கலைச்செல்வி

கட்டுக்கழுத்தியம்மன்

கலைச்செல்வி

பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கி கிடந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனித்தனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னை ஒன்றில் கொட்டும் போது அவர் வாய் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது.

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ

ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ

பூசாரிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். கண்கள் சாராயத்தின் வீக்கத்திலிருந்து விடுபடாதது போலிருந்தது. மீசையும், தாடியும், புருவமும் முகத்தை அளவுக்கதிகமாவே ஆக்கிரமித்திருந்தது. குளித்த உடலில் காவி நிற வேட்டியை சுற்றியிருந்தார். ஈரம் காயும் முன்பே பூசிய விபூதி வெள்ளை வெள்ளையாக காய்ந்து கருத்த உடலுக்கு தேஜஸ் கொடுத்தது. சந்தன பொட்டலத்தைப் பிரித்தார். பரவால்ல.. துாளு சந்தனந்தான்.. தொன்னையில் கொட்டினார். அருகிலிருந்த பன்னீர் பாட்டிலை எடுத்து சிறுவனிடம் நீட்டினார். மகள் வயிற்று பேரன். மிஞ்சிப் போனால் பத்து வயதிருக்கும் அவனுக்கு. தாத்தாவின் பார்வையிலேயே தேவைகளை புரிந்துக் கொண்டு பரபரப்பாக செயல்பட்டான். சுவரில் கையை தேய்த்து சொரசொரப்பாக்கிக் கொண்டு பாட்டிலை திறந்து பன்னீரை கொஞ்சமாக சந்தனம் வைத்திருந்த தொன்னையில் ஊற்றினான்.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. நேற்று காலையில்தான் பெரியவர்  பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். பெரியவர் ஊரில் முக்கிய தலைக்கட்டு. நிலபுலத்துக்கு குறைவில்லாத குடும்பம். ஊருக்குள் அவர் பேச்சுக்கு மறுபேச்சு அநேகமாக இருப்பதில்லை. எப்போதாவதுதான் அவர் பேசுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். முழங்கால் உயர திண்ணையில் கால்களை பின்னலிட்டு அமர்ந்திருப்பவரின் பார்வையை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது. “அய்யா.. சாப்டீயல்லா..“ அசடு வழிய கேட்க வேண்டியிருக்கும். பதிலாக தலை அசைப்பு மட்டுமே. மகன் மருதமுத்து வேலைக்காக பிரிந்து சென்றபோதோ பிறகு அங்கேயே வீடு வாங்கி குடியேறியபோதோ கூட ஏற்பட்ட தவிப்பை அவர் வார்த்தைகளாக்க விரும்பவில்லை. என்றோ சில சமயங்களில் தானாகவே வாய் விட்டு பேசுவதை யாராவது பார்க்க நேரிடும். அது குறித்து யாரும் அவரிடம் கேட்டதில்லை.

“பெரியவுக மவன் குடும்பத்தோடு வர்றாப்பலயாம்.. பூசைக்கு ஏற்பாடு செய்ய சொன்னவோ.”

”சுத்த பூசயா..? பலி பூசயாம்மா..?” மருதைய்யனுக்கென்றால் பலி பூசைதான் வழக்கம்.

”கட்ளத்தியம்மனுக்கு நேத்திக்கடென் கெடக்காம்.. அதான்..”

உருவிய சாராய பாட்டிலை கூரையின் இடுக்குக்குள் சொருகினார் பூசாரி. கட்டுக்கழுத்தியம்மனுக்கு நேர்த்தியென்றால் சுத்த பூசைதான். படையலுக்கு பொங்கலும் சுண்டலும் போதும். ஆனாலும் பெரியவர் வீட்டு படையலென்றால் தவுசுபிள்ளை ஏற்பாட்டில் வடை பாயாசத்தோடு மதிய சாப்பாடு பெரிய விருந்தாகி விடும். கிளம்பும்போது முழுசாக முள்ளங்கிப்பத்தையாட்டம் ஆயிரம் ரூபாய் தாளொன்றை புது வேட்டி சட்டையோடு வைத்து நீட்டுவார்கள். மனசு கும்மாளம் போட்டது பூசாரிக்கு. அதிகாலையிலேயே பேரனை எழுப்பி குளிக்க வைத்து அழைத்து வரும்போது பூசாரியின் மனைவி வீட்டை சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். கொண்டைக்கடலை பெரிய அண்டாவில் ஊறிக் கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் அவள் பொறுப்பு.

சிறிய கோவில் அது. மருதையன் ஏழுக்கு ஒன்பது அளவிலான கருவறையில் சீரான உயரத்தில் மண்ணாலான சிலைக்குள் குடிக் கொண்டிருந்தார். சிவப்பு நிற உடலும் கரிய பெரிய மீசையும் மஞ்சள் நிற கதுப்பான கன்னங்களுமாக வீரக்களையுடன் கையில் நீண்ட அரிவாள் வைத்திருந்தார். சிறுவன் சிலையின் மடிப்புகளில் இருந்த குளவிக் கூடுகளை தட்டி விட்டு சுத்தமாக துடைத்தான். சிலையின் முன்பாக தரையில் பதிக்கப்பட்டிருந்த அரிவாள் எண்ணெய் தடவலில் பளபளத்திருந்தது. சிலையின் பீடம் எண்ணெய் பிசுக்கேறியிருந்தது. பூஜை கண்டு நாளாகிப் போனதில் கரிய சுவரில் மடிப்புகளாக ஒட்டடை தொங்கியது. யாரோ வேண்டுதலுக்காக தொங்க விட்ட சர விளக்கிலிருந்து தரையில் வழிந்திருந்த எண்ணெயின் மீது காற்றின் உபயத்தால் மண் பூத்துக் கிடந்தது. சிறுவன் தேங்காய் நாரால் பிசுக்கை பரபரவென்று தேய்த்தான். கற்பூர ஆரத்தி மட்டுமே சிலைக்கு. அபிஷேகம் மற்றதெல்லாம் அரிவாள் வடிவ மருதையனுக்குதான். மருதையனின் கட்டுப்பாட்டில் ஏழெட்டு கிராமங்கள் இருந்ததில் சிறிய கோபுரம் எழுப்பி கோவிலை புனரமைக்க முடிந்தது. முன்புறத்தை விரிவாக்கி பேச.. உட்கார, பிடிக்க.. சமைக்க, பரிமாற.. என சிமிண்ட் தளம் அமைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையை ஆங்கிளால் நிறுத்தி பயன்பாட்டை கூட்டியிருந்தனர்.

கருவறையை தாண்டிய வராண்டா சுவர்களால் தடுக்கப்பட்டு சிறிய அறை போல ஆக்கப்பட்டிருந்தது. எல்லாம் பெரியவர் வீட்டு கைங்கர்யம்தான். அதிலிருந்த கான்கீரிட் மேடையில் அதீதமான வெண்கல புன்னகையுடன் கட்டுகழுத்தியம்மன் வீற்றிருந்தாள். ஐம்பந்தைந்து வருடங்களை கடந்த புன்னகை. பெரியவரின் மனைவியாக வீரம்மாள் என்ற பெயரில் உயிரும் உடலுமாக நடமாடும்போது தொலைத்த வசந்தமனைத்தையும் மீட்டெடுப்பது போன்ற நித்ய புன்னகை. தெய்வக்கதைகளை கேட்கவும் மெனக்கெட்டு சொல்லவும் ஆளின்றி போனதில் தை வெள்ளி.. ஆடி வெள்ளிகளுக்கான அம்மனாக மாறிப் போனாள். கட்டுக்கழுத்தியம்மன் என்ற அவள் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்.  அணிவிக்கப்பட்டிருந்த அடர் பச்சையாலான சரிகை சேலையில் துாசி படிந்திருந்தது  ”தப்புதண்டா செஞ்சிருந்தா மன்னிச்சுக்கம்மா..“ பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு சிலையின் மேலிருந்த காய்ந்த மாலையை அகற்றி சுத்தப்படுத்தத் தொடங்கினார் பூசாரி.

கருவேல செடி அடர்வில் மறைந்து மறைந்து வந்து நின்றது அந்த சாம்பல் நிற கெட்ஸ் வண்டி. காரின் கதவை ஆதரவாக பிடித்துக் கொண்டு முன்னிருக்கையிலிருந்து மெல்ல இறங்கினார் பெரியவர். எண்பது வயதிருக்கும். வீரம்மாளை மணக்கும் போது இருபத்து மூன்றில் இருந்தார் ஓங்குதாங்கான தேகம். மாநிறத்தை கடந்த நிறம். தங்கநிற சரிகை கரை வேட்டி அணிந்திருந்தார். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துண்டு நெஞ்சு வரை வழிந்திருந்தது. உடல் அதிகம் தளர்ந்திருக்கவில்லை. அவர் வயதையொத்த அங்காளிபங்காளிகள் கொள்ளு பேரனை பார்த்து விட்ட போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அடுத்த தலைமுறை வித்தாக பேத்தி பிறந்திருந்தாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து மருதமுத்து இறங்கினான். பெரியவரின் தத்து புத்திரன். முப்பது வயதிருக்கும். அதிகாரிக்குரிய முகவெட்டு. உறங்கிக் கொண்டிருந்த மகளை தோளில் சாய்த்துக் கொண்டு அவன் மனைவி அபிநயா இறங்க கூடவே சின்னவரும். பெரியவரை ஒற்றி எடுத்ததுப் போன்ற தோற்றம் சின்னவருக்கு. தகப்பனை இழக்கும் போது சின்னவருக்கு இரண்டு வயதிருக்கும். தாயின் புடவை தலைப்பே கதியாக்கி கொண்டவருக்கு பிறகு அதுவே சுபாவமாகிப் போனது. அண்ணனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து பேசுவது கூட சின்னவருக்கு சவால்தான். வயல் வேலைக்கு அஞ்சாத தேகம். இரவுநேர படுக்கை கூட வயல்காட்டில்தான் என்றாலும் சின்ன மின்னலோ.. இடியோ.. கூட சின்னவரின் உறுதியை குலைத்து விடும்.

காரின் அருகே ஓடி வந்தார் பூசாரி. ”அய்யா.. வாங்கய்யா.. வாங்கய்யா.. எல்லாரும் வரணும்..” என்றார் பணிந்து குழைந்து.

அலங்காரமின்றி பளிச்சென்று துடைத்து விடப்பட்ட மருதைய்யனையும் கட்டுக்கழுத்தியம்மனையும் திருப்தியாக பார்த்து விட்டு பிறகு பெரிய கும்பிடாக வைத்தார் பெரியவர். ”பிரசாதமெல்லாம் ஆயிட்டுருக்கில்ல..”

”ரவைக்கே கடல ஊற போட்டாச்சுங்கய்யா.. அர அவர்ல ரெடியாயிடும்…”

அடர்த்தியாக தொடுக்கப்பட்டு மெல்லிய வெண்பட்டு சரிகையால் சுற்றப்பட்ட மல்லிகை மாலை அடங்கிய பையை கட்டுக்கழுத்தியம்மன் பீடத்தில் வைத்து விட்டு நகர்ந்தவர் துாணோரம் கால்களை நீட்டியப்படி அமர்ந்துக் கொண்டார். சுற்றிலும் பரவியிருந்த கருவேல மரங்கள் அதிகாலை பொழுதில் கூட அழகற்று இருந்தன. கட்டுக்கழுத்தியம்மன் சன்னதியையொட்டி மருதமுத்து மனைவியுடன் அமர்ந்துக் கொண்டான். சுற்று சுவர்களில்லாத வெளியில் வீசிய அதிகாலைக் காற்று மடியில் துாங்கிக் கொண்டிருந்த மகளின் உறக்கத்திற்கு தாலாட்டாக இருந்தது.

நீட்டி நிமிர்ந்திருந்த அரிவாளில் விபூதி பட்டையிட்டார் பூசாரி. எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்தவர் ”அந்த சேப்பு எடுப்பா..” என்றார் பேரனிடம்.

”சேப்ப காங்கலயே தாத்தா..” என்றான் சிறுவன். அந்நிய ஆட்கள் முன் அவன் பேச்சு வெட்கத்தில் குழைந்தது.

”தோ.. இருக்கு பாருப்பா..” குவிந்திருந்த பூசை சாமானுக்குள்ளிருந்து  குங்கும பாக்கெட்டை உருவி நீட்டினான் மருதமுத்து. நழுவி விழாத நவீன வேட்டி அணிந்திருந்தான். வேட்டியின் பாக்கெட்டில் பர்ஸ் துருத்திக் கொண்டிருந்தது. வெற்று மார்பில் முசுமுசுத்து வளர்ந்து கிடந்தன மயிர்கள்.

“இதென்னா தாத்தா சேப்பு இரத்த கலர்லருக்கு..?” சேப்புன்னா ரோசு கலர்ல்ல இருக்கும்.. என்ற குழப்பம் ஆட்கொண்டதில் தலையை நிமிர்த்தாமலேயே கேட்டான்.

”சொம்மா இர்ரா.. அப்டியெல்லாம் பேசக்குடாது..“ பேரனை அதட்டினார் பூசாரி.

”தம்பி.. எப்போ வந்தீங்க..?” பேச்சுக் கொடுத்தார்.

”ராத்திரி பன்னெண்டாயிடுச்சுல்ல..” மருதமுத்துவின் குரலில் அலுப்பு மீதமிருந்தது.

“அதான் புள்ள துாங்கிடுச்சு..“ சம்பிரதாயமாக பேசிக் கொண்டே எலுமிச்சம் பழத்தை அரிவாளில் சொருக, அதிலிருந்த குங்குமம் சாறோடு கலந்து செந்நீராய் வழிந்தது.

“எங்க..? சின்னய்யாவ காங்கில..?”

“தோ வாரேன்ல..“ வேட்டி நுனியை பிடித்தபடியே செருப்பிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு அருகில் வந்தார் சின்னவர்.  “நல்லாருக்கீயளாய்யா.? உள்ளுருன்னுதான் பேரு.. பாத்து நெடுநாளாச்சு..”

சின்னவரின் விசாரிப்பில் சங்கடப்பட்டு நெளிந்தார் பூசாரி.

“எளநீயெல்லாம் வச்ச வாவுல கெடக்கு.. அருவாள எடுங்க.. கண்ண தொறந்து வச்சிடுறன்..” வந்தவுடனேயே பரபரப்பான சின்னவரிடம் ”நீங்க குந்துங்கய்யா.. பய பாத்துக்குவான் அதெல்லாம்..“ என்றார் பூசாரி.

”புள்ளய குடும்மா.. எம்புட்டு நேரமா கால்ல போட்டுக்கிட்டு.. காத்தாட துாக்கீட்டு போறன்..“ ஓரிடமாக உட்காருவது பழக்கப்படவில்லை சின்னவருக்கு.

“எலேய்.. போய் அம்மாச்சிக்கு வெறகு எடுத்தாந்து போடுய்யா..” பேரனை ஏவினார் பூசாரி.

மந்தையிலே மாரியாயி

மல மேல மாயவரே..

சந்திரரே சூரியரே..

இந்திரனே மருதைய்யா.

மழை நல்லா பெய்ய வேணும்..

மக்களளெல்லாம் வாள வேணும்..

சுதந்திரம் கிடைத்தது போல பாடிக் கொண்டே துள்ளி குதித்து ஓடினான் சிறுவன்.

”பேரனுக்கும் சொல்லி குடுத்துட்டீங்க போல..” என்றாள் அபிநயா. கால்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

”கூடவே கெடக்கற பய.. தன்னால வந்துடும்.. ஆளுங்கள காணவும் வெக்கம் வந்துடுச்சு பயபுள்ளக்கு.. இல்லேன்னா வெளுத்து வாங்கிடுவான்..” என்றார் பெருமையாக. கணவனும் மனைவியுமாக தனித்து விடப்பட்டதில் பூசாரிக்கு பேச்சு வளர்க்க தோதுவாகிப் போனது. வெளியூரில் பிழைக்க சென்றோர்க்கு சொந்த ஊரின் மீது ஒரு கரிசனம் இருக்கும். நேக்கு பார்த்து தட்டு விட்டால் பேச பேச காசுதான்.

”பெரியவரு வூட்ல ராம லச்சுமணன்மாரி ரெண்டே பசங்கதான்.. பெரியய்யாவும் சின்னவருந்தான்.. சிறு வயசுலயே பெரியவரோட அப்பா பொண்டாட்டி புள்ளங்கள வுட்டுட்டு போய் சேந்துட்டாரு.. பொம்பளயாயிருந்தாலும் மல்லுக்கட்டா சொத்த காவந்து பண்ணி கொண்டாந்துருச்சு அந்தம்மா.. பெரிய மவன கேக்காம ஒண்ணு கூட செய்யாது.. பெரியவருக்கும் அம்மான்னா உசுருன்னு வச்சிக்கயேன்.. பக்கத்துல கல்லுக்காரன்பட்டியிலதான் மவனுக்கு பொண்ணெடுத்துச்சு.. ஏளைப்பட்ட பொண்ணுன்னாலும் மவாலட்சுமிகணக்கா இருக்கும் பெரியவரு சம்சாரம்.. வீரம்மானு பேரு.. குடும்பத்துக்கேத்த பொண்ணு.. மாமியாட்ட ஒத்த வாருத்த எதுத்துக்கிட்டது கெடயாது.. ஆரு கண்ணு பட்டுச்சோ தெர்ல.. பெரிய வென ஆயி போச்சு அந்த குடும்பத்துக்கு..”

கட்டுக்கழுத்தியம்மனின் கைகள் ஒவ்வொன்றுக்கும் மஞ்சளால் வளையலிட்டார் பூசாரி.

”ஆச ஆசயா கண்ணாலம் பண்ணி வச்சுது பெரிய மவனுக்கு.. ஆனா என்னா..? வம்சம் தளைஞ்சு வாரத பாக்க குடுப்புன இல்லாம போச்சு அந்தம்மாளுக்கு.. சின்னவருக்கு பொண்ணு தேடிக்கிட்டுருந்த தாவுல அரவம் தீண்டி உசுரு அமைஞ்சு போச்சு..”

திருமணமாகி வருடம் இரண்டு கடந்தும் வீரம்மாள் மலடாகவே இருந்தது  மாமியாருக்கு கோபமாக வெளிப்பட தொடங்கியது. மாதாந்திர ஒதுக்கத்தில் பின்கட்டில் தனித்திருப்பவளுக்கு சாப்பாடு கூட சரியாக கிடைப்பதில்லை. கைக்கும் வாய்க்குமே பிரச்சனையான வீட்டில் பிறந்தவளுக்கு பட்டினி கிடப்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் எதற்கும் எதிர்வினையாற்றாத கணவனும் திரும்பி போகவியலாத பிறந்த வீடும் தனக்கு எதிராக அமைந்ததில் மௌனம் காக்க வேண்டியிருந்தது வீரம்மாளுக்கு. வீரம்மாளின் தாய்க்கு மகளை நினைத்து நெஞ்சுவரைக்கும் கவலை.  எங்கோ உடுக்கடித்து பார்த்ததில் கர்ப்பவாய் திறந்து கிடப்பதாக சேதி வந்தது. சாமியாடியும் அதையே உறுதிப்படுத்த, சற்று நிம்மதியாக இருந்த நேரத்தில்தான் சம்மந்தியம்மாளின் திடீர் மரணம்.

தாயும் மகனுமாக பார்த்த குடும்ப நிர்வாகம். மாமியாரிடமிருந்து திடீரென தன் கைக்கு மாறியதில் திக்குமுக்காடிப் போனாள் வீரம்மாள். சுதாரித்து கொண்டு நிமிர வருடம் ஒன்று ஓடிப் போனது. தாயில்லாத மகன்கள் இருவருக்கும் தாயாகி போனதும் இந்த காலக்கட்டத்தில்தான்.

தன்னை விட இரண்டொரு வயது மூத்தவரான கொழுந்தனிடம் முதலில் தயங்கி தயங்கிதான் பேசினாள் வீரம்மாள். பிறகு கொழுந்தனின் சுபாவம் புரிப்பட்டு போனதில் அதட்டலும் உரிமையுமாக பழக தொடங்கினாள். தொட்டதெற்கெல்லாம் தாயிடம் அபிப்பிராயம் கேட்கும் பழக்கம் அண்ணியிடம் என்றாகி போனது சின்னவருக்கு. “தொட்ட தொண்ணுாறுக்கும் கேட்டுக்கிட்டு கெடந்தா நாளக்கு கட்டிக்கிட்டு வாரவோ கா காசுக்கு ஒன்ன மதிக்க மாட்டா.. சொல்லிட்டேன்.. ஆமா..” என்பாள் கண்டிப்பாக கொழுந்தனிடம்.

“இனிமேட்ல்லாம் மாத்திக்க முடியாதுண்ணி..“ என்பார் சின்னவரும் விடாப்பிடியாக.

மருதமுத்துவுக்கு சித்தப்பன் மூலமாக இந்த கதைகள் அத்துப்படி. புகைப்படத்தில் கூட பார்த்திராத வீரம்மாளின் உருவம் மெல்ல மெல்ல தாயாக அவனுக்குள் குடி புகுந்தது அப்படிதான்.

சரிகை பட்டுச்சேலையும் மல்லிகை மாலையுமாக கட்டுக்கழுத்தியம்மன் அத்தனை நேர்த்தியாகத் தெரிந்தாள். மஞ்சள் கிழங்கு தாலி கழுத்தில் எடுப்பாக தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கத்தாலான சங்கிலி சிலையின் வயிறு வரை ஓடியிருந்தது. விசேஷ நாட்களில் கையோடு கொண்டு வந்து அணிவித்து பார்ப்பதில் எல்லோருக்குமே விருப்பமிருந்தது.

”மவராசி போயி சேந்து முழுசா ரெண்டு வருசம் முடியில.. மரிமவளயுமில்ல கூப்டுக்குச்சு.. சாவற வயசா தாயி அது.. ஒங்காம நொங்காம நெருப்புல்ல தின்னுட்டுப் போச்சு அந்த புள்ளத்தாய்ச்சி பொண்ண..”.

”பிள்ளத்தாய்ச்சியா..” சின்னவரிடம் ஆச்சர்யமாக கேட்டான் மருதமுத்து அன்று இரவு.

”ஊரு மருவாதி.. பேரு மருவாதின்னு ஒண்ணு இருக்குல்ல.. ஆயிரம் பொய்ய சொல்லி கண்ணாலமே பண்ணுதுவோ.. இது சாவு தானே..” என்றார் சின்னவர். முகம் சிறுத்திருந்தது. அன்று இரவு முழுக்க சுமையை இறக்கவும் ஏற்றவுமான மனநிலையில் இருவரும் இருந்தனர்.

சம்மணமிட்டு மரத்திருந்த கால்களை சட்டென்று உதறி கொண்டு எழுந்தான் மருதமுத்து. “அபி.. பாப்பா இந்நேரம் முழிச்சிருப்பா.. போய் பாத்துட்டு வர்றேன்..”

கை குறைய குறைய பூசாரிக்கு கதை சொல்லும் ஆர்வம் மிகுந்துப் போனது.

“செத்துப் போன ஆத்தாதான் மவளா பொறக்குமுன்னு பெரியவரு கனவா கண்டுருக்க.. எல்லாமே நெருப்புல பொசுங்கி போச்சு தாயீ.. பொசுங்கிப் போச்சு..” அப்போதுதான் நிகழ்ந்தது போல் தான் பார்த்தேயிராத இறப்பு பற்றி உருக்கமாக சொன்னார் பூசாரி.

”அன்னீக்கு வெறுத்துப் போனவருதான் பெரியவரு.. அதுக்குபொறவு ஆளு எங்கயும் தட்டுப்படுல.. தேடாத எடம் பாக்கியில்ல.. சின்னவருக்கு ஒரேடியா பதைக்குது.. படுத்தபடுக்கையாவே ஆயிட்டாரு.. மருதைய்யனுக்கு எதோ கொறப்பாடாருக்கும்.. கடா சோறு போட்டு எச்சி எல எடுக்கணும்னு எங்கப்பன்தான் சொன்னாராம்.. கடா வெட்டி முளுசா ஏழு நாளு களியில பாத்துக்க.. தாயீ.. ஒம் மாமனாரு திரும்பீட்டாரு.. மருதய்யன் அம்புட்டு பவுருஃபுல்லு..  குரலை தழைத்துக் கொண்டார். “சின்னவருக்கு எங்கிட்டுருந்துதான் அம்புட்டு தகிரியம் வந்துச்சோ தெர்ல.. பொறந்தவன மொகத்துக்கு மொகம் கூட பாக்க முடியாதுன்னுட்டாரு.. அம்புட்டு கோவம் அண்ணாரு மேல.. பொறவு..? அம்புட்டு பேரும் வுட்டுட்டு போயீட்டா அந்த பயங்கொள்ளிப்புள்ள என்னா செய்யும் சொல்லு தாயீ..“

”எங்க போயிருந்தாராம்..?”

”ஆருக்கு தெரியும்.. அவருக்கிட்ட கேக்கற அளவுக்கு அம்புட்டு தகிரியம் ஆருக்கு இருக்கு.. பொண்டாட்டி நெனப்பு தாங்காம போனவரு அந்த மவராசிய செலயா செதுக்கில்ல கொண்டாந்தாரு..”

”சின்னவர் கோவமெல்லாம் எப்போ தீந்துச்சு..?”

”ஒத்த ஒடம்பொறப்புங்க.. எம்புட்டு நாளு அப்டியே இருப்பாவோ.. எல்லாம் மாறிப் போச்சு தாயீ.. பொறவு நல்ல நாளா பாத்து செலய இங்க கொண்டாந்து வச்சாச்சு.. அதுலேர்ந்து ஊருக்காரங்களுக்கு கண்கண்ட தெய்வமா ஆயிட்டா.. அவள கேக்காம ஒரு கண்ணாலம் கூட நடக்கறதில்ல.. சுமங்கலி தெய்வமில்லயா.“

படைப்பதற்காக எடுத்த வந்த பட்டுச்சேலையை பூசாரியிடம் நீட்டினாள் அபிநயா. “கவர் மேலயே சேலய வச்சுடுங்க.. எண்ணெய் கறை பட்டுடும்..”

”செரி தாயி.. சாக்கெட்டு..”

”பொடவைக்குள்ளயே மடிச்சு வச்சிருக்கன் பாருங்க..”

நெகிழிப் பையை கட்டுக்கழுத்தியம்மன் முன் பரப்பி பட்டுப்புடவையையும் சாக்கெட்டையும் வைத்து அதன் மீது வெற்றிலை பாக்குடன் ஒரு இணுக்கு பூவும் மஞ்சள் உருண்டையும் வைத்தார் பூசாரி. பூசாரியின் மனைவி சர்க்கரை பொங்கல் நிறைந்த பெரிய அன்னக்கூடையின் இருபக்க பிடிகளை பிடித்து துாக்க முடியாது துாக்கி வந்து அம்மனுக்கு முன் வைத்து மூங்கில் தட்டால் மூடினாள். நெய்யும், வறுத்த முந்திரியும் வெல்ல வாசமும் மூங்கில் தட்டை மீறியது.

”சாம்ராணி பொக போடணும்.. அடுப்ப அமைக்கங்குள்ளயும் நெருப்பு கரிய எடுத்து வச்சுடு.. மறந்துபுடாத..” என்றார் மனைவியிடம்.

“ஆங்.. தெரியாதாக்கும்..“

”நம்பள எதுத்துக்கலேன்னா இந்த பொட்டச்சிக்கு கண்ணுல இம ஒட்டாது..” சந்தோஷமாக சிரித்தார் பூசாரி. ”வெளையாட.. புடிக்கன்னு ஒருத்தி இருந்துட்டால்ல தேவல.. பொண்டாட்டி போன பொறவு மறு கண்ணாலமே வேணாம்னு கச்ச கட்டிக்கிட்டு நின்னுட்டாரு பெரியவரு.. சின்னவரும் தனக்கு வேணாமுன்னு அண்ணனுக்கு தோதா ஆமாசாமி போட.. அதுக்கு பொறவு ரெண்டு பேத்துக்கும் தொறவு வாழ்க்கதான்.. நெலம் நீச்சுக்கு பஞ்சமா.. வூடு வாசலுக்கு கொறப்பாடா..? ஊரே சொல்லி சொல்லிதேன் ஒன் புருசன உள்ள கொண்டாந்தாங்க.. அதுமுட்டுந்தா ஊர் பாடு.. பொறவு பெரியவருக்கு எல்லாமே மவன்தான்..”

உடன்பங்காளியின் மகன் மருதமுத்துவை தத்தெடுக்கும்போது பெரியவருக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. ஆறு மாத குழந்தையாக அத்தனை சொத்துக்கும் வாரிசாக வந்த மருதமுத்துவுக்கு தாய் இல்லாததே பெரிய குறை என்பது தாமதமாகதான் புரிந்தது சின்னவருக்கு. தெரிய வந்த பிறகு அவர் தாயுமாகி போனார். இப்போது கூட கிராமத்துக்கும் பெங்களுரூக்குமான இடைவெளியை கடந்து கடந்தே குறைத்து வைத்திருந்தார்.

பெரியவர் அருகில் வருவது தெரியவும் பூசாரி சத்தமாக  பாட தொடங்கினார்.

காட்டு வழியில கள்ளர் பயமில்ல..

எங்க வீட்டு கொல தெய்வம் வீரம்மா காக்குமடா

நிறுத்து வண்டியன்னு கள்வங்க கேக்கயிலே

வீரம்மா பேர சொன்னா காலனும் தெறிச்சுடுவான்..

“தவுசுப்புள்ள சமயல தொடங்கியாச்சு.. லிஸ்டுல வுள்ளது ஒண்ணும் வுட்டுடுலயே..“ என்றார் பெரியவர் பூசாரியிடம்.

”இல்லீங்கய்யா.. ஆனந்தேன் மளிகயில எல்லாம் செட்டா வாங்கிட்டேங்கய்யா..”

“நல்லதா போச்சு.. செரி.. வேலையாயிடுச்சுல்ல.. இன்னும் பத்து நிமிசத்துல நல்ல நேரம் தொடங்குதுன்னு காலண்டர்ல போட்டுருக்கான்..”

”எல்லாம் முடிஞ்சாச்சுங்கய்யா..”

”நீங்க ஏம்மாமா மேரேஜ் பண்ணிக்கல..?” பெங்களுருக்கு வந்த போது சின்னவரிடம் கேட்டாள் அபிநயா. பெரியவரிடம் இப்படியெல்லாம் நெருக்கமாக உணர்வதை நினைத்துக் கூட பார்க்கவியலாது அவளால். அவர் தன்னிடம் மொத்தமாக பத்து வார்த்தைகள் பேசியிருந்தால் அதிகம் என நினைத்துக் கொள்வாள்.

”ஒத்த பொம்பள ஒம்போது புள்ளய வளத்துடும்.. ஆனா ரெண்டு ஆம்பளங்க ஒத்தப் புள்ளய  வளக்கக்குள்ளயும் நாக்கு தள்ளிப் போச்சும்மா..”

”மாமா.. நா ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க..”

”என்னமோ தோணல ஆயி..” என்றார் சின்னவர்.

“அவுருக்கு சாமி கும்புட்டுக்கிட்டே கெடந்தா பத்தாது..?” என்றான் மருதமுத்து கிண்டலாய்.

“எனக்கு மழையும் ஆவல.. தீயும் ஆவல.. பயங்கொள்ளி ஆம்பளய எந்த பொட்டச்சிக்கு புடிக்கும் சொல்லு..”

அன்றைய இரவு சின்னவருக்கும் மருதமுத்துவுக்கும் கனமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

கல்லுக்காரன்பட்டியில் திருவிழா நடந்த சமயம் அது. நட்சத்திரங்களற்ற இரவு வானம் கருங்குடையாக கவிழ்ந்து கிடந்தது. எப்போதும் போல இரவு உணவுக்கு பின் வயல்காட்டுக்கு கிளம்பி விட்டாலும் தலையை உயர்த்தி வானத்தை பார்க்கவே நடுக்கமாக இருந்தது சின்னவருக்கு. மோட்டார் அறை கதவை இழுத்து சார்த்தி உட்புறம் தாளிட்டுக் கொண்டார். அண்ணி இழுத்து வைத்து பரிமாறியதில் அளவுக்கதிகமாவே சாப்பிட்டாயிற்று. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தவர் அப்படியே துாங்கிப் போனார். இரவு வானத்தை மின்னல் வெட்டியதை சிமிண்ட் கிராதி மௌனமாக கடத்திக் கொண்டிருந்ததில் திடுக்கிட்டு விழிப்பு வந்தது. நடுக்கமாக இருந்தது. பெருமழை வருவதற்குள் கிளம்பி விட வேண்டும்.  “பச்சப்புள்ள பச்சப்புள்ளன்னு முந்தானைக்குள்ள சுருட்டி வச்சு வளத்துட்டு எனக்கென்னான்னு வுட்டுட்டு போயிடுச்சு..” அம்மாவின் மீது கோபமாக வந்தது அவருக்கு. ஐந்து நிமிட நடை துாரம்தான். கால்களை எட்டி போட்டு நடந்தார்.

கிழக்கு பார்த்த வீடு. ஓட்டு வீடு என்றாலும் அளவில் பெரிய வீடு. நீண்டு அகன்ற பட்டாச்சாலை. அதன் முடிவில் இருபுறமும் அறைகள். இருபக்க அறைகளையும் பெரிய முற்றம் இணைத்தது. சமையலறையை நெற்குதிரும் தானிய மூட்டைகளும் நிறைத்திருக்கும். முன்புற திண்ணையையொட்டி இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில்தான் சமையலெல்லாம்.

கொண்டான் கொடுத்த சனங்களெல்லாம் கல்லுக்காரன்பட்டியில் முகாமிட்டு விட ஊர் அரவற்று கிடந்தது. வீரம்மாளுக்கும் போக ஆசைதான். ஆனால் கணவனை மீறி எதுவும் செய்து விட முடியாது. மாவிளக்கு மாவும் அதிரசமுமாக மகளை பார்க்க வந்திருந்தாள் வீரம்மாளின் தாய். தனது பலவீனம் குறித்து அண்ணிக்கு தெரிந்திருந்தாலும் எப்போதும் போல இன்றும் தயக்கமாகதான் இருந்தது சின்னவருக்கு. போதாக்குறைக்கு சம்பந்தியம்மாள் வேறு.

திடீரென்ற ஏற்பட்ட விழிப்பில் கண்களை திறந்து பார்த்தாள் அபிநயா. கணவனின் படுக்கை காலியாக இருந்தது. தலையணையை விட்டு நகர்ந்துக் கிடந்த மகளை இழுத்து தலையணையில் கிடத்தி விட்டு கதவை திறந்து முன்னறையை எட்டிப் பார்த்தாள். அப்பாவும் மகனும் முக்கியமான முக பாவனைகளோடு பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. “இன்னுமா துாங்கல..“

“.நீ துாங்கும்மா.. வர்றேன்..” என்றான் மருதமுத்து.

”என்னாதான் பேசுவீங்களோ.. குசுகுசுன்னு..” மகள் விழித்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் மிக மெதுவாக கதவை மூடி உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள் அபிநயா.

சமையலறையை கடந்து விட்டால் யார் கண்ணிலும் பட வேண்டியிருக்காது. வேகமாக வந்தவர் சுருட்டின் ஒற்றை நெருப்பில் தயங்கி நின்றார். கீற்றுக் கொட்டகையில் பேச்சுக் குரல் வேறு கேட்டது.

“மாப்ளக்கிட்ட சொல்லிக்கிட்டேன்.. மழ வர்றதுக்குள்ள நா கௌம்பறேன்.. ஒங்கப்பாரு கெடந்து கத்தும்..” சம்பந்தியின் குரல்.

”ம்க்கும்.. மணி பத்தாச்சு.. இந்நேரங்காட்டியும் எங்க போவ.. இங்ஙனயே படுத்துட்டு காலைல கௌம்பு..”

”காரு புடிச்சா போறன்..? ஊரு சனமே திருளாவுல கூடிக் கெடக்கு.. என்னைதான் பெசாசு புடிக்குதாக்கும்..”

“எம்மா.. செத்த இருந்துட்டு போ.. ஒன் வூட்ட ஆரும் துாக்கீட்டு போயிர மாட்டாவோ..”

தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவி உள்ளே ஓடி விட வேண்டியதுதான். கால்களை ஒரு எட்டு வைத்தவர் இன்னும் சுருட்டின் தீ கங்கு தெரிவதை பார்த்து விட்டு தயங்கி நின்றார்.

”புடிச்சா மொசலுக்கு காலு மூணுன்னு நிப்ப..“ கூரைக்குள் சொருகிக் கிடந்த பாய் தலையணையை உருவும் சத்தம் கேட்டது.

“நா கொட்டாயிலயே படுத்துக்கறன்.. நீ உள்ள போ.. மாப்ள காத்துக்கிட்டுருப்பால..“

”உள்ள போயீ..? எங்க படுக்க..? பட்டாச்சாலல கெடக்கறதும் ஒண்ணுதான்.. இங்ஙன படுக்கறதும் ஒண்ணுதான்..”

”ஏன்டீ.. வெலக்காயிட்டீயா..?” கவலை தோய்ந்திருந்தது சம்பந்தியின் குரலில்.

”சும்மா கெடம்மா.. புள்ளயெல்லாம் மந்திரத்துல மாங்கா காய்ச்சாதான் வரும் பாத்துக்க..”

“மாப்ள ஊர்லதான இருக்காரு..”

”ஊர்ல இருந்தா மட்டும்..? எல்லாம் தனியாதான் படுக்கறது..”

”அடிப்பாவீ.. எம்புட்டு நாளா..?“

”ம்ம்.. கண்ணாலமான நாளாதான்…”

”என்னாடீ சொல்ற..?“

”சொல்றன் சொரக்காயிக்கு உப்பில்லேன்னு…” அழுகிறாள் போலும்.

“அடிப்பாவீ.. மருமவள பிரிச்சு படுக்க வச்சுட்டுதான் ஒன் மாமியாரு வண்ட பேச்சு பேசுனாளா..?”

”நா சொன்னாதானே அதுக்கு தெரியும்.. அவங்கம்மா இருக்கவரைக்கும் ஒரே ரூம்புலதான் படுப்போம்.. அவங்கம்மாவுக்காவ.. அம்புட்டுதான்..”

”அடிப்பாவீ.. படபடங்குதுடீ எனக்கு.. இம்புட்டு பெரிய விசயத்த ஏன்டீ மறச்சே..?”

”ம்ம்… தெரிஞ்சா நீ என்ன பண்ணுவே..? ஒன் வூட்டுக்கு வந்துதான் நா என்னா பண்ணுவேன்.. பேசாம படு.. அந்த மனுசன் சுருட்டு புடிக்க வார நேரந்தான்..”

”வருட்டும்.. வருட்டும்.. என்ன பயமா..? பொளுது விடியுட்டும்.. கேளுங்க இந்த அக்குறும்பத்தன்னு பஞ்சாயத்த கூட்டீட மாட்டேன்..? கஞ்சிக்கு செத்தவங்கன்னா மானம் கெட்டவங்கன்னு நினைச்சு எம்புட்டு பேச்சு பேசியிருப்பா ஒம் மாமியாருகாரி.. ஏயப்பா.. ஒம் புருசன்மாரி சால்சாப்புகார ஆம்பளய என் ஆயுசுக்கும் பாத்ததில்லடீ.. ஊம ஊர கெடுக்கும்ன்னு சும்மாவா சொல்லி வச்சாவோ.. ரெண்டுல ஒண்ணு தெரியாம நவுர மாட்டேன்.. பாத்துக்க..” ஆத்திரமும் ஆவேசமுமாக பேசினாள் சம்பந்தி.

பெரியவருக்கும் ஆத்திரமும் ஆவேசமும் வந்தது. தீக்குச்சியை உரசி கூரை மேல் விட்டெறிந்த பிறகும் கூட அது நீடித்தது. கூரை நெருப்போடு விறகடுப்பில் லேசான கனைப்பிலிருந்த நெருப்பும் லாந்தர் நெருப்பும் சேர்ந்துக் கொண்ட பிறகும் கூட அது தணியாதிருந்தது. கொட்டகைக்கு பின்னே நடுங்கி படபடத்து கிடந்த சின்னவரை பார்க்கவியலாத அளவுக்கும் அது கண்களை மறைத்தது. “சோத்துக்கு நாதியத்த பொட்ட செறுக்கிக்கு ஒடம்பு சொகம் கேக்குதோ.?“

மருதமுத்து மகளை துாக்கிக் கொண்டு வந்தான்.

மீதமிருந்த கதம்ப மாலையை அங்கிருந்த உண்டியலின் கழுத்தில் சுற்றி விட்டார் பூசாரி. “இன்னும் செத்த நேரத்துல இந்த பூவெல்லாம் ஆடு வவுத்துக்குள்ள போயி உருமாறிடும்.. எல்லாம் அப்டிதான்.. தெய்வங்கூட அப்டிதான்.. பதிமூணு தலமொறைக்கு பிற்பாடு அதுங்க கூட மாறிடும்..”

“அதெப்புடீ..?“

”பதிமூணு சென்மத்தோட ஒரு வம்சத்து கணக்கு முடிஞ்சுடும்னு ஒரு நம்பிக்க தாயீ… நம்ம கட்ளத்தி ஆத்தாளுக்கு இதாம் மொத சென்மம்..”

”அதென்ன இப்டியொரு பேரு..?

”புருசன் இருக்க கட்டுக்களுத்தியா போனவ இல்லியா.. அதான்.. கன்னிமாரா இருக்குற சின்ன பொண்டுவ போயிடுச்சுங்கன்னா கன்னிசாமிம்பாங்க.. இந்த பொண்டுவதான் அந்தந்த கொலத்த காக்கற கொலதெய்வம் தாயீ.. வருசந்தவறாம பொங்க வச்சு நேத்தி செஞ்சுட்டோம்னு வையி.. அதுங்களே கொலத்தி விருத்தி பண்ணிடுங்க.. பெரியய்யா செத்து போன பொண்டாட்டிய தெய்வமாக்கி கும்புட்டுதால என்னா கெட்டா போயீட்டாரு..? கட்டுக்களுத்தியா வயித்து புள்ளத்தாய்ச்சியா போன புள்ள அது.. தான் இருந்துட்டு போன வமுசத்த காசும் பணமுமா சீரும் பேருமாதானே வச்சிருக்கா… இந்த தெயிவத்த அடுத்த தலமொறக்கு சேக்கற பொறுப்பு ஒங்கிட்டதான் தாயீ இருக்கு.. மொதல்ல ஒரு ஆம்பளப்புள்ளய பெத்தெடு தாயீ..”

கோயிலுக்கு முன் கும்பல் சேரத் தொடங்கியது.

”அய்யா.. பூசை போட்டுடுலாம் வாரீங்களாய்யா..” கறிவேலங்காட்டில் பார்வையை பதித்து கொண்டிருந்தவரை நோக்கி குரலெழுப்பினார் பூசாரி.

பெரியவரும் சின்னவரும் இம்மாதிரியான நேரங்களில்தான் சேர்ந்து நிற்பதை பார்க்க முடியும். பெரியவரையொட்டி மருதமுத்து குடும்பத்தோடு நின்றிருந்தான்.

முதலில் மருதைய்யனுக்கு சுத்த பூசை போடப்பட்டது.

ஊருக்குள்ள ராசாவாம்..

ராமரு.. லெட்சுமணனாம்..

கொடுக்க புடிக்கையில கர்ணரு பரம்பரையாம்..

பேரு பெத்த சிங்கம் ரெண்டும்

போட்டதம்மா சின்னக் குட்டி

தாயான தாயம்மா.. வீரம்மா காத்திடம்மா.“

சாம்பிராணி புகையால் மணத்து கிடந்தது அந்த இடம் முழுவதும்.

 வாக்கப்பட்ட வூரு இது..

வாழ வச்சு பாரு..தாயி..

கொறவுப்பட்ட ஆயுசுகாரி..

நெறவுப்பட்ட வாழ்க்ககாரி..

நாடு செழிக்க வச்சிடம்மா..

காடு வெளைய காத்திடம்மா..

மழையா பேஞ்சுடம்மா..

நெல்மணியா வௌஞ்சிடும்மா..

கணீரென்ற அவரின் குரல் கூடியிருந்தோரின் உடலை சிலிர்க்க வைத்தது.

“பொண்டுவல்லாம் கட்ளத்தியம்மன கும்புடுக்கங்க..” கூட்டத்தை நோக்கி சத்தமிட்டார். பெரிய சூட வில்லையை இட்டு பெரு நெருப்பாக்கி அம்மனுக்கு தீபாராதனைக் காட்ட கும்பல் கன்னத்தில் போட்டுக் கொண்டது.

மனைவியில் கையிலிருந்த மகளின் கரங்களை குவித்து வைத்தான் மருதமுத்து. “பாப்பாவ நல்லா படிக்க வையீன்னு கன்னிசாமிய கும்புட்டுக்கம்மா..”

புரியாமல் கணவனைப் பார்த்தாள் அபிநயா. ”பச்சப்புள்ளக்கு சரியா சொல்லிக் குடுங்க..” பூசாரியின் படிப்பினையில் பொறுப்பு வேறு சேர்ந்திருந்தது அவளிடம்.

”எல்லாம் சரியாதான் சொல்றேன்..” என்றான் மருதமுத்து சத்தமாக.

***

 

எதற்காக எழுதுகிறேன்? – கலைச்செல்வி

கலைச்செல்வி

sakkai

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

எவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

காலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.

தேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது.  அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப் போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன.  பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.

எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.

தேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.

(திருச்சியில் வசிக்கும் கலைச்செல்வி.. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் கொண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகி பல பரிசுகளும் பெற்றுள்ளன. வலி என்ற பெயரிலான அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று காவ்யா பதிப்பதகத்தாராலும், சக்கை என்ற பெயரிலான அவரது முதல் நாவல் என்சிபிஹெச் பதிப்பகத்தாராலும் 2015 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற சக்கை, புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரியில் பி. ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)

மஞ்சுக் குட்டி

கலைச்செல்வி

sometimes__when_i_m_alone_in_my_mind_by_narcissagrey-d736dtd

இரு பக்கமும் காதுகள் வைத்த சில்வர் அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும் அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழித்து விடும் போது பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்து விடுகிறது. தட்டில் இருந்த பிரியாணியை சதுரமாக வெட்டப்பட்ட செய்தித்தாளின் மீது வைக்கப்பட்ட சருகு இலையில் கொட்டி கவிழ்த்த போது ஜிவ்வென்று எழுந்த வாசம் நாசிகளை சுண்டி இழுத்தது. எந்த கவனமும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனாலும் பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை பருக்கையின் வடிவத்தை உள் வாங்கி கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டையும் அனிச்சையாக எடுத்து போட்டு பிரியாணி கவரை அவனிடம் நீட்ட, அவனும் நுாறு ரூபாய் தாளை நீட்டிக் கொண்டே கவரை வாங்கினான். தெருவோர கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் உடல்நிலையில் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.

”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்றுவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான்.

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.. எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டது கூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துக் கொண்டு கதறுவாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண்பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இவன் தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை..கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேயடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனை கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழி பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான ஒரு பரவச நிலையில்தான் இருந்தான் இவனும். இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள்தான். மஞ்சுளா இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருந்தாள். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். முன்னழகுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கி பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய கட்டாயம்.

மலையடிவார கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை அவனுக்கு. சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன். பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான். மலம் இறுகலாகப் போகிறது. என்பதால் காந்திமதி மதிய உணவோடு கொடுத்தனுப்பியிருந்தாள். வாழைப்பழத்தை தின்று விட்டு சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தை கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்கு களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாக படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில் அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்துக் கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக் கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும் வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால் அவனை தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும் போது அவன் கையின் சூடு தெரிந்தது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள்.

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல் கூட அவளுக்கென்றால் ஆரவாரமாகதான் வரும். மஞ்சள்காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழ தொடங்கி விட்டான். தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்க போக வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்து போட்டு விட்டான். மஞ்சுவோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கி கொண்டாள். அந்த கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனின் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான். அல்லது மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக் கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சிலசமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால் உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. காந்திமதி பார்த்தால் உயிரையே விட்டு விடுவாள் என்று அப்போதெல்லாம் தோன்றும் அவனுக்கு. காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்து விட அண்ணன் மகனுக்கு மகளை கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும் முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள் இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகதான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படிக் கொண்ட பழைய காலத்து காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதை தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடி கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால் உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்த படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகதான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்ப கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான். ஆனால் வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடி பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்ததுமே புரிந்து போனது எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறிக் கொண்டு ஓடினான் இவன். துரத்திக் கொண்டே ஓடி போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த ஒரு தருணத்தில் கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாக கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டு கதறிக் கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அதற்கு பிறகு காந்திமதியும் அவனை தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டை தொட்டிருந்தது. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யை கூட நிஜம் போலவே சொல்வாள்.

ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்பு கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விட போக கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். ஆனால் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவன் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டு தடுமாறி வீட்டுக்கு செல்லும் போது குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்துவிட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கிக் கொண்டாள். பானை மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்துக் கொண்டாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். இடது கை அவன் தோளை அணைத்துக் கொண்டது. வலது கையால் காலருக்குள் கை விட்டு கழுத்தைத் தொட்டாள்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படரவிட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..” என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறைய பேசுவாள். நீதிபோதனை வகுப்பெல்லாம் கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள். ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியை பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்டுக் கொண்டு கிடந்தபோதும் இப்படிதான் வலிய பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுக்காடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாக பார்த்து கூப்பிடும் வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோ கூட அசைத்துப் பார்த்ததில்லை. சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒருமுறை தெருவோர கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனை போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு. அன்று அவனுக்கு சோதனையான காலக்கட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது மலங்களுக்கு மத்தியில் கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல்வரை காட்டிக் கொண்டு ஒரு மாதிரியான உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை அவனுக்கு. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தை விட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதில் ஓட்டல் முதலாளி மூன்று நேர சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்து விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவள் பாயை விரித்து அவனை படுக்க வைத்துவிட்டு அவன் தலையணையிலேயே தலையை வைத்து அவனை கட்டிக் கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும் உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடி புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு.. நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

picture courtesy: Deviant Art

ஆறாவது விரல்

– கலைச்செல்வி –

நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில் நுழைந்து வெளிச்சம் பரப்பிய சூரியன் சாரலுக்கு வெட்கி எங்கோ நகர்ந்து விட கூரைகளற்றுப் போன உயர்மரங்களுக்கு கருமேகங்கள் மேற்புற கவசமிட்டன. காற்றுக்கும் அவனின் மேற்சட்டைக்குமானப் போராட்டத்தில் சட்டை விலகி காற்றுக்கு வழிவிட்டு உப்பலாகிப் போனது. சற்றே தொளதொளத்த முழுக்கால்சட்டை வம்புச் செய்யும் மனமின்றி காற்றின் போக்குக்கு தன்னை அனுசரித்துக். கொண்டதை படபடப்பாக வெளிப்படுத்தியது. சாரல் அடர்வாகி மழையானதில் காற்று ஈடுக்கொடுக்க முடியாமல் நகர்ந்து விட ஈரமான உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கியது

ஜீப்பை நோக்கி மெதுவாகவே நடந்தான் அவன். கியர்ராடில் ஒரு கையும் ஸ்டியரிங்கில் ஒரு கையுமாக வைத்தவனுக்கு கிளம்ப மனமின்றி போனதில் சாவியை திருகி இன்ஜினை அணைத்தான். கைகளைக் கட்டிக் கொண்டு ஆசுவாசமாக பார்வையை வெளியே செலுத்தினான். காட்டு ஓடை அது. நெல்லிக்கனிகளைச் சாக்குப்பையிலிருந்து சிதற விட்டதுப் போல கூழாங்கற்கள் விதவிதமாக அளவுகளில் ஓடையை நிரப்பியிருந்தன. மிக மெல்லிய ஓட்டத்தில் ஆழமற்று ஸ்படிகம் போல் தெளிந்திருந்தது ஓடை நீர். அதில் கண்ணாடியாய் தெரிந்த மணல் விரிப்பில் சிறு மீன்கள் அங்குமிங்கும் வாலை ஆட்டிக் கொண்டு ஓடின.

கரிய சிறிய மீன்கள். கைக்கு அகப்பட விரும்புதில்லை. அவன் அமர்ந்திருந்த பாறை மழையில் நனைந்திருந்தது. கீழே ஒடுங்கலாகவும் மேலே பரந்துமிருந்த அந்தப் பாறை கால்களை தொங்க விட்டுக் கொண்டு உட்கார ஏதுவாக இருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. தோழர்களுடன் சுற்றுலா வந்ததில் அறிமுகமான இந்த இடம் இத்தனை ஈர்ப்பாக மாறும் என்று அப்போது அவன் நினைத்திருக்கவில்லை. அலுவலக நாட்களை தேனியிலும் வாரக் கடைசி நாட்களை இங்குமாக கழிக்க ஏதுவான பயணத்துாரமும் மனவோட்டமும் அமைந்துப் போனதில் ஊருக்குப் போகும் நாட்கள் குறைந்துப் போயின.

சென்ற முறை ஊருக்கு செல்லும்போது தாத்தா கோபமாக கத்தினார். “ஓய்வு ஒளிச்சலில்லாம அப்டியென்னா மயிறு வேலை பாக்ற..? வுட்டு தொலச்சுட்டு இருக்கற காடுக்கரையப் பாத்துக்கிட்டாலே தலமொறைக்கும் தாங்கும்.. ஒதவாக்கர உத்தியோகம்…” நிலம்நீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் பேரன் உத்யோகம் பார்ப்பதில் தாத்தாவுக்கு விருப்பமிருப்பதில்லை. குரலும் உடம்பும் இன்னமும் திடகாத்திரம்.

“வைரம்பாஞ்சக்கட்டை..“ என்று கணவனைக் குறித்து அலட்டிக் கொள்ளும் அப்பத்தாவுக்கு பேரனைப் பற்றி வேறுவிதமானக் கவலை வந்து விடும். அம்மாவையும் அதில் சேர்த்துக் கொள்ளும். ”கண்ணாலப் பேச்செடுத்தா புடியே கொடுக்க மாட்டேங்கிறானே இந்தப்பய.. எதும் வெவகாரம் இருக்குமோ..? அம்மாவிடம் கிசுகிசுக்கும். ”சின்னவனே.. கண்ணாலம்ன்னா எங்களுக்கெல்லாம் பத்திரிக்க குடுக்க மறந்துடாதடா..” அப்பாவுக்கு எல்லாமே விளையாட்டுதான்.

”செலவு மிச்சம்னு இருப்பியா.. நீ வேறண்ணே.. பத்திரிக்க.. அதுஇதுன்னுட்டு..” என்பாள் அத்தை. அண்ணனின் விளையாட்டுக்கு ஏற்ற ஜோடி இவள்தான். கலகலத்த சுபாவி. ”அவனை வம்பிழுக்கிலேன்னா ஒனக்கு துாக்கம் வராதே..” என்பாள் அம்மா அத்தையிடம். உள்ளுரிலே திருமணம் செய்துக் கொண்டவள் அத்தை. குடும்பம் பார்க்கும் நேரம் தவிர்த்து மீதி நேரம் பிறந்த வீடே கதி அவளுக்கு. பெரியக்காவின் மகள்தான் அண்ணி என்பதோடு இருவரின் ஒத்த வயதும் நாத்தியையும் அண்ணியையும் இன்னும் ஒட்டியே வைத்திருந்தது.

ஓரோரு வருட வித்யாசத்தில் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். கடைக்குட்டி.. ஆறு விரல் அதிர்ஷடக்காரன்.. என்ற கூடுதல் தகுதிகள் இவனுக்கு பிறப்போடு சேர்ந்துக் கொள்ள அம்மாவிடம் செல்லமும் கூடுதல்தான். துாங்கும் நேரம் தவிர்த்து மீதமான நேரங்களில் அவள் இடுப்பே இருப்பிடம். ”அய்யய்யய்யே.. இந்தப் பய பொறந்ததுலேர்ந்து இடுப்பே கழண்டுல்லப் போவுது…” செல்லமாக அலுத்துக் கொள்வாள் அம்மா. “செத்த நேரம் இந்தப் பயல துாக்கீட்டுப் போடீ.. அவள ஒரு வேல பாக்க வுட மாட்டேங்கிறான்..“ அப்பத்தா சாடையாய் மகளிடம் கண்காட்ட அத்தை அவனை இடுப்பிலிருந்து பிரித்து தன் இடுப்பில் ஏற்றிக் கொள்வாள். மூன்று வயதிற்கு ஏற்ற கனம். “அண்ணியோட இடுப்ப ஒடிச்சுப்புடுவான் இந்தப்பய..” என்றாள்.

வீட்டுக்கு செல்லும் வழியெங்கும் கதைகளால் நிறைத்து விடுவாள் அத்தை. ஒரு பேச்சும் இரண்டு சிரிப்புமாக நகர்வதில் கதைகள் நீளுபவையாக இருக்கும். அந்த இடைவெளி அவனுக்குத் தாயை நினைவூட்டி விடும். “அத்த.. அம்மாட்ட.. அம்மாட்ட போறன்..“ அனத்தத் தொடங்கி விடுவான். ”எல.. அம்மாட்ட என்னாத்தடா வச்சிருப்ப.. இங்க அத்தைமவளுங்க ரெண்டு பேரு இருக்காளுங்க.. பாத்துக்கிட்டு இருப்பியா.. அம்மா.. அம்மான்னுட்டு ” இழுத்து நொடித்துக் கொஞ்சுவாள். விளையாட்டுக் காண்பிப்பாள். அதற்கும் ஆயுள் குறைவுதான். மீண்டும் “அத்தே.. அம்மாட்ட.. அம்மாட்ட..” என்பான். குரல் அழுகையை நெருங்கியிருக்கும். அத்தையின் முந்தானையைப் பிடித்து இழுப்பான்.

“தம்பிக்கு.. அத்தை.. இப்ப.. ஒரு.. நெசக்கதை.. சொல்லப் போறேனேஏஏ..” வார்த்தை வார்த்தையாக உச்சரித்துப் பீடிகைப் போட்டாள் அத்தை. அம்மாவைப் பார்க்கப் போகும் குஷியில் கதைக் கேட்கப் பிடித்து விடும் அவனுக்கும்.

”மூணு வருசத்துக்கு முந்தி நம்ப ஊருல நெறயா நெல்லு வௌஞ்சுச்சா.. ஊர்சனங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.. குருவிங்களுக்கும் கொண்டாட்டந்தான்.. கேக்கறல்ல தம்பி.. ஊன்னு சொல்லுய்யா.. அப்பதான் அத்த கதை சொல்லுவேனாம்..”

“ம்ம்ம்.. அத்த அம்மாட்ட..“

”அதான் கூட்டிட்டு போறேன்ல்ல.. கதய கேளுய்யா.. நெல்ல அரச்சு அரச்சு வீட்டுல அரிசு மூட்டையா சேர்ந்துப்போச்சு.. ஊரு பூரா தவுடா நெறஞ்சுப் போச்சு.. மாட்டுக்கெல்லாம் கரச்சு கரச்சு ஊத்துனாலும் தவுடு கொறயவேயில்ல.. ரோடு வீடெல்லாம் தவுடு பறந்து ஒடம்பெல்லாம் அரிப்பெடுக்க ஆரம்பிச்சுடுச்சு.. அப்பதான் வேத்து ஊரு பொம்பள ஒருத்தி வந்தா.. அவ கையில ஒரு ஆம்பளப் புள்ள… ஊன்னு சொல்லுய்யா..”

”ம்ம்ம்..”

”இந்தப் பயல வாங்கிக்கிட்டீன்னா எறைஞ்சுக் கெடக்கற தவுட்டெல்லாம் நான் வாரி எடுத்துட்டுப் போறேன்னு உங்கம்மாட்ட சொல்லுச்சு அந்தப் பொம்பள.. தவுடெல்லாம் தீர்ந்துப்போனா சரின்னுட்டு உங்கம்மாவும் சம்மதம் சொல்லிடுச்சு.. தவுட்ட எடுத்துக்கிட்டு ஒன்ன இறக்கி வுட்டுட்டு அந்தப் பொம்பளப் போயே போயிடுச்சு.. தவுடுப் போயி இந்த தம்பி வந்துட்டான் டும்.. டும்.. டும்..” அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள். “காகம் ஒன்று காட்டிலே.. தாகத்தினால் தவித்தது..“ என்பதுப் போல கதையை முடித்திருந்தாள் அத்தை. வீடு வந்து விட ”இந்தாடீயம்மா.. இந்தப் பயலப் புடிச்சுக்க.. வயுசு மூணாச்சு.. இன்னும் பால் குடிக்கிற பப்பா மாதிரி அம்மா.. அம்மான்னுட்டே கெடக்கான்..” டவுசரில் முட்டிக் கொண்டிருக்கும் பகுதியை கிள்ளி முத்தமிட்டாள். தனியேத் தொங்கும் அவனது ஆறாவது விரலை நீவி விடுவாள். மற்ற விரல்களை விடவும் பஞ்சுப் போன்றிருக்கும் அந்த விரல். வளர்ந்தவுடன் அறுவைச்சிகிச்சையில் நீக்கி விடலாம் என்று யாரோ சொன்னார்கள். தாத்தா குடையைத் துாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டார். தனியேத் தொங்கும் விரலைத் தொட்டான். மெத்தென்றுதான் இருந்தது… தவிட்டைத் தொடுவதுப் போல… இப்போதுக் கூட. எதிலும் ஒட்டாமல்.. கூடவே ஒட்டிக் கொண்டு.. அளவில் சிறியதாய்.. உபயோகமற்ற சதை பிண்டமாய்..

“ராசா வூட்டுக் கன்னுக்குட்டி.. நம்ப பரம்பரயில யாருக்குமே இந்த குடுப்புன இல்ல.. எங்க அய்யாவோட கூட்டாளியோட பங்காளி ஒத்தரு ஆறு வெரல்காரராம்.. வெவசாயத்துக்காரருதான்.. ஆனா இன்னிக்கெல்லாம் அவுக வூட்ட நிமிந்து பாத்தா களுத்துவலி கண்டுப்புடும்..” என்பாள் அப்பத்தா. ”அதானா சேதி.. அப்ப தவுடு போயீ லெட்சுமி வந்துச்சு.. டும்..டும்..டும்..” இவனை குறும்போடு ஓரப்பார்வைப் பார்ப்பாள் அத்தை. “பொறவு..? கொஞ்சநஞ்ச தவுடா துாக்கிக் குடுத்தோம்..” என்று அம்மாவும் கேலியைத் தொடர்வாள். “தவுட்டுக்கு கெடச்சப்பயலே..“ கோபமாகும் தருணங்களில் அண்ணன்காரன்களுக்கு வசைப்பாட வசதியாகி விடும்.

மலைகள் அண்மைப் பார்வைக்கு மரங்களாலும் துாரத்துப் பார்வைக்கு பனிப்படலமாகவும் தெரிந்தன. மழை பரவலாக பெய்ததில் ஓடை நனைந்திருந்தது. தெளிந்து நகரும் ஓடையின் நீர் மழையின் சடசடப்பில் இந்நேரம் கலங்கிப் போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு சற்று அயர்ச்சியைத் தந்தது. ஓடையின் ஆதிமூலம் எங்கோ துாரத்து அருவியிலிருந்தது. அருவிக்கு இது பாதையல்ல. நண்பர்களுடன் பயணம் வந்தது அந்த அருவிக்குதான். நெருங்கிப் பார்க்கும் ஆவலில் பாதையற்ற பாதையில் அன்று பயணித்தனர். சாரல் காற்று அருவியின் நெருக்கத்தைச் சொன்னது. குளிர்ந்து குழைந்திருந்த உடல்கள் ஒருவிதக் கிளர்ச்சியைக் கொடுக்க அலுப்பின்றி பாறைகளுடே நடந்து மேலேறினர். மேலும் முன்னேறவியலாதப்படி தடுப்புக் கட்டப்பட்டிருந்தது.

பாறைகளிலிருந்து குபுகுபுவென வெள்ளை நுரையைத் தள்ளிக் கொண்டு சீறலாகக் கீழேப் பாய்ந்துக் கொண்டிருந்தது அருவி அருவி பிரம்மாண்டமானது. அழகானது. ஆனால் இறைச்சலானது. ஏகாந்தமற்றது. ஆற்று நீர் அமைதியாக ஆற்றைக் கடந்து விடும். கடல் நீர் ஆவேசமாக பதில்களற்றக் கேள்வியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். கிணற்று நீருக்கு தன் இருப்புக் குறித்து எந்தவித அக்கறையுமிருப்பதில்லை. டம்ளர் நீரோ செம்பிலிருக்கும் நீரோ ஒரு வரையறைக்குள்ளேயே தன்னை இறுத்திக் கொள்ளும். இவை எவற்றிலும் சேராத.. சேர்ந்துக் கொள்ளத் தோன்றாத ஆங்காரத்தோடு பீறிட்டு பெருமிதமாக பெரும் ஓசையோடு பயணிக்கும் அருவியை அன்றுதான் முழுமையாகப் பார்த்தான். தடுப்புக்கு அப்பால் அத்தனை தள்ளியிருந்தும் அதன் தெறிப்பு உடலை நனைத்துப் படபடக்க வைத்தது. நீரின் உத்வேகத்தில் மதர்த்துக் கிடந்தன பாறைகள்.

இவையெதிலும் தனக்கு சம்மதமில்லை என்பது போல படிப்படியாக அமைந்திருந்த பாறையிலிருந்து நிதானமாக வழிந்த நீர் பாறையின் போக்கிலேயே பாதையை அமைத்துக் கொண்டு வழிந்தப்படியே கீழிறங்கியது. அவர்கள் நின்றிருந்த பாறைகளில் கூட மெல்லியச் சரிகைக் கோடாக நீர் கசிந்துக் கொண்டிருந்தது. ஒற்றைக் கசிவென்றாலும் தனது தடத்தை பாறைகளில் கரையாக படிய வைத்து பாம்பாக நெளிந்து இறங்கிய நீர் இனமறியா சந்தோஷத்தை உண்டாக்கியது அவனுக்கு. இந்த ஓடைக் கூட அருவியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாடற்று தனக்கென கட்டமைத்தக் கொண்ட கூழாங்கல் சாம்ராஜ்யத்தோடு ஒதுங்கிக் கொண்டது அவனை வெகுவாக ஈர்த்திருந்தது. வாரக்கடைசிகளுக்காக தவமிருக்கத் தொடங்கிய அவனை அவைகளும் வரவேற்க தயாராகவே இருந்தது. தனக்கும் அவனுக்குமான இரண்டு மணி நேர சந்திப்பு போதாது என்பது ஓடைக்கும் புரிந்திருந்ததில் மழைக் குறைந்து நின்றே போனது.

ஜீப்பில் தயாராகக் கிடந்த ஜெர்கினை மாட்டிக் கொண்டான். மேற்புறம் மழையை தாங்கும் திறனும் உட்பாகம் குளிரைத் தாங்கும் தன்மையும் கொண்ட ஜெர்கின் அது. அதன் குல்லாவை இழுத்து தலையில் வழிய விட்டு தாடையில் முடிச்சுகளிட்டு அதை கட்டுப்படுத்தினான்.

கூழாங்கற்கள் கூட மேல்புறம் வழுவழுப்பும் பாசியேறி அடிப்பாகமுமாக ஓடை முழுக்கச் சிதறிக் கிடந்தன. மரங்களுக்கிடையே கிடந்த பெரிய கூழாங்கல்லொன்று புல் மேயும் மாடு ஒன்றின் முதுகையொத்திருந்தது.

மாட்டு வண்டிப் பயணம் அவனுக்கு மிகவும் பிடித்தமானது. அவித்துக் காய வைத்த நெல் மூட்டைகளோடு அரிசி மில்லுக்கு மாட்டு வண்டி புறப்படும்போது இவனும் கூடவே ஏறிக்கொள்வான். அசைந்து அசைந்துச் செல்லும் மாடுகளை ஹாய்.. ஹாய்..என்று விரட்டப் பிடிக்கும் அவனுக்கு. மில்லிலிருந்து அரிசியும் தவிட்டு மூட்டையுமாக வீடு திரும்பும்போது நெற்களத்தில் விளையாடிக் களைத்திருப்பான். அரவைக்கு கூலியாக கொடுத்ததுப் போக மீதமான தவிட்டு மூட்டைகளையும் அரிசி மூட்டைகளோடு ஏற்றிக் கொண்டு வண்டி ஊருக்குத் திரும்பும். அரிசி மூட்டையை வீட்டுக்குள்ளும் தவிட்டு மூட்டையை கொல்லைப்புறத் தாழ்வாரத்திலும் இறக்கி வைப்பது வரை வேலையாட்களின் பணி. அத்தையும் தனது மாடுகளை இதே தொழுவத்தில்தான் கட்டியிருப்பாள். “அந்த தவுட்டு சாக்கை செத்த அவுத்துக் குடுத்துட்டுப் போய்யா..” என்பாள் அத்தை வேலையாளிடம். ”தவுட்டுப்புளுதி ஒடம்ப அரிக்கும்.. நீ உள்ள போய்யா..” கூடவே நின்றுக் கொண்டிருக்கும் அவனையும் விரட்டுவாள்.

”இதான் தவுடாத்தே..” என்றான். ஆறு வயதிருக்கும் அவனுக்கு. கைகளுக்கு மிருதுவாக நெருநெருவென்றிருந்தது தவிடு.

”படிச்சு பெரிய ஆளாவ போறவன்ய்யா நீ.. ஒனக்கென்னாத்துக்குய்யா தவுடும் புண்ணாக்கும்..” கழனித் தொட்டிக்குள் போடும்போது பொத்தென்று உட்கார்ந்துக் கொண்டது தவிடு. புண்ணாக்கோடு கலந்து நடந்த மாடுகளின் களைப்பை ஆற்றுவாள் அத்தை.

அண்ணன்களுக்கோ வீட்டில் மற்றவர்களுக்கோ ஆறு விரல்கள் இருக்கவில்லை. உறவினர்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் கூட தேடிப் பார்த்திருக்கிறான். பள்ளி.. கல்லுாரி.. பணிப்புரியும் அலுவலகம்.. பயணிக்கும் இடம்.. என அவனது பார்வை விரிந்துக் கொண்டேப் போனாலும் ஆறுவிரல்காரர்கள் யாரும் அதற்குள் அகப்படவேயில்லை. இடதுக்கைச் சுண்டு விரலையடுத்து தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக விரல் போன்ற தோற்றத்திலான சதைத்துண்டு யாருக்குமே வாய்த்திருக்காது என்பது அவனுக்கு புரியும் நாட்களில் ஓடை அவனை தனக்குள் புதைத்து ஆசுவாசப்படுத்தியது.

ஒருநாள் புளியைக் கொட்டையோடு சப்பியதில் கொட்டையையும் சேர்த்து விழுங்கி விட பயந்து போனான். ”அய்யய்யே.. தம்பி வயித்துல புளியமரம் மொளைக்க போவுது..” அப்பா கிண்டலடித்தார். பயத்தில் அழுகை வந்தது அவனுக்கு. அன்று கனவில் அவன் தலையின் மீது முளைத்திருந்த புளியமரத்தில் காய்களைப் பறிக்கக் ஐந்து விரல்கள் கொண்ட கைகளால் கற்களை விட்டெறிந்தனர் அவனின் பள்ளித்தோழர்கள். முகமறியாதப் பெண்கள் கூட குழம்புச் சட்டியோடு புளியம்பழம் பொறுக்க வந்தனர். குனிந்துப் பொறுக்கும் அந்தக் கைகளில் யாருக்குமே ஆறாவது விரல் இருக்கவில்லை.

மழை நின்று கருமேகங்கள் நகர்ந்திருந்தன. இருந்தாலும் பொழுதை ஒப்படைத்து விட்டுப் போக சூரியன் தயாரானதில் காடு மங்கிக் கொண்டே வந்தது. அந்திப்பொழுதும் பெய்த மழையும் காற்றை குளிர்வித்திருந்தது. சூழலை அனுபவிக்கும் ஆவலில் கைகளிரண்டையும் ஜெர்கினுக்குள் நுழைத்தப்படியே நடந்தான். உடலைத் தழுவிக் கொள்ளும் காற்றும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலியும் குதுாகலப்படுத்த வாயைக் குவித்து விசிலடித்தான். நடையில் சிறிய துள்ளல் இருந்தது.

தலைக்கு மேலே பறவைக் கூட்டம் ஒன்று பறந்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்ததுப் போன்ற ஒழுங்கில் சீரான வேகத்தில் ஏதோ ஒரு நியதிக்கு கட்டுப்பட்டதுப் போல பறந்துக் கொண்டிருந்தன. இவைகளுக்குள் பேதமிருக்காது. எல்லாமே ஒரே இனம். காக்கைக் குஞ்சுகளுடன் வளரும் சின்னக் குயிலின் நிலை அதன் தாயின் துரோகத்தால் விழைவது. கையாலாகாதக் கோபத்தில் எழும்பிக் கொண்டேயிருக்கும் அதன் குரல் ராகமாக மாறிப் போகிறது. அதன் தப்பிக் கிடக்கும் தாளங்கள் யாருக்கும் புரிவதேயில்லை. அதனால்தான் காலங்காலமாக எழும் குயில்களின் ஓசை அதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கி விடவில்லை. இந்த சூட்சுமத்தை அறிந்தவனுக்கு அமைதிக் காப்பது சுலபம். அவனுக்கு அது நன்றாகவே கூடி வருகிறது. “உம்மணாமூஞ்சிப்பய..” என்பாள் அம்மா.

தொட்டதற்கெல்லாம் அத்தைப் போலவே சிரிக்கும் அண்ணன்கள் கூட இவனின் கோபத்திற்கு அஞ்சியே இருந்தனர். இவனின் சுபாவத்துக்கு வம்சத்தில் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தனர் தாத்தாவும் அப்பத்தாவும். அது கிடைக்கவேப் போவதில்லை என்று இவனுக்குத் தெரியும். “எங்கடீ அந்த மூஞ்சுரக் காணாம்..“ என்று தான் சொல்லும் துணுக்குக்கு தானே சிரித்துக் கொண்டே உள்ளே நுழைவார் அப்பா.

பொலபொலத்தச் சோறை ஆவிப் பொங்க பரிமாறும் அம்மாவின் விரல்கள் உருண்டு திரண்டிருக்கும். அவன் சிறுவனாக இருக்கும்போது நீண்டிருந்த விரல்கள் இப்போது சதைப்பற்றால் சிறிது தடித்திருந்தன. எப்போதோ அணிந்த மோதிரம் அவளின் மோதிர விரலை பள்ளமாக்கியிருந்தது. வலதுக்கையின் கட்டைவிரல் நகம் மட்டும் வெங்காயம் உரிப்பதற்கு ஏதுவாக பெரிதாக வைத்திருப்பாள். பத்து விரல்களும் சோற்றுப்பானையை பிடிப்பதும் பரிமாறுவதுமாக பரபரத்து செயலாற்றும்போது “போதும்“ என்று பாதிச் சோற்றிலேயே எழுந்து விடுவான். தாழ்ந்து பரவியிருந்தப் கொய்யாமரத்தின் கிளை அவ்வப்போது அவனுக்குப் படுக்கையாகி விடும். கிளை முதுகுத்தண்டைத் தாங்கிக் கொள்ள கால்கள் இரண்டையும் இருப்பக்கத் தரைகள் தாங்கியிருக்கும். கோபம் வரும் நேரங்கள் இப்படியாகவும் கழியும் அவனுக்கு. மாடியிலிருக்கும் ஒற்றை அறையும் கைக்கொடுப்பதுண்டு. “அகராசிப்புடிச்சப்பய…” மகனின் கோபம் மனசுக்குப் பழகிப் போனதில் அம்மா நகர்ந்து விடுவாள். அம்மாவின் முதுகு கோபத்தை நீட்டிக்க வைக்கும். மேய்ந்துக் கொண்டிருக்கும் கோழியை குறி பார்த்து அடிப்பான்.

இப்போதுக் கூட இங்கு வாய்க்காத வாரக் கடைசிகள் கோபத்தை வரவழைத்து விடுகிறது அவனுக்கு. அடுத்த வாரம் அவசியம் வந்தேத் தீர வேண்டுமென்ற கட்டளையை ஊரிலிருந்து பெற்றிருந்தான். கூழாங்கல் ஒன்றின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தத் தவளையை சிறிய கல் ஒன்றை எடுத்து குறி வைத்து அடித்தான். அது ஒரு நொடியில் விலகி கல்லுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொண்டது. மீண்டும் கல்லெடுத்து வீசினான். மீண்டும் மீண்டும் வீசினான். தவளை தப்பி விட்டது. காலில் தட்டியக் கல் எகிறிப் பறந்தது. நேரம் நழுவியது. எகிறி விழும் கற்களின் துாரம் அதிகரித்துக் கொண்டேப் போனது.

ஜீப் தொலைவில் நின்றிருந்தது. அதை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின்னால் பேச்சுக்குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலேயே பெண்களும் ஆண்களுமான ஒரு சிறுக் கூட்டம் என கணிக்க முடிந்தது அவனால். சற்று துாரத்தில் நின்றிருந்த இனோவா கார் அவர்களுடையதாக இருக்கும். பேச்சும் சிரிப்பும் நெருங்கி வந்தன.

அவனின் வீட்டிலும் குலதெய்வம் கோயிலுக்கு போவதென்றால் இரண்டு வேன்களுக்கு கும்பல் காணும். அப்பா.. அம்மா.. அத்தை.. அவளின் மூன்று மகள்கள்.. அண்ணன்கள்.. அப்பத்தா.. தாத்தா.. பங்காளி வீட்டு ஆட்கள் என பெருங்கூட்டம் கூடி விடும். பேச்சும் சிரிப்பும் கட்டுச்சாதமுமாக கிளம்பும் கும்பலிடம் திரும்பி வரும்போது புளியோதரை மட்டுமே தீர்ந்திருக்கும். “உம்மாணாம்மூஞ்சி மாமனாம்.. உத்துப்பாத்தா பீமனாம்..“ சாப்பிடுகையில் வயதில் மூத்த அத்தை மகள்கள் அடிக்கும் கிண்டலில் இவனுக்கு கோபம் எகிறி அடிக்கும். பேச்சு நின்று விடும். “ஏண்ணீ.. வாங்குனதுதான் வாங்குனே.. ஒரு பொட்டப்புள்ளயா பாத்து வாங்கியிருக்கக் கூடாது.. வூட்டு வேலைக்காது ஆயிருக்கும்.. ஆன்னா ஊன்னா இந்தப்பய பொணங்கீட்டு வெளியில்ல ஓடிடுறான்..” அத்தை வம்பிக்கிழுப்பாள்.

அவர்கள் கடப்பதற்காக நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினான். ஆணும் பெண்ணுமாக இருவர்.. கிட்டத்தட்ட இவனின் வயதையொத்தவர்கள்.. இரண்டு மூன்று சிறுவர்கள்.. இரு ஜோடிப் பெரியவர்கள் என கும்பல் இவனைக் கடந்துச் சென்றது. வயதானவர்கள் களைப்பேறியதுப் போல நடந்தனர். கடைசியாக சென்றப் பெண்மணியைத் தொடர்ந்து நடந்தான் இவனும். அந்தப் பெண்மணி சற்றே தளர்ந்திருந்த முந்தானையை உதறி சொருகும்போதுதான் அந்த விரலைப் பார்த்தான். தனித்து ஆடியது அந்த ஆறாவது விரல் தனியாக.. துண்டாக.. சிறியதாக.. அழகற்றதாக.
மழை நின்றதில் ஓடை நீர் தெளிந்திருந்தது. குனிந்து நீரை அள்ளி எடுத்து வருடலாக முகத்தைக் கழுவிக் கொண்டான். பிறகு கைகளை இணைத்து குவித்து நீரை அள்ளிப் பருகினான்.

மெலிதான பனி ஜீப்பின் மீது கவிழ்ந்திருந்தது நிறைவாக.

இரவு

– கலைச்செல்வி

பால் ஆடைக் கட்டிப் போயிருந்தது. ஒரு செயலை செய்வதற்கான எண்ணம் எழாமல் அதனைச் செய்யவே முடியாது போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. பால் குடிக்கத் எண்ணமில்லை என்பதை இத்தனை பெரிய வார்த்தைகளுக்குள் மனம் அடைத்ததை வெளியிலிருந்து பார்ப்பது போல கவனித்தாள். iகையிலெடுத்த டம்ளரை டீப்பாயில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி.. கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டோடு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி பூஜை.. புனஸ்காரம் என்ற ஆன்மீக தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன் இவர்களோடு தானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தாகி பத்து நிமிடங்களாகி இருந்தது. கோயில் கோயிலாக சுற்றி விட்டு இந்நேரம்தான் கொழுந்தன் வீடு திரும்புவான். இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தின் தங்க கரங்கள் மின்னின. மகளுக்கு சீராக அளித்த கடிகாரம்தான் இது.

சீர்வரிசை சாமான்கள் வாங்க மொத்த குடும்பத்தோடு இவளும் சென்றிருந்தாள். கடை முழுக்க கடிகாரங்கள் பெரிதும்.. சிறிதுமாக.. ஆளுயரத்திலிருந்து கைக்கு அடக்கமானது வரை. எல்லாமே இதே நேரத்தையே காட்டிக் கொண்டிருந்தன. வாங்கிய கடிகாரத்திற்கான பில் தொகையை செலுத்திய பின் பேட்டரி போட்டு சரியான நேரத்திற்கு மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். இத்தனை கடிகாரங்களை ஒரே தடவையில் பார்ப்பது முதலில் அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. பிறகுதான் நேரத்தைக் கவனித்தாள். பத்து பத்து என்றது எல்லாமே. ஏசி குளிரை வெளியே விடாத இறுக்கமான கதவை அழுத்தித் தள்ளி கடைக்குள் நுழைந்த போது சாயங்காலம் மணி நான்கிருக்கும். இதென்ன இந்த மணி காண்பிக்கிறது..? அதிகாலையோ.. அந்திமாலையோ.. நான்கு சுவரைத் தாண்டி எதற்கும் உள்ளே வர அனுமதி கிடையாது போல. அதனால்தான் அலங்காரமாக தொங்கிக் கிடந்த அத்தனை கடிகாரங்களும் நகர வழியின்றி உறைந்து போய் கிடக்கிறது. “கடியாரக் கடைக்குள்ளயே மலச்சுப் போயி நின்னுட்டா மத்தக் கடைங்களுக்கு எப்பப் போறது..? கல்யாண வேலக் தலைக்கு மேல கெடக்கு..“ வெறித்துப் பார்த்தவளை மாமியாரின் குரல்தான் கலைத்துப் போட்டது.

படுக்கையறை கதவை திறக்கும் ஓசைக் கேட்டதும் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இரவு விளக்குதான் என்றாலும் சிறிய அறை என்பதால் வெளிச்சம் நிறையவே இருந்தது. கணவன் இறந்து போன பிறகு அவளும் கைக்குழந்தையான மகளும் கணவனுடன் இருந்த அதே அறையைதான் உபயோகித்துக் கொண்டனர். நாத்தனாருக்கு திருமணமான பிறகு மாப்பிள்ளை வரும்போதெல்லாம் அறையை ஒழித்துக் கொடுக்க வேண்டி வரும். இடம் மாறினாலும் வேலை களைப்போ என்னவோ துாக்கம் பாதிப்பதில்லை அவளுக்கு. மகனின் நினைப்பை பேத்தியின் அருகாமையில் மறக்க முயன்றதில் துாங்குவது கூட பாட்டி தாத்தாவுடன் என்றாகிப் போனது மகளுக்கு. “நாங்க எத்தன நாளைக்கு காவந்து பண்றது..? இனிம எல்லாம் ஒன் மாமனாரு.. மாமியாருதான்.. அணுசரணையா போய்க்கோ.. கைல ஒரு பொட்டப்புள்ள இருக்கு.. பாத்து நடந்துக்கம்மா..“ கண்ணீரோடு கழித்து கட்டி விட்ட பிறந்த வீட்டுக்கு எப்போதோ ஒருமுறை மாமியார் அனுமதிப்பார். இவளுக்கு அங்கு அதிகமாக ஒட்டவில்லை.

இருவரில் யாருக்கோ கழிவறைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் போல. அவள் படுத்திருக்கும் அறையை கடந்து குறுகலான சிறிய வராண்டா இருக்கும். அதை தாண்டி இருந்தது குளியலறையும் கழிப்பறையும். கதவை திறந்துக் கொண்டு வருவது மகள்தான். கால் கொலுசின் ஒலி அம்மாவுக்கு கேட்டு விடாதப்படி அடி மேல் அடி வைத்துச் செல்கிறாள். பெண்களுக்கு திருமணம் அத்தனை ரகசியங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சென்ற மாதம் வரையிலும் கூட குழந்தையாகதான் இருந்தாள்.. பதினேழு வயது குழந்தையாக. பனிரெண்டாம் வகுப்பை முடித்திருந்த நேரம் இந்த வரன் வந்திருந்தது. மழையடித்து ஓய்ந்ததுப் போல ஒரு மாத காலத்தில் எல்லாமே மாறிப் போனது. “கல்யாண நேரம் வந்துட்டா கட்டி வச்சாலும் நிக்காது..“ என்றாள் மாமியார். “எம்மவன் இருந்து செய்ய வேண்டிய தேவை.. குடுப்பின இல்லாமப் போச்சு.. நான் நடஒடயா இருக்கும்போதே முடிச்சு வுட்டுட்டா நிம்மதியா போய் சேந்துடுவன்..“ என்றார் மாமனார். அவர்தான் பேத்திக்கு வீட்டு வேலைகள் கற்று தந்து விட்டு வருமாறு மருமகளை இங்கு அனுப்பியிருந்தார்.

மகள் திரும்பிச் சென்று கதவை தாழிடும் சத்தம் கேட்டது. கைகளை ஆட்டி ஆட்டி தாழிட்டதில் கண்ணாடி வளையல்கள் சன்னமாக சத்தமிட்டன. இவள் கூட தனது திருமணத்தின்போது கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். ஒரு வருடத்திற்குள் டைஃபாயிடு காய்ச்சல் அவனை பிரித்து அழைத்து போகும்போது கண்ணாடி வளையல்கள் உடையாமல் மிச்சமிருந்தன. முற்றத்தில் காற்றாட படுத்து உறங்கும் பெருசுகளுக்கு வளையல்களின் ஓசை கேட்காது என்று திட்டவட்டமாக தெரிந்தும் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்கச் சொல்வான். “அவுத்து அவுத்து போட்டா வளவி ஒடைஞ்சுடும்..“ என்பாள் சிறுமியாய். அவள் காலத்தில் பதினேழு வயதில் சிறுமியாகதான் இருக்க முடிந்தது. பிறகும் கூட அதிகமாக வளர்ந்து விடவில்லை.

குடும்பச்சுமையை கை மாற்றி விடாத மாமியாரிடம் ஏவலாக பணியாற்றுவதில் இதுவரை அவளுக்கு விமர்சனம் ஏதும் இல்லை. மகளை போல நோகாமல் நடப்பதும் தாழிடுவதும் அவளுக்கு வராது. அதனால்தான் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்க சொல்கிறான்.

“கண்ணாடி வளவின்னா ஒடஞ்சுதான் போவும்..” என்பான். சொல்வானே தவிர வளையல்களை அவிழ்த்து வைக்கும் நேரம் வரை கூட அவனுக்கு பொறுமை இருப்பதில்லை. அவன் கைகள் அதீதமான சுதந்திரத்தோடு அவள் உடலில் எதையோ தேடுவதைப் போல அங்குமிங்கும் நகர்ந்து அலையும். பின்புறமிருந்துக் கட்டிக் கொள்வான். புறங்காதில் படு ஆவேசமாக முத்தமிடுவான். அவனின் ஆவேசம் பிடித்திருந்தாலும் சில சமயங்களில் உடல் தாக்கு பிடிக்க முடியாமல் சோர்ந்துப் போகும். இதை அவனிடம் வெளிப்படுத்துவது தவறு என்று வீட்டு பெண்கள் அவளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார்கள். அவளின் சிறு எதிர்ப்பு கூட அவனை கிளர்ந்தெழுப்பும். அழுத்தமாக இறுக்கிக் கொள்வான். கழுத்தடியில் குறுகுறுத்து நெளிவது போலிருக்கும் அவளுக்கு இரண்டொரு வளையல்கள் அப்படி உடைந்ததுதான்.. பகல் நேரங்களில் யாருமில்லா தருணங்களில் பாய்ந்து வந்து அவள் கைகளை பிடித்து முகத்தை திருப்பி முத்தமிடுவான். அப்போதும் இரண்டொரு வளையல்கள் உடைந்திருக்கின்றன.

“தகப்பனில்லாத புள்ள.. ஏதோ இந்த தாத்தன் எனக்கு தெரிஞ்சமுட்டும் வளத்திருக்கேன்.. கம்னாட்டி வளத்தப் புள்ளன்னு நாக்கு மேல பல்ல வச்சு பேசிப்பிட கூடாதேன்னுதான் இத சொன்னேன்..“ என்றார் மாமனார் அவள் மகளை பெண் பார்க்க வந்த அன்றே.

”ஆளும் பேருமா இம்புட்டு பேரு இருக்கீங்க.. தப்பாவா வளத்திருப்பீங்க..” என்றார் இவளின் சம்பந்தி. ஆண் சம்பந்தி மட்டும்தான். பெண் சம்மந்தி இறந்துப் போயிருந்தாள். பெண்ணில் ஒன்று.. ஆணில் ஒன்றுமாக இரு வாரிசுகள். பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட மகனுக்குதான் இவளின் மகளை பெண் கேட்டு வந்திருந்தனர். சம்பந்தி நல்லமாதிரிதான் என்று எண்ணிக் கொண்டாள். “பொம்பளங்க இல்லாத வீடு.. ஒங்க மருமகளை கொஞ்ச நாள் அனுப்பி வச்சீங்கன்னா எம்மருமகளுக்கு வீட்டு வேலயெல்லாம் கத்துக் குடுத்துடுவாங்க..“ என்று இவளின் மாமனாரிடம் அனுமதி வாங்கியதே சம்பந்திதான். இவள் வந்ததும் அவர் தன் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள். சுத்தமாக துாக்கம் கண்களிலிருந்து நகர்ந்திருந்தது. கழுத்து குறுகுறுத்துக் கிடந்தது. கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. மீ்ண்டும் படுக்கையறை கதவை திறக்கும் ஒலி. சட்டென்று படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இம்முறை மாப்பிள்ளை. திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். அதற்குள் “ஒங்கள அத்தைன்னு சொல்றதா.. அக்கான்னு சொல்றதான்னுதான் கொழப்பமாயிருக்கு..“ என்று கிண்டலடிக்கும் அளவுக்கு பழகி விட்டிருந்தார். கண்களை மூடியிருந்தாலும் மருமகன் சங்கோஜமாக நகர்வதை அவளால் உணர முடிந்தது.

இவளின் கணவன் கூட முற்றத்தை கடப்பதற்கு இப்படிதான் சங்கோஜப்படுவான். ஒரு முறை என்பது சற்று இயல்பாக இருக்கும். இரண்டாவது முறையாக முற்றத்தைக் கடந்து கொல்லைக் கதவைத் திறக்கும் போது அந்த ஒலியே அவனின் தயக்கத்தை வெளிப்படுத்தும். அவனாவது பரவாயில்லை. அவள் அறையிலிருந்து நகரவே சங்கடப்படுவாள். உள்ளாடைகளை கிணற்றடியின் பின்புறத்திற்கு கொண்டு சென்று துவைப்பாள். இல்லையெனில் நீர் போகும் பாதையிலிருக்கும் துளசிச் செடி அதனை உள்வாங்க வேண்டியிருக்கும். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென்று துவைப்பாள். அப்போதெல்லாம் கணவன் மீது செல்ல கோபம் வரும். அதை அவனிடம் ஒருநாள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இவளை போலின்றி மகள் ஒரு மாத காலத்திற்குள் கணவனிடம் நன்றாக பழகி விட்டாள். அடித்துப் பேசுவதும், தொட்டு விளையாடுவதுமாக இருவரும் இயல்பாக இருப்பதைப் பார்ப்பதில் இவளுக்கு திருப்தியாக இருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு பின்பக்கம் ஏதோ வேலையிருப்பதுப் போல சென்று விடுவாள். அப்படிதான் பக்கத்து வீடுகளில் சிறு பழக்கம் ஏற்பட்டதும். ஒருமுறை பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டுப் பெண் உறைமோர் கேட்க போக, அவசரமாக உள்ளே நுழைந்தவள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சட்டென்று நகர்ந்து பின்பக்கம் வந்து விட்டாள். ஆடி மாதம் பிறக்கப் போகிறது. எப்படி பிரிந்திருப்பார்களோ.. என்று எண்ணிக் கொண்டாள்.
அவளுக்கும் தலை ஆடி வந்தது. மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் புது துணிமணிகள் எடுத்து வந்திருந்தனர் அவளின் பெற்றோர்கள். பிறந்த வீட்டுக்கு செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் கணவனுக்கும் மனைவியை அனுப்ப எண்ணமில்லை. முதல் நாளிரவு இரண்டு பேருமே பிரியப் போகும் ஒரு மாத காலத்தை எண்ணிக் கொண்டே அருகருகே படுத்து இரவை கழித்திருந்தனர். “மாசம் முழுக்கன்னா எங்கம்மா ஒண்டியாளா சோறாக்க செரமப்படும்.. பதினெட்டு முடிஞ்சதும் அவள அனுப்பி வுட்டுடுங்கத்தே..“ என்றான் கிளம்பும்போது மாமியாரிடம். ஆனால் அதற்கு தேவையேயின்றி பதினைந்தாவது நாளே இறந்து போனான். மகள் அப்போதுதான் உருவாகியிந்தாள். அவனின் இறப்புக்குப் பிறகு அவளை யாரும் தொட்டுப் பேசியதேயில்லை. காய்ச்சல்.. தலைவலி.. என்று படுத்தாலும் மாத்திரை தலைமாட்டில் தயாராக இருக்கும். யாருடைய தனிப்பட்ட விருப்பமும் சாப்பாட்டில் பிரதிபலிப்பதில்லை. ஆனாலும் வெளியூருக்கு போகும் தருணங்கள்தோறும் மாமியாருக்கு பிடிக்கும் என்று மாமனார் சர்க்கரைப்பாகு பூத்த பாதுஷா வாங்கி வரத் தவறியதேயில்லை.

எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. “அசந்து துாங்கீட்டிருந்தியா.. அதான் ஒன்ன எழுப்பாம நானே காபி போட்டுக் கொண்டாந்தேன்..” என்றாள் மகள் கட்டிலருகே வந்து நின்று.

நேரம் தாழ்த்தி எழுந்ததில் சற்றே குற்றவுணர்வுத் தோன்ற வேகமாக கழிவறையை நோக்கி நடந்தாள் அவள்.

“அப்டியே பல் வௌக்கீட்டு வந்துடும்மா.. காபி ஆறிடும்..” முதுகுபுறமாக மகளின் குரல் கேட்டது.

“சரி..” முகத்தில் வழிந்த எரிச்சலை சில்லென்ற நீரால் கழுவித் தள்ள முயற்சித்தாள் அவள்.