எழுத்து

அர்ஜுனன் காதல்கள் – உலூபி

வெ கணேஷ்


வளைந்தோடும் நதியின் கரையில்
நீராடும் பார்த்தனின்
இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
அது பாதத்தை தீண்டிடவும்
நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
ஒளி ஊடுருவும் மாளிகையின்
அறையில் விழித்தான்
வெளியே நாற்புறமும்
மீன்களும்
நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
நெய்யிட்டு
தீ வளர்த்தான்.
அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
அருகிருந்த பாம்பின் கண்களில்
படர்ந்திருந்த இச்சைத்தீ.
கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
பாம்பு
பெண்
பாம்புப்பெண்
தீச்சடங்கு முடியவும்
“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
பார்த்தனை நோக்கினாள்
திரௌபதியும் யுதிஷ்டிரனும்
இணைந்திருந்த அறையினுள்
விபத்தெனவே நுழைந்ததனால்
விதித்துக் கொண்ட வனவாசம் ;
கவர்ந்திழுக்கும்
சர்ப்பப்பெண்ணுடன்
கூடுதல் முறையாகுமா?
பாம்புப்பெண்
அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
வனவாசத்தில்
உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
கூடுதலில் பாவமில்லை”
மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
மானிடப் பெண்ணாக எழுந்து
இதழ் குவித்து நெருங்கினாள்
அர்ஜுனன்
காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
நதியின் உயிரினங்கள்
அறையின் திரையாகின

oOo

பின்னொருநாளில்
நதிக்கரை மேடொன்றில்
வலியுடன் கண் விழித்தான்
விஷ பாணம் தாக்கி
புண்ணான அவனுடலை
பாம்புப்பெண்
நாவால் வருடினாள்
சற்றருகே ஒரு வாலிபன்
வில்லும் அம்புமாய்
பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
யாரிவன் என்னைப் போல்?
எங்கிருக்கிறோம்?
கனவிலா? நனவிலா?
உடலெங்கும் பாம்பு
ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
சலசலக்கும் நதியில்
முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
இறந்தகால நிகழ்வுகளும்
நிகழ்கால பிரக்ஞையும்
ஒன்றிணைந்து குழம்பாகி
வேறுபாடு காணவியலா கலவையாயின

oOo

“விஷமற்ற பாம்பினங்களில்
நான் அனந்தன் ;
ஆயிரம் பிரபஞ்சங்கள்
கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
கண்ணன் சிரிக்கிறான்

கிளிப்பேச்சு

 – எஸ். சுரேஷ் –

 

கண்கள் சூரியன் போல் சிவந்திருக்க
உடம்பெல்லாம் யாரோ அடித்ததுபோல் வலித்திருக்க
தேகம் நூற்றுநான்கு டிகிரி கொதித்திருக்க
கால்கள் தங்கள் வலுவை இழந்திருக்க
உடல் நடுக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
‘அம்மா அம்மா’ என்று முனகிக் கொண்டிருதவனைப் பார்த்து

கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிளி
“போத்திகினும் படுத்துக்கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்”
என்று பாடியது.

ஒளிப்பட உதவி – Oriental Outpost

சிருஷ்டி கழித்தல்

அருள் செல்வன் கந்தசுவாமி

ஞாயிறு மதியம்
திருப்தியாய் சாப்பிட்டு
சன்னலருகில் சாய்நாற்காலியில்
முயங்கிக் கிடந்தேன்.

நல்ல கவிதை ஒன்று வந்தது.
தன்னியல்புக்கேற்ப தன்னைத்தானே எழுதிக்கொள்ள
தாளையும் எழுதுகோலையும் தேடியது.
அலங்கோலமான அறையில் எனக்கே கிடைக்கா அவை.
காணாமல் சோர்ந்துபோய் மிதியடியில் தடுக்கி வீழ்ந்தது.

கெட்ட கவிதை ஒன்று வந்தது
முகத்தில் நீரடித்து
முடியைப் பிடித்து அதட்டி எழுப்பி
‘எழுதடா’ என்றது.
பீறிட்டெழுந்த
கறங்கு வெள்ளருவிப் பாய்ச்சலில்
எத்தனை எழுதினேன்
எனக்கே எண்ணிக்கை தெரியவில்லை.

மீள்பதிவு, நன்றி: அண்டை அயல்

ஆதிகுரல்

ஹரன் பிரசன்னா –

அவர்கள் போர் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஒட்டுமொத்த உலகமும் வெருண்டிருந்தது
கருப்பு நிறத்துக்காரர்கள் தங்கள் கடவுளை துணைக்கழைத்திருந்தார்கள்
வெண்ணிறத் தோலுடையோர் ஒளிபொருந்திய ஆண்டவனை நம்பியிருந்தார்கள்
நெருப்பு நிலத்துக்காரர்கள் அருவம் கொண்டு மீண்டெழுந்தார்கள்
எஞ்சியவர்கள் என்னவோ பேசிக்கொண்டார்கள்
யாரும் யாரையும் கேட்கவில்லை
எல்லோருக்குமே வெற்றி என்றார்கள்
பின் ஒரு திடீர் நொடியில்
எல்லாருமே தோல்வியை உணர்ந்தார்கள்
பூமியின் நிறம் சிவப்பாக மாறி இருந்தது
தோல்வியில்
புனித நதியில் குதித்தார்கள்
கைகளையும் காலையும் மரத்தில் அறைந்து ஆண்டவனை அடைந்தார்கள்
மண் புதைந்தார்கள்
கடைசி மனிதனின்
கடைசிக் குரலின்போது
மெல்லிய உதட்டிலிருந்து
ஆதிகுரல் ஒன்று மெல்ல எழுந்துவந்து
உலகை நிறைத்தது
அக்குரல்
ஓம் என்ற வடிவத்தை ஒத்ததாய் இருந்தது
ஆண்டவனின் குரலகாக ஒலித்தது
அருவத்தின் குரலாக மீண்டது
அக்குரல்
ஆதிகுரல்
ஒரு குழந்தையின் முதல் அழுகையாக இருந்தது

 

ஒளிப்பட உதவி –  Omar Chacon, Untitled, 2005, artnet 

நாற்காலி

நரோபா

naroba

ஜானுவிடம் ஃபோனில் பேசிக்கொண்டே அஞ்சுவிளக்கு வரை வந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தான் செந்தில். “ஒகே மா. வீட்டுக்கு போய் மெசேஜ் பண்றேன்..டேக் கேர்..” என்று சொல்லிவிட்டு அணைத்தான். ஒன்பதரை ஆகிவிட்டது. கடையை சாத்திவிட்டு கிளம்ப வேண்டும். சுந்தரமண்ணே காத்து கொண்டிருப்பார்.

சுந்தரம் வாசலில் தயாராக நின்றிருந்தார்.

“தம்பி கணக்கு எல்லாம் சரி பார்த்து வெச்சுட்டேன்..எட்டு ரூவா கல்லாவுல கெடக்கு..நீங்க ஒருக்கா பாத்துருங்க.”.

“சரியண்ணே..பாக்குறேன்..நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு கல்லாவில் கணக்கை சரி பார்க்க துவங்கினான். அவன் கல்லா நாற்காலியில் அமரும்போதெல்லாம் பற்கூசும் கிரீச்சிடல் எழும். நாற்காலியை மாற்றவேண்டும் என வழக்கம் போல் எண்ணிக் கொண்டான். சுந்தரம் வாயிலில் நின்றபடியே இந்தப் புதுப்பழக்கத்தை சுணங்கிய முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். ரூபாய் கற்றைகளை எண்ணி வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தபின்னர்தான் தலைதூக்கி அவர் நின்றிருந்ததை கவனித்தான்.

“கிளம்பலியா..?”

ஏதோ முனங்கியது போலிருந்தது “இல்ல.. எல்லாம் சரியா இருக்கா?”

செந்தில் வழக்கம் போல் புன்னகைத்தான்.

“சரி வரேன் தம்பி” என்று முணுமுணுத்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு இருளில் மறைந்தார். (more…)