள்ளே டும் டும் டும்
ராஜாவோட குதிரை இருக்கு டும் டும் டும்

நாட்டுக்கு ஒரு நீதி டும் டும் டும்
காட்டுக்கு ஒரு நீதி டும் டும் டும்
வேற வேற நீதி உண்டு டும் டும் டும்

கவியின் கண்- நீ உன்னை விட்டுச் செல்கிறாய்

எஸ். சுரேஷ்

 

ஒவ்வோர் அதிகாலையும் திரைச்சீலை விலகுகிறது,
தனியே, இருள் கரைவதை நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்,
டிக்டிக்கென்று நட்சத்திரங்கள் விலகிக் கொள்வதை,
கண்விழித்த பறவைகளால் உலுக்கி எழுப்பப்பட்ட
வானம் மீண்டும் காற்றிலாடும் ஸ்கார்பாகிறது
நீங்கள் ஒருத்தரையொருத்தர் தொட்டுக்கொண்டல்ல,
இணைந்து நடந்து செல்கிறீர்கள்,
ஒருவர் மீதொருவர் சாய்ந்து,
ஒருவருள்ளொருவர் என்று மாலை வரை,
மாலையில், தனியே,
நீ உன் வாசலில் நிற்கும் முரட்டு இரவை விரட்டுகிறாய்
அதற்காக அழுமளவு இனியது, ஈரமான தெரு நாய் போல்,
நீ காகங்கள் கரைவதைக் கேட்க விரும்பவில்லை,
இந்த கட்டத்தில் பேசப்பட வேண்டிய வரிகள்,
நாளுக்கு நாள் குறைந்து வருவதை,
இன்னும் எத்தனை நாட்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
நிழல் நீள்கிறது, உடலை உள்ளிருந்து வெறுமை நிறைக்கிறது,
வேறொருத்தர் உன் இடத்துக்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு அடியாக நீ உன்னை விட்டுச் செல்கிறாய்.

Poem by Claire Malraux (more…)

சிருங்கேரி பத்ரா காடுகள்

எஸ். சுரேஷ்

images

“முதலில் சீதலங்கிரி வரும். அங்க ஒரு சின்ன கோவில் இருக்கும். அதுலேர்ந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல முல்லைங்கிரி.”

சிக்மகளூர் டவுனிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அன்சார் ஜூர் நடத்தும் ‘ஹோம் ஸ்டே’ வில் அன்று மதியம் தான் வந்திறங்கினேன். மதிய உணவிற்கு பின் கர்நாடகாவின் மிக உயரமான இடம் என்று அறியப்பட்ட முல்லைங்கிரியை பார்க்க என் காரில் புறப்பட்டேன்.

அன்சார் ஜூர் வழி சொன்னாரே தவிர அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார். முக்கால்வாசி தூரம் வழி நன்றாகதான் இருந்தது. முக்கிய சாலையை விட்டு மலைச்சாலைக்குள் நுழைந்தபோதுதான் அபாயத்தை அறிய முடிந்தது. வளைந்து நெளிந்து மலை மேல் குறுகலான பாதை. ஒருபுறம் மலை, மற்றொருபுறம் அதளபாதளம்.

கீழே அருமையான காட்சி விரிந்திருந்தது. இங்கிலாந்து கிராமப்புறங்களில் காணும் புல்வெளி போல் பல இடங்களில் பச்சைப் பசேல் என்ற புல்வெளி. நடுவில் ஓர் ஏரி. வேறொரு திசையில் காட்டின் பசுமை. ஓரிரண்டு வெள்ளை மேகங்களைக் கொண்ட நீல வானம். தூரத்தில் மென்மையான பச்சை மலைகள். பச்சை நிறம் உலகை கப்பியது போல் இருந்தது. காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ரசிக்கத்தூண்டும் காட்சி. ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை. (more…)

பஸ்சில் ஒரு எருமை

எஸ். சுரேஷ்

காலை எல்லோரும் அலுவலகம் செல்லும் நேரத்தில்
அந்த எருமை வோல்வோ பஸ்ஸில் ஏறியது
“காடுபீசினஹல்லி ஒரு டிக்கெட்” என்று இருநூறு நீட்டியது
சில்லறை பணத்தை வாயில் வாங்கிக் கொண்டது
உட்கார்ந்துக் கொண்டிருந்தவரகள்
குளிர் காற்றை அனுபவித்தார்கள்
நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு
நெரிசலினால் ஒரே புழுக்கம்
ரேடியோவில் யாரோ ஒருவன்
பாடல் என்ற பெயரில் கத்திக் கொண்டிருந்தான்
எருமை மாடு இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல்
கம்பியை பிடிக்காமல் நின்றுக் கொண்டிருந்தது

சில்க் போர்டு தாண்டியதும்,
“வண்டியை நிறுத்து, வண்டியை நிறுத்து” என்று கத்தியது
“ஸ்டாப் இன்னும் கொஞ்சம் முன்னாடி”
என்று சொன்ன கண்டக்டரைப் பார்த்து,
“நான் அவசரமாக சாணி போடவேண்டும்” என்றது
சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய ஓட்டுனரை
இறங்கும்போது பார்த்து,
“அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு இறங்கியது.

பாம்பு

எஸ். சுரேஷ்

 

அவன் கால்களை பாம்பு சுற்றிக்கொண்டது
அதை உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினான்
(பயப்பட வேண்டாம்,
அந்த கவிதையை இங்கு எழுதப்போவதில்லை)
வீட்டுக்குச் சென்று இருட்டில் ஒளிந்துகொண்டான்
ஏதோ ஊர்ந்து வருவது போல் தெரிந்தது
மறுபடியும் கால்களைச் சுற்றி அதே பாம்பு
கையால் அதை பிடுங்கி தூரே வீசிவிட்டு
மறுபடியும் ஓடினான், இம்முறை மூச்சை அடக்கி
கிணற்றுக்குள் ஒளிந்துகொண்டான்
விடாது கருப்பு போல் பாம்பு அங்கும் வந்தது
தன் கால்களை அது சுற்றிக் கொள்ளும்முன்
வெளியேறி மரத்தின் மேல் ஏறினான்
அவனுக்கு மேலே இருந்த ஒரு கிளையிலிருந்து
பாம்பு அவனை நோக்கி இறங்கியது
பீதியுடம் கீழே இறங்கி கோவில் வாசலில்
உட்கார்ந்து கொண்டிருந்த சாமியாரிடம் சென்று
“நான் எங்கு சென்றாலும் அந்த பாம்பு என்னை
எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டான்
அவன் கைரேகையை பார்த்த சாமியார்
உரக்கச் சிரித்துவிட்டு சொன்னார்
“உனக்கு தெரியாதா, பாம்பறியும் பாம்பின் கால்”

ஒளிப்பட உதவி – freedesignfile.com
​​