கவிதை

அவளது புகலிடம்

நம்பி கிருஷ்ணன்

 

அன்னை
கைத்தடியுடன்
கூடத்தில் நடந்து செல்கிறாள்
நொய்ந்து
மெல்லிழைத் தாள்
கைத்தடியின் மீது
சுருண்டிருப்பதைப் போல்,
கூடத்தில்
அடிமேலடி வைத்து
ஒரு மயிர்ச்சுருளைப் போல்
காற்றால்
தள்ளப்படுகிறாள்
பாதுகாப்பான தன் வீட்டிற்குள்
மகனில்லா தன் சமையலறைக்குள்.

(Adil Jussawala, Her Safe House)

ஒளிப்பட உதவி- Ruth Rutherford

ஈனி மீனி மைனி

ஸ்ரீதர் நாராயணன்

eenie_minie

சட்டென நீட்டிய இடக்கையை
புறம்தட்டிவிட்டு
வலக்கையை இழுத்து
ஒருகவளம் சோற்றை வைக்கிறாள்,
அம்மா.

அடுத்த கவளத்திற்கு,

ஈனி மீனி மைனி மோ
கேட்ச் த மங்கி பை த டங்கி
என்று மிழற்றியபடி
இடக்கையில் வந்து நிறுத்திவிட்டு,

அம்மாவிற்கு என்றொரு அரைக்கண
புன்னகையை தந்துவிட்டு
சட்டென வலக்கையை நீட்டுகிறது.

என்றோ இடுப்பு எலும்பு நோக
உந்தித்தள்ளிய உயிர்விதையை
வாரியணைத்து மீண்டும்
வயிற்றில் இட்டுக்கொள்கிறாள்.

எந்த கணக்கு போட்டுத்தான்
என்னிடம் வந்தாயோடி

அப்பாவிற்கான கனவுகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

little_girl_sleeping

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்

அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.

குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.

அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது

அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.

கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.

அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.

ரெண்டாம் காலம்

நந்தா குமாரன்

 

வானவிழ் மழைவழி
தரையுமிழ் மரவடி
மஷ்ரூம்கள் மலர்ந்த
விழிஎழும் பாதையில்
மழைஉளி செதுக்கிய
மேகவிக்ரஹ பிரதிஷ்டை
காண வந்தவன் கண்கோப்பைகளில்
ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும்
ப்ராகலி மேன்சூரியன் பொரியல் தின்னும்
அவன் மாமனிதன் எழுதும் காவியத்தில்
இயந்திரக் குப்பை அள்ளும்
மனித ஸ்பரிசம் மறந்த கைகள்
மடக்கி நீட்டிக் காட்டும்
ஆகாயம் மூச்சு விடும் அதில்
“விண்னெழும் புள்ளு”

நிலை நிற்றல்

ஹோவர்ட் ஆல்ட்மேன் –

 

வரலாறு நாற்காலியில் அமர்ந்திருக்கிறது,
ஜன்னல்களற்ற ஓர் அறையில்.
காலைகளில் கதவைத் தேடுகிறது,
மதியங்களில் தூங்கப் போகிறது.
சரியாக நள்ளிரவாகும்போது
சோம்பல் முறித்து பெருமூச்செறிகிறது.
காலம் காக்கிறது, காலம் தாழ்த்துகிறது,
தன் இடமறிந்தும் அறியாமலும் இருக்கிறது.
சிலவேளைகள் படிக்கட்டாகும் நாற்காலியை
சிலவேளை இல்லையென்று நம்புகிறது
மூலைகளின் பார்வையில் ஒன்றல்ல
பௌர்ணமி நிலவின்கீழ் அதுவாகவே அது இருக்கிறது.
வரலாறு நாற்காலியில் அமர்ந்திருக்கிறது,
எம் இல்லங்களின் மேல் ஓர் அறையில்

Source: Holding Posture by Howard Altmann