நாங்கள் வீட்டுக்கு வெளியே போர்ச்சில் இருந்தோம், கிராஸ்ஸி ரன்னில் வளர்வது பற்றி பாட்டி பேசிக்கொண்டிருந்தாள். அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் இப்போது இறந்து விட்டார்கள், நான் அவர்கள் யாரையும் அறிந்திருக்கவில்லை பெயர்களன்றி அவர்கள் எனக்கு வேறெதுவுமில்லை. ஊஞ்சலாடிக் கொண்டே காட்ச்-22 படித்துக் கொண்டிருந்தேன், அது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. படிப்பதை நிறுத்தும் அளவுக்கு பிடிக்கவில்லை என்பதில்லை, அட்டையில் இருந்த ப்ளர்புகள் சொன்ன அளவுக்கு அது அவ்வளவு தமாஷாக இருக்கவில்லை. எனக்கு அது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்பதால் அதிகரிக்கும் அதிருப்தியுடன் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தேன். செத்துப் போனவர்களைப் பற்றி பாட்டி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்- ராம்சேக்கள், ஸ்லீத்கள், ப்ராஸ்ட்கள். எல்லாம் வெறும் பெயர்கள். அப்புறம் அவள் செத்த குழந்தை என்று என்னவோ சொன்னாள். யாருக்கோ செத்த குழந்தை இருந்தது. அது வளரவில்லை. என்ன?
“ஹ?” என்று கேட்டேன்.
“என்ன?” என்று பதிலுக்கு கேட்டாள் பாட்டி.
“குழந்தைப் பற்றிதான்,” என்றேன். “என்ன ஆயிற்று?”
“ஓ,” என்றாள் பாட்டி. “மிசஸ் பிஷர், பெக் பிஷர், அவள் மாட் பிஷரைக் கல்யாணம் செய்து கொள்ளும்வரை பிராஸ்டாக இருந்தாள். அப்புறம் அவளுக்கு இந்தக் குழந்தை பிறந்தது, அது வளரவேயில்லை” (more…)