பத்ரா காட்டினுள் ஓடும்
நதியின் கரையில்
பக்கத்தில் ஒரு புலி வந்து உட்கார்ந்தது
இரத்தக் கறையாக இருந்த அதன் வாயை பார்த்துவிட்டு
“என்ன சாப்பிட்டாய்?
வாயைச் சற்று திற”
அகலமாய் திறந்த வாயினுள்
பார்த்தேன்
முயல்கள், மான்கள், காட்டெருமைகள், குரங்கு,
மயில்கள், காட்டுப் பன்றிகள்.
“நிறைய விழுங்கி இருக்கிறாய்”
“பசிக்கும் பொழுது தின்றுதானே ஆகவேண்டும்.
உன் வாயைத் திற”
வாயினுள் எட்டி பார்த்துவிட்டு
என்னை பீதியுடன் பார்த்தது
சோகமாக தலையை ஆட்டிக்கொண்டு
காட்டினுள் புலி
மெதுவாக மறைந்தது
– எஸ். சுரேஷ்