கவிதை

சரவணன் அபி கவிதைகள் – இருக்கலாம், இல்லப்பணிப் பெண்டிரின் ஒரு நாள்

 சரவணன் அபி

இருக்கலாம்
இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
ஒரு காலை நேரச் சலனம்

இருக்கலாம்

வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.

வெண்ணிற பனித்துகில்
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.

அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்

அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்

பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்

சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

ஒரு காலை நேரச் சலனம்

அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில், புத்தகத்தில், உரையாடலில்.
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.
மறுமுறை நோக்க வைக்கும் முகம்,
ஏதோவோர் எண்ணம்,
ஏதோவொரு நாடகம்,
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்,

பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்,
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்;

யாருமே அவளைப் பார்க்கவில்லை,
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை.
இருக்கையைவிட்டு எழாமல்,
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்,
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் விழக் கூடாது?

பேய் உலகம்- மந்திரம் கவிதை

மந்திரம்

இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலித்துணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்க்கதைகள்
மேலெழுகின்றன.
உள்ளறைகளில்
என்னைத் தவிர
இன்னொன்று நிறைகிறது,
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென
பிறந்துவிட்டது ஓர் உலகம்.

கா. சிவா கவிதை- சொல்லற்ற மொழி

கா. சிவா

பூத்துக் குலுங்கும் மரத்தை
குறிக்கும்போது
காய்த்துத் தொங்குவதை
எண்ணிக் கொள்கிறாள்

நறுந்தேன் மலரை உரைக்கையில்
காகிதப் பூக்களை
கைக்கொள்கிறாள்

மரியானா டிரின்ஞ்சை விளக்கும்போது
டீதிஸ் கடலை கற்பனைக்கிறாள்

சொல்ல விழைவதின்
சிறு பகுதியை
உறிஞ்சிக் கொள்கின்றன
கடத்தற் கூலியாக,
சொற்கள்

அறிவதெப்படி,
சொற்களின் துணையின்றி
கச்சிதமாக உணர்த்தும்
மலர்களின் மொழியை.

 

ஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

நண்பகலின் சிவந்த மெல்லிய
இருள் பரவிய அந்த இடத்தில்
உன் ஒற்றைத் தொடுதல்
பெரும் தீக்காடென அனல் சொரியும்

கண்மூடா இரவொன்றில்
இறுகிய உலோகம் போல
ஒற்றை நரம்பு முறுக்கேறி
பொருத்திராத தாபத்தின் உச்சியில்
நான்.

அன்பில்
விருப்பில்
நேசத்தில்
முகிழ்ந்திருக்கும்போது
நீ மலர்க்காடு.

வெப்பம் பூசி என் உடலை
விடுபடச் செய்கிறாய்.
நகம் கற்றாழை முட்களாய்க் கீற
ரத்தம் ருசிக்கிறாய்.

துருவேறிய ரணம் வலி தராமல்
தாபத்தின் வெப்பத் தகிப்பை மென்று
ஒரு வனத்தின் அடர் பச்சை நிறத்தை
பூசிக் கொள்கிறது.

மலரொன்றின் நிர்வாணமென
நீ பதியனிட்டிருக்கும்
வியர்வை உப்பின் ஊழி
வாசனை நிறைந்த உடலை
அடித்துச் செல்கிறது.

இப்போது
ஆதித் துளி
பெரும் வனத்தீயின் அனலில்
வெளி வருகிறது
ஒரு சிறு பறவையென.
..

சுவர்க்கம் நிச்சயம் – ஹூஸ்டன் சிவா கவிதை

ஹூஸ்டன் சிவா

புகை படிந்த உயர் விழுமியங்கள்
சைகை காட்டி அழைக்கின்றன

தெள்ளத் தெளிவான கீழ்மை
கட்டி அணைத்து இறுக்குகிறது

ஆகாய கங்கையில்
நட்சத்திரங்கள் அலைமோத ஒரு கால்

சாக்கடையில்
மலம் சுழன்றோட மறு கால்

எனப் பிறந்ததற்காகவே
ஒவ்வொரு மானுடனுக்கும்
சுவர்க்கம் நிச்சயம்.