அரிஷ்டநேமி

கொள்ளேன் எனில்

அரிஷ்டநேமி

யாரும் அற்ற ஒரு புனித கணத்தில்
அது அவன் ஆனது.
அவன் ஆன காலம் முதல்
பசி அவனைத் தின்னத் தொடங்கியது.
அன்று முதல் அவன் யாசிக்க
ஆரம்பித்தான்.
விளையாட்டு பொம்மைகளை,
நடை வண்டிகளை,
சப்பர வண்டிகளை,
கோலிக் குண்டு விளையாட்டுகளை
கிட்டிபுல் விளையாட்டுகளை
காவிரியின் ஓட்டங்களை,
தீப்பெட்டி அட்டைகளை,
கனவுகளை கொண்டாடும் கவிதைகளை,
உறவுகளை,
வாழ்த்துக்களை.
யாசித்தலில் பட்டியல் நிறைவற்று நீண்டது.
கனவுகளின் பட்டியலில் நீண்டதில்
தேக மாற்றம் கொண்டது.
மாற்றம் கொண்டபின்
தானம் வாங்க விரும்பி அவனிடம் பலர்
பிறிதொரு நாளில்
தடையங்கள் ஏதும் இன்றி
நெருப்பும் அவனிடம் தானம் பெற்றது.
அன்று முதல் அவன் அதுவானான்.

பாறைச் சாவி – அரிஷ்டநேமி

வீதியினில் நிறைந்து நிற்கும்
மழைநீரை தெத்தி செல்லும்
குழந்தையாக மண்ணை
காலால்இரைத்துச்செல்கிறேன்.
காலங்களில் தொலைந்த கல்சாவிகளில் ஒன்று
கண் எதிரே.
‘என்னை நீ அறிவாயா,
நானே பாறைச் சாவி’ என்கிறது
வியப்பில் புருவங்கள் உறைகின்றன.
‘பதினென்வயதிற்குமுன்
உள் தொலைந்த சாவி நான்’ என்கிறது
‘பிறகு எங்கனம் வெளியே வந்தாய்’
என்கிறேன்.
தேடல் உடையவர்களுக்கே
தேடிவருவேன் நித்தமும் நான்’ என்கிறது.
‘எனில் எப்படி இத்தனை
சாவிகள் என்கிறேன்’.
‘ஒவ்வொரு தொலைதலும்
ஒரு புது பிரதியினை எடுத்துச் செல்லும்’ என்கிறது.
கைகளால் எடுத்து  தொலைதூரம் வீச எத்தனிக்கிறேன்.
தொலைகிறது மற்றும் ஒரு சாவி.