III- எல்லைகளைச் சிதைக்கும் கணங்கள்
மென்காற்று வீசும், வெப்பம் சற்று அதிகமாக உள்ள சோம்பலான ஒரு ஞாயிறன்று அக்கா- தம்பியான ஓவன் (Owen)/ ஹிலரியை (Hillary) ஆடம் ஹேஸ்லெட்டின் ‘Devotion’ சிறுகதையின் துவக்கத்தில் முதல்முறையாக காண்கிறோம். காலத்தில் முன்பின்னாகச் செல்லும் கதையில், ஐம்பதுகளில் இருக்கும் இருவரின் வாழ்வு பற்றி கொஞ்சம் தெரிய வருகிறது. தற்பாலின விழைவு கொண்ட ஓவன், தன் இணைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதைக் கண்டு, கடந்த பல ஆண்டுகளாக எந்த உறவுமின்றி இருப்பவர். திருமணமாகாத ஹிலரி ஆசிரியையாக இருக்கிறார். பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் இருவரின் வாழ்க்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை/ நல்ல காலை உணவு, குளிர்காலத்தில் குளிர் போக்கின் கணப்பறை (hearth) முன் உட்கார்ந்து நாளிதழ் படிப்பது, திரைப்படத்திற்கு செல்வது, கோடை/ வசந்த காலங்களில் தோட்டத்தில் நேரத்தை செலவிடுவது என ஒரே தாளகதியில் செல்கிறது.
நிச்சலனமான நீர்நிலை போல் அவர்கள் வாழ்க்கை இருந்தாலும் நீர்நிலையின் ஆழத்தை அறிவது யார்? “They weren’t unhappy people,” என்று குறிப்பிட்டு அவர்கள் வாழ்வு குறித்த தெளிவின்மையை வாசகன் மனதில் உருவாக்குகிறார் ஹேஸ்லெட். மந்தமாகச் செல்லும் ஞாயிறு அன்று யார் வருகைக்காக தடபுடலாக இரவு உணவை ஏற்பாடு செய்கிறார் ஹிலரி, என்று கதையை வாசிக்கையில் பென் என்பவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்களை சந்திக்க வருகிறார் என்று தெரிய வருகிறது. தன் அறைக்கு செல்லும் ஓவன், தன் சகோதரி ஹிலரிக்கு பென் முன்பு அனுப்பி, தான் மறைத்து வைத்துள்ள பழைய கடிதத்தைப் மீண்டும் படிக்கிறார். (more…)


